ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
|
|
|
முப்பது வருஷம் வாழ்ந்தவரும் இல்லை; முப்பதுவருஷம் தாழ்ந்தவரும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. மக்களின் முற்பிறப்பின் நல்வினை தீவினைகளுக்கேற்ப பலன்களை அளிப்பவர் சனிபகவான். ஆற்றல் மிக்க சனி பகவானுக்கென்றே தனியான சன்னிதி கொண்ட கோயில் இருக்கும் ஸ்தலம்
திருநள்ளாறு. காரைக்காலிலிருந்து 3 மைல் தூரத்தில் உள்ளது இத்தலம்.
நவக்கிரகங்களில் சனிபகவானுக்கு மட்டுமே சனீஸ்வரன் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட சுவையான செய்தி ஒன்று கூறப்படுகிறது. சனிபகவான் காசிக்குச் சென்று சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து முறையாக வழிபட்டு வந்தபோது அவனது பக்தியை மெச்சிய ஸர்வேச்வரன் 'எனக்கு அடுத்தபடியாக உன்னை இவ்வுலகம் ஈச்வரன் என்றே பெருமைபடுத்தட்டும், இன்றுமுதல் நீ சனீஸ்வரன் என்றே அழைக்கப்படுவாய்" என்று அருளினார். சனி பூஜித்த லிங்கமும் சனீஸ்வரலிக்கம் என்றே அழைக்கப்படுகிறது.
தீட்டிய மரத்தில் கூர்பார்த்தல்
சாதாரண மக்களை சோதிக்கும் சனிபகவானுக்கு தன்னைப் பெருமை படுத்திய சிவபெருமானையே சோதிக்க வேண்டும் என்ற விபரீத எண்ணம் தோன்றியது. சனீஸ்வரனால் தன்னை ஒன்றும் செய்ய இயலாது என்பதுபோல் சிவபெருமான் சனியின் பார்வையில் சிக்காமல் இம்மண்ணுலகில் மனிதத்
தோற்றத்தில் வந்து ஒரு தாமரைக் குளத்தில் நீ£ருக்கடியில் சிறிது நேரம் மறைந்திருந்து பின்னர் வெளி வந்து நிமிர்ந்தபோது எதிரே சனிபகவான் சிரித்தபடி நிற்பது கண்டு "இந்த 3 நாழிகை நேரம் உன்னால் என்னை ஒன்றும் செய்ய இயலவில்லையே" என்றதற்கு சனிபகவான் "நீர் ஒளிந்திருந்ததே என் பிடியிலிருந்து தப்புவதற்காகத்தானே" என்று சொன்னதாகவும் அதற்கு இறைவன் சனியின் பலத்தை உலகுக்கு உணர்த்துவதற்காகத் தான் நடத்திய
திருவிளையாடல் இது என்று சொல்லி சனியையும் சனீஸ்வரன் என்று அழைக்கப்படுவான் என்று பெருமைப்படுத்தினார் என்ற செய்தி சனீஸ்வரனது ஆற்றலைப் புலப்படுத்துகிறது.
இராவணன் அழிவு
சிவபெருமானின் பக்தனான இராவனன் அவரைக் குறித்து கடுந்தவம் இயற்றிய காரணத்தால் பல வரங்களைப் பெற்றவன். இவன் பெற்ற வர பலத்தினால் தேவர்களையும் முனிவர்களையும் ஈரேழு லோகத்தையும் துன்புறுத்திக் கொண்டிருந்ததோடு அவர்களை ஏவலாளர்களாகவும் ஆக்கிக் கொண்டி ருந்தான். அவனுடைய சிம்மாசனத்திற்கு ஏறிச் செல்லும் படிக்கட்டுகளாக நவக்கிரகங்களை குப்புறப்படுத்திப் படுக்கவைத்து இருந்தான். இவர்களைக் காக்கும் பொருட்டு நாரதர் வந்தார். அவர் இராவணனிடம் 'சுத்த வீரன் நேருக்கு நேராக எதிரிகளைச் சந்திப்பானே தவிர முதுகின் மீது கால் வைக்க மாட்டான்" என்று கூற நாரதரின் தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத இராவணன் உடனேயே நவக்கிரகங்களைத் திருப்பிப் போட்டான். அக்கணமே சனியின் தீட்சண்ய பார்வையால் கேடடைந்த இராவணன் இராம பாணத்தால் ஒரு நாள் அழிந்தான். சனியின் நேர்பார்வையில் படுவோரின் பாடு இதுதான்.
கிரகங்கள் என்பதற்கு 'பிடிப்பது' என்று பொருள். நவகோள்களின் பாதிப்பு மக்கள் வாழ்க்கையை அலைக்கழிக்கின்றன என்றாலும் இந்த ஒன்பதில் சனி மட்டுந்தான் பிடிப்பது என்று நம்பப்படுகிறது. துன்பம் நேரும்போது சனி பிடித்து ஆட்டுகிறது என்கிறோம். சிறப்பான உண்மை என்ன வென்றால்
பாரபட்சமற்ற கிரகம் என்பது சனி மட்டுந்தான். அரசன் என்றோ ஆண்டி என்றோ வேறுபாடு காட்டாது தன் பிடியில் சிக்கிய அனைவரையும் ஆட்டிப் படைப்பவன். சனியின் பிடியிலிருந்து தப்பித்தவர் யாருமில்லை.
நளமகராஜன் வரலாறு யாவரும் அறிந்த ஒன்று. அவனை ஆட்டிப் படைக்க சனி பகவானுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டி யிருந்தது. பின்னர் சனியின் பிடியிலிருந்து வெளியே வர திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேசுவரரை வழிபட்டு இவ்வுலகம் தன் வரலாற்றை நினைவில் வைத்திருக்க அங்கே ஒரு தீர்த்தம் உண்டாக்கி 'நளதீர்த்தம்' என்று பெயரிட்டான் நளன். |
|
விஞ்ஞான அடிப்படையில் சனிகிரகம்
சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களில் வியாழனும் அதனை அடுத்து சனியும் உருவத்தில் பெரியவை. தன்னைத்தானே சுற்றிவர 10மணி 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது சனிகிரகம். மேலும் இது ஒரு ராசியில் 2 ஆண்டுகளும் 6 மாதமுமென்ற கணக்குப் படி மேஷம் ரிஷபம் என்று 12 ராசிகளில் ஒரு முறைவலம் வர அதாவது சூரியனை ஒரு முறை முழுவதுமாக வலம் வர 29 ஆண்டுகளும் 6 மாதமும் ஆகின்றன.
ஏழரைச்சனியும் சனிப்பெயர்ச்சியும்
ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்வதை சனிப்பெயர்ச்சி என்பர். அவரவர் ராசிக்கு முன்னாலுள்ள கட்டத்தில் சனி வருவதை ஏழரைச்சனி பிடிக்கிறது என்பர். இது 2/1/2 ஆண்டுகள் அங்கே தங்கி பின் அவர்களுடைய ராசியில் மற்றும் 2/1/2 ஆண்டுகள் இருந்து பின்னர் ராசிக்கு அடுத்த கட்டத்தில் கடைசி 2/1/2 ஆண்டுகள் தங்கியிருக்கும் இந்த 7/1/2 ஆண்டுகளைத்தான் ஏழரைச் சனி என்பர். மற்ற கிரகங்களின் அமைப்பைப்பொறுத்துத்தான் ஏழரைச்சனியின் சாதக பாதக பலன்கள் அமையும் என்று நம்பப்படுகிறது. ஏழரைச்சனியின் துன்பங் களைத் தவிர்க்க திருநள்ளாற்றுக்கு வந்து சனீஸ் வரனை வழிபடுவது காலங்காலமாக மக்கள் பின்பற்றி வரும் வழக்கமாகும். கலி என்றால் துன்பம் என்று பெயர். கலி பற்றியுள்ளது; கலி நீங்குகிறது என்பதெல்லாம் சனி பிடித்திருக்கிறது; சனி விலகுகிறது என்று பொருள்.
தலப்பெருமை
திருநள்ளாற்றுத் தர்ப்பாரண்யேசுவரரது கோயிலின் கிழக்கு திசையிலே சனீஸ்வரனுக்கு தனி ஸன்னிதி அமைந்துள்ளது.சனீச்வரனுக்கென்று பிரத்தியேக மாக அமைந்த சன்னிதி இங்கு மட்டுமே உள்ளது என்பது விசேடம். சைவத்தை விட்டு சமணத்தைத் தழுவிய நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனைத் திருஞானசம்பந்தர் மீண்டும் சைவத் திற்குத் திரும்பச் செய்த அதிசயம் இத்திருத்தலத் திலே நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு வீற்றிருக்கும் இறைவிக்கு 'போகமார்த்த பூண்முலையாள்' என்பது திருநாமம்.
"போகமார்த்த பூண்முலைய டன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையான் கோவணவாடை யன்மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே"
என்ற திருஞானசம்பந்தர் பாசுரம் இத்தலத்தில் இவர் பாடிய பதிகத்தின் முதல் பாசுரம். சமணரை வாதில் வென்ற இப்பாசுரம் புனலில் மூழ்காது அனலில் வேகாது பச்சைப் பசுமையாய்த் திகழ்ந்த காரணத் தால் 'பச்சைப் பதிகம்' என்றழைக்கப்படும் பெருமை பெற்றது. போகமார்த்த பூண்முலையாள் என்று தொடங்கும் இப்பதிகம் சைவத்திற்குப் பெருமை சேர்த்து உயிரூட்டியதால் இங்குள்ள இறைவி 'பிராணேசுவரி' என்று சிறப்பித்துக் கூறப்படுகிறாள். திருஞானசம்பந்தர் மட்டுமல்லாது திருநாவுக் கரசரும் சுந்தரரும் கூட இத்தலத்தைத் துதித்துப் பாடியுள்ளனர். அருணகிரியாரும் 'நள்ளாறுறை தேவர்கள் பெருமாளே என்று திருப்புகழில் சிறப்பித் துள்ளார். எல்லாச் சிறப்புக்களும் நிறைந்த இத்தலம் சோழனாட்டுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் பெரும்புகழ் படைத்த முக்கியமான ஒரு தலமாகும்.
டாக்டர்.அலர்மேலு ரிஷி |
|
|
More
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
|
|
|
|
|
|
|