Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2002 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
மணி மு. மணிவண்ணன்
- ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ|செப்டம்பர் 2002|
Share:
Click Here Enlargeதென்றல்: உங்களின் முதல் பட்டப்படிப்பு கணினித் துறை அல்ல என்று அறிகிறோம். கணினித் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

நான் சென்னை அழகப்பச் செட்டியார் தொழில் நுட்பக் கல்லூரியிலும், நியூயார்க் மாநிலத்தில் கிளார்க்சன் பல்கலைக் கழகத்திலும் ரசாயனப் பொறியியல் படித்தேன். எண்பதுகளின் தொடக்கத் தில் தனிக் கணினி (personal computer) தோன்றியது. சீனித் (Zenith Z-100) என்ற தனிக் கணினியைப் பல்கலைக் கழக மாணவர்களுக்குச் சலுகை விலையில் விற்றார்கள். இந்தியாவுக்குத் திரும்பிப் போகும்போது எடுத்துச் செல்வதற்காக அதை வாங்கினேன். ஏற்கனவே பட்டப் படிப்பில் ·போர்ட்ரான் தெரிந்திருந்ததால், எம். எஸ். டாஸ், சி.பி.எம்., அசெம்பிளி நிரலிடல் போன்றவற்றை எளிதாகக் கற்க முடிந்தது. சீனித்தில் தமிழ் எழுத்துகளை உருவாக்க முனைந்ததில் அதன் அடிப்படை தொழில் நுட்பங்கள் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடிந்தது. கிளார்க்சனில் என்னுடைய அறை நண்பராக இருந்த மோகனுக்கு என்னுடைய திறமை தெரிந்திருந்ததால், அவர் வேலை பார்த்த கலி·போர்னியா நிறுவனத்துக்கு என்னைப் பரிந்துரைத்தார். அந்த வேலையை ஏற்றபோது கணினித் துறைக்கு நிரந்தரமாக மாறி விட்டேன்.

தென்றல்: அமெரிக்கா வந்தாலும் தமிழார் வத்தால் கலி·போர்னிய விரிகுடா வட்டாரத் தில் தமிழுக்காகப் பல பணிகளை (சிறுவர் களுக்கு வகுப்பு நடத்துதல், மரபிசை நிகழ்ச் சிகளில் தமிழ்ப் பாடல்கள் இடம் பெறச் செய்தல், நாடகம்) மேற்கொள்கிறீர்கள். இந்த ஆர்வம் எப்படி வந்தது? யார் காரணமாக இருந்தார்கள்?

நான் அறுபதுகளில் பள்ளியில் படித்தவன். நான் படித்தது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் என்ற சிற்றூர். அதில் அரசு உயர்நிலைப் பள்ளியை ராமநாதபுரம் ராஜா சேதுபதி சத்திரத்தின் ஒரு பாதியில் வைத்திருந்தார்கள். சத்திரத்துக்குப் பின்பக்கம், ஊருணி அருகில் மண் தரையில் ஒரு கொட்டகை போட்டு அதில் எங்களைப் போன்ற இளநிலை மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பார்கள். அப்போதெல்லாம், தமிழின் மேல் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆர்வம் கூடியிருந்தது. சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு பற்றிய செய்திகளையும், அதையொட்டிச் சென்னைக் கடற்கரையில் தமிழ்ப் புலவர்களுக்குச் சிலை வைத்தது பற்றியும், எங்கள் ஆசிரியர்கள் அடிக்கடிப் பேசுவார்கள். முத்து ஐயா எங்களுக்கு ஆங்கிலத்தோடு சிலப்பதிகாரத்தையும் கற்பித்தார். தமிழார்வம் மிகுந்த ஆசிரியர்கள் எங்கள் பிஞ்சு உள்ளங்களில் தமிழ் ஆர்வத்தை வித்திட்டார் கள். எனது தந்தையார் திரு. நா. கோ. முருகேசன் அவர்களுக்கும் தமிழில் பெருத்த ஈடுபாடு உண்டு.

இவர்கள் கொடுத்த ஊக்கத்தினால் தேவிபட்டினம் நூலகம் என்ற படிப்பு அறையிலிருந்த அத்தனைப் புத்தகங்களையும் என் தந்தையார் நூலகத்திலிருந்த தமிழ்நூல்களையும் படித்தேன். பிள்ளைப் பருவத்தில் படித்தவற்றுள் அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்” இன்றும் மனத்தில் நிற்கிறது. பாரதியார் பாடல்கள் தமிழர்களின் பொற்காலம் கடந்த காலத்தில் மட்டுமில்லாமல், வருங்காலத்திலும் இருக்கும் என்ற நம்பிக்கை கொடுத்தன.

அமெரிக்காவில் தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் பலர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு இருப்பதில்லை. சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள மாபெரும் தமிழ் மன்றமும், தமிழ் நிகழ்ச்சிகளைப் போற்றி வரும் விரிகுடாப் பகுதித் தமிழ் மக்களும் கொடுக்கும் வாய்ப்புகளால் தமிழிசைத் திருநாள், கம்பன் விழா, பாஞ்சாலி சபதம் கவிதை நாடகம் போன்ற முயற்சிகளை மேற்கொள்ள முடிகிறது. தன்னலமின்றி எங்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் போல கலி·போர்னியா தமிழ் கழகம், சந்தீபானி போன்ற பள்ளிகளில், அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் நம் மனத்துக்குப் புத்துணர்ச்சி கொடுக்கின்றனர். சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதித் தமிழ் மக்களின் தொழில் திறமையையும், தமிழ்ப் பற்றையும் நம்பித்தான் தமிழ் இணைய மாநாட்டை இங்கு நிகழ்த்த வேண்டினேன்.

தென்றல்: தமிழில் தகவல் தொழில் நுட்பத் தில் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது? எவ்வளவு நாட்களாக பங்கேற்று வருகிறீர்கள்?

1983இல் சொந்தமாகக் கணினி வாங்கிய போது தமிழ் எழுத்துரு படைக்கக் கற்றுக் கொண்டாலும் தொடர்ந்து ஏதும் செய்யவில்லை. 90'களின் தொடக்கத்தில் பேரா. பார்த்தசாரதி திலீபன் குழுவினரின் முயற்சியால் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தமிழில் வலையேற்றும் முயற்சிகள் நடந்த போது ஓரளவுக்கு ஆர்வம் வந்தது. ஆனாலும் மற்றவர்கள்தான் வேலை செய்து கொண்டிருக் கிறார்களே, நமக்கேதும் வேலையில்லை என்று ஒதுங்கியே நின்றேன். அப்போதுதான் பல வேறு எழுத்துருக்கள் (fonts) தனித்தனிக் குறியீட்டைக் (encoding) கொண்டு உருவாகிக் கொண்டிருந்தன. ஒன்றில் எழுதினால் இன்னொன்றை வைத்துப் படிக்க முடியாத தொந்தரவு. இதைத் தவிர்க்கும் முயற்சி சிங்கப்பூரில் நடந்த முதல் தமிழ் இணைய மாநாட்டுக்குப் பின் webmasters@tamil.net என்ற மடலாடற் குழுவில் (mailing list) தொடங்கியது. பேரா. ஹார்ட், ஷிப்மென், டான் டின் வீ, முத்து நெடுமாறன், கல்யாணசுந்தரம், ஆகியோர் கலந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். 1997 செப்டம்பரில் தற்செயலாக ஒரு விவாதத்தில் கலந்து கொண்டேன். சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வரைமுறைகளையும் குறிக்கோள்களையும் ஒருமுகப் படுத்துவதில் பேரார்வம் எழுந்தது. நவம்பர் இறுதிக்குள் இன்று தகுதரம் அல்லது டிஸ்கி (TSCII) என்று அழைக்கப்படும் தமிழ்த் தகவல் குறியீட்டுத் தரம் முதல் பதிப்பை உருவாக்கினோம். அதைத் தமிழக அரசின் உயர்மட்டக் குழு முன் பரிந்துரைக்க ‘முரசு அஞ்சல்’ முத்து நெடுமாறனும் நானும் சென்றோம். அப்போதுதான் இன்று தமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் ஜாம்பவான்களாய் விளங்கி வரும் பலருடைய தொடர்பு ஏற்பட்டது.

தென்றல்: இதுவரை நீங்கள் ஆற்றிய பணியைப் பற்றி கூற இயலுமா?

தகுதரக் குறியீட்டுக் குழுவின் நிறுவனராகவும் பொதுத்தொடர்பு அலுவலராகவும், www.tscii.org, http://groups.yahoo.com/group/tscii/ என்பவற்றின் நிறுவனராகவும் உள்ளேன். குறியீட்டு மாற்றி (tscconverter) என்ற ஏனைய குறியீடுகளிலிருந்து தகுதரத்துக்கு மாற்றும் செயலியை எழுதி இலவசமாக வழங்கினேன். உத்தமம் அமைப்பின் நிறுவனச் செயற்குழு உறுப்பினராகவும், வட அமெரிக்க உத்தமத்தின் நிறுவனராகவும், இவ் வாண்டு முதல் உத்தமத்தின் பொருளாளராகவும் பணியாற்றி வருகிறேன். கடந்த சில மாநாடுகளில் ஒளிவழி எழுத்தறிதல் (OCR), யூனிகோடு (Unicode) போன்ற கருத்தரங்குகளில் தலைமை தாங்கினேன். உத்தமத்தின் பணிக்குழுக்கள் சிலவற்றில் உறுப் பினராய் இருப்பது மட்டுமின்றி, கலைச் சொல்லாக்கம்/தரக்குழு (Computer glossary standardization working group)வின் தலைவராய் இருக்கிறேன். தமிழ் இணைய மாநாட்டை பர்க்கெலி பல்கலைக் கழகத்தின் துணையோடு அமெரிக்காவுக்குக் கொண்டு வந்தேன். கடந்த செப்டம்பர் முதல் மாநாட்டு ஏற்பாடுகளில் மும்முரமாய்ப் பணியாற்றி வருகிறேன்.

தென்றல்: தமிழில் தகவல் தொழில் நுட்பம் என்பது, தமிழில் பாட்டி தாத்தா, பெற் றோருக்கு கடிதம் எழுதுவதுடன் நின்று விடுகிறதா? அவ்வப்போது அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்கள் குமுதம், ஆனந்த விகடன் படிக்க உதவியாக இருக்கிறது. இதை தவிர தமிழ் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்த வேண்டிய அவசியம் என்ன?

தமிழில் மின்னஞ்சல்கள் எழுதுவதும், வலையில் தமிழ்ச் செய்திகள், தமிழ் இதழ்கள் படிக்க முடிவதும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்குக் கிடைத்த பெரும் வரப் பிரசாதம். குறிப்பிடத்தக்க அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான காஞ்சனா தாமோதரன் இந்தத் தொழில் நுட்பங்களால்தான் தன்னால் எழுத முடிகிறது என்கிறார். எண்ணத் துக்கும் படைப்புக்கும் உள்ள இடைவெளியை தமிழ் தகவல் தொழில் நுட்பங்கள் குறைத்து விட்டன என்கிறார் காஞ்சனா. இந்தப் பிணைப்புகள் தாம் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தம் வேர்களைத் தக்க வைக்கத் துணை புரிகின்றன. இல்லையேல், மேற்கிந்தியத் தீவுகள், ·பிஜித் தீவுகள் போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் போல் தம் அடையாளங்களையும், பண்பாட்டுக் கூறுகளையும், வேர்களையும் சில தலைமுறைகளில் இழந்து விடுவார்கள். அதனால் நீங்கள் குறிப்பிட்ட தமிழ் தகவல் தொழில் நுட்பங்கள் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குக் கட்டாயம் தேவை.

தமிழகத்தில் வாழும் தமிழர்களுக்கு 8 ரூபாய்க்குக் குமுதம் கிடைக்கிறது. ஆனால், இணையம் வழியாகப் படிப்பதற்கு ஒரு மணி நேரம்கூடப் போதாது. அந்த ஒரு மணி நேரத்துக்குக் கட்டணம் 30 ரூபாய். ஏற்றுமதிக்கு என்றே உயர்தரப் பொருட்களை இந்தியா உற்பத்தி செய்வது போலவே வசதியுள்ள வெளிநாட்டுத் தமிழர்களின் ஆதரவால் தமிழ் தகவல் தொழில் நுட்பம் வளரும். அதனால், புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு மட்டுமே தமிழ் தகவல் தொழில் நுட்பம் என்றால் அது நெடுநாள் நிலைக்காது.

எப்படி அமெரிக்காவில் தகவல் தொழில் நுட்பம் என்பது மின்னஞ்சல், சிஎன்என்.காம் என்று நிற்பதில்லையோ, அதே போல் தமிழ்நாட்டிலும், மலேசியாவிலும், சிங்கையிலும், இலங்கையிலும் “எங்கும் எதிலும் தகவல் தொழில் நுட்பம்” என்ற அளவுக்கு வளர்ச்சி இருக்கும். இங்கெல்லாம் வாழும் பெரும்பான்மையான மக்கள் ஆங்கிலப் புலமை அற்றவர்கள். எனவே இந்த வளர்ச்சி ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், தாய்மொழியிலும் இருக்கும். அரசியல், வணிகம், கல்வி, இலக்கியம், ஆன்மீகம், பொதுத்தொண்டு, என்பவை அனைத்தையும் தாய்மொழியில் வலைவழியே செய்யும் வாய்ப்புகள் ஏற்படும்.

தொலைக்காட்சி, செல்பேசி, போன்ற தொழில் நுட்பங்கள் தமிழ் நாட்டில் இன்று வெகு விரைவாக வளர்ந்து வருவதைப் பாருங்கள். வன்கல (hardware) வளர்ச்சியைத் தொடர்ந்து மென்கல (software) வளர்ச்சி கண்டிப்பாக வரும். பத்தாண்டுகளுக்கு முன்பு இன்றைய தமிழகத் தொலைக்காட்சி நிறுவனங்களின் வளர்ச்சியை யாரேனும் எதிர்பார்த்தார்களா? அதே போல் வருங்காலத்தில் மாபெரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களாய் வளரக்கூடிய அமைப்புகள் இன்று சிறு நிறுவனங்களாய்த் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து, சரியான முறையில் பேணி வளர்ப்பவர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.

தென்றல்: இன்று தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் அமேசான்.com சென்று ஒரு புத்தகம் தேடி வாங்க இயலுமா? இல்லை எனில் அதற்கான காரணம் என்ன? அப்படி ஒரு நிலை வரும் நாள் எந்நாள்?

இது மிக எளிதான கேள்வி. தமிழர்கள் தம் மொழியில் உள்ள நிகழ்ச்சிகளையே பெரிதும் விரும்புகிறார்கள் என்பது தொலைக்காட்சித் தயாரிப்பாளர்களின் கணிப்பு. அதனால்தான் நேஷனல் ஜியகிரா·பிக் போன்ற நிறுவனங்களும் தமிழில் தம் நிகழ்ச்சிகளை வழங்க முடிவு செய்துள்ளார்கள். வலையில் புத்தகம் வாங்குவது கடைக்குச் சென்று வாங்குவதை விட எளிதாகவும் மலிவாகவும் இருக்கும் போது தமிழர்கள் கண்டிப்பாக வாங்குவார்கள். ஏற்கனவே காந்தளகம் (http://www.tamilnool.com/) போன்ற நிறுவனங்கள் தமிழ் நூல்களைத் தமிழிலேயே வலையில் விற்கிறார்கள். 7 கோடித் தமிழர்களுக்கு விற்பதால் லாபம் வருமென்றால், அமேசான் நாளைக்கே கூடத் தமிழில் விற்கத் தொடங்கலாம்.

தென்றல்: இணைய மாநாட்டை நடத்த விரிகுடா பகுதியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

விரிகுடாப் பகுதியும் சிலிக்கன் வேல்லியும் இணையத்தின் தலைநகரம் எனக் கருதப் படுகின்றன. இங்கு 150,000 இந்தியர்கள், அவற்றில் 25,000 தமிழர்கள் வாழ்வதாக ஒரு கணிப்பு இருக்கிறது. அவற்றில் பலர் இணையத் தொழில் நுட்பங்களில் முன்னணியில் இருக்கிறார்கள். வீட்டிலும், அலுவலிலும் கணினியையும் இணையத்தையும் தினம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இணையத் தின் அடிப்படைத் தொழில் நுட்பங்களை உருவாக்கும் பர்க்கெலியின் கலி·போர்னியா பல்கலைக் கழகமும் ஸ்டான்·போர்டும், உலகின் தலை சிறந்த நிறுவனங்களும் இங்கு இருக்கின்றன. தமிழில் சாதித்திருப்பவற்றை இவர் களுக்குக் காட்டவும், சாதிக்கக் கூடியவற்றை உலகத் தமிழர்களுக்கும் காட்டிக் கருத்து பரிமாறிக் கொள் ளவும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள் வது இணைய மாநாட்டை இங்கே நடத்துவதின் முதல் நோக்கம். டிஜிட் டல் டிவைட் எனப்படும் எண்ணியப் பிளவைக் கடப்பதற்கு இங்கே முதல் அடி எடுப்போம்.

தமிழ் இணையம் வளர வேண்டும் என்றால் அதில் வணிக வளர்ச்சி இருக்க வேண்டும். திரைப்படங்கள், திரையிசை, கிரிக்கெட் இவற்றை நாம் ஆதரிப்பதால்தான் அவை இவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளன. அதில் நூற்றில் ஒரு பங்கு செலவு செய்தாவது தமிழில் உள்ள செயலிகளை நாம் வாங்கி ஆதரித்தால், அவற்றிலும் பெரும் வளர்ச்சி இருக்கும். தமிழில் மின் வணிக (e-commerce) வளர்ச்சி தோன்ற சிலிக்கன் வேல்லியின் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களைத் தமிழ்த் தொழில்நுட்ப வல்லுநர்களைச் சந்திக்க இந்த மாநாடு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும். மின் அரசு (e-governance), இணையம் வழிக் கல்வி போன்ற தொழில் நுட்பங்களில் நல்ல கருத்துப் பரிமாற்றங்கள் இருக்கும். தொழில் வளர்ச்சிக்குப் புகழ் பெற்ற சிலிக்கன் வேல்லிக்குத் தமிழில் உள்ள வாய்ப்புகளை அறிவுறுத்த இது நல்ல வாய்ப்பு.

தென்றல்: இதற்கு முன் சென்னை, சிங்கப்பூர், கோலாலம்பூர் போன்ற இடங்களில் மாநாடு நடக்க அந்தந்த நாட்டு அரசின் பங்களிப்பு இருந்தது. குறிப்பாக இடம், நிதி போன்றவற்றிற்கு சிரமமிருந்திருக்காது. ஆனால் கலி·போர்னியா மாநாடு முழுக்க முழுக்க உங்கள் சொந்தப் பொறுப்பில் நடப்பது போன்று இருப்பதால் மாநாட்டை ஏற்பாடு செய்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள் என்ன?

இணைய மாநாட்டை “முழுக்க முழுக்க” சொந்தப் பொறுப்பில் நடத்தும் அளவுக்குச் செல்வம் என்னிடம் இல்லை என்பது ஒரு குறைதான்! ஆனால் அரசு உதவி இல்லாவிட்டால் என்ன, வட அமெரிக்கத் தமிழர்கள், பர்க்கெலியின் கலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் தமிழ் இருக்கை, சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம், கலி·போர்னியா தமிழ்க் கழகம் என்று பலரின் நிதியுதவியால் செலவைச் சமாளிக்க முயல்கிறோம். ஆனாலும், இது போன்ற மாநாடுகளை அமெரிக்கா வில் நடத்துவது எளிதல்ல. மாநாட்டு அரங்கின் வாடகை மற்றும் உணவுச் செலவுகள் மட்டுமல்லாமல், ஏற்பாட்டுச் செலவுகள் இங்கே சற்றுக் கூடுதல். பொருளாதார மந்த நிலைமையால் வணிக நிறுவனங்கள் மற்றும் பெரும்புரவலர்கள் உதவி கிடைப்பது எளிதல்ல. மாநாட்டு ஏற்பாட்டுக் குழு முழுக்க முழுக்கத் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டது. அரசு போன்ற மாபெரும் அமைப்புகள் இல்லாமல் ரொம்ப ரொம்ப சாதாரண மனிதர்களால் ஏற்பாடு செய்யப்படும் இந்த மாநாட்டின் விளைவுகள் அமெரிக்கத் தமிழர்களிடம் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

தென்றல்: இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ய உங்களோடு பணி புரிபவர்கள் யார்?

இந்த மாநாட்டைப் பர்க்கெலி கலி·போர்னியா பல்கலைக் கழகத்தோடு இணைந்து ஏற்பாடு செய்கிறோம். அதில் தெற்காசிய ஆய்வியல் பிரிவு மையத்தின் துணைத் தலைவர் முனைவர் ஸ்டீவன் பூலொஸ் அவர்களும், தமிழ்ப் பீடப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களும் உலக ஏற்பாட்டுக் குழுவில் உள்ளார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் எங்களோடு இந்த ஏற்பாட்டுக் குழுவில் இணைந் துள்ளனர். அவர்களில் உயர்மட்டக் குழுத்தலைவர் களாகத் தொண்டாற்றி வருபவர்கள் விரிகுடாப் பகுதித் தமிழர்களுக்குத் தெரிந்த முகங்கள். இணைய மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணைத்தலைவர் குமார் குமரப்பன். இவர் பர்க்கெலித் தமிழ்ப் பீட அமைப்புக் குழுவின் தலைவராய் இருந்து நிதி திரட்ட அரும்பாடு பட்டவர். கண்காட்சி மையத்து இயக்குநர் சிவா சேஷப்பன் இவ்வாண்டு தமிழ் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். சமூக மையத்து இயக்குநர் வெற்றிச் செல்வி ராஜ மாணிக்கம் கலி·போர்னியா தமிழ்க் கழகப் பள்ளியின் நிறுவனர். மாநாட்டு மையத்தின் இயக்குநர் கணேஷ் பாபு சென்ற ஆண்டு தமிழ் மன்றத் தலைவர். ஏனைய குழு உறுப்பினர்கள் ஆஷா மணிவண்ணன், தில்லை கலியபெருமாள், தமிழன் பாக்கியராஜ், லேனா கண்ணப்பன் ஆகியோரும் தமிழ் மன்றச் செயற் குழுவில் இருந்தவர்கள். வணிக நிகழ்ச்சிக் குழுவின் தலைவர் தொழிலதிபர் ராஜா ராஜமாணிக்கம். இவர்களுடன் பவானி பிரேம்பாபு, மோகன் கோபாலகிருஷ்ணன், கமலக்கண்ணன் ஆகியோரும் குழுவில் தொண்டாற்றுகின்றனர்.

தென்றல்: மைக்ரோ சா·ப்ட் போன்ற மிகுந்த நிதி வசதி படைத்த நிறுவனங்கள் உதவி இந்த மாநாட்டுக்கு கிடைத்துள்ளதா?

மைக்ரோசா·ட், ஓரக்கிள், சன், ஐ.பி.எம். போன்ற நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள். கட்டுரை படைக்கிறார்கள். ஆனால், அவர்களிட மிருந்து பொருள் உதவி இதுவரை இல்லை. தொடர்ந்து பேசி வருகிறோம். பொருளாதார மந்த நிலையாலும், கணக்கு வழக்கு ஊழல்களாலும், பல நிறுவனங்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கின்றன. ஆனால், 7 கோடித் தமிழர்களின் பொருளாதார வலிமையை முறையாக எடுத்துச் சொன்னால் இந்த மாநாட்டுக்கு உதவுவார்கள் என நம்புகிறேன்.

தென்றல்: அமெரிக்காவில் சொந்தமாகத் தொழில் புரியும் தமிழர்களின் நிறுவனங்கள் இந்த மாநாட்டுக்கு எந்த வகையில் உதவி செய்தால் நல்லது என்று கருதுகின்றீர்கள்?

மாநாட்டை ஒட்டிய கண்காட்சியில் கலந்து கொள்ளலாம். அவர்கள் தாம் தயாரிக்கும் பொருட் களை விளம்பரப் படுத்தலாம். வணிக அரங்குகளில் கலந்து கொள்ளலாம். குழந்தைகளுக்கான தமிழ் வலைக்களப் போட்டிக்கு ஆதரவு தரலாம். மாநாட்டு மலரில் விளம்பரங்கள் தரலாம். மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துப் பரிமாறிக் கொள்ளலாம்.

தென்றல்: தமிழ் இணைய மாநாடுகள் என்ன சாதித்துள்ளன என்று பட்டியலிடலாமா?

சிங்கப்பூர் ’97 இல் இணையம், கணினி இவற்றில் தமிழ் பற்றிய சிந்தனைகள் ஆய்வு நோக்கில் முதல் முறையாக அலசப் பட்டன. அந்த அலசல்களின் தொடர்பில் எழுந்த மடலாடற்குழுவில்தான் திஸ்கி எனப்படும் தமிழ்க் குறியீட்டுத் தரத்தை உருவாக் கினோம்.

’97 மாநாட்டின் விளைவாகத் தமிழக அரசு தமிழில் தகவல் தொழில் நுட்பத்துக்கு ஆதரவு அளித்து, சென்னை ’99 மாநாட்டை நடத்தியது. அங்கு தான் தாம், தாப் குறியீட்டுத் தரங் களும், விசைப் பலகைத் தரங்களும் அறிவிக்கப் பட்டன. தமிழ் இணையப் பல்கலைக் கழகம் என்ற அமைப்பு இந்த மாநாட்டின் முக்கிய விளைவு எனலாம்.

சிங்கப்பூர் 2000 இல் முதல் முறையாகக் கண்காட்சி, சமூக மையங்கள் அமைத்துத் தகவல் தொழில் நுட்பத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி தொடங்கியது. ஒளி வழி எழுத் தறிதல் போன்ற தொழில் நுட்ப வல்லுநர்கள் முதல் முறையாகத் தம் ஆராய்ச்சி முடிவுகளை உலக அறிஞர் அரங்குகளில் அறிவிக்க முடிந்தது. அந்த மாநாட்டை ஒட்டிதான் உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் அமைக்கப் பட்டது.

கோலாலம்பூர் 2001 மாநாட் டில் முன்னர் தொடங்கிய முயற்சிகள் தொடர்ந்தன. புதிய முயற்சிகள் துவங்கின. தமிழ் இணைய ஆராய்ச்சிக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றியமையாத அரங்கமாகத் தமிழ் இணைய மாநாடு ஏற்கப்பட்டது என்பதற்கு அடையாளமாக இம்மாநாட்டிற்கு 750 பேராளர்களும், 50 பேச்சாளர்களும், கண்காட்சிக்கு 30,000 பேரும் வந்திருந்தனர். கணினித் தமிழை சிறுவர்களுக்கும், முதியோர்களுக்கும் கூட அறிமுகப் படுத்தும் முயற்சி இங்குதான் துவங்கியது. மைக்ரோசா·ப்ட், சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனங்கள் கலந்து கொண்ட முதல் தமிழ் இணைய மாநாடு இதுதான்.

தென்றல்: இந்த ஆண்டு நடைபெறும் தமிழ் இணைய மாநாடு இதற்கு முன்னர் நடைபெற்ற 4 மாநாடுகளைவிட எந்த வகையில் வேறு பட்டிருக்கும்?

இந்த மாநாட்டை அமைக்கும் முயற்சியோடு இணைந்துதான் உத்தமத்தை லாப நோக்கற்ற கலி·போர்னியா நிறுவனமாகப் பதிவு செய் துள்ளோம். இந்த மாநாட்டின் கருப்பொருள் “எண்ணியப் பிளவின் மேல் பாலம் அமைத்தல்.” இதை ஒட்டிய பெரு முயற்சிகள் இந்த மாநாட்டின் விளைவாக அமையும் என எதிர்பார்க்கிறேன். லினக்ஸ் போன்ற கூட்டுறவுத் தொழில் நுட்பங்களில் பெருவாரியான அமெரிக்கத் தமிழர்கள் பங்கேற்று ஏழைத் தமிழர்களுக்கும் தகவல் தொழில் நுட்பப் பலனை எடுத்துச் செல்லும் முயற்சிகள் தொடங்கும். முதன்முறையாக உலகத் தமிழ்ப் பள்ளி மாணவர் களுக்குத் தமிழ் வலைத்தளப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளோம். இதில் பங்கேற்கும், வெற்றி பெறும் மாணவர்களிடமிருந்து அடுத்த தலைமுறைச் சாதனைகளை எதிர்பார்க்கிறோம்.

தென்றல்: ஓசிஆர் முறை, தமிழ் சொல் திருத்தம், கையடக்கக் கணியில் தமிழ் என்ற திட்டடங்கள் பலவற்றில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதி வசதியும் தொழில் நுட்ப உதவியும் இன்றி அல்லல் படுகின்றனர். திட்டங்கள் நிறைவேறாமலும் இருக்கின்றன. இத்திட்டங்களை வெற்றிகரமாகப் நிறை வேற்ற உத்தமம் அறநிதி தொடங்கவோ அல்லது புரவலர்களை ஏற்பாடு செய்யவோ திட்டமிட்டுள்ளதா?

தொழில்நுட்ப வல்லுநர்கள் தம் கருத்துகளைத் தமிழ் இணைய மாநாடு போன்ற மன்றங்களில் பகிர்ந்து கொள்வதன்மூலம் அவர்கள் அரசு, புரவலர்கள், பல்கலைக் கழகங்கள், தொழிலதிபர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கிறார்கள். தொழில் நுட்பத்தில் சற்று முன்னேறிய வல்லுநர்கள் தம் பொருட்களைக் கண்காட்சிகளில் காட்டி முதலீடு களைத் திரட்ட முடியும். உத்தமம் இந்த மாநாடு களுக்கு அரசு, பல்கலைக்கழகங்கள், புரவலர்கள், தொழிலதிபர்களை அழைத்து வருகிறது. வணிகக் கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்யவிருக்கிறது. உத்தமத்தின் உறுப்பினர் தொகை கூடி, அதன் நிதிநிலை வலுப்பட்டால் அறக்கட்டளை அமைத்து நிதி வழங்கும் திட்டங்களைப் பற்றிச் சிந்திக்க முடியும்.
தென்றல்: தேடல் இயந்திரம் தமிழில் இல்லை. அதற்கும் பெரும் பணமும் தொழில் நுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்ளும் வல்லுநர் களும் தேவைப்படுவர். இப்போது ஒரு சில மின்னிதழ்களை நடத்தும் அமைப்புகள் தங்களின் தளத்திற்குள்ளேயே தேடல் இயந் திரத்தை இயக்கும் ஆற்றல் பெற்றுள்ளன. இவற்றின் உரிமையாளர்களை ஒன்றுபடுத்தி பொதுவான ஒரு தேடல் இயந்திரத்தை உருவாக்க அவர்களின் வளங்களை ஒன்று திரட்ட உத்தமம் அமைப்பு முன் வருமா?

தமிழில் ஏன் கூகுள், யாகூ இல்லை என்று கேட்கிறீர்கள்! தேடல் இயந்திரங்களின் அடிப்படைத் தொழில் நுட்பங்கள் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையங்களிலும், திறமையுள்ள கணிஞர்களின் தொழிற்கூடங்களிலும் உருவாகிக் கொண்டிருக் கின்றன. நீங்கள் குறிப்பிடுவது போல் அவற்றை உருவாக்கப் பெரும் முதலீடும், வல்லுநர்களும் தேவை. அவ்வளவு முதலீடு இட்டு வளர்க்கப்படும் ஒரு தொழில் நுட்பத் தை இலவசமாக எல்லோருக்கும் அளித்தால் அவற்றின் வளர்ச்சி தேங்கி விடும். தமிழில் எது கிடைத் தாலும் அது இலவச மாகவும், மலிவாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் தரமுள்ள படைப்புகள் உருவா வதற்குத் தடையாகி விடு கிறது என்று எண்ணுகிறேன்.

தென்றல்: சிங்கை, மலேசியா, இலங்கை, தமிழ்நாடு ஆகிய நாடுகளில் தமிழின் புழக்கம் அதிகமாக உள்ளதால் அங்கு தமிழ்ப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக மென் பொ ருட்களை அரசுகள் அல்லது அரசுகள் சார்புடைய அமைப்பு கள் அல்லது தனியார் நிறுவனங் கள் தயாரிக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து அனுபவங் களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளனவா?

கட்டாயம். வரும் கலி·போர்னியா மாநாட்டில் இது போன்ற செயலி களை உருவாக்கியவர்களும், பயன் படுத்துவோரும் தம் அனுபவங்களைத் தமிழ்க் கல்வியாளர்கள், பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறார்கள்.

தென்றல்: இணைய மாநாட்டில் என்ன எதிர் பார்க்கலாம்? நீங்கள் பங்கேற்பவர்களிடம் இருந்து, என்ன எதிர் பார்க்கிறீர்கள்?

இந்த மாநாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டி ருக்கும் போது நண்பர் ஒருவர் கேட்டார் “என்ன மணிவண்ணன், ஒரே ஓசி யார், ஈ அரசுன்னு மிரட்டரீங்க! கொல்லன் உலையிலே ஈக்கு என்ன வேலை? இணைய மாநாட்டில் எனக்கென்ன வேலை?”

அவர்களுக்கும் அவரைப்போல் திகைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். தஞ்சைப் பெரிய கோவிலைப் பார்த்து இதை எப்படிக் கட்டினார்கள் என்று வியந்திருக்கிறீர்களா? அவ்வளவு பெரிய கல்லை எப்படிக் கோபுரத்தின் உச்சியில் கொண்டு போய் வைத்தார்கள் என்று மூக்கில் விரல் வைத்திருக்கிறீர்களா? அதைப்போல் பன்மடங்கு பெரிய கோவில் ஒன்றை, தமிழ் இணையக் கோவிலைக் கட்டும் முயற்சிதான் இந்த மாநாடு. இந்தக் கோவில் கட்டும் சிற்பிகளோடு பேச வாருங்கள். சிற்பிகளே வாருங்கள். சிற்பிகளைப் படம் எடுக்கச் சிங்கப்பூரில் இருந்து வரும் படப்பிடிப் பாளர்கள், அமெரிக்கத் தமிழர்கள் வாழ்க்கையையும் படம் பிடிக்க இருக்கிறார்கள். கண்காட்சியிலும், சமூக அரங்கிலும், வணிக மையத்திலும், உங்களுக்குத் தெரிந்தவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். உலகத் தின் பல மூலைகளிலிருந்தும் தமிழ் அறிஞர்களும், தொழிலதிபர்களும் வருகிறார்கள். சங்க கால நாணயத்துக்கும் இருபத்தோராம் நூற்றாண்டுத் தொழில் நுட்பத்துக்கும் உள்ள பிணைப்புகளைப் பற்றிப் பேசுவார்கள். கலைஞர்கள், கேளிக்கைகள், பரிசுகள், கொண்டாட்டங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கருத்தரங்குகள் தவிர மற்றைய நிகழ்ச்சி களுக்கு அனுமதி இலவசம். மாநாட்டுக்குக் குடும்பத் தோடு வாருங்கள். செப்டம்பர் 27, 28, 29, ·பாஸ்டர் சிடி கிரௌன் பிளாசா. தமிழுக்கு என்று ஒரு மாநாடு. பல இதயங்களை இணைக்கும் இணைய மாநாடு. இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.

மின்னஞ்சல் பேட்டி: ஆல்பர்ட் ·பெர்னாண்டோ, நாராயணன் சேஷாத்திரி.
புகைப்படங்கள்: ஆஷா மணிவண்ணன்

*****


மணி மு. மணிவண்ணன்

தமிழ் இணையம் 2002 மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுக்களின் தலைவர். மாநாட்டின் அமைப்பாளர்களாகிய INFITT (Internatioal Forum for Information Technology in Tamil) எனும் உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்) எனும் அமைப்பின் பொருளாளர். உத்தமம் கலைச்சொல்லாக்கப் பணிக்குழுவின் தலைவர். மணிவண்ணன் வேதியியற் பொறியியலில் (Chemical Engineering) ஆய்வுப் பட்டத்துக்கு அமெரிக்கா வுக்குப் படிக்க வந்தாலும், 80'களின் தொடக் கத்தில் தனிக் கணினிப் புரட்சியால் ஈர்க்கப் பட்டு தொழிலை மாற்றிக் கொண்டார். நார்ட்டன் ஆண்டைவைரஸ் செயலியின் 1.5 முதல் 2.1 வரையான பதிப்புகளுக்குத் தலைமைப் பொறி யாளராய்ப் பணி புரிந்தார்.

இணையம் வழியாக உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்களோடு தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாறிக் கொண்டிருக்கும் இவர், தமிழ்.நெட் என்ற மடலாடற்குழுவில் முதன் முதல் தமிழில் எழுதத் துவங்கினார். தமிழ்.நெட், அகத்தியர், தமிழ் உலகம், மன்ற மையம், கானல், ஆறாம்திணை, சிங்கை இணையம் போன்ற இணையக் கூடங்களிலும் தென்றல் திங்களிதழிலும் எழுதி வருகிறார். இவர் வீட்டில் ஏற்பாடு செய்த அடுப்புக்கூடத்து அரட்டைத் தொடரில் பல தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் பங்கேற்றுத் தமிழ் ஆர்வலர் களோடு அளவளாவி யுள்ளனர். சான் ·பிரான் சிஸ்கோ தமிழ் மன்றத்தில் தலைவர், தொண்டர், செய்தி மலர் ஆசிரியர், என்று பல பணிகள் ஆற்றியுள்ளார். இவரது தலைமை யிலும், தூண்டுதலாலும் தமிழ் மன்றம் தமிழ் இசைத் திருநாள், முத்தமிழ் விழா, கம்பன் விழா, ஆகியவற்றை நிகழ்த்தியது. மன்றத்தின் நூலகத் திட்டத்தில் சான் ஓசே, ·பிரிமாண்ட் நூலகங் களுக்கு வழங்கிய தமிழ் நூல்களைத் தேர்ந் தெடுத்துத் தமிழகத்தில் இருந்து வருவித்தார். இவ்வாண்டு பொங்கல் முத்தமிழ் விழாவில் பாரதியின் பாஞ்சாலி சபதத்தைக் கவிதை நாடகமாக அரங்கேற்றினார்.

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்க் கணினி, தமிழ் இணையம், தமிழ் தகவல் தொழில் நுட்ப முயற்சிகளில் ( தமிழ்க் குறியீட்டுத் தரம், மதுரைத் திட்டம், உத்தமம், தமிழ் இணைய மாநாடு) முன்னோடிகளோடு இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது அவாயா கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தில் மேல் நிலை மேலாளராய்ப் பணியாற்றுகிறார்.

*****


ஆல்பர்ட் பெர்னாண்டோ

ஆல்பர்ட் ·பெர்னாந்தோ சிங்கை இணையம் (http://www.singaiinaiyam. com.sg) என்ற வலையிதழின் ஆசிரியர். தமிழ் உலகம் என்ற (http://groups. yahoo.com/group/tamil-ulagam/) என்ற மடலாடற்குழுவின் மட்டுறுத்துநர். (Moderator)

நாராயணன் சேஷாத்திரி

நாராயணன் சேஷாத்திரி சான் ·பிரான் சிஸ்கோ விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் 2001-2002 தலைவர். சிலிக்கன் வேல்லியில் துவக்க நிறுவனம் ஒன்றில் இரவு பகலாக வேலை செய்யும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் தமிழ் மன்றம், தமிழிசை, தன்னார்வத் தொண்டர் இயக்கங்கள், திருப்பணி, என்ற இவற்றிலும் ஈடு பட்டிருக் கிறார். கடும் உழைப்பும் தமிழ்ப்பற்றும் நிறைந்த இந்த இளைஞரின் கலி·போர் னியா கார் லைசன்ஸ் பெயரும் “தமிழன்”!
Share: 


© Copyright 2020 Tamilonline