மகளிர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஓம் சரவண பவா கொத்தவால் சாவடி பாட்டு அட்லாண்டா பக்கம் அட்லாண்டாவில் கேட்டவை மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் கீதாபென்னெட் பக்கம்
|
|
|
''பெண் வயிற்றில் பிள்ளை பெத்தவ வயிற்றில் நெருப்பு'' என்று பழமொழி உண்டு. அமெரிக்காவில் பெண்ணுக்கோ, மறுமகளுக்கோ குழந்தை பிறக்கபோகிறதென்றால் இந்திய அம்மாக்கள் அமெரிக்கன் விசா வாங்குகிறார்கள் இப்போது. பிறக்காத குழந்தைக்கு பொருட்கள் வாங்கலாமோ கூடாதோ என்று குழம்பி பிறகு கடவுள் மேல் பாரத்தைப் போட்டு அரைஞாண் கயிறு முதல் ஆண்டு நிறைவு காது கம்பி வரை வாங்கிக் கொண்டு மேலும் பிரசவ லேகியம், மருந்துபொடி இன்ன பிற பொருட்களை படுபாதுகாப்பாக பெட்டியில் வைத்து அதன் அழுத்தத்தால் கனமான கைகளுடன், கஸ்டம்ஸ் அதிகாரி தூர கடாசிவிடுவரோ என்ற கவலையான மனதுடன், இவற்றையெல்லாம் மீறிய ஏராளமான அமெரிக்க கனவுகளுடன் இந்நாடு வந்து இறங்குவார்கள்.
வேலையிலிருந்து ஓய்வு பெறாத, உடல் நலம் சரியில்லாத. பொருளாதார குறைவு, விருப்பம் இல்லாத - இன்னபிற காரணங்களால் பல அப்பாக்கள் இங்கு வருவதில்லை. இந்தியாவிலேயே தங்கி விடுகிறார்கள்.
அம்மாக்கள் வந்து இறங்கியதும் தடபுடலான வரவேற்பு. வந்து இறங்கிய அன்று மட்டும் சமையலறை செல்லாமலேயே அம்மாவுக்கு சாப்பாடு உண்டு. அடுத்தநாள் காலைஅடுக்களையில் புகுந்தால் ஊருக்கு திரும்ப போகும் போது மிளகாய் பொடி, புளிக்காய்ச்சல் என்று செய்துவிட்டு கிளம்பும் நள்ளிரவு வரை ஓய்வு ஏது?
வீட்டுக்கு சமைப்பது போதாது என்று நண்பர்கள் பலர் - ''உங்க அம்மா வந்திருக்காங்களாமே? என்னை சாப்பிட கூப்பிடேன்'' என்று கட்டாயப்படுத்துவதும், ''என் நண்பனின் மனைவி இந்தியா போயிருக்கா அவன் தனியா இருக்கான் பாவம்'' , ''இவன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள்'' என்று பிள்ளைகள் சனி, ஞாயிறு தவறாமல் யாரையாவது விருந்துக்கு அழைத்து வருவது என்று எப்பவும் வேலைதான்.
அட! சமையல் செய்ய வாகாய் ஏதாவது இருக்குமா? புரியாத பெயரில் காய்கறிகள். கத்தரிக்காய் சுடலாம் என்றால் ''ஜலமண்டலி'' மாதிரி தண்ணீரை கொட்டுகிறது. முற்றிய தேங்காய், வாசனை இல்லாத கொத்தமல்லி அமெரிக்க மிக்ஸியில் தொகையல் அரைக்க முடியாது. இந்திய மிக்ஸி ரிப்பேரானால் தூக்கி எரிய வேண்டியதுதான். பயந்து பயந்து வேலை செய்ய வேண்டும். அடுக்கடுக்காய் பாத்திரங்கள் கையாண்டது போக ஓரிரு பாத்திரங்களையே வைத்து சமாளிப்பது... வேலைக்காரி உண்டா? dish washer சிங்காரிக்கு ஏற்றபடி பாத்திரங்களை போடுவதற்கு பதில் நாமே வேலையை முடிக்கலாம். மேனாமினுக்கியாக பீங்கான் பாத்திரங்கள்! பாதி சமையலில் பச்சைமிளகாய் தேவை என்றால் எதிர்க்கடைக்கு ஓடிப் போய் வாங்கமுடியுமா! ஒரு வாரத்துக்கு தேவையான சாமானை ஞாபகமாக கேட்டு வாங்கி பத்திரப்படுத்தி வைக்காவிட்டால் திண்டாட்டம்தான். எண்ணெயில் ஏதேனும் பொறிக்கும் நேரத்தில் exhast fan போட மறந்தால் அபாய அலாரத்தின் அலறல் வயிற்றை கலக்கும். எந்த பர்னருக்கு எந்த சுவிட்ச் என்று அடுப்பை பற்ற வைப்பதிலும் அதிக கவனம் தேவை.
குழந்தை வளர்ப்பு இந்தியா போல் எளிதா என்ன? குழந்தைக்கு எண்ணெய் தேய்ப்பதிலேயே பிரச்னை ஆரம்பித்துவிடும். நல்லெண்ணெயா? தேங்காய் எண்ணெய்யா? ஆலிவ் ஆயிலா? பேபி ஆயிலா? பல குழப்பங்கள் - டாக்டரிடம் கேட்டால் எண்ணெயே தேய்க்க வேண்டாம் என்பார்கள் - புத்தகத்தில் ஒருவிதம், நண்பர்களின் உபதேசம் ஒரு விதம், இன்டர்நெட்டில் வேறுவிதம்.
பலத்தவாக்குவாதம். இந்த நாட்டு தட்பவெப்பத் திற்கு இதுதான் சரி என்று பிள்ளைகள் உரத்த குரலில் சொல்ல, பலதலைமுறைகளாய் நம் வீட்டில் இதுதான் வழக்கம் என்று அம்மாக்கள் கீழ்ஸ்தாயில் முணு முணுக்க... கடைசியாக ''என்னவோ பண்ணுங்க அதிசமயான குழந்தை வளர்ப்பா இருக்கு'' என்று அம்மா முற்றுப்புள்ளி வைத்ததும் பிரச்சனை தற்காலிகமாக தீரும்.
மாலை நேரங்களில் காலாற நடந்துபோய் தரிசிக்க கோயில் உண்டா? இரவு மனமார பார்க்க 'சித்தி' உண்டா? 'தஸ்புஸ்' சினிமா, டிராமா எதுவுமே புரியாமல் கண்டுகளிக்க வேண்டும்! நமது உறவினரை பார்க்க, வகையாய் சாப்பிட கல்யாணம், விசேஷங்கள் உண்டா? கொண்டு வந்த புடவைகள், நகைகளை அணிந்து செல்ல இடங்களாவது உண்டா? கொசுத் தொல்லை இல்லை... அக்னி நக்ஷ்த்திர எரிச்சல் இல்லை... பொசுக் பொசுக்கென்று போகும் கரண்ட் கட் இல்லை... தண்ணீர் பிரச்னை இல்லை. இவை எல்லாம் நல்ல விஷயங்கள்தான்... ஆனாலும் ஆத்மாவிற்கு தேவையான எத்தனையோ இங்கு இல்லையே... |
|
கணவர் ஊரிலே எப்படி திண்டாடுகிறாரோ? சரியாக சாப்பிட்டாரோ? இரவு வாசல் கதவை நன்றாக பூட்டாமல் மறந்து விடுவாரோ? என்று பலவிதமான கவலைகள் வேறு மனதை அரித்தெடுக்கும். உடல்நிலை பாதிக்கப்பட்டால் டாக்டரிடம் போக பயம். தலைவலிக்கு மருந்து சாப்பிட்டால் கால் வலி வந்துவிடுகிறது. எனவே நல்லபடியாக ஊருக்கு போய் சேர வேண்டுமே என்று பக் பக் இதய துடிப்பு. நூறு, இருநூறு என்று டாலர் செலவாவதுடன், டாக்டரை பார்க்க appointment கிடைப்பதற்குள் உடல் கோளாறு தானாகவே சரி ஆகிவிடுகிது.
என்றாவது வெளியில் சாப்பிட போகலாம். பெயரே வாயில் நுழையாத உணவு. விலையை கேட்டு 50 ஆல் பெருக்கி ரூபாய் கணக்கில் யோசித்து மயக்கம் போட்டு விழுவதைவிட வீட்டு சாப்பாடே தேவலை என்று மனது சமாதானம் ஆகிவிடும்.
முதலில ஒரு பேரக்குழந்தை இருந்தால் அதில் புதுவிதவிதமான சவால்கள். குழந்தை பேசும் ஆங்கிலம் புரியாமல் சாதம் வேண்டாம் பால் தா... குடு என்று தடுமாறுவதை வேறு சமாளிக்க வேண்டும்.
நமக்கு உதவி செய்ய அம்மாக்கள் வருவது நமது பிறப்புரிமை என்று இங்குள்ளவர்கள் நினைக் கிறார்கள். எத்தனையோ இன்னல்களை பொறுத்துக் கொண்டு தன் பிள்ளைகள், திண்டாடக்கூடாது, பேரக்குழந்தைகள் காப்பகம் சென்று உடல்நிலை பாதிக்கக்கூடாது என்ற காரணங்களுக்காக பல ஆயிரம் மைல்கள் கடந்து குளிரை பொறுத்து, கழிவறை முதல் எல்லாமே வேறுவிதமாய் இருக்கும் புதிய முறைகளை கற்று தன்னால் முடிந்த உதவிகளை விடுமுறை இல்லாமல் ஓய்வு இல்லாமல் செய்வது மட்டுமல்ல... ஊருக்கு திரும்பும் சமயத்தில் தேவை என்றால் உதவிக்கு மீண்டும் வருகிறேன் கவலைப்படாதே'' என்று உறுதியும் அளித்து விடைபெறும் பெற்றோருககு நாம் என்றும் கடமை பட்டவர்களாய் இருப்போம்...
மீரா சிவகுமார் |
|
|
More
மகளிர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஓம் சரவண பவா கொத்தவால் சாவடி பாட்டு அட்லாண்டா பக்கம் அட்லாண்டாவில் கேட்டவை மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|