|
|
இந்தியா-பாகிஸ்தான் எல்லை நிலவரம் மிகக் கவலை தருவதாக உள்ளது. போர், உயிர்ச்சேதம் மற்றும் அழிவுகள் தவிர்க்கப்பட வேண்டியவைகள்! ஆனால் விடுதலை வேண்டுவதன் பெயரால் கொலை புரிந்து வரும் பயங்கரவாதத்தை நிறுத்துவதற்குப் போரைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.
'பொறுமை, பொறுமை'' என உலகநாடுகள் ஆலோசனைகள் வழங்கியபடி உள்ளன. இது எதிர்ப்பார்க்கக்கூடியதே! எவரும் வெளிப்படையாகப் பாகிஸ்தானைக் கண்டனம் செய்யமாட்டார்கள். குறிப்பாக 'பயங்கரவாதத்தை பாகிஸ்தான் துணை கொண்டு அழிப்போம்' என்கிற நிலையை எடுத்துள்ள அமெரிக்காவிடமிருந்து நாம் பெரும் ஆதரவைப் பெறுவதற்கு வாய்ப்பில்லை.
வாய்கிழிய மனித உரிமைகள், பொருளாதாரச் சீரமைப்பு மானியங்கள் நீக்கம், என்றெல்லாம் அமெரிக்கா பேசுவது. அதற்குப் பிரச்சினை/ஆதாயம் என்று வருமானால், அவைகளெல்லாம் காற்றில் பறக்கவிடப்படும் என்பது பலமுறை நடந்த ஒன்று. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பதில் முதன்மை அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாதம் என்பது தெளிவு. இல்லாவிட்டால் பாகிஸ்தானுடன் கைகோர்த்து, பயரங்கரவாதத்தையும் அடிப்படை வாதத்தையும் எதிர்க்கும் கேலிக்கூத்தை எப்படிச் சொல்வது?
இந்தியா பிறர் உதவியை நாடாமல் இருக்க முடியாது. அதே சமயம் அவர்கள் தங்களது ஆதாயத்தில் தான் கவனமாக இருப்பார்கள் என்பதையும் மறக்கக்கூடாது. |
|
இந்தியாவிற்கு உதவும் தன்னார்வ அமைப்புகள் பற்றிய விபரங்களை வெளியிட இருக்கிறோம். அடுத்த இதழில் 'TEAM' அமைப்பு பற்றி.
தென்றல் இதழுக்கு வணிகநிலை ஆதாரம் அதில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள்தாம். குறிப்பாகத் தமிழ் வாடிக்கையாளர்களைச் சென்றடைய தென்றல் அவர்களுக்கு உதவுகிறது. வாசகர்களுக்குத் தேவையான சேவைகள், பொருட்கள் பற்றிய விபரங்கள், விளம்பரங்கள் மூலம் அவர்களுக்குக் கிடைக்கின்றன. ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் இந்நிலை வாசகர்களுக்குத் தெரியாததது இல்லை.
வாசகர்கள் தென்றலில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களை ஆதரிக்கும்படி வேண்டுகிறோம். அதே நேரத்தில் நீங்கள் அத்தகைய நிறுவனத்துடன் ஏதேனும் பிரச்சினைகள் எதிர்கொண்டால் எங்களுக்கும் சொல்லுமாறு வேண்டுகிறோம்.
மீண்டும் சந்திப்போம், பி.அசோகன் ஜூன் - 2002 |
|
|
|
|
|
|
|