|
|
நாமே நடித்து நாமே பார்த்து நாமே துன்பப்படும் இந்த கொடூர நாடகத்தை இன்னும் எத்தனை முறை மேடை ஏற்றப் போகிறோம்? யாருக்கு வெற்றி இதில்? இது எங்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காது என்று மீண்ட மும்பைவாசிகளுக்கு நிச்சயம் வெற்றி. எத்தனை முறை செய்தாலும் அடுத்த முறை செய்யும் போது, உங்களால் அறியவோ அல்லது தடுக்கவோ முடியாது என மார் தட்டிக்கொண்டு திட்டம் தீட்டுபவர்களுக்கு? இந்தியாவின் பொருளாதார தலைநகரத்தை ஒரு நாள் நிலைகுலையச் செய்வதன் மூலம், அந்நிய முதலீட்டாளர்களுக்கு அச்சம் விளைவிக்க எண்ணுபவர்களுக்கு? என்னுடைய ஒரு கண் போனாலும் பரவாயில்லை, உனக்கு இரு கண்களூம் போனால் என்ன எண்ணும் அண்டை நாட்டினருக்கு? அரசியல் லாப நஷ்டங்களை தைரியமாக ஒதுக்கி விட்டு கேடு விளைவிப்பவர்களை களைந்தால்தான் நாட்டிற்கு வெற்றி; நாட்டு மக்களுக்கு வெற்றி; நாட்டையாள்பவர்களுக்கும் சட்டத்திற்கும் வெற்றி. அது அரங்கேறும் வரை தொடர்வோம் நற்சிந்தனையையும் பல மத நல்லிணக்கத்தையும்.
நிலக்கரி மட்டும்தான் கறுப்பா...
தொழிலாளர்கள் போராட்டமும், இடதுசாரி அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும், எதிர் கட்சித்தலைவரின் போராட்ட ஆதரவும், முதல்வரின் வற்புறுத்தலும் இந்திய மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி அமைப்பின் பத்து சதவிகித பங்கை விற்கும் பொருளாதார தாரளமயமாக்கும் திட்டத்தை முறித்திருப்பது, பொருளாதார நிபுனர்கள் ஈடுபட வேண்டிய விஷயத்தில் மீண்டும் அரசியல் விளையாடியிருக்கிறதோ என்று எண்ணும் வகையில் உள்ளது. ஆனால், அகில இந்திய மருத்துவக் கழகமும் அதன் தலைமையும் தன் விருப்பத்திற்கு மாறாக நடந்ததால், அதில் தலையிட்டிருக்கும் அமைச்சரது செய்கையோ அரசியல் தவிர வேறேதும் இல்லை என்று தெளிவாகச் சொல்கிறது. பாதிக்கப்படுவது இந்தியப் பொது மக்களே. |
|
தொடரட்டும் தமிழ்த் தொண்டு...
சான் பிரான்சிஸ்கோ வளைகுடாவைச் சேர்ந்த திரு தில்லை க. குமரன், அமெரிக்கத் தமிழ்ச்சங்களின் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தமிழுக்கு அவர் ஆற்றும் பணி தொடர தென்றலின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்; சாதனைப் பாதை கட்டுரைத் தொடரில், அவருடைய சாதனையை எழுதுவதில் பெருமையடைகிறோம்.
அடுத்த சந்திப்புவரை நலம் விழையும், சிவகுமார் நடராஜன் ஆகஸ்டு 2006 |
|
|
|
|
|
|
|