உன்னிகிருஷ்ணன்
|
|
|
தமிழ் இணையம் 2002 மாநாடு செப்டம்பர் மாதம் 27, 28, 29 தேதிகளில் சான்·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் ·பாஸ்டர் சிடியில் இருக்கும் கிரௌன் பிளாசாவில் நடக்கவிருக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்பவர்கள் வரிசையில் இம்மாதம் அறிமுகமாகுபவர்கள் முனைவர்கள் கு. கல்யாணசுந்தரம், ஜெர்மனி நா. கண்ணன்
தமிழ் இணையம் என்பது பெரும் கடல் போன்றது. ஆறுகள் போல உலகெங்குமுள்ள தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்கள், கணிஞர்கள் தமிழ் இணையப் பெருங்கடலில் இணைந்து தமிழிலுள்ள அளப்பதற்கரிய செல்வங்களை வெளிப்படுத்து கின்றார்கள். அந்த வரிசையில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கு. கல்யாணசுந்தரம் மற்றும் செருமனியைச் சேர்ந்த கண்ணன் ஆகிய இருபெரும் நதிகளை தென்றல் இதழில் தவழ்ந்தோடச் செய்யும் விதமாக நிகழ்த்திய மின்-நேர்காணலை இனி நுகர்வோம்.
தென்றல்: தமிழ் இணைய மடலாடற்குழுக்களில் (mailing lists) உங்களை அறியாதவர்கள் இல்லை. ஆனால் கணினி வைத்துள்ள தமிழர்கள் எல்லோரும் தமிழ் மடலாடற் குழுக்களைப் பற்றி அறிந்திருக் கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. தமிழ் மடலாடற் குழுக்களால் என்ன பயன் என்று விளக்க முடியுமா?
கல்யாண்: புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் மின்வெளியிலே கலந்துரையாட வழிசெய்வது, இந்த மடலாடற்குழுக்கள் தாம். இவை நான் கடந்த பத்து ஆண்டுகளில் பல நாடுகளில் வாழும் நூற்றுக்கணக்கான தமிழர்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு அளித்தன. மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம், எழுத்துருக்களுக்கான தரம், உத்தமம், தமிழ் இணைய மாநாடு, தமிழ்ப் பண்பாட்டுப் பாதுகாப்பிற்காக ஆரம்பிக்கப்பட்ட முதுசொம் போன்ற கூட்டு முயற்சிகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு மூலகாரணம் இந்த மடலாடற்குழுக்கள் தாம்.
கண்ணன்: தமிழ் மடலாடற்குழுக்கள் இந்த நூற்றாண்டின் அற்புதம்! அவற்றின் மூலமாக நான் இழந்த (விட்டு வந்த) தாயகத்தை மீண்டும் பெற்றேன்! தோற்ற மயக்கம் (virtual) என்றாலும் பெறும் உணர்வும், ஆத்ம திருப்தியும் ஒன்றுதான். ஓர் எழுத்தாளன் என்ற வகையில் இக்குழுக்கள் எனது படைப்புகள்வெளிவரும் இ-தளமாக அதாவது இலத்திரன் தளமாக அமைகின்றன. ஒரு படைப்பு வெளிவர மிகக்குறைந்த நேரம் கொண்ட ஒரே தளம் மடலாடற் குழுக்களே. பத்திரிக்கைகள் போலன்றி வாரக்கணக்கில், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கவிதைகளுக்கான சரியான ஊடகம் இது என்பது என் கணிப்பு..
தென்றல்: முனைவர் கல்யாண், உங்கள் களஞ் சியம் பற்றி வாசகர்களுக்குச் சொல்லுங்களேன்.
கல்யாண்: பத்து ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக எனக்குக் கணினியில் தமிழை நேரிடையாக உள்ளிட்டுப் பயன்படுத்த முயன்று பார்க்கலாம் என்ற ஆர்வம் தோன்றியது. அதற்குத் தேவையான தமிழ் எழுத்துருக்கள் அப்போது எளிதில் அல்லது இலவசமாகக் கிடைக்காததால் நானே அவற்றை தயாரிக்கும் பணியில் இறங்கினேன். இவற்றைக் கொண்டு ஏதாவது பயனுள்ள முயற்சிகள் செய்ய முடியுமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போது பேராசிரியர் பார்த்தசாரதி திலீபன் தலைமையில் நாலாயிரத்திவ்விய பிரபந்தமும், ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழக தமிழ் ஆராய்ச்சியாளர் முனைவர் தாமஸ் மால்டன் (Thomas Malten) தலைமையில் சங்ககால நூல்களும் ஆங்கில எழுத்துக்கள் மூலம் மின்மயப் படுத்தப் பட்டன.
ஆங்கிலத்திற்கு இருக்கும் கூடன்பெற்கு திட்டம் (Project Gutenberg), ஆக்ஸ்·போர்ட் திட்டம் (Oxford Archives) போன்றவை தமிழிலும் எழுத்துருக்கள் இணையத்தில் இலவசமாக வினியோகிக்கப் பட்டால் தமிழிலேயே தமிழர்கள் தமிழ் இலக்கியங்களை உள்ளிட்டுப் பயன்படுத்த லாமே என தோன்றியது. மயிலை எழுத்துருவைக் கொண்டு எப்படித் தமிழ் இலக்கிய மின்பதிப்புகளைத் தயாரிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திருக்குறளை உள்ளிட்டு இணையத்தில் பகிர்ந்துகொண்டேன். தொடர்ந்து தமிழ் மின் நூலகம் என்ற ஒரு இணையத் தளத்தை ( http://www.geocities.com/Athens/5180/ ) தயாரித்து அதில் திருக்குறள் மற்றும் ஒவையார் பாடல்கள், பாரதியார் பாடல்கள் எனப் பல சிறுநூல்களை மின்பதிப்பாக வெளியிட்டேன். இணைய நண்பரும் முரசு அஞ்சல் முத்து நெடுமாறனுடன் கூட்டு முயற்சிகளில் மயிலை, இணைமதி எழுத்துருக்களை விண்டோஸ் மற்றும் மக்கின்டாஸ், யூனிக்ஸ் கணினி வகைகளிலும் பயன்படுத்த வழி செய்தேன்.
தென்றல்: மதுரைத் திட்டம் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன்? எப்போது? எப்படி எழுந்தது?
கல்யாண்: மதுரைத் திட்டம் (http://www.projectmadurai.org) இணையம் வழியாகத் தமிழர்களும் தமிழ் மொழி, பண்பாடு இவற்றில் ஆர்வமுள்ள மேலைநாட்டவரும் ஒன்றுசேர்ந்து தன்னிச்சையாகத் தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புக்களை தயாரித்து அவற்றை உலகெங்கும் பகிர்ந்துகொள்ளும் தொண்டர் இயக்கம்.
1997-ம் ஆண்டு இறுதியில் தமிழ்.நெட் என்ற மடலாடற் குழுவில் மின்பதிப்பில் ஆர்வமுள்ளவர் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு தன்னிச்சை இயக்கமாக இயங்கலாமே என்ற கேள்வி எழுந்த போது ஒரே வாரத்தில் ஒருமனதாகப் பங்கு கொண்டோர் உதவியுடன் மதுரைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1998 பொங்கலன்று 25 தொண்டர்கள் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் இன்று 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் உதவி கொண்டு இயங்குகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் 150க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களின் மின்பதிப்பை தயாரித்து இணையம் வழியாக இலவசமாக விநியோகித்துக் கொண்டிருக்கிறோம். சங்க கால நூல்கள், இடைக்காலச் சமய நூல்கள், 20-ம் நூற்றாண்டு ஆசிரியர்களின் படைப்புகள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் படைப்புகள், தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள், வெளி நாட்டு நூல்களின் தமிழாக்கம் என, பலவிதமான நூல்கள் மின்பதிப்பு வடிவில் இலவசமாக இணையத்தின் வழியாக தமது தனிக்கணினியில் இறக்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
தென்றல்: மதுரைத் திட்டத்தின் மூலம் இன்னும் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும் என்று இலக்கு ஏதும் வைத்திருக்கிறீர்களா?
கல்யாண்: தமிழர் கலாசாரத்திற்குச் சான்றான தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலானவை இன்றும் ஓலைச்சுவடி வடிவில் இருந்து புத்தகவடிவில் பதிப்பிக்கப்படாமலேயே அனைத்தையும் இழக்கும் அவல நிலையில் உள்ளன. இந்த ஓலைச் சுவடிகள் உதிர்ந்து அவற்றில் உள்ள தமிழ்ப் பொக்கிஷங்கள் அழிவதற்குள் அவற்றை மின்பதிப்பு வடிவில் காத்து அவற்றை உலகெங்கெங்கும் உள்ள தமிழர் இனத்திடம் பகிர்ந்துகொள்வதே எங்களது பெரும் ஆவல்.
20-ம் நூற்றாண்டில் நாவல் என்று கூறப்படும் புதினங்களே பெருமளவில் பிரசுரமாகி தமிழர்களின் வாழ்த்து பெற்றதால் மற்ற வகை தமிழ் நூல்கள் வாங்கும் நபர் எண்ணிக்கை பெருமளவில குறைந்தது. இதனால் மற்றவகை நூல்களைச் சைவ சித்தாந்த பிரசுரம், பாரி நிலையம் போன்றவை பதிப்பிக்கும் தொண்டு இன்று நின்றுவிட்டது. இக் கேடான நிலையில் இன்று தமிழர்கள் பழங்கால நூல்களுக்கு நூலகங்களில் இருக்கும் பிரதிகளையே நம்பி இருக்கின்றோம். ஓலைச்சுவடிகள் போல் இந்தப் புத்தகங்களின் வாழ்நாளும் சிறு அளவே. இதனால் 20ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் வந்த புத்தகங்களையும் மின்பதிப்பு வடிவில் உடனடியாகக் காக்க வேண்டிய ஓர் அவசரமான, இக்கட்டான, பரிதாபமான நிலையில் நாம் உள்ளோம்.
தென்றல்: மதுரைத் திட்டத்திற்கு இணைய நண்பர்கள் ஒத்துழைப்பு தருகிறார்களா? தமிழ் ஆர்வலர்களிடமிருந்து மதுரைத் திட்டத்திற்கு உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன?
கல்யாண்: தமிழ் நூல்களை தமிழ் எழுத்துருவில் உள்ளிடுவதுதான் கடினமான ஆனால் முக்கியமான பங்கு. மற்றவை உள்ளிட்ட நூல்களை பிழை/சரி பார்ப்பது, பின் மின்பதிப்பை இணையத் தளப் பக்கங்களாகவும் PDF மின்நூல் வடிவிலும் தயாரித்து இணையத்தில் ஏற்றுவது. நாங்கள் கண்ட பிரச்சினை தமிழ் நூல்களை உள்ளிட விருப்பமுள்ளவர்களிடையே தமிழ் நூல்கள் இல்லாத குறையே. தனி முறையில் தமிழ் நூல்கள் பல சேகரித்து வைத்திருப்பவர்கள், பல்கலைக் கழகத் தமிழ் நூலகங்களின் உதவி பெரிய அளவில் எங்களுக்குத் தேவை. தமிழ் ஆர்வலர்கள் மேற்கூறிய தேவைகளில் உதவி செய்தால் நாங்கள் குறுகிய காலத்தில் மேலும் பல தமிழ் நூல்களை மின்பதிப்பு வடிவில் உலகெங்கும் இலவசமாக பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
தென்றல்: முனைவர் கண்ணன், முதுசொம் சாளரம் என்றால் என்ன? என்ன நோக்கத்திற்காக உருவாக் கப்பட்டது?
கண்ணன்: முதுசொம் என்பது பாட்டன் வழி, தாத்தன் வழிச் சொத்து. நாம் கேட்காமலே நமக்கு வரும் பழம் சொத்து (முது + சொம் (சொத்து). நமது பாரம்பரியம், மரபு என்பது முதுசொம் ஆகும். உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழருக்கு இச்சொத்து மிகப்பெரியது. அது பல்லாண்டு இலக்கியமாக நம் கையில் உள்ளது. பல்வேறு கலைகளாக நம் மண்ணில் வாழ்கிறது. நாட்டார்கதை, வீட்டுக்கதை, கோலம், கும்மி என்று இது பரந்து விரிந்து கிடக்கிறது. இந்தச் சொத்து காலத்தின் விழுமியங்களும், தொழில் நுட்பமும் மாறும் போது பாதுகாப்பற்றுப் போகிறது. உதாரணமாக அச்சுக்கூடத் தொழில் வந்தபின் ஓலை எழுதும் பழக்கமும், ஓலைகளிலிருந்து பதிப்பிக்கும் பழக்கமும் நின்று போனது. உ.வே.சா, தாமோதரம் பிள்ளை போன்றோர் பதிப்பித்த பின்னும் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள் இன்னும் பதிப்பிக்கப்படாமலே இருக்கின்றன. இலக்கியம் தவிர்த்து பல்வேறு கலைகள் பற்றிய சாத்திரங்கள் இவற்றுள் அடங்கும். நாவாய் சாத்திரம், வானவியல், கணிதம், சமையல், மருத்துவம் போன்றவை சில உதாரணம். ஓலைகள் அழியக்கூடியவை. இவைகளை மீள்பதிப்புச் செய்ய வேண்டியது மிக அவசியம். புத்தகங்களும் மீள்பதிப்புச் செய்ய வேண்டியவையே. எனவே இவைகளை மின்மயமாக்கிப் பாதுகாக்கும் திட்டமே “தமிழ் மரபு அறக்கட்டளை” ஆகும். மரபுச் செல்வங்களுக்கு இட்டுச் செல்லும் சாளரம் (ஜன்னல்) முதுசொம் சாளரமாகும்.
http://www.infitt.org/thf அல்லது http://www.naa-kannan.net/thf
தென்றல்: இதற்கு முன்பு நடைபெற்ற நான்கு தமிழ் இணைய மாநாடுகள் கண்ட சாதனைகள் என்ன?
கல்யாண்: தமிழ் மென்பொருள் தயாரிப்பவர்கள் பலவேறு நாடுகளில் உள்ளனர். ஆனால் இவர்கள் தனித்தனியாக இயங்கி வருவதால் வலது கை செய்வது இடதுகைக்கு தெரியாது என்பதுபோல் பலர் ஒருவர் செய்வதையே திரும்பச் செய்யும் நிலை உள்ளது. தமிழ் இணைய மாநாடு கணினி, தகவல் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள மென்பொருள் தயாரிப்பாளர், அவற்றை பயன்படுத்துவோர் அனைவரையும் ஒன்று கூட்டிக் கருத்துப் பரிமாற்றம் செய்ய வழி செய்வதே முதல் குறிக்கோள்.
இந்த மாநாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாடுகளில் நடப்பதால் ஒருநாட்டில் நடந்து கொண்டிருக்கும் முன்னேற்றங்கள், சாதனைகள் குறுகிய காலத்தில் மற்ற நாட்டவர் தெரிந்து கொண்டு பயனடைய வசதி செய்கிறது. கணினி வழி (பல்லூடக மென்பொருள்கள், இணையத் தளங்கள்) கல்வியை எடுத்துக்கொண்டால் 4 ஆண்டுகளில் இணைய மாநாடு, இதில் ஈடுபட்டுள்ள மென்பொருள் தயாரிப்பாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் இவர்களிடையே ஒன்றிணைந்து இயங்க, கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள வசதி செய்துள்ளது. அதேபோல், உலகில் உள்ள முக்கிய நபர்களும், முன்னோடிகளும் ஒன்றுகூடி விவாதிக்கும் போது, தேவையான தரங்கள் பற்றி முடிவு செய்வதற்கு வசதியாகிறது.
கண்ணன்: 1995-ல் கலிபோர்னிய தமிழ்ப் பீடத்தின் சார்பாக பேரா. ஜோர்ஜ் ஹார்ட் தமிழ்க் கணினி விற்பன்னர்களைக் கூட்டினார். அதுவே தமிழ் இணைய மாநாடுகளின் முன்னோடி. அதில் நான், நா.கணேசன், குமார் குமரப்பன், தாமஸ் மால்ட்டன் போன்றோர் கலந்து கொண்டோம். அதன்பின் 1997-ல் சிங்கையில் நா. கோவிந்தசாமியின் முனைப்பில் ஒரு குழு கூடியது. இது படிப்படியாக வளர்ந்து சரித்திரம் காணாத அளவில் சென்னையிலும், கோலாலம்பூரிலும், சிங்கப்பூரிலும் பிரம்மாண்டமான மாநாடுகளைக் காண வைத்தது. தமிழாராய்ச்சி மாநாடுகள் போல் இவை நடத்தப் படுவது இம்மாநாடுகளுக்கு தமிழர் தரும் ஆதரவைக் காட்டுகிறது. விசைப்பலகை தரம் பற்றி முதல் கூட்டத்திலேயே பேசப்பட்டாலும் அது சென்னை மாநாட்டில்தான் முழு உருப் பெற்றது. இம் மாநாடுகள் தரும் பயன் மிக அதிகம். தமிழுக்கென ‘உத்தமம்’ கண்டது இம்மாநாடு. தகுதரம் கண்டது இம்மாநாடு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தந்தது இம்மாநாடு. இன்று ‘முதுசொம் அறக் கட்டளை’ உருவாக இதுவே காரணமாக அமைந்தது. ஒளிவழி எழுத்தறிதல் (Optical Character Recognition), தமிழ்ப் பேச்சறிதல் என்று பல்வேறு ஆய்வுகளுக்கு தளம் அமைத்துத் தந்திருக்கிறது இம்மாநாடு.
தென்றல்: தமிழ்ப் பத்திரிக்கைகள் தங்கள் வலைத் தளங்களை அமைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு எழுத்துருவைப் பயன்படுத்துகிறார்கள். வரும் மாநாட்டிற்குப் பிறகாவது குறியீட்டு முறைகளை ஒருமுகப்படுத்தும் நிலை உருவாகுமா? உருவாக்கும் எண்ணம் உண்டா?
கல்யாணம்: 1997-ம் மாநாட்டில் தமிழர் அனைவரும் தமிழ் எழுத்துருக்களுக்கு ஒரு 8-பிட் இருமொழித்தரமும் (8-bit bilingual standard) , விசைப்பலகைகளுக்கான தரம் (keyboard standard) ஒன்றும் வேண்டும் எனத் தீர்மானித்தது. அதை தொடர்ந்து உலகின் பலநாடுகளில் இதற்கான முயற்சிகள் செய்யப்பட்டன.
1999-ம் சென்னை மாநாடு எடுத்த முடிவுகள் துரதிருஷ்டவசமாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 2000ம் மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உத்தமம் என்னும் பன்னாட்டுக் கூட்டமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. உத்தமம் பணிக்குழு ஒன்றை அமைத்து தமிழ் எழுத்துருக்களுக்கு ஒரே ஒரு தரம் தான் என தீர்வு காண முயன்றாலும் அது நடக்காததால் தற்போது உலகில் பெருமளவில் பயன்படுத்தப்படும் தகுதரம் (TSCII), தமிழக அரசால் ஏற்கப் பட்ட தாப் (TAB), இரண்டை மட்டுமே தரங்கள் என ஏற்பது என முடிவு செய்யப்பட்டது. இம்முடிவு குறுகிய காலத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் உருக்கள் பயன்படுத்தப்படும் அவல நிலையிலிருந்து இரு தரங்கள்தான் தமிழில் பயன்படுத்தப்படும் என்னும் நிலை வரும் என்று நம்புகிறோம். அதோடு யூனிகோடு என்று கூறப்படும் பன்மொழிக் குறியீட்டுத்தரம் வெகுவிரைவில் பயன்படுத்தப்படும் என்ற நிலையில் இந்த 8-பிட் இருமொழி எழுத்துருக்களின் முக்கியத்துவம் பெருமளவில் குறையும்.
கண்ணன்: மடலாடற்குழுக்கள், சென்னை ஆன்லைன், சி·பி டாட் காம், அம்பலம் போன்றவை தகுதரத்தில்தான் (TSCII) இயங்குகின்றன. மற்ற வணிகப் பத்திரிக்கைகளின் மெத்தனம் கண்டிக் கத்தக்கது. வருகின்ற காலங்களில் டிஸ்கியும், தாபும் கோலோச்சும். பின் யுனிகோடில் அனைத்தும் இணையும். அப்போதும் ஏதாவதொரு பத்திரிக்கை தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டுதானிருக்கும். அது தமிழனின் பிற்போக்குத்தனத்தின் எச்ச சொச்சமாக இருக்கும்!
தென்றல்: தமிழ் இணைய மாநாடு என்ன தான் ஊர் கூடித் தேர் இழுத்தாலும் தமிழக அரசின் சார்பில் முதல்வரையோ, தகவல்தொடர்புடைய அமைச் சரையோ அழைத்துப் பங்கேற்க வைத்தால்தானே அதற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்?
கல்யாண்: மேற்கூறிய கருத்தை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. கடந்த 4 தமிழ் இணைய மாநாடுகளில் தமிழ் நாடு, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர். 2000-ம் ஆண்டு பன்னாட்டுக் கூட்டமைப்பான உத்தமம் என்னும் இயக்கம் அமைக்கப்பட்டபோது அதில் முக்கியச் செயற்குழுவில் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பம் செயலாளார் (IT Secretary), மற்றும் செயற்குழுவின் தலைவர் (Head, IT Task Force) இருவரும் உறுப்பினர்கள். அவர்கள் இருவர் வழியாக உத்தமத்தின் பரிந்துரைகளையும், ஆக்கங்களையும் தமிழ்நாட்டு அரசு நேரிடையாகப் பெற்றுக் கொள்ளுவதோடு, தமிழ்நாடு எந்தமுறையில் உத்தம இயக்கத்துடன் பணியாற்றலாம் என்று பல கருத்து பரிமாற்றங்கள் நடத்திக் கொண்டுள்ளனர். அதேபோல் சென்ற ஆண்டு தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் குழு மாற்றி அமைக்கப் பட்டபோது உத்தம இயக்கத்தில் பங்குபுரியும் தமிழ்நாட்டுத் தமிழர் பிரதிநிகிளுக்கு என்று இரண்டு இடங்கள் கொடுக்கப் பட்டுள்ளன.
வரும் தமிழ் இணையம் 2002 மாநாட்டில் தற்போதைய தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் திரு.விவேக் ஹரிநாராயணன் இ.ஆ.ப. நேரிடையாக கலந்து கொண்டு தமிழ்நாட்டின் மின்-அரசாங்க முயற்சிகள் (e-governance) பற்றி சிறப்புக் கட்டுரை வழங்க வுள்ளார். முன்னாள் செயலாளர் திரு. பிரகாஷ் தற்போது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட தனியார் இயக்கம் Media Lab Asia பணிபுரிகிறார். இந்த அமைப்பில் இந்தியாவில் பல முக்கிய தகவல் தொழில் நுட்ப முன்னோடிகள் (மத்திய அமைச்சர் மகாஜன் முதல், நாராயணமூர்த்தி போன்ற பலர்) பங்குகொண்டு பணியாற்றுகின்றனர். திரு பிரகாஷ் சென்ற 2 மாநாடுகளின் கலந்துகொண்டு பெரும்பணி ஆற்றியதுபோல இந்த ஆண்டு மாநாட்டிலும் கலந்துகொண்டு மின்அரசு பற்றி கட்டுரை வழங்க உள்ளார். |
|
தென்றல்: இ-சுவடி பற்றி விளக்குங்களேன்?
கண்ணன்: இ-சுவடி என்றால் இலத்திரன் சுவடி என்று பொருள். மின்னூல் என்றும் சொல்லலாம். தமிழ் நூற்களை மின் வடிவில் கொண்டுவரும் முயற்சி இது. இதற்கான திட்டங்களை, வரைவுகளை, தொழில் நுட்பங்களைப் பற்றிப் பேசும் மடலாடற் குழுவிற்குப் பெயர் இ-சுவடி என்பது. http://groups.yahoo.com/group/esuvadi/
தென்றல்: ஐரோப்பா கண்டத்தில் மாநாடு என்று வரும்போது அது உங்களிடத்தில் அமைய வாய்ப்புண்டா?
கண்ணன்: இது முழுக்க, முழுக்க ஈழத்தமிழர்களின் பங்களிப்பைச் சார்ந்ததே. மண்ணை விண்ணாக் கியவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள். அவர்கள் நினைத்தால் எதுவும் சாத்தியமே. ஆயினும் பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இம்மாநாடு இன்னும் அன்னியப்பட்டே உள்ளது. அவர்களிடம் மாநாட்டுச் சேதியைக் கொண்டு செல்வதில் உத்தமம் ஐரோப்பியக்கிளை அயராது உழைக்கிறது.
தென்றல்: முதுசொம், இ-சுவடி இவற்றால் தமிழர்கள் எப்படிப் பயன் பெறலாம்? தமிழர்கள் உங்களுக்கு எப்படி உதவலாம்?
கண்ணன்: முதலில் அழிந்து கொண்டிருக்கும் நமது சொத்தைப் பாதுகாக்கலாம். எனவே முதுசொம் சாளரம் நமது மரபுக் காப்பகமாகும். ஒன்று விடாமல் அத்தனை சுவடிகளையும், தமிழ் நூற்களையும் மின்பதிப்பாக்கிப் பாதுகாத்து விடவேண்டும். எண்ணிற் பெரிது எண்ணுக. இது முடியாத காரியமன்று. ஆனால் காலம் எடுக்கக் கூடியது. கூட்டாகச் செய்ய வேண்டியது. இது ஒரு குமுகாயப் பணி. எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்று சொன்னவன் தமிழன். எண் என்பது பைனரி - இலக்கம். எழுத்தை இலக்கப் பதிவாக்கி கண் போல் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அடுத்து பல்லூடகத் தொழில் நுட்பத்தை (மல்டி மீடியா) பயன்படுத்தி ஒலி, ஒளி வழி மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க முடியும்.
தமிழர்கள் இத்திட்டத்தின் அவசரத்தை முதலில் உணர வேண்டும். தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, அதன் முதுசொம் எக்காலத்திலும் இல்லாத அளவு இன்று பாதுகாப்பற்று இருக்கிறது. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நம் கண்ணில் காணாத ஏதோ ஒரு நூல் கரையான் அரித்துக் காணாமல் போகிறது. அந்த நூலில் எயிட்ஸ் நோய்க்கு மருந்திருக்கலாம்! புதிய தொழில் நுட்பத்திற்கான சிந்தனை இருக்கலாம். அது என்னவென்று அறியும் முன்னரே அதை அழிய விடுவது தற்கொலைக்குச் சமமாகும்.
அடுத்து, அக்கறை உள்ளவர்கள் ஒன்று கூடிச் செயல் படுவது. தங்களால் இயன்ற உதவி செய்வதுடன், தங்களுக்குத் தெரிந்த நிதி உள்ளோரை அறிமுகம் செய்து வைப்பது, சர்வ தேச அளவில் நிதி சேகரிப்பிற்கான வழி முறைகளை சொல்லித்தருவது இப்படி எத்தனையோ வழிகளில் உதவ முடியும். தமிழ்ச் சமூகம் என்றும் ஏழைச் சமூகமில்லை. ஒரு கோயில் கட்ட வேண்டுமென்றால் எப்படி கூட்டாகச் செயல் படுகிறார்களோ அதே போல் இத்திட்டம் வெற்றி பெற உதவ வேண்டும். அறிவு நிரம்பக் கொண்ட சமூகங்களே வரும் காலங்களில் வென்று நிற்கும். தகவல் தெரிந்த சமூகங்கள் மேன்மை கொண்டு விளங்கும். பாரம்பரியத் தகவல்களை சரியான முறையில் பாதுகாத்தால் தமிழ் சமூகம் எதிர் காலத்தில் நிரம்பப் பயன் பெறும்.
தென்றல்: மலேசிய மாநாட்டில் உங்கள் அற்புதத் திட்டத்துக்கு அமைச்சர் ஒரு தொகையை வழங்கி ஊக்கப்படுத்தினார். வேறு யாரும் உங்களுக்கு அந்தத் திட்டத்துக்காக உதவினார்களா? இதற்காக தமிழ் மக்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
கண்ணன்: மலேசிய இந்தியக் காங்கிரஸ் கொடுத்தது ‘விதைப்பணம்’. அந்த மாநாட்டில் உண்டியல் குலுக்கியிருந்தால் கூட இலட்சக் கணக்கில் பணம் சேர்ந்திருக்கும். அன்று இருந்த மனோநிலை அப்படியிருந்தது! உண்மையில் அன்று எனது உரையைக் கேட்ட இரண்டு நல்ல உள்ளங்கள் உடனே தங்களால் இயன்ற தொகையை இத் திட்டத்திற்கு அளித்தனர் - நான் கேட்காமலே!
தமிழ் மரபு அறக்கட்டளை, ஈட்டு நோக்கற்ற, அரசியல் நடு நிலை கொண்ட அமைப்பு. அரசுகள் இத்திட்டத்திற்கு முன்வந்து உதவ வேண்டும். மலேசிய இந்திய காங்கிரஸ் செய்தது போல். தமிழ் மக்கள் ஆளுக்கு ஒரு டாலர் அனுப்பினால் கூட இத்திட்டத்தை மலையளவிற்கு உயர்த்த முடியும். 70 மில்லியன் தமிழர்கள். 70 மில்லியன் டாலர் இருந்தால் எவ்வளவு செய்ய முடியும்! இது பொதுப்பணிதானே!
தென்றல்: அமெரிக்காவில் நடைபெறவுள்ள மாநாட்டின் மூலம் என்ன சாதிக்கப்படும் என்று கருதுகிறீர்கள்?
கல்யாணம்: தகவல் தொழில் நுட்பத்தில் வட அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அதில் கலி·போர்னியா மாநிலமும் அங்குள்ள சிலிகான் வேலியின் பங்கு அதிகம். அதிலும் இந்தியாவிலிருந்து, குறிப்பாக தென்இந்தியாவிலிருந்து வந்து பங்குபெறும் மென்பொறியர் விழுக்காடும் அதிகம். இவற்றைக் கருதும்போது, தமிழ் இணைய மாநாடு இந்த பகுதியில் நடைபெறுவது முறையே.
இம்மாநாடு அங்குள்ள முன்னோடிகளுக்கு தமிழ் மொழியில் கணினியில் பயன்படுத்தல், இணையம் வழி தகவல் தொழில்நுட்ப முன்னோற்றம், தமிழக மற்றும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் மின்-அரசாங்கம் போன்றவற்றில் நடைபெறும் முயற்சிகள் இவற்றை பற்றி நேரில் அறியவும், அதில் பங்குபெறும் முன்னோடிகளைக் கண்டு கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள வழி செய்யும். அதே முறையில் இவர்களும் தமிழ் கணினி, தமிழ் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்துக்கு உதவி புரிவார்கள் என்றும் நம்புகிறோம்.
கண்ணன்: அமெரிக்கா உலகின் வல்லரசு. பில் கேட்ஸ்-சின் நம்பிக்கைக்குரிய உதவியாளர்களாக பல தமிழர்கள் மைக்ரோ சா·ப்டில் உள்ளனர். சிலிகான் பள்ளத்தாக்கு வளம்பெற தமிழர்கள் கைகொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் வாழும் மண்ணில் இம்மாநாடு கூடுகிறது. அமெரிக்கத் தமிழர்தம் தமிழ் ஆர்வத்தை, குமுகாயப் பங்களிப்பை சோதனை போடும் ‘அமிலப் பரிசோதனை’ (ஆசிட் டெஸ்ட்) இம்மாநாடு. உலகு ஆவலுடன் காத்திருக்கிறது!
******
முனைவர் கு. கல்யாணசுந்தரம்
முனைவர் கு. கல்யாணசுந்தரம் தமிழ் இணையம் 2002 மாநாட்டின் அமைப்பாளர் களாகிய INFITT (International Forum for Information Technology in Tamil) எனும் உத்தமம் (உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம்) செயற்குழு உறுப்பினரும் மாநாட்டின் கருத்தரங்குத் தேர்வுக்குழுவின் தலைவரு மாகப் பணியாற்றி வருகின்றவர். முனைவர் கல்யாணசுந்தரம் சென்னை லயோலா கல்லூரியில் வேதியியல் (Chemistry) பிரிவில் B.Sc, M.Sc பட்டங்கள் பெற்றுப் பின் அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இரசாயனத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் (Ph.D) பட்டம் பெற்றார். இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் post-doctoral பணிபுரிந்தார். 1979-ம் ஆண்டு சுவிட்ஸர்லாந்துக்குச் சென்று அங்குள்ள Swiss Federal Inst. of Technology-ல் இரசாயனப் பிரிவில் கற்பித்தலிலும் இரசாயன ஆராய்ச்சி யிலும் தொடர்ந்து பணிபுரிகிறார். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்க் கணினி, தமிழ் இணையம், தமிழ் தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டு இது தொடர்பான பல இணைய முயற்சிகளில் (தமிழ்க் குறியீட்டுத் தரம் (TSCII), மதுரைத்திட்டம், உத்தமம், தமிழ் இணைய மாநாடு) பங்கேற்பவர்.
******
முனைவர் நா. கண்ணன், ஜெர்மனியில் வாழும் முனைவர்
நா. கண்ணன், ஒரு கவிஞர், எழுத்தாளர், அறிவியலாளர், இலத்திரன் சுவடி மடலாடற் குழு மட்டுறுத்தர், மடலாட்டுநர், தேர்ந்த மேடைப்பேச்சாளர். நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்களுக்குப் பாசுர மடல் என்ற தொடரில் பல்வேறு மடலாடற்குழுக்களில் எழுதிய உரைத்தொகுப்பை “வெப்பம் கொடுக்கும் விமலா” என்ற பெயரில் மின்னூலாகத் தமிழ் இணையம் 2001 இல் வெளியிட்டார். மதுரைத் திட்டத்தின் மேற்கு ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளர். ஈழத்து இலக்கியம் மின்வெளியில் வருவதற்கு மூலகாரணகர்த்தா. உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மைய, ஐரோப்பிய கிளைத் தலைவர். பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் அக்கரைச் சீமையிலே! என்ற கடல் கடந்த மடலை மாதமொருமுறை வழங்குபவர்.
******
ஆல்பர்ட் ·பெர்னாண்டோ
ஆல்பர்ட் ·பெர்னாண்டோ சிங்கை இணையம் (http://www.singaiinaiyam. com.sg) வலையிதழின் ஆசிரியர். தமிழ் உலகம் (http://groups.yahoo.com/group/tamil-ulagam/) என்ற மடலாடற்குழுவின் மட்டுறுத் துநர் (moderator).
மின்னஞ்சல் பேட்டி: ஆல்பர்ட் ·பெர்னாண்டோ தொகுப்பு: மணி மு. மணிவண்ணன் |
|
|
More
உன்னிகிருஷ்ணன்
|
|
|
|
|
|
|
|