Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
பரம்பரைச் சொத்து
கோவிந்தசாமியின் இம்மாத "அரிய" கருத்து - பாசம் ஒன் வே டிராபிக்கா
K.M. கோவிந்தசாமி சரித்திரம் 2
- அட்லாண்டா கணேஷ்|ஆகஸ்டு 2002|
Share:
அட்லாண்டா தமிழர்களை அலற வைக்கும் குடும்பம்

ஏற்கனவே கூறியபடி "கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்து அல்ல" ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள், முடிந்தால் அவரைப் பிடித்து பதில் வாங்கி உங்களுக்கு அனுப்புகிறோம். பதில் இல்லை என்றால் எங்களை குறை கூறாதீர்கள்.

சென்ற இதழில் விட்டுப்போன இரண்டு விஷயங்களை கீழே படித்துவிட்டு அவரது இம்மாத "வக்ர" புத்தியை சந்தியுங்கள்.

K.M. கோவிந்தசாமியின் அறிமுகத்தில் கூறியபடி அவரையும் அவரது அக்கா நாக்கு நீ...ளம் நாகலட்சுமியையும் மற்றும் அவள் புருஷன் வயத்தெரிச்சல் வரதராஜனையும், அவர்கள் சூப்பர் ஹைப்பர் 2 குழந்தைகளையும் பார்த்தாலே அட்லாண்டாவில் பல தமிழர்களுக்கு சப்தநாடியையும் ஒடுங்கிவிடும். எந்த தமிழ் குடும்பமும் அவர்களைப் பகைத்துக்கொண்டு அட்லாண்டாவில் வாழ முடியாது. ஆகவே எந்த ·பங்கஷனுக்கும் அவர்களை ஒரு பயத்தில் எல்லோரும் கூப்பிட்டுவிடுவார்கள். ஒரு வேளை கூப்பிடாவிட்டாலும் அவர்களுக்கு இன்விடேஷன் இல்லாமல் ஒரு இன்பர்மேஷன் கிடைத்தால் போதும் அவர்கள் அங்கே ஆஜராகி விடுவார்கள் எந்த கவலையும் இல்லாமல் உரிமையாக பார்டியில் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவார்கள். வந்தாரை "வெளியே போ" சொல்ல தமிழ் பண்பாடு அனுமதிக்காதே.

நாக்கு நீ...ளம் நாகலட்சுமியும், வயத்தெரிச்சல் வரதராஜனும் அமெரிக்கா வந்தது தனிக் கதை. அதை வைத்து ஒரு சினிமாவே எடுத்துவிடலாம். இந்தியாவில் எப்படியோ பிஸினெஸ¤க்காக வந்திருந்த கறுப்பு அமெரிக்கனை வளைத்துப் போட்டு சொந்த சிஸ்டர் (நல்ல காலம் அவள் கலர் உதவியது) என்று விஸிடர் விசாவில் வந்து இங்கேயே இருந்து பச்சை அட்டையை அடித்துப் பிடித்து வாங்கி சிடிசென் ஆனது பெரிய கதை. அப்பவே அருமைத் தம்பி கோ.சாமியையும் ஸ்பான்ஸர் செய்து விட்டார்கள். இந்தக் குடும்பம் யாராவது டைம் கேட்டால் கூட பொய் சொல்லுவார்கள். "எதுக்கு நாம காசைப் போட்டு கடிகாரம் வாங்கியிருக்கோம் இவனுக்கு ஏன் கரக்ட் டைம் சொல்லனும்?" என்று கேள்வி வேறு.

ஒரு முறை என் வீட்டு விசேஷத்தில் எல்லோரும் வந்திருந்தபோது வழக்கம் போல K.M. கோவிந்தசாமி "ஏடா கூடமாக" எதையோ சொல்ல நன்றாக நடக்க வேண்டிய சந்தோஷப் பார்ட்டி களை இழந்து ஒரு மணி நேரத்தில் முடிந்தது. எனக்கோ கோபத்தில் ரத்தம் தலைக்கு ஏற என்ன செய்வது என்று தெரியாமல் K.M. கோவிந்தசாமி குடும்பம் கடைசியாகக் கிளம்பியவுடன் "சந்தோஷமா போய்ட்டு வாங்க" என்று ஆர்ட்டி·பிஷியல் சிரிப்புடன் சொல்லி மாடிக்கு ஓடிப்போய் என் கோபத்தை கண்ணாடி முன் நின்று பல கெட்ட வார்த்தைகளால் திட்டி "K.M. கோவிந்தசாமியாம் K.M. குரங்கு மூஞ்சி கோவிந்தசாமி" என்று தனியே கத்திக் கொண்டி ருக்க, கடைசி வார்தயை மட்டு கேட்ட என் மனைவி "என்ன உங்க மூஞ்சியை நீங்களே எப்படி இருக்கு என்று கண்டுபிடிச்சுட்டேளே" என்று நேரம் தெரியாமல் ஜோக் அடிக்க வந்த கோபத்தில் ஓங்கி ஒரே அடி. என் தலையில் நானே அடித்துக்கொண்டது தனிக் கதை. (என்ன செய்வது அவள் தான் பிரெட் வின்னர் குடும்பத்தில்).

இப்போது இந்த மாத K.M. கோவிந்தசாமியின் லீலையைப் படியுங்கள்:

இந்த முறை நமது நண்பரும் மனைவியின் சொந்தக்காரருமான கோபியின் வீட்டில் அவரது பெண்ணின் 18வது பிறந்த நாள் கொண்டாட்டம். கோபியுன் அவரது மனைவியும் ஆசைக்கு ஒரு பெண்ணையும் ஆஸ்திக்கு ஒரு பையனையும் பெற்றிருந்தனர். (நமக்கு ஆசை மட்டும் தான் ஆஸ்தி கிடையாது ஆகவே பெண் மட்டும் தான்). கோபி அவர்கள் சிறு வயதிலிருந்தே கணக்கு வழக்கில் கில்லாடி ஆகையால் இந்தியாவிலே பெரிய அக்கெளண்டிங் படிப்பு படித்து நன்றாக முன்னுக்கு வந்து அப்புறம் ·பாரினிலேயே பல நாடுகளில் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார். கையில் நல்ல காசு சேர்ந்ததும் U.S.க்கு வந்து "அடியப்பிடிடா பாரதப்பட்டா" என்று தொடங்கி அடித்துப் பிடித்து நன்றாக ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டார். (அவர் மனது வைத்தால் எனக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்கும் வெட்கத்தை விட்டு கேட்டால் அவர்கள் கம்பெனியில் ஹார்ட் ஒர்க்கின் ஆட்களைத்தான் எடுப்பார்களாம். முடியாது என்பதை மிக நாசுக்காக சொல்லிவிட்டார்).

மனைவி காந்தி நன்கு படித்து இருந்தும் இரு குழந்தைகளையும் புருஷனையும் நன்கு கவனிப்பது மிக முக்கியம் என்று வேலைக்குப் போகவில்லை. இருவர் வேலை செய்தால் கிடைக்கும் சம்பளம் இவருக்குக் கிடைத்ததால் மனைவி வேலைக்குப் போகாததில் கோபிக்கு ஒன்றும் பெரிய வருத்தம் இல்லை. அவர்கள் இருவரும் ரொம்ப லவ்விங் டீஸண்ட் ஜோடி. ரொம்ப சின்ஸியர் அண்ட் சென்ஸிடிவ் ஜோடி. அனாவசி யமாக அடுத்தவர்களைப் பற்றி பேசுவது கிடையாது. ஒருவர் வம்புக்கும் போக மாட்டார்கள். அவர்கள் குழந்தைகளும் நல்லா அன்பாக அழகாக வந்தவர் களிடம் பழகி கலகல என்று தமிழில் பேசிக் கொண்டு இருப்பார்கள். கோபிக்கும் காந்திக்கும் அதில் கொள்ளைப் பெருமை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள். துஷ்டரைக் கண்டால் ஒலிம்பிக்கில் ஓடுவது போல தூர ஓடி விலகி விடுவார்கள். (நல்ல காலம் நல்லவர்கள் லிஸ்ட்டில் நம்மை வைத்திருக்கிறார்கள் - என் மனைவி - அவர்களுக்குச் சொந்தம் என்பதால்). பயந்த சுபாவம். அவர்களுக்கு என்று ஒரு நல்ல நண்பர்களாக 10 அட்லாண்டா குடும்பத்தை வைத்துக்கொண்டு அவர்கள் வீட்டுக்கு இவர்களும் இவர்கள் வீட்டுக்கு அவர்களும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். நண்பர்களுக்காக உயிரையும் கொடுப்பார்கள்.

அடிக்கடி வாரக் கடைசியில் பார்ட்டிகள் நடக்கும்.

இங்கே அவர்கள் பெண் நிரஞ்ஜனாவைப் பற்றி நிச்சயம் கூறவேண்டும். நன்கு தமிழ் பேசும் புத்திசாலிப் பெண். அப்பா அம்மா மீது கொள்ளை ஆசை ஆனால் அதே நேரத்தில் தன் அப்பாவும் அம்மாவும் ரொம்ப நல்லவர்களாக இருப்பதால் மற்றவர்கள் அனாவசியமாக அட்வாண்டேஜ் எடுக்கிறார்களோ என்ற சந்தேகம் உள்ளவள். (சரி, சரி, உடனே என்னைப் பார்க்காதீர்கள். அவள் மட்டும் தான் எடுத்துக்கலாமாம்). சமயத்தில் பெற்றவர் களுக்கே அழகாக உபதேசம் செய்பவள். அவள் சொல்லுவதிலும் ஒரு நியாயம் இருக்கிறதோ என்று கேட்பவர்களின் வாயைப் பிளக்க வைக்கும். மொத்ததில் டாக்டருக்குப் படித்து நல்ல பணம், இல்லை இல்லை மக்கள் சேவை செய்யவேண்டும் என்று கொள்ளை ஆசை குழந்தைக்கு. பையன் அர்ஜுனைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.

கோபியும் காந்தியும் அடிக்கடி சேல் பேப்பரைப் பார்த்து கடைக்குப் போகிறவர்கள். அதுவும் சனி ஞாயிறு வந்தால் காலையில் இருந்து படு பிசி கடைக்குப் போவதில். சண்டே கடையை ஏன் தான் பகல் 12 மணி வரைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள் என்று வருத்தம் வேறு. எப்படித்தான் ஒரு ஆணுக்கு இவ்வளவு பொறுமையோ என்று ஆச்சரியமாக இருக்கும் எனக்கு. ஆனால் சிறிது விலை குறைவாக வாங்க வேண்டும் என்றால் சேலின் போது போனால்தானே நடக்கும். அதுவும் அக்கெளண் டண்ட் வேறு கணக்குப் பார்க்கச் சொல்லியா கொடுக்கவேண்டும்? நல்ல பொருட்கள் கண்ணில் பட்டால் உடனே அடுத்த பார்ட்டியில் வருபவர்களுக்கு கி·ப்டாக கொடுக்க மொத்தமாக வாங்கி குவித்துவிடுவார்கள்.

இவர்கள் வீட்டில் பார்ட்டி என்றால் படு சின்ஸியராக எல்லாம் ஏற்பாடு செய்து பார்த்துப் பார்த்து ஐட்டம்களைச் செய்து நல்ல சாப்பாடு போட்டு நன்கு உபசரித்து, வந்தவர்கள் அனைவருக்கும் பார்ட்டி முடிந்து வீட்டுக்குப் போகும் போது ஏதாவது ஒரு அழகான கி·ப்டும் கையில் வைத்துக் கொடுத்து குட் நைட் சொல்லி அசத்திவிடுவார்கள். அந்த கி·ப்டுக்காகவே நமது கோவிந்தசாமி குடும்பம் இந்த பார்ட்டிக்கு கண்டிப்பாக வந்து விடுவார்கள் (இன்விடேஷன் இருந்தாலும் இல்லாவிட்டாலும்). பயந்த சுபாவம் உள்ள கோபியும் காந்தியும் யாரை மறந்தாலும் கோவிந்தசாமி குடும்பத்தைக் கூப்பிட மறக்கமாட்டார்கள். மற்றவர்களுக்கும் அந்த கி·ப்ட் மீது ஒரு ஆசை உண்டு என்பது பொய்யல்ல.

இந்த முறை முன்பே சொன்னபடி கோபி, காந்தியின் பெண் நிரஞ்ஜனாவின் 18வது பிறந்த நாள் பார்ட்டி. அவளது நண்பிகளும் நண்பர்களும், அப்பாவின் சில ஆபிஸ் நண்பர்களும் வேறு நாட்டுக்காரர்களும் வந்திருந்தனர். செல்ல மகளுக்காக வெள்ளை நிறத்தில் ஒரு அழகிய "ஹோண்டா சிவிக்" காரை அவளுக்கு ஒரு ப்ளெஸண்ட் சர்ப்ரைஸாக இருக்க வேண்டும் என்று அவளிடம் சொல்லாமல் ஏன் மனைவியிடமும் என்னிடமும் மட்டும் கூறி அந்த புத்தம் புதிய காரை ·பங்க்ஷனுக்கு முதல் நாள் டெலிவெரி எடுத்து என் வீட்டு டிரைவ் வேயில் பார்க் செய்து பிறந்த நாள் பார்ட்டி அன்று அவளுக்குத் தெரியாமல் மற்ற கார்களுக்கு நடுவில் அதைப் பார்க் செய்து எல்லோரும் வந்த பிறகு பர்த்டே கேக் வெட்டி ஹாப்பி பர்த்டே பாடிவிட்டு புது காரை பெண்ணுக்கு சர்ப்ரைஸ் கி·ப்டாக சாவியை கையில் கொடுக்க ஆசைப்பட்டு எல்லாவற்றையும் மிக நன்றாக பிளான் செய்திருந்தனர். விஷயம் தெரிந்த நாங்கள் மட்டும் ஆவலுடன் அந்தப் பெண்ணின் ரியாக்ஷனையும் வந்திருப்பவர்களின் சந்தோஷத்தையும் காண வீடியோ காமெராவும் கையுமாகத் துடித்துக்கொண்டிருந்தோம்.

கேக் வெட்டும் படலம் மாலை 7.30 என்று அழைப்பிதழில் இருந்ததால் எல்லோரும் 6.45 முதல் 7.15 மணிக்கு வந்துவிட்டார்கள். கோபி அவகள் இந்த மாதிரி நேரங்களில் சிறிது டெண்ஷன் ஆகிவிடுவார். எல்லோரும் வந்துவிட்டார்களா? வந்துவிட்டார்களா? என்று எல்லோரையும் கேட்ட வண்ணம் இருந்தார் கையில் ஸ்டைலாக டிஜிடல் கேமராவோடு. அவர் மனைவி அங்கும் இங்கும் ஒடிக்கொண்டிருந்தார் சிறிது பதற்றமாக. என்ன ஏது என்று விசாரித்ததில் நாங்கள் சிறிது நேரம் முன்னால் கொடுத்த அந்த புதுக் கார் சாவியை எங்கோ வைத்துவிட்டாராம் அதை தேடிக்கொண்டிருக்க கோபி அவளிடம் எல்லோரும் வந்துவிட்டார்களா? கேக் கட் பண்ணலாமா? என்று கேட்க காந்தி பார்த்த பார்வையில் P.P (பெட்டிப் பாம்பு) ஆகிவிட்டார். பெண் நிரஞ்ஜனாவும் "அப்பா என் முக்கிய ·ப்ரெண்ட்ஸ் இரண்டு பேர் இன்னும் வரவில்லை அதனால் ஒரு பத்து நிமிடம் பொறுக்க வேண்டும்" என்று கூற அப்புறம் ஏது அப்பீல்? ஆசை மகள் சொன்னால் அந்த அப்பா தட்டுவாரா? உடன் பதில் "சரிடா கண்ணா" என்றார். கோபியின் வினோத பழக்கம் பெண் நிரஞ்ஜனாவை வாடா போடா என்பார் பையன் அர்ஜுனை என்னடி செல்லம் எப்படிடி இருக்கே? என்பார். மனைவியை எப்படியோ அதை நாம் அறியோம் பராபரமே. குழந்தைகளிடம் பேசும் போது அப்படியே அன்பு ஊற்று எடுக்கும். மிகப் பாசமான தந்தை அது ஒன்றும் மோசமானது இல்ல்லையே?

நிரஞ்ஜனாவின் இரு நண்பிகளும் வந்துவிட்டபடியால் எல்லாம் ரெடி. எங்களைப் பார்த்து கோபி கண்ணசைக்க நாங்கள் நிரஞ்ஜனா பார்க்காத நேரம் ஒரு 20 பலூன்களை வெளியே கொண்டு சென்று அந்த புது காரில் கட்டிவிட்டு அந்த புது காரை இவர்கள் வீட்டு டிரைவ் வேயில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு உள்ளே வர எல்லாம் ஓ.கே. ஆனது. இப்போது அந்த 18 வயது பாவைக்கு கார் விஷயம் சர்ப்ரைஸாக இருக்கவேண்டும் என்பதற்காக இன்னொரு கி·ப்டும் கோபியும் காந்தியும் வாங்கியிருந்தனர். அந்த மாதிரி செலவுக்கெல்லாம் அஞ்சாத தம்பதிகள் (சமயத்தில் நம்ம அக்கெளண்டண்ட் 50 செண்டுக்கு கணக்குப் பார்ப்பார் அது வேறு விஷயம்). அது ஒரு அழகான தங்க பிரேஸ்லெட். அப்பாவிடம் கார் கார் என்று கேட்ட பெண்ணுக்கு கொஞ்சம் வருத்தம் தான் இருந்தாலும் அடுத்த வருடம் கார் வாங்கித் தருவதாகக் கூறி இருந்ததால் வருத்தத்தை வெளிக் காட்டவில்லை அந்த அழகிய புத்திசாலிப் பெண்.

கிட்டத் தட்ட 50 அல்லது 60 பேர் சுற்றி நிற்க்க எல்லோரும் ஒரு ஒரு குரலில் (தான் தான் SPB, ஜேசுதாஸ், சுசீலா, சின்னக் குயில் சித்ரா என நினைத்து) "Happy Birthday to you" என்று ஹாப்பியாக பாட, வெளியே டமால் என்று ஒரு சத்தம். நானும் என் மனைவியும் காரில் கட்டிய பலூன் தான் வெடித்துவிட்டது என்று நினைக்க, யாரோ ஒருவர் ஓடி வந்து அந்தப் புது வெள்ளைக் கார் யாருடையது? வேறொரு கார் வந்து அதை இடித்துவிட்டது என்று கூற எந்த வெள்ளைக் கார் என்று பார்க்க கோபி, காந்தி, நான், என் மனைவி ஓட அந்தக் காட்சியை என்னவென்று சொல்வது ஒரு பழைய நோவா 1985வது வருடக் கார் இந்தப் புத்தம் புதிய பர்த்டே கி·ப்ட் ஹோண்டா சிவிக்கை இடித்து துவம்சம் பண்ணியிருந்தது. அந்தப் புதிய ஹோண்டா கார் நம்மூர் போண்டா போல நசுங்கி இருந்தது. "ஐயையோ என் பெண் நிரஞ்ஜனாவின் பர்த்டே கி·ப்ட் கார் போயிடுத்தே" என்று கோபி கத்த, காந்தி கண்களில் இருந்து கண்ணீர் மல்க, உள்ளேயிருந்து K.M. கோவிந்தசாமியும், நாக்கு நீ...ளம் நாகலட்சுமியும், வயித்தெரிச்சல் வரதராஜனும், இரண்டு சூப்பர் ஹைப்பர் குழந்தைகளும் ஒருவித கவலையும் இல்லாமல் இறங்கி வர அந்த 2 குழந்தைகளும் "ஹையா பட்டாசு, ஹையா பட்டாசு, மாமா மறுபடி பட்டாசு வெடி" என்று குதிக்க கோவிந்தசாமி எந்தவித பதட்டமும் இன்றி "எந்த மடையன் இந்தக் காரை இப்படி வழியில் நிறுத்தியது" என்று கேட்க கோபி அவரது பெரிய விழியை உருட்டி மூக்குக் கண்ணாடி வழியாக என்னைப் பார்க்க நான் பதறிப் போய் "நான் என்ன நடு ரோட்டிலா நிறுத்தினேன் உங்க வீட்டு டிரைவ் வேயில் தானே நிறுத்தினேன்" என்று கூற "என்ன சாமி கொஞ்சம் பார்த்து நிறுத்தக் கூடாதா?" என்று தவறே செய்யாத என்னைப் பார்த்து கோபி கேட்க, எனக்குத் தலைச் சுற்றியது பொய்யல்ல. கோவிந்தசாமி குடும்பத்தின் மீது உள்ள பயத்தில் அந்த டென்ஷன் ஆன நேரத்தில் கூட கோபத்தை அவர்கள் மேல் காட்டாமல் என்னைப் பார்த்து இந்தக் கேள்விக் கேட்டது எனக்கு இன்று வரை புரியாத புதிர்.
நான் வழக்கம் போல திரு திரு என்று முழித்தபடி நின்றிருந்தேன். நல்ல கால எப்போதுமே என் மீதுதான் தப்பு என்று சொல்லும் என் மனைவி அன்று மட்டும் அதிசயமாக "சே சே இவர் மேலே ஒன்றும் தப்பில்லை" என்று சொல்ல என் பூர்வ ஜென்ம புண்ணியத்துக்கு நன்றி சொல்லி என் சின்ன கண்ணாலே அவளுக்கு தாங்க்ஸ் சொன்னேன். அதற்குள் கோ.சாமி "அடடே எழுத்தாளர் திலகமா? அதுதானே பார்த்தேன் உன் எழுத்து மாதிரிதானே உன் டிரைவிங்கும் இருக்கும்" என்று கூற ஒன்று இரண்டு பேர் புன்னகை புரிந்தது என் கண்ணில் பட்டது. கூடவே நாக்கு நீ..ளம் நாகலட்சுமி "எவன் தான் இவனுக்கெல்லாம் லைசென்ஸ் கொடுத்தானோ, இந்த மாதிரி ஆளுக்களாலேதான் நம்ம இந்தியர்கள் பெயரே இந்த ஊரில் கெட்டுப் போகிறது" என்று என்னைப் பார்த்துக் கூற இதுவரை ஒரு முறை கூட எந்த ஆக்ஸிடெண்டிலும் சிக்காத நான் தலை விதியை நொந்துகொண்டேன். வயத்தெரிச்சல் வரது அவன் பங்குக்கு "18 வயது குழந்தைக்கு என்னதுக்கு புத்தம் புதிய கார். இந்தக் கூத்தெல்லாம் ஆண்டவனுக்கே பொறுக்கலை என்ன செய்யறது? அவ்வளவுதான் நான் சொல்லுவேன்" என்று கூற கோபி மனவி காந்தி ஷாக் அடித்து நிற்க, கோபி தலையில் கை வைத்து அங்கேயே உட்கார்ந்துவிட்டார்.

இப்போது வந்திருந்த எல்லோரும் என்ன என்ன என்ன ஆச்சு? என்று ஓடிவர ஒருவாறு எல்லோருக்கும் விஷயம் புரிந்தது. எல்லோரும் ..சு...சு...சு.. கொட்ட ஆரம்பித்துவிட்டனர். நிரஞ்ஜனா "ஓ" என்று அழவே தொடங்கிவிட்டாள். எல்லோரும் என்ன செய்வது என்று புரியாமல் விழிக்க ஒருவர் மிக தைரியமாக வந்து "யார் இடித்தது யார் இடித்தது" என்று கோபாவேசமாகக் கேட்க நாக்கு நீ...ளம் நாகலட்சுமி "இப்படி நடு வழியில் நிறுத்தியிருந்தா இடிக்காம என்ன செய்யும்? என் தம்பிதான் இடித்தால் இப்ப என்னங்கறீங்க?" என்று கேட்க அவர் மனைவி அவர் விலாவில் இடிக்க கோபலெம்லாம் பறந்து போய், "கோவிந்தசாமி நல்ல டிரைவர் ஆசே நிச்சயமாக தப்பு அவர் மேலே இருக்காது" என்று கூறி எல்லோறையும் அசத்திவிட்டார்.

இப்போது ஒரு வினோதமான காட்சி அரங்கேறியது. கோபியின் 16 வயது பையன் அர்ஜுன், இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப உச்சக் கட்ட கோபத்தில் கோ.சாமியைப் பார்த்து "Bxxxxxd" என்று திட்டி அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட கோ.சாமியின் பல் ஒன்று தெறித்து விழ வாயிலிருந்து ஊற்று போல ரத்தம் பொங்கி வர கோபி, "ஹோ காட்" என்று கத்தி பையனைப் பிடிக்க கோ.சாமி அவனை அடிக்க ஓடி வந்தான். காந்தி உள்ளே ஒடிப்போய் மல்லிகை பந்து போல பஞ்சையும் Bengay மருந்தையும் எடுத்து வந்தாள். அப்போது நாக்கு நீ...ளம் நாகலட்சுமி "டேய் கோவிந்தசாமி விடுடா, விடுடா சின்னப் பையன் ஏதோ தெரியாமல் செய்துட்டான் நீயும் பதிலுக்கு அவனை அடிக்கப்போறியே சும்மாயிரு" என்று தடுக்க இது நாக்கு நீளமா என்ன ஆச்சரியம் என்று எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைத்தனர். அந்த புதிர் சிறிது நேரம் கழித்து அவிழ்ந்தது.

கோபி முன்கோபி அல்ல அவர் பின்கோபி. யாராவது ஏதாவது சொன்னால் முன்னால் கோபப்படாமல் அவர்கள் போன பிறகு மனைவியிடம் சொல்லிச் சொல்லி கோபப்படுவார். ஆனால் அவரது பையன் அர்ஜுன் முன்கோபி. முனுக் என்றால் கோபம் வந்துவிடும். ஆனால் நல்ல விளையாட்டு வீரன். அதிலும் அம்பு விடுவதில் கில்லாடி. நிறைய பரிசுகள் வாங்கியுள்ளான். அர்ஜுன் என்ற பெயர் வைத்ததால் அப்படியா? அல்லது இதை யோசித்தே கோபி, காந்தி அந்த பெயரை வைத்தார்களா என்று நமக்குத் தெரியாது. அர்ஜுனுக்கு பல் டாக்டர் ஆக மிக ஆசை.

தமிழர்கள் அத்தனைக் குடும்பமும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உட்டி என்ற கோபியின் ஆபிஸ்காரர் கோபியிடம் வந்து "What is going on here? I have been watching and you guys are going on talking talking and not taking any action. Let me call the cops" என்று சொல்லி தன் செல் போனை எடுத்தார். "O.K. Woody" என்று கோபி சொல்லி முடிக்கும் முன் நாக்கு நீ..ளம் நாகலட்சுமி "இது யாரவன் புதுசா உட்டி, மரம் மாதிரி வளர்ந்து இருக்கான் அறிவே இல்லாம இருக்கானே, நமக்குள்ள ஒரு பிரச்சனை என்றால் நாமே தீர்த்துக்க மாட்டோமா? இவன் யாரு நமக்குள்ள குறுக்க? வெள்ளைத் தோல் இருந்தா பயந்துவிடுவோமா?" என்று சொல்லி அந்த போனை உட்டி கையிலிருந்து பிடுங்கி "No... Call... Police... We... settle..." என்று அவளுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் தந்தி அடித்தாள். உட்டி கன்·ப்யூஸாகி கோபியைப் பார்க்க கோபி "Please let me talk to her" என்று சொல்ல உட்டி மரம் போல நின்றார்.

கோபி கோவிந்தசாமி குடும்பத்தைப் பார்த்து "போலிஸைக் கூப்பிட்டு கேஸ் பதிவு செய்தால்தான் இன்சூரன்ஸில் கிளெய்ம் பண்ண முடியும்" என்று கூறி என்னைப் பார்த்து "சொல்லுங்க அட்லாண்டா கணேஷ்" என்று கூற கோ.சாமி "என்னது போலிஸைக் கூப்பிட போகிறாயா? உங்களுக்கு வேணா அடிக்கடி ஸ்டேஷன் போய் பழகியிருக்கும், போலிஸ் வந்து பழகியிருக்கும், எங்க குடும்பத்துக்கு அதெல்லாம் புதுசு, நாங்க ரொம்ப டீசெண்டான ஆட்கள்" என்று கூற "அப்ப எப்படி இன்சூரன்ஸில் கிளெய்ம் செய்வது" என்று அப்பாவியாக நான் கேட்க கோ.சாமி "அக்கா இந்த ஆளுக்கு நான் அவனைவிட நல்லா எழுதறேன்னு பொறாமை, அதனால என்னை உள்ளே தள்ளி தானே எல்லாம் எழுதனும் என்று ஆசை" என்று சொல்ல அவள் "போதும் அவனும் அவன் எழுத்தும் அவன் மூஞ்சியும்" என்று சொல்லி என்னை எரித்துவிடறா மாதிரி பார்த்த பார்வை இன்னும் எனக்கு மறக்கவில்லை. அப்போது மூடிய வாய் அப்புறம் வீடு வரும் வரை திறக்கவில்லை. என் தர்ம பத்தினியும் "இப்படி யாராவது உங்க வாயிலே போட்டாதான் நீங்க வாயை மூடுவீங்க, பேசாம இருங்கோ" என்று கிடைத்த சான்ஸை பயன்படுத்தி என் காதில் மற்றவர்களுக்குக் கேட்காமல் ஓதினாள்.

அந்தக் குடும்பம் ஏன் போலிஸைக் கூப்பிடக் கூடாது என்று சொல்கிறார்கள் என்று யாருக்கும் விளங்கவில்லை. $15000க்கு வாங்கிய புது காரில் குறைந்தது $8000 இப்போது செலவு இருக்கும். இடித்த பழைய கால நோவா காருக்கு ஒரு சேதமும் இல்லை. அவ்வளவு ஸ்ட்ராங் கார். இதுவா இடித்தது என்று பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவார்கள். இந்த $8000த்தை யார் தருவார்கள்? இதற்குள் நடந்தது நடந்துவிட்டது என்று எல்லோரும் மனதைத் தேற்றிக்கொண்டு உள்ளே போய் கடனுக்கு பர்த்டே பார்ட்டி கேக்கை சாப்பிட்டு கோ.சாமி குடும்பத்திடம் "குறைந்தது $8000 செலவாகும் ரிப்பேர் செய்ய இன்சூரன்ஸ் கொடுக்காவிட்டால் யார் பணம் தருவார்கள் என்று கேட்க டக்கென பதில் வந்தது "எதுக்கு இன்சூரன்ஸ் கம்பெனியிடம் மாரடிக்கணும் இங்கே தான் 50 பேமிலி வந்து இருக்கே குடும்பத்திற்கு $150 கொடுத்தால் போதுமே, பாக்கி $500 நீங்க போட்டு இன்சூரன்ஸ் டிடக்டபிள் என நினைக்கவேண்டியதுதான்" என்று நாக்கு நீளம் கூற "அர்ஜென்ட் வேலை இருக்கு நாங்க கிளம்பறோம்" என்று கூறி ஏழு எட்டுக் குடும்பம் வெளியேறியது சாப்பிடாமலேயே.

மீதிக் குடும்பங்கள் பேய் முழியுடன் காதைக் கூர்மையாகத் தீட்டிக்கொண்டு நின்றனர். "செய்யாத தப்புக்கு அவங்க ஏன் கொடுக்கணும்" என்று ஈன ஸ்வரத்தில் கோபி கேட்க "தப்போ ரைட்டோ எல்லோரும் சேர்ந்து கொண்டாடற போது ஒண்ணாத்தான் அனுபவிக்கணும் அதுதான் முறை. இப்போ எங்களை மாதிரி ஏழைப்பட்ட குடும்பம்னா பணம் கொடுக்க வேண்டாம், எல்லோரும் நல்லா சம்பாதிக்ரவாதானே?" எந்து தன் தன் குடும்பம் பணம் கொடுக்கப் போவதில்லை என்ற விஷயத்தைப் போட்டு உடைத்தாள். வயத்தெரிச்சல் வரது" சரியா சொன்னே, என் மனைவி எப்பவும் கரக்டாக நியாயத்தை தான் பேசுவா" என்று ஒரு போடு போட்டார். இதைக் கேட்டு எல்லோரும் அசந்து போனது பொய்யல்ல.

மறுபடியும் யாரோ ஒரு தைரியசாலி கோபியிடம் "காதோடு" போலிஸைக் கூப்பிடுவதுதான் நல்லது என்று கூற வெகுண்டு எழுந்த நாக்கு நீ...ளம் நாகலட்சுமி "என்ன திருப்பித் திருப்பி போலிஸ் போலிஸ் என்று பேசறீங்க? யாரைப் பயமுறுத்தறீங்க? அந்த பையன் என் தம்பி மூஞ்சில குத்தினானே அதுக்கு எங்களுக்கு கம்ப்ளெயின் பண்ண தெரியாதா? பண்ணியும் உள்ளே தள்ளி ஒரு மில்லியன் டாலர் வரை நஷ்ட ஈடு வாங்கிடுவோம் ஜாக்கிரதை. அதனாலதான் கோவிந்தசாமியை திருப்பி அடிக்காதே என்று தடுத்தேன்" என்றாள். (இதைக் கேட்டு கோபியின் முகம் போன போக்கை யாராலும் விவரிக்க முடியாது. ஒரு மில்லியன் உணர்ச்சிகள் முகத்தில்). "அதுதானே போன வாரம்தான் குழந்தை பாவம் ஒரே ஒரு பீர் குடிச்சுட்டு தெரியாமா கார் ஓட்டறப்போ ஒரு கடன்கார போலிஸ் கோவிந்தசாமியைப் பிடித்து இரண்டு நாள் உள்ளே தள்ளிட்டான். இப்ப லைசென்ஸ் வேற சஸ்பெண்டு ஆகியிருக்கு, இன்சூரன்ஸ் வேற 2 நாள் முன்னாடி தான் எக்ஸ்பைர் ஆச்சு, அவனை மறுபடி உள்ளே தள்ள பார்க்கறீர்களா?" என்று வயத்தெரிச்சல் வரதராஜன் கத்த எல்லோருக்கும் ஏன் போலிஸ¤க்கு அவர்கள் போகக்கூடாது என்று சொல்லியதன் அர்த்தம் புரிந்தது.

இப்போது தைரியமாக கோவிந்தசாமி "அக்கா இந்த பனங்காட்டு நரி சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது, போலிஸைக் கூப்பிடச் சொல்லு ஒரு பயமும் இல்லை என்ன ஒரு மாதம் உள்ளே போடுவான் இங்கே எல்லாம் இந்தியா மாதிரி இல்லை ஜெயில் நல்ல 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி ரொம்ப செளகரியம்தான், எனக்கு நல்லா பழகிடுத்து, என் பல்லை உடைத்ததற்கு இந்த பையனை 6 மாதமாவது உள்ளே போடுவாங்க. ஜெயில்ல என் இன்·ப்ளூ யன்ஸை யூஸ் பண்ணி இவனை என் கூடவே வைத்திருக்கிறேன், நான் இருக்கிற ஒரு மாதம் இவனை என் கூடவே ஜெயில்ல வெச்சுக்கிட்டு ஒரொரு பல்லா டெய்லி உடைக்கப்போறேன் ஒரே பிராப்ளம் அடுத்த மாதம் 30 நாள் தான் கூட இரண்டு நாள் இருந்தா 32 பல்லையும் உடைத்திடுவேன், பரவாயில்லை கடைசி நாள் மூன்றை உடைத்து விடுகிறேன், வெளியே வரப்போது பொக்கை வாயாக வருவான்" என்று கூற "பல்லே இல்லாமல் ஒரு future பல் டாக்டரா? என்று நான் ஆச்சரியப்பட, காந்தி பொத்தென மயங்கி விழ என் மனைவி அவளைத் தாங்கி பிடிக்கமுடியாமல் தவிக்க நான் போய் என் மனைவியைப் பிடிக்க ஒரு மலையே என்னை அமுக்குவது போல் நான் கத்த ஒடிசலான கோபி ஓடி வர அவரைத் தாங்க இன்னும் ஒருவர் என்று ஒவ்வொருவராக வர அங்கே நியூடனின் 3rd law "every action has equal and
opposite reaction"க்கு பதிலாக செயின் ரியாக்ஷன் ஆகியது.

அதற்கும் மேலே நாக்கு நீ...ளம் போட்டாள் ஒரு சத்தம். "என் நாக்கைப் பற்றி உங்களுக்கு தெரியாது அது கரி நாக்கு நான் மட்டும் உங்க குழந்தைகளைச் சபித்தால் அவ்வளவு தான்" என்று பெரிய கண்களை விரிக்க நான் நடுங்கிப் போய் கோபியைப் பார்த்தால் அவரைக் காணும். அங்கே இங்கே திரும்பிப் பார்த்தால் ஒரு 6 அடி உயரம் உள்ள கோபி நெடுஞ்சாண் கட்டையாக நாகலட்சுமியின் கால்களில் விழுந்து அப்படி எதுவும் சபித்து விடாதீர்கள் என்று கெஞ்ச காந்தி மறுபடியும் வீல் என்று கத்தி மயங்கினாள்.

எல்லா களேபரமும் முடிந்து இப்போது நாங்கள் எல்லோரும் கோபி பையன் அர்ஜுன் வெளியே இருக்கவேண்டுமே என்ற கவலையில் கோவிந்தசாமி குடும்பத்தை விழுந்து விழுந்து உபசரித்து சாப்பிடச் சொல்லி வாங்கி வைத்த கி·ப்டை அவர்கள் குழந்தைகள் நன்றாக இருக்கு என்று கூற கூட நாலு கையில் கொடுத்து "தயவு செய்து போலிஸ¤க்கு போய்விடாதீர்கள்" என்று கையை காலை பிடித்து கெஞ்சி கேட்டுக்கொண்டு அவர்கள் நோவா காரை நாங்கள் எல்லாம் சந்தோஷமாக தள்ளி ஸ்டார்ட் செய்ய உதவி செய்து மறுபடியும் அடுத்த பார்ட்டியில் சந்திப்போம் என்று அன்பாகக் கூறி குட் நைட் சொல்லி அனுப்பிவிட்டு அந்த புத்தம் புதிய காரை ஒரு வருத்தப் பார்வை பார்த்துவிட்டு உள்ளே வந்து விரக்தியின் உச்சக்கட்டதில் திரு. கோபி "எவ்வளவோ பணம் டாலரில் சம்பாதித்தாகி விட்டது ஏதோ $8000 தானே போனா போகட்டும்" என்று உணர்ச்சிக் குவியலாக சொன்னபோது கண்ணிலி ருந்தும் கண்ணீர் வழிந்தது பொய்யல்ல.

அன்புடன்

அட்லாண்டா கணேஷ்.

பின் குறிப்பு:

என் நல்ல காலம் சென்ற இதழ் தென்றலை கோ. சாமி குடும்பம் படிக்கவில்லைப் போலும். இதுவரை எனக்கு எந்த பிரச்சனையும் அவர்களால் இல்லை. இந்த இதழை அவர்கள் படித்டால் எனக்கு சந்தோஷம் தான். ஏனெனில் அவர்களது வீர தீர பராக்கிரமத்தை பற்றி நான் எழுதி இருப்பதால் நிச்சயம் அவர்கள் அதை நல்லபடியாகத் தான் எடுத்துக்கொள்வார்கள். ஆகவே நான் எந்த பயமும் இல்லாமல் அவர்களை அடுத்த பார்ட்டியில் சந்திக்க முடியும். அதுவரை ஆண்டவனுக்கு நன்றி கூறி "அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா" என்று ஜாலியாக பாடிக் கொண்டிரு பேன் எனது கட்டைக் குரலில்.
More

பரம்பரைச் சொத்து
கோவிந்தசாமியின் இம்மாத "அரிய" கருத்து - பாசம் ஒன் வே டிராபிக்கா
Share: 




© Copyright 2020 Tamilonline