ஸ்ரீ சாரங்கபாணி கோயில் கும்பகோணம்
|
|
|
பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுவதால், என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றன என்று வேத முப்புராணங்களும் எடுத்துரைக்கின்றன. பகவானைவிட அவனுடைய நாமம்தான் பெரிது என்றும் யாகங்கள் செய்வதால் கிடைக்கும் பலனை இந்த நாம உச்சரிப்பே கொடுத்து விடுகின்றன என்றும் கூறுவதைவிட எளியவழி வேறுகிடையாது. அதனால்தான் அம்புப்படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர், தருமருக்கு விஷ்ணு சகஸ்ரநாமத்தை உபதேசித்தார். 'ராம' என்னும் இரண்டு எழுத்தில் 'நாராயண என்னும் சொல்லுக்கு உயிராக உள்ள 'ரா'என்ற எழுத்தும், ''நமச்சிவாயா'' என்ற சொல்லுக்கு உயிராக உள்ள 'ம' என்ற எழுத்தும் சேர்ந்து இருப்பதால் இந்த 'ராம' என்னும் நாமத்தை உச்சரித்தாலே நம்முடைய பாவங்கள் அழிந்து, புது பாவங்கள் நம்மை வந்தடையாது. ராமநாமத்திற்கு சக்தி அதிகம். அது விலை மதிக்க முடியாததது. எல்லோரும் ராமநாம ஜபம் செய்யலாம். ஆனால், அதன் மதிப்பை அறிந்தவர்கள், வெகு சிலரே. ராமனுக்குக்கூட, தன் நாமத்தின் மதிப்பு தெரியாது என்று கூறுகிறார்கள். ராம பக்தன் துளசி, ''ராமா! உன்னைவிட உன் நாமம் உயர்ந்தது. ஒரு பாலத்தைக் கட்ட நீ எத்தனை கஷ்டப்பட்டாய். ஆனால் நாங்களோ, உன் நாமத்தைப் பயன்படுத்தி, பிறவிப்பெருங்கடலையே கடக்கிறோம்'' என்று கூறுகிறார்.
காசியில் இறக்கிறவர்களின் காதில், ராமநாமத்தை ஓதும் வேலையைத்தான் இன்னும் பரமசிவன் செய்து கொண்டிருக்கிறார். அதனால்தான் காசியில் இறந்தால் முக்தி என்று கூறுகிறார்கள். கனி இருக்க காயைப் பறிக்கிறோமே, அதுபோல பகவானை அடைய, அவனுடைய நாமத்தைச் சொல்லும் எளிய வழி இருக்க, எதற்காக உடலைவருத்தி தவம் செய்யவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
ராமரைவிட 'ராமநாமம்' வலிமையுள்ளது என்பதை பல சம்பவங்களின் மூலம் அறிகிறோம். ராவணனிட மிருந்து சீதாபிராட்டியை மீட்பதற்காக, ராமர் வானரசேனைகளின் உதவிக்கொண்டு கடலுக்கு பாலம் அமைத்தார். ஆனால் ராமபக்தனான அனுமாரோ, ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு கடலை ஒரே தாவில் தாண்டினார். அந்த ராமநாமமே அவரை இலங்கையிலிருந்து வெற்றியுடன் திரும்ப உதவி புரிகிறது.
ஒரு சமயம் சகுந்தன் என்கிற அரசன் தன் சபைக்கு வந்திருந்த ரிஷிகளை அழைக்கும்போது ''வசிஷ்டர் முதலான பெரியோர்களே!" என்று அழைத்தார். இதை கவனித்த நாரதர், உடனே விஸ்வாமித்ரரிடம் சென்று கலகம் மூட்ட அவர் ''நாளை சூரிய அஸ்தனத்திற்கு சகுந்தனின் தலை என் காலில் கிடக்க வேண்டும்'' என்று சபதமிட்டார். அவர் உடனே ராமனிடம் சென்று, தன் சபதத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ராமரும் "சரி" என்றார். உடனே நாரதர், சகுந்தனிடம் சென்று நடந்ததைச் சொல்லி, உடனே அவனை ஹனுமாரிடம் சரண் அடையுமாறு யோசனை கூறினார். அதன் காரணமாக அடுத்தநாள் காலை ராமருக்கும், ஹனுமாருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. ஹனுமன் ஒன்றும் செய்யவில்லை. தன் வாலினால் ஒரு கோட்டையைக் கட்ட, அந்த கோட்டைக்குள் சகுந்தனை வைத்து, அந்த கோட்டையின் மீது உட்கார்ந்து கொண்டு, ராமநாமஜபம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அதன் காரணமாக அவருடைய ஒவ்வொரு நேரமும், ராமநாம மயமாக விளங்க, ராமருடைய அம்புகள் அவருடைய ரோமத்தைக்கூட தொடமுடியவில்லை.
நாளெல்லாம் அம்புகள் போட்டு, ராமர் களைத்தார். அஸ்தமனத்திற்குள் சகுந்தனின் தலையைக் கொய்தாக வேண்டும். அதற்கு தன் வீரத்தின் மேல் சத்யம் செய்து, ஒரு சக்தி பாணத்தை தொடுக்க ஆரம்பித்த உடனே, தேவர்கள் எல்லோரும் ஓடிவந்து சண்டையை நிறுத்தினார்கள். நாரதர் விஸ்வா மித்திரை பார்த்து ''இதோ சகுந்தன் உங்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் செய்கிறான். அதனால் அவன் தலை உங்கள் காலடியில் கிடக்கிறது'' என்றார். விஸ்வாமித்ரரும் திருப்தி அடைந்தார். பிறகு ராமர், ஹனுமனைப் பார்த்து'' அது எப்படி என்னால் உன்னை வெல்ல முடியவில்லை'' என்று கேட்டார். அதற்கு ஹனுமன், ''ராமரைவிட ராமநாமம் பெரிது என்று உங்களுக்குத் தெரியாதா! உங்கள் நாமத்திற்கு முன்னால் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது'' என்றார்.
பகவானுடைய நாமம்தான் திரெளபதியை, மானபங்கத்திலிருந்து காப்பாற்றியது என்பதை நாம் அறிவோம். திரெளபதி மீது பகவான் கிருஷ்ணன் ஏன் அத்தனை அன்பாக இருக்கிறார் என்று ருக்மணியும், சத்யபாமாவும் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு சமயம் பகவான் அவர்களை அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்பொழுது திரெளபதி இன்னும் தலைவாராமல், கலைந்த கூந்தலுடன் இருக்கிறாள். அவள் தலையை வாரிவிடும்படி, ருக்மணியை பணிக்கிறாள். அவள் திரெளபதி தலையை வாருகிறாள். அப்பொழுது சீப்பு துடிக்கிறது. ஏன் என்று பார்த்தால் திரெளபதியின் ஒவ்வொரு தலைமயிரும் கிருஷ்ணன் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதைக்கண்டு இருவருக்கும் உண்மை புரிகிறது.
அடுத்து நந்தனார் எப்பொழுதும், பகவான் சிவனு டைய நாமத்தை சொல்லிக் கொண்டிருந் ததைப் பார்த்த அவருடைய தோழர்கள், நாமம் சொல்லிக் கொண்டிருந்தால், சோறுபோடுமா? என்று கேட்டார்கள். அதற்கு நந்தனார் ''நாய்கூட சோறு தின்னும், நாமம் பாடுமோ?" என்று பதில் சொன்னார். உண்மையில் நாமம் சொல்லிக் கொண்டிருந்தால், சோறு கிடைக்கும் என்பதை நிரூபித்தார் அக்பர் சக்ரவர்த்தியின் அமைச்சரான பீர்பால்.
ஒருசமயம் பீர்பால் அக்பருக்கு, கீதையைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ''அனன்யாஸ் சிந்தயந்தோ மாம்'' என்னும் ஸ்லோகத்தை விளக்கினார். ''என்னைத் தவிர வேறு எதிலும் நாட்டமில்லாமல் என்னையே யார் பயபக்தியுடன் உபாசிக்கிறார்களோ அவர்களுடைய யோக §க்ஷமத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்'' என்று பகவான் கூறுகிறார் என்று விளக்கினார். ''அதாவது நாமம் சொல்லிக் கொண்டிருந்தால், அது சோறு போடும் அப்படித்தானே'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அக்பர். ''அப்படித்தான். அதை தக்க சமயத்தில் நிரூபிக்கிறேன்' என்றார் பீர்பால். |
|
சில நாட்களுக்குப் பிறகு பீர்பாலும், அக்பரும் வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, வழிதவறி, கூட வந்த பரிவாரங்களிடமிருந்து வெகுதூரம் பிரிந்து போகவே, இருவரும் பசியால் தவித்தார்கள். அப்பொழுது அக்பர், பீர்பாலிடம் ''நீங்கள் நாமம் சொல்லிக் கொண்டிருங்கள். உங்களுக்கு சோறு கிடைக்கும். நான் என் சொந்த முயற்சியைக் கொண்டு சோறு சம்பாதிக்கிறேன்'' என்று சொல்லி போனார். வெகுதூரம் அலைந்த பிறகு அவருக்க ஒரு குடிசையில் பாலும், பழமும் கிடைத்தது. ஆனால் அதைச் சாப்பிடாமல் ''பாவம்! அந்த அசட்டு பீர்பால் நாமத்தை நம்பிக்கொண்டு பட்டினி கிடப்பார்'' அவருக்கு கொடுத்துவிட்டு நாமும் சாப்பிடுவோம்'' என்று திரும்பி வந்து பீர்பாலை, தான் கொண்டு வந்ததில் பாதியை உண்ண செய்தார். ''என்ன பீர்பால்! உன்னுடைய நாமம் சோறு கொடுக்க வில்லையே. நான்தானே கொண்டு வந்தேன்'' என்றார். அதற்கு பீர்பால் ''ஆமாம், ஆனால் நான் சொன்ன அந்த நாமம்தான் சக்கரவர்த்தியாகிய நீங்கள்கூட சாப்பிடாமல் எனக்குக் கொண்டு வர செய்தது'' என்றார். அக்பர் வெட்கி தலைகுனிந்தார்.
மந்திரங்கள் முதலியன பொருள் தெரியாமல், நம்பிக்கையின்றி சொன்னால் பலன்தராது. ஆனால் பகவான் நாமமோ தெரியாமல் சொன்னாலும் பலன்தரும். அஜாமினன் சாகும் தருவாயில் பகவான் நாராயணனைக் கூப்பிடவில்லை. தன் மகன் நாராயணைத் தான் கூப்பிட்டான். உடனே விஷ்ணுதூதரர்கள் ஓடிவந்து, அவனை யமனிடம் இழுத்துச் செல்ல முன்னே நின்ற யமதூதர்களைத் தடுக்கிறார்கள். உடயே யமதூதர்கள் ''அவன் பகவான் நாராயணனைக் கூப்பிடவில்லை. தன் மகன் நாராயணனை அல்லவா கூப்பிட்டான்'' என்றவுடன், விஷ்ணு தூதர்கள் எப்படி விறகு தெரிந்தோ தெரியாமலோ தீ பட்டதும் எரிந்து சாம்பலாகிறதோ, அதே மாதிரி பகவானுடைய நாமத்தைத் தெரியாமல் சொன்னாலும் பலன் உண்டு அவனை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்ள, யமதூதர்கள் அவனை விட்டுவிட, அஜாமினன் மோட்சத்தை அடைந்தான்.
அவதார காலம் முடிந்து, மீண்டும் வைகுண்டம் திரும்ப வேண்டிய காலம் வந்ததும், ராமர் ஹனு மாரைப் பார்த்து ''நான் வைகுண்டம் போகும்போது நீயும் என்னோடு வரவேண்டும்'' என்று கூறுகிறார். அதற்கு ஹனுமார் ''நீங்கள் அங்கு இந்த இராமர் வேஷத்தில்தான் இருப்பீர்களா? என்று கேட்டதற்கு ராமர் ''இது அவதார வேஷம். இது முடிந்ததும் களைத்துவிடுவேன். அங்கு நாராயணன் வேஷத்தில் தான் இருப்பேன்'' என்றார். ''ராம நாமம் சொல்லு கிறவர்கள் உண்டா?'' என்று ஹனுமான் கேட்க ராமர் யாரும் கிடையாது. எல்லோரும் என்னை ''நாராயணா'' என்று தான் அழைப்பார்கள் என்றார். ''அப்படியானால் இந்த பூலோகத்திலேயே இருக்க விரும்புகிறேன். வைகுண்டம் எனக்கு வேண்டாம். இங்கு ராமர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் 'ராமநாமம்' நிச்சயமாக இருக்கும். ஆகவே நான் இங்கேயே இருக்க விரும்புகிறேன்'' என்றார் ஹனுமான்.
ஆக ஹனுமானைப் போல நாமும், பகவான் நாமத்தை நம் ரத்தத்தோடு ரத்தமாக கலந்து பகவான் அருளைப் பெற வேண்டும். மஹாத்மா காந்தியை அந்தக் கொடியவன் சுட்டபோது அவர் 'ஐயோ' என்று அலறினாரா? இல்லை. 'ஹேராம்'' என்று ராமனைத் தான் கூப்பிட்டார்.
பகவான் நாமத்தை நாம் சொல்லாவிட்டாலும், நம்மைச் சொல்ல வைக்க ஓர் எளிய வழி, நம் குழந்தைகளுக்கு அவனுடைய நாமத்தை பெயராக வைத்தால், அவற்றை அன்புடன் வாய்நிறைய கூப்பிடும் சாக்கில், பகவான் நாமத்தை அனுதினமும் நினைப்போம்.
ஹேராமா! ஹேராமா! ஹேராமா!
சாந்தா கிருஷ்ணமூர்த்தி |
|
|
More
ஸ்ரீ சாரங்கபாணி கோயில் கும்பகோணம்
|
|
|
|
|
|
|
|