AID விரிகுடாக் கிளை வழங்கும் 'சங்கம்' ஷியாம் சேதலை ஆதரிப்பீர்
|
|
தரமான தமிழ் நாடகம் 'காசு மேல காசு' |
|
- அருணா|செப்டம்பர் 2002| |
|
|
|
ஸான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதி வாழ் தமிழ் ரசிகர்களுக்கு நாடக மேடை புதியதல்ல. விரைந்தோடும் இந்த 'ஹை-டெக்' யுகத்தின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து விடுவித்து, ஒரு சில மணிநேரம் வாய்விட்டுச் சிரிக்க வைத்து மகிழ்விக்கும் நகைச்சுவை நாடகங்களையே இந்த ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இவர்களின் நாடக ஆர்வத்தைத் திருப்தி செய்ய தமிழ் நாட்டிலிருந்து 'கிரேஸி' மோகன், எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரா போன்ற கலைஞர்கள் அடிக்கடி இங்கு வருகை புரிந்து நாடகங்கள் நடத்தி வருகிறார்கள். ரசிகர்களை மகிழ்விக்கும் இந் நாடகங்கள் சிறப்பாக அமைந்தாலும், அவற்றின் பின்னணி முற்றிலும் இந்தியாவிலேயே குறிப்பாகத் தமிழகத்திலேயே அமைந்துள்ளன. இந்நாடகங்கள் அங்கு நடைபெறும் சம்பவங்களையும் வாழ்க்கை முறைகளையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவற்றின் மத்தியில், சமீபத்தில் (ஆகஸ்டு 3, 4 தேதிகளில்) 'நாடக்' குழுவினர் Palo Alttoவில் உள்ள cubberley theater-இல் அரங்கேற்றிய 'காசு மேல காசு' என்ற தமிழ்நாடகம், வளைகுடாப்பகுதியில் வாழும் தமிழ் இளைஞர்களையும் அவர்களது கனவுகளையும் பற்றி அமைந்து, நாடக ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. பெரும்பாலும் வட இந்திய மொழிகளிலேயே நாடகங்கள் நடத்தி வரும் 'நாடக்' குழுவினரின் இரண்டாம் தமிழ் நாடகம் 'காசு மேல காசு' வளைகுடாப் பகுதியில் வாழும் ஐந்து இளைஞர்கள் (இவர்களில் ஒருவர் 'சின்னச் சின்ன ஆசை'கள் பல கொண்ட இளம்பெண்), அவர் களிடையே அமைந்த இயல்பான நட்பு, அவர்களது ' மில்லியன் டாலர்' கனவுகள் இவற்றைச் சுற்றிப் பின்னப்பட்ட ஒரு நாடகம். நேரில் சந்தித்த போது, இந்நாடகத்தை எழுதி இயக்கிய திரு. மணிராம் அவர்களும் இக்கதாபாத்திரங்கள் போலவே 'Silicon valley'யில் வாழும் ஒரு 'ஹை-டெக்' இளைஞர் என்று தெரிந்தது.
இயல்பான கதையமைப்பு, கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை வெளிக்காட்டிய விதம், மண் வாசனை கூடிய தமிழ், நகைச்சுவை இழையோடும் வசனங்கள் இவையாவும் மணிராம் ஒரு சிறந்த நாடகாசிரியர் என்பதை நிரூபிக்கின்றன. பாத்திரங் களை ஏற்ற நடிக நடிகையரின் இயல்பான நடிப்பு, சிறப்பான மேடையமைப்பு, ஒளி/ஒலி அமைப்புகளில் கவனம் இவையாவும் மணிராம் ஒரு நல்ல இயக்குனர் என்பதையும் காட்டுகின்றன. நண்பர்களாக வரும் இளைஞர்கள் அனைவரும் இயல்பாகவும், அளவாக வும் நடித்தனர். நடித்தவர்களில் பாதிக்கு மேற் பட்டோர் புதுமுகங்கள் என்றாலும் மேடை பயமின்றி இயல்பாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காட்சிகளின் இறுதியில் இவ்வளவு அழகாக 'freeze' செய்யும் கலையை இவர்கள் எங்கு பயின்றார்கள்!
காசுமேல காசு கிடைப்பதாக கனவு காணும் நாயகன் ஆனந்த் பாத்திரமேற்ற முனீஷ் சிவகுருநாத் நடிப்பிற்கு சபாஷ்! ஒரு சில காட்சிகளிலேயே தோன்றினாலும் திருநெல்வேலி தமிழ் பேசும் அம்மா, அப்பா, மற்றும் 'கோயம்புத்தூர் தமிழ் பேசும் முதியவர் ஆகிய பாத்திரங்கள் மனதில் நிற்கிறார்கள். அப்பாவாக நடிப்பர் இயக்குனர் மணிராம் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதையும் நிரூபித்துவிட்டார். தாடியுடனும் தாடி இல்லாமலும் தோன்றும் 'மன சாட்சி' எளிதில் மனதைப் பிடித்துவிட்டார். 'Who wants to be a millionaire' காட்சியில் 'Regis' ஆக வந்து நன்றாகச் சங்கடப்படுகிறார் Lou Bash. |
|
காட்சிகளின் இடையே, திறமையான 'production' குழு விரைவில் மேடைமாற்றங்களைச் செய்தாலும், இவற்றைத் திரைமறைவில் அல்லது இன்னும் மங்கிய ஒளியில் செய்திருக்கலாமோ? ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சிறந்த வகையில் பழுதின்றி நாடகம் நடந்தேறியதற்கு production குழுவின் கடும் உழைப்பே காரணம். உண்மையில் நடிகர்களின் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் production இல் ஈடுபட்டிருந்தனர் என்பது நாடக அமைப்பிற்கு இவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. special effectஐப் பொறுத்தவரையில், ஒரு சில நொடிகளே நீடித்தாலும் அபாரமாக அமைந்த பூகம்பக்காட்சி தேவைப்பட்ட இடத்தில் சட்டென்று தோன்றிய spot light இவற்றைக்குறிப்பிட்டுச் சொல்லலாம். பல நகைச்சுவை நாடகங்களில் இசை சம்பந்தமில்லாமல் தனியாக அலைந்து காதுகளுக்கு தொல்லை கொடுக்கும். 'காசு மேல காசு' நாடகத்தில் இசை, நாடகத்திற்கு நல்லதோர் பின்னணியாகவும் அளவாகவும் அழகாகவும் அமைந்தது. இசைக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்! இறுதிக் காட்சியில் தமிழ் நாடக நிகழ்ச்சியைத் துவக்கி வைப்பதற்காக வரும் ஆனந்த், உண்மையிலேயே அரங்கில் நுழைந்து, இருக்கையில் அமரும் போதே நாடகத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஊகிக்க முடிந்தாலும், நாடகத்தின் முடிவு பழுதின்றியும், ரசிக்கத்தக்க வகையிலும் அமைந்து விட்டது. மொத்தத்தில், சுய கற்பனையில் உருவாகி, வளைகுடா வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது என்கிற வகையில் இந்நாடகம் நல்ல முதல் முயற்சி! 'நாடக்' குழுவினரிடமிருந்து மேலும் தரமான நாடகங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை!
அருணா |
|
|
More
AID விரிகுடாக் கிளை வழங்கும் 'சங்கம்' ஷியாம் சேதலை ஆதரிப்பீர்
|
|
|
|
|
|
|