|
|
திருப்பதி எல்லோருக்கும் தெரிந்திருக் கின்ற ஒரு கோயில். ஆனால் தென் திருப்பதி என்று ஒன்று உண்டு. இது எத்தனை பேருக்குத் தெரியும்? கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோயில்தான் தென் திருப்பதி என்ற ழைக்கப்படுகிறது. ‘தன் ஒப்பாரில் அப்பனாய் விளங்கும் சீனிவாசன்’ எழுந்தருளி இருக்கும் இக்கோயில் திருப்பதியைவிடக் காலத்தால் பழமை யானது.
ஒப்பிலா அப்பன் உப்பிலிஅப்பன் ஆன வரலாறு மிகவும் சுவையானது. மார்க் கண்டேய முனிவர் மஹாலஷ்மியை மகளாகவும் திருமாலை மருமகனாகவும் அடைய வேண்டும் என்ற வரம் வேண்டிக் கடுந்தவம் செய்தார். இறைவன் அவ்வாறே வரமருளினார். பூமிதேவியை இரண்டு வயதுக் குழந்தையாக முனிவருடைய துளசி வனத்திலே கிடத்தினார். குழந்தையைக் கண்ட முனிவர் அதனை பூமிதேவி என்றே பெயரிட்டுத் தம் மகளாக வளர்த்து வரலானார். மங்கைப் பருவம் எய்தியவுடன் முனிவர் அவளுக்குத் திருமணம் செய்விக்க விரும்பினார். அப்போது பெருமான் ஒரு திருவிளை யாடலை நிகழ்த்தினார். ஒரு வயோதிக அந்தணராய் முனிவரை அடைந்து அவர் மகளைத் தாம் மணந்து கொள்ள விரும்புவதாய்க் கூறினார். உற்றார் உறவினர் ஒருவருமற்றவர் என்று தன் னைக் கூறிக்கொண்ட அவரைப் பார்த்து நிலை குலைந்து போனார் முனிவர். பின்னர், உண்மையை உணர்த்தி தன் ஒளிப்பிழம்பான மேனியுடன் காட்சி தந்து பூமிதேவியை மணந்து கொண்டார். தவமியற்றும் முனிவர் புலனடக்கம் வேண்டி உப்பில்லாமலே உண்டு வழக்க மாகிவிட்டதால் தம் மகள் உப்பில்லாமலே சமைத்துப் பழகிவிட்டாள் என்று முனிவர் கூற பெருமாளும் அவள் சமைக்கும் உப்பில்லா உணவே தானும் ஏற்பதாகக் கூறினார். இன்றும் இக்கோயிலில் உப்பில்லாமலே பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. இப்படித்தான் ஒப்பிலிஅப்பன் உப்பிலிஅப்பன் ஆனார். விண்ணுலகத் தேவர்களும் மற்றையோரும் இத்திருமணத்தில் கலந்து கொண்டதாலும் இறைவனும் முனிவர் விருப்பப்படியே இங்கு நித்யவாசம் புரிய இசைந்ததாலும் இவ்வூர் 'திருவிண்ணகரம்' என்று அழைக்கப் படுகிறது. மற்றும் 'மார்க்கண்டேய ஷேத்திரம்' என்றும், துளசி வனம் என்றும் அழைக்கப்படுகிறது.
கோயில் மூலவர் வெங்கடாசலபதி மிகவும் கம்பீரமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இடது கை உடலோடு பொருந்தி பாதத்தை நோக்கி இருப்பது அடியார்கள் சரணடைய வேண்டியது இங்கு என்றும் வலது கை அபய முத்திரையோடு அடியார்களை இரட்சிக் கும் பண்பையும் காட்டுகிறது. வலது உள்ளங்கையில் கண்களைப் பறிக்கும் வைரக்கற்களால் 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்று எழுதப்பட்டிருக்கிறது. பகவத் கீதையில் பகவான் அர்ச்சுனனுக்குக் கூறிய வாசகமிது."நான் ஒருவனே; என்னிடத்தில் சரணடை." என்பது இதன் பொருள். வைணவ சம்பிரதாயம் உயர்வாகப் பேசும் சரணாகதி தத்துவம் - பிரபத்தி நெறி - இங்கு இறைவன் தோற்றத்திலே விளக்கப்படுகிறது. நாராய ணனை அடையும் நான்கு மார்க்கங்களிலே அதாவது ஞானமார்க்கம் கர்மமார்க்கம், பக்தி மார்க்கம் ஆகிய மூன்றை விட நாலாவதாகிய பிரபத்திமார்க்கம் என்றழைக்கப்படும் சரணாகதி மார்க்கமே சிறந்ததும் எளிமையானதுமாகும் என்பதை இப்பெருமானின் அபய ஹஸ்தம் உணர்த்துகிறது.
நம்மாழ்வாருக்கு இக்கோயிலில் மூலவர் விண்ணகரப்பனாகவும், உத்சவர் பொன்னப் பனாகவும், போகமூர்த்தி முத்தப்பனாகவும், தனித்தனி சன்னதிகளில் என்னப் பனாகவும் மணியப்பனாகவும் காட்சி அளித்திருக்கின்றார். இக்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்த போதுதான் நம்மாழ்வார் "தன் ஒப்பாரில் அப்பன்" (Lord without an equal) என்று அழைக்க அதுவே இன்று ஒப்பிலிஅப்பனாய் நிலைத்து விட்டது. நம்மாழ்வார் தவிர, திருமங்கை ஆழ்வாரும் இப்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்திருக்கிறார். |
|
பொதுவாக கோயிலை ஒட்டிய புண்ணிய தீர்த்தங்களில் இரவு நேரத்தில் நீராடுவது கூடாது என்பர். ஆனால் இக்கோயில் புண்ணிய தீர்த்தமாகிய 'அஹோராத்ர புஷ்கரணி' இதற்கு விதிவிலக்கானது இதில் நள்ளிரவிலும் நீராடலாம்.
சிரவணத்திற்கும் இக்கோயிலுக்கும் நெருங்கிய உறவுண்டு. காரணம் பெருமாள் பூமி நாச்சியாரை ஐப்பசி மாத சிரவணத்தன்றுதான் திருமணம் செய்து கொண்டார். ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் 12 நாட்கள் இவ்வைபவம் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படும் பிரம்மோத் சவமும் சிரவணத் தன்றுதான் முடிவுறும். 7 நாட்கள் கொண்டாடப்படும் வசந்தோத் சவமும் வைகாசி சிரவணத்தன்று தான் முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, சித்திரை மாதத்தில் 10 நாட்கள் ஸ்ரீராமநவமி உத்சவம் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. சீதா கல்யாணமும், கனகாபிஷேகமும் முடிவில் பட்டாபி ஷேகமும் பல இன்னிசை விருந்துகளோடு கூடி கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாய் அமையும். இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 10 நாட்களிலும் இக்கோயிலுக்கு வரும் ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு பாயசத்தோடு கூடிய அறுசுவை உணவை 'சமபந்தி' விருந்தாய்ப் படைக்கும் விருந்தோம்பலுக்கு கோயில் நிர்வாகிகளை உண்மையிலேயே எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
(பிற்சேர்க்கை: தெய்வங்களின் பிறந்த நாள் என்றால் சிவனுக்கு ஆருத்ரா தரிசனம், கண்ணனுக்கு கோகுலாஷ்டமி, வினாயகருக்கு வினாயகசதுர்த்தி, முருக னுக்கு வைகாசி விசாகம், திருமாலுக்கு ஸ்ரீராமநவமி என்றெல்லாம் கொண்டாடுகிறோம். தெய்வங்களின் திருமணங்கள் என்று வரும்போது சீதா கல்யாணம், வள்ளித் திருமணம், ராதா கல்யாணம், பார்வதி பரிணயம், மீனாட்சி கல்யாணம் என்று தான் கொண்டாடுகிறோம். இதற்குக் காரணம்? விடை தெரிந்தவர்கள் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். டாக்டர். அலர்மேலு ரிஷி
டாக்டர். அலர்மேலு ரிஷி |
|
|
|
|
|
|
|