தென் கலிபோர்னியாவில் 'காசு மேல காசு' விமர்சனம் - காசு மேல காசு அபிநயா நாட்ய குழுவின் ஆட்டம்
|
|
அட்லாண்டாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். |
|
- அட்லாண்டா கணேஷ்|டிசம்பர் 2002| |
|
|
|
நவம்பர் 9ம் தேதி மாலை 6.15ல் இருந்து 10.15 வரை நான்கு மணி நேரம் அட்லாண்டா Marietta Southern Polytechnic அரங்கில் "ஆட்டம், பாட்டம் & கொண்டாட்டம்" "இளமை, இனிமை & புதுமை".
நிகழ்ச்சிகளை ரசித்துக் கொண்டிருக்கும்போது பல ஆசாமிகளுக்கு "சாமி" வந்துவிட்டது. சீட்டை விட்டு எழுந்து அவர்களும் ஆட ஆரம்பித்துவிட்ட்னர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை நிகழ்ச்சி அப்படி "ஆடாத கால்களையும் ஆட வைக்கும் நிகழ்ச்சி". "பாடாத வாய்களையும் பாட வைக்கும் நிகழ்ச்சி" ஆஹா நமது தமிழ் சினிமாவின் மகிமையே மகிமை 6 முதல் 60 வரை அத்தனை பேரையும் பெரிதும் ரசிக்க வைத்தது. சினிமா மீடியத்துக்கு ஒரு 'ஓ' போடுவோம்.
"மறுபடியும் ஆரம்பித்து விட்டாயா உன் சஸ்பென்ஸை? என்ன விஷயம் சொல்லு? உன்னோட லொள்ளு வர வர தாங்க முடியவில்லை" என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. இதோ பிடியுங்கள் விஷயத்தை. ஒன்றுமில்லை நமது ஜார்ஜியா தமிழ் சங்கம், இல்லை இல்லை இப்போது பெயரை மாற்றிவிட்டார்கள் "GATS" என்று அதாவது "Greater Atlanta Tamil Sangam" என்று. இது ஒரு full fledged Non Profit organisation இப்போது. Tax exempt வேறு உண்டு. அதிக வருமானம் உள்ள தமிழர்கள் கவனிக்க. இந்த நான் ப்ரா·பிட் "GATS'க்கு தாராளமாக நிதி உதவி கொடுத்து அவர்கள் நல்ல நிகழ்ச்சிகளைக் கொடுக்க உதவுவோமே! (சரி, சரி, உடனே என்னைப் பார்க்காதீர்கள் நான் ஒரு ஏழை எழுத்தாளன் அவ்வளவே, அதற்குத்தான் "அதிக வருமானமுள்ள" என்று உங்களைச் சொன்னேன்).
மேலே கூறிய 'GATS' தான் நான்கு மணி நேர தீபாவளி நிகழ்ச்சியை நடத்தி அசத்திவிட்டார்கள். இதற்கு நல்ல விளம்பரமும் கொடுத்திருந்தனர். எப்போது கம்ப்யூட்டரைத் திறந்தாலும் 'GATS' தீபாவளி நிகழ்ச்சி பற்றி டீடைல்ஸ் கடந்த ஒரு மாதமாக. அதற்குக் கை மேல் பலன். நிகழ்ச்சி ஆரம்பித்தபோது உள்ளே போனால் ஹவுஸ் ·புல். எங்கள் கூட ஐந்து பேர் வந்ததால் மொத்தம் எங்களுக்கு 7 சீட் ஒரே ரோவில் தேடினோம். நோ, ஒன்று இரண்டு சீட் தான் கண்ணில் பட்டது அதுவும் கிட்டே போனால் நம்ம ஊர் ரயில் சீட் போல துண்டு விரிக்கப்பட்டு இருந்தது. யாரோ வருகிறார்கள் என்று யாரோ துண்டு போட்டிருந்தனர். சிலர் கடைசி வரை வரவேயில்லை. வேறு வழியில்லாமல் அப்படி இப்படி துண்டு துண்டாக 4 பேர் அமர, நான், என் மனைவி, அவர் கசின் கோபி மூவரும் பால்கனியில் நின்று கொண்டே நிகழ்ச்சிகளை ரசிக்க ஆரம்பித்தோம். நல்ல காலம் ஒரு ஐந்து நிமிடத்தில் நண்பர் ஒருவர் நாங்கள் நிற்பதைப் பார்த்து மனது இரங்கி எங்கிருந்தோ 2 சேர்களைத் தேடிப் பிடித்து அங்கேயே கொண்டுவந்து அதைப் போட்டு உதவினார். மூன்று பேருக்கு இரண்டு இருக்கைகள் "மியூசிகல் சேர்" விளையாட்டை நினைவு படுத்தியது. (என்ன பிரதர் மியூசிகல் சேரா? என்று அவரிடம் நான் ஜோக் அடிக்க அதை ஜோக்காக எடுக்காமல் "இதுக்குத்தான் இவனுக்கெல்லாம் இரக்கமே படக்கூடாது" என்ற உணர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. தப்பு என் மேல் தான். அவரிடம் போய் உதவி செய்யும் இந்த நேரத்தில் என்ன ஜோக் வேண்டிக்கிடக்கு? என் தர்மபத்தினி வேறு "நீ திருந்தவே மாட்டாயா?" என்பது போல ஒரு பார்வை பார்த்தாள்).
இருந்தாலும் டீசென்ஸி காரணமாக மனைவியையும், அவரது கசின் கோபியையும் அமரச் சொல்லி நான் நின்றுகொண்டு ரசித்தேன். (கல்யாணத்திற்குப் பிறகு ஒரு "பயம் கலந்த மரியாதையால்" நான் மனைவி முன் அவ்வளவாக உட்காருவதில்லை. என் தாயாருக்கு அவர் மறையும் வரை இந்த மரியாதையை நான் அவர்களுக்குக் கொடுக்கவில்லையே என்ற குறை இருந்தது உண்மை). ஆனால் பெரிய உடம்பை சுமக்க முடியாமல் கால்கள் வலிக்கத் தொடங்கியது. என் நல்ல நேரம் இன்னொரு நண்பர் மற்றொரு நாற்காலியைக் கொண்டுவந்து போட்டு அமரச் சொல்ல மனைவியின் முன் தானே உட்காரக்கூடாது. பின்னால் ஓ.கே. என்று சொல்லி அதில் செளகர்யமாக அமர்ந்துகொண்டேன். அட்லாண்டாவில் இதுவரை கல் மலை ஒளி நிகழ்ச்சிக்கு (Stone Mountain Laser Show) போகும்போது மட்டும் தான் கையோடு சில மடக்கு நாற்காலிகளைக் கொண்டு செல்வோம். இனிமேல் 'GATS' நிகழ்ச்சிக்குப் போகும்போதும் இதை செய்யவேண்டியது போல உள்ளது. குட்! GATSன் வளர்ச்சிக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
சரி! சரி! நிகழ்ச்சிக்கு வருவோம்.
இந்த முறை GATS தீபாவளி நிகழ்ச்சிக்குக் கொடுத்திருந்த தலைப்பு "தமிழ் சினிமா அன்றும் இன்றும்" இது ஒரு பட்டிமன்ற தலைப்பு என்று தவறாக எண்ணிவிடாதீர்கள். தமிழ் அன்றைய சினிமாவிலும் இன்றைய சினிமாவிலும் எப்படி உள்ளது என்று பழையதையும் புதியதையும் கலந்து ஒரு அவியலாக அளித்தார்கள். முழுவதும் சினிமா நிகழ்ச்சி தான். முதல் நிகழ்ச்சியில் பல குழந்தைகள் 1960ல் இருந்து 2000 வரை உள்ள சினிமா பாடல்களுக்கு ஆடினர் பாடலுடன். பாடல்களும் நல்ல செலெக்ஷன். குட்டி கமலாக வந்த சரண் பாலாஜி உண்மையிலேயே சகலகலாவல்லவன். சூப்பர் ஆட்டம். முழு பாடலையும் போட்டு நமக்கு திகட்டச் செய்யாமல் முதல் பாராவுடன் கட் செய்து ஐயோ இன்னும் கொஞ்சம் வராதா? என ஏங்க வைத்தனர். குட் ஜாப். இதை அருமையாக அமைத்த உமா முரளிதருக்குப் பாராட்டுகள். அத்தனை மழலை செல்வங்களும் மிக அழகாக நடனம் ஆடி அடேங்கப்பா இந்த வயதிலேயே இப்படி ஆட்டம் போட்டால் வளர வளர என்ன ஆட்டம் போடுவார்கள் என ஆச்சரியப் பட வைத்தார்கள். வாழ்த்துக்கள்!
இரண்டாவது, இன்றைய நகைச்சுவை. தெனாலி படத்திலிருந்து முதல் இரண்டு சீன் நடித்தார்கள் V.K. ரங்கா தலைமையில் ஒரு சில சொந்த வசனங்களோடு. சொந்த வசனங்கள் எல்லாம் அட்லாண்டாவைப் பற்றி இருந்ததால் ஏகப்பட்ட வரவேற்பு. கைத்தட்டல் கூரையைப் பிய்த்தது. எல்லோருமே நன்றாக நடித்தார்கள் ஆனால் அந்த இலங்கைத் தமிழ் கொஞ்சம் உதைத்தது. இன்னும் கொஞ்சம் கவனம் தேவையோ? கடைசியாக ஸ்மோகி மவுண்டனைச் சொல்லி ஒரு ஜோக் அடித்தார்கள் என்ன ஜோக் அது என்று இன்னமும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறேன். நெருப்பு இல்லாமல் புகையாது அதனால் ஸ்மோகி மவுண்டன் ஜோக்கும் கூடிய விரைவில் தெரியவரும் என்று நினைக்கிறேன். அன்றைய நிகழ்ச்சியாக கவுண்டமணி, செந்தில் காமெடி சீரியஸாக? நன்றாக இருந்தது. மக்களுக்குப் பிடித்து பல இடங்களில் கை தட்டினார்கள். ஆகவே மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
மூன்றாவது ஐட்டம் இசை ராஜாக்கள் இளையராஜா, கார்த்திக் ராஜா/ யுவன் சங்கர் ராஜா பாடல்கள். "டும் டும் டும்" படப் பாடல்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள் அழகாக ஆடினர். அந்த நடனத்தை அமைத்த ப்ரீத்தி தனது மாணவிகளிடம் நன்கு வேலை வாங்கி இருந்தார். அதிலேயே அன்று ஐட்டத்தில் இளையராஜாவின் காதல் ஓவியம் படத்தில் வந்த SPBயின் ஏழு நிமிட க்ளைமாக்ஸ் பாடலை V.K ரங்கா பாட பத்து வயது அனிருத் தங்கமாக மிருதங்கம் வாசிக்க மூன்று பெண் குழந்தைகள் கச்சிதமாக நடனம் ஆடினர். கண்ணுக்கு விருந்தாக இருந்தது. என்னையா எதோ ஒருவர் 7 நிமிடம் பாடியிருக்கிறார் காதுக்கு விருந்து என்று சொல்லாமல் கண்ணுக்கு என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்கிறீர்களா? அது அப்படித் தான். முதலில் V.K. ரங்கா அவர்கள் பாட்டுக்கு வாய் அசைக்கிறார் என்று தான் நினைத்தேன் ஆனால் ஒரு சில இடங்களில் இது SPB மாதிரி இல்லையே என்ற சந்தேகம் வந்தது. பக்கத்தில் கேட்டால் சத்தியமாக SPB குரல் இல்லை என்றார்கள். அப்போது தான் உரைத்தது இது ரங்காவின் முயற்சி என்று. சரி அவரையே கேட்டுவிடலாம் என்று நிகழ்ச்சி முடிவில் சந்தித்துக் கேட்டேன். அப்போது அவர் சொன்னார் "ஆமாம் நான் தான் பாடினேன். கடந்த 3 மாதமாக இதை ப்ராக்டீஸ் செய்து இன்று அரங்கேற்றினேன்" என்று. எனக்கு மயக்கம் வராத குறைதான். நீங்கள் சிறு வயதில் கர்நாடக இசை கற்றுக் கொண்டீர்களா? என்றேன். அதற்கு அவர் இல்லை கேள்வி ஞானம்தான் என்று காசுவலாக சொன்னதும் இவர் என்ன மலை முழுங்கி மகாதேவனா? என்ற சந்தேகம் வந்தது. ஐயா ரங்கா "ஹாட்ஸ் ஆ·ப்" டு யுவர் சின்சியர் முயற்சி. இதைப் போல முயன்றால் நீங்கள் எதையும் சாதிப்பீர்கள் என்பதில் ஐயமில்லை. இது எல்லோருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். (சரி, சரி அடுத்த நிகழ்ச்சியில் நான் ஒரு பாட்டு பாட இல்லை, இல்லை என்னால் முடியாது இவ்வளவு டெடிகேஷன் எனக்குக் கிடையாது).
அடுத்து விசில் பாடல்கள். எல்லாமே நல்ல செலக்ஷன். நடனம் அமைத்த அருணா வினோத் அவர்களுக்குப் பாராட்டுகள். அதிலும் ஓ போடு பாடலுக்கு 5 ஆண்களை ஆட வைத்து அசத்திவிட்டார். ஆடியவர்கள் சூப்பர்ப். விசில் கூறையைப் பிய்த்தது. நன்றாக ரிகர்சல் பார்த்து அருமையாக நடத்தினார்கள். கடைசி இரண்டு நிமிடத்திற்கு அந்த ஐந்து பேருடன் அருணா வினோத் அவர்களும் மேடைக்கு வந்து போட்ட ஆட்டம் அபாரம். கைத் தட்டலும் விசிலும் விண்ணைப் பிளந்தது. நிச்சயமாக இவர்களுக்கு ஒரு பெரிய 'ஓ' போடலாம்.
இதன் பிறகு இசை, 6 சின்ன பையன்கள் A.R. ரஹ்மானின் "சின்ன சின்ன ஆசை" அவார்ட் வின்னிங் பாடலை இன்ஸ்ட்ருமெண்டில் வாசித்தனர். சூப்பர் ஹிட் பாடலை ரசிக்க வைத்தனர்.
அடுத்து நாட்டியக் கதம்பம். அமைப்பு ஷாலா சுந்தரம். பல குழந்தைகள் 60லிருந்து 2000 வரை உள்ள பாடல்களுக்கு அருமையாக ஆடினர். நல்ல பாடல்கள். அந்த எல்லாக் குழந்தைகளுமே நன்றாக ஆடினர். அதிலும் எந்த பாட்டு எந்த வருடம் என்று பின்னால் இருந்து ஒரு பேனரில் காட்டியது நல்ல ஐடியா.
அடுத்து வசனம், ஹைலைட் ஆ·ப் தி ஷோ. முதலில் ஒரு 6 வயது பையன் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போல நடிக்க வந்து அந்த கூலிங் கிளாஸைப் போட்டுக் கழட்டி வீசிய விதம் ஒரிஜினல் சூப்பர் ஸ்டாரையும் மிஞ்சியது. பிறகு பாபா படத்திலிருந்து வசனங்களைப் பேச (சூப்பர் ஸ்டார் உச்சரிப்பில்) அரங்கம் அதிர்ந்தது. அட்லாண்டாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் பிரதீப் ராஜா சும்மா சொல்லக்கூடாது பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துவிட்டான். இங்கேயே பிறந்து வளர்ந்த இந்தக் குழந்தை இவ்வளவு நன்றாக தமிழ் பேசுவது பெரிய விஷயம். அவனது பெற்றோருக்குப் பாராட்டுகள். பிரதீப் ராஜாவின் இந்த திறமை மேலும் மேலும் ஓகோ என்று வளர நமது மனமார்ந்த வாழ்த்துக்கள். (குழந்தைக்கு நிச்சயம் திருஷ்டி சுற்றிப் போடவேண்டும்). வசனம் நிகழ்ச்சியில் அடுத்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் "வீர பாண்டிய கட்டபொம்மன்" படத்திலிருந்து சில காட்சிகள். அட்லாண்டா சிவாஜி V.K ரங்கா தான் கட்ட பொம்மன். ஜமாய்த்துவிட்டார். முக்கியமாக பிரிட்டிஷ் ஆபிஸர்களாக நடித்த ஹரி, சங்கீத் மற்றும் எட்டப்பனாக நடித்த ராம் பாலாஜி பாத்திரமாகவே மாறிவிட்டன.ர் அசத்திவிட்டார்கள். உள்ளே அமுக்கி வைத்திருந்த நடிப்புத் திறமையை எல்லாம் வெளியே கொட்டிவிட்டார்கள். நடித்த மூன்று காட்சிகளிலும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, கைத்தட்டல். சிவாஜி ரங்காவிற்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். |
|
அடுத்து காதல், ஊடல், கூடல் பை உமா முரளிதர். மூன்று ஜோடிக் கணவன் மனைவி (உண்மையிலேயே) வந்து அந்தக் கால "தேன் நிலவு" படத்திலிருந்து "ஓகோ எந்தன் பேபி" பாடலுக்கு ஆடினார்கள். இதில் ஒரு ஜோடி உமா & முரளிதர், அடுத்தது சித்ரா & பாலு, மற்றது அனிதா & குருசாமி. மிக அழகாக, அருமையாக ஆடினார்கள். அந்தக் கால டான்ஸ் மூவ்மெண்டுகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்தினர். ரசித்து கை தட்டி கை வலியே வந்துவிட்டது. அதே போல "அடுதாத்து அம்புஜம்" பாடலும் வெரி குட். அதே நிகழ்ச்சியில் அடுத்த பாடலுக்கு ஆடிய ராஜி ராமு, அருணா வினோத், மாலதி மற்றும் நாராயண், விஜய்குமார், அனுப் ரவி ஆகியோரும் அருமையாக ஆடினார்கள். இவர்களிடம் இவ்வளவு வேலை வாங்கி அவர்கள் நடனத் திறமையை வெளிக் கொண்டுவந்த உமா முரளிதர் திறமைசாலிதான். வாழ்த்துக்கள்.
கடைசி நிகழ்ச்சி பாடல்கள் பை தென்றல் குரூப். மூன்று பேர் பாடினார்கள் மற்றவர்கள் இசை அமைத்தனர். ஐஸ்வர்யா நரேந்திரன் பாடிய பாடல் "அமர்க்களம்" படத்தில் இருந்து. நல்ல குரல், நன்றாக பாடினார் ஆனால் ஆர்கெஸ்ட்ரா சத்தம் இவர் குரலை அமுக்கிவிட்டது. கவனிக்க அடுத்த நிகழ்ச்சியில். அடுத்துப் பாடிய "இளைய நிலா பொழிகிறது" மிக நன்றாக இருந்தது. அதன் பின் அந்தக் காலப் பாடல் "மணப்பாற மாடு கட்டி" பாடல் ஓ.கே. இன்ஸ்ட்ருமெண்ட் வாசித்த டீனேஜர்ஸ் அத்தனை பேரும் திறமைசாலிகள். நன்றாக வாசித்தனர்.
இப்படியாக அன்றும் இன்றும் தமிழ் சினிமா நிகழ்ச்சி இனிதே முடிந்தது. அடுத்ததாக அடுத்த வருடம் நிர்வாகிகளுக்கான எலெக்ஷன். போட்டியே இல்லாமல் திரு வைத்தி சுப்ரமணியம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றவர்களும் அப்படியே. இவ்வளவு தமிழர்கள் இருந்து பொறுப்பை சுமக்க பலர் முன்வரவில்லையே என்று மனதிற்கு தோன்றியது. நிச்சயமாக அடுத்த வருடம் எலெக்ஷன் விறுவிறுப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதன் பிறகு நண்பர் பை லா (By Law) ஸ்ரீதர் அவர்கள் பை லாக்களைப் படித்தார். (சட்ட திட்டத்துடன் GATS நடக்கிறது என்பதை புரிய வைக்க).
கடைசி ஹைலைட் பங்கு கொண்ட 110 கலைஞர்களும் மேடைக்கு வந்தனர். கண்கொள்ளாக் காட்சி ஐயா அது. சந்தோஷமாக எல்லோரும் கை தட்டினோம். அவர்களைக் கை தட்டல் மூலம் வாழ்த்தினோம். ஆனால் அவர்கள் அது போதாது எல்லோரும் எழுந்து நின்று ஒரு 'standing ovation' வேண்டும் என டிமாண்ட் செய்ய, அடடா அது நியாயம் தானே நாமே அதை செய்திருக்க வேண்டுமே, தவறு செய்து விட்டோமே என்று தவறைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுத்த கலைஞர்களுக்கு சந்தோஷமாக எழுந்து நின்று அவர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு கை வலிக்க கை தட்டினோம்.
நிகழ்ச்சியைத் தொகுத்து அளித்த விதம் நன்றாக இருந்தது. அந்தப் பெண் குரல் பேசிய விதம் மிக இயற்கையாக இருந்தது. இன்னொன்று அசரிரி ஆண் குரல் சிறிது சத்தம் அதிகமானாலும் விஷயம் இருந்தது. நடு நடுவே வேறு ஒன்று இரண்டு குரல்களும் நன்றாக அருமையாக வேலையை செய்தன. வாழ்த்துக்கள்!
இந்த நல்ல நிகழ்ச்சியை நடத்திய சங்கத் தலைவர் மற்றும் குழுவினருக்கு நிச்சயமாக பெரிய "ஓ" போடவேண்டும்.
ஒரு வேளை தன்னடக்கம் தான் காரணமோ என்று நினைக்கிறேன். (என் வக்ர புத்திக்கு வேறு என்னவெல்லாமோ தோன்றியது வேறு விஷயம்). ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் "அண்ணனுக்கு ஜே" பாட்டை போட்டு இவர் ஸ்டைலாக உள்ளே நடந்து வந்ததைப் பார்த்து இவரும் நம்மைப் போல ஒரு விளம்பர பிரியர் தான் போலும் என்று தவறாக நினைத்துவிட்டேன். எல்லோரும் விளம்பர மோகத்தில் வாழும் இந்த காலத்தில் இவரது தன்னடக்கம் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. வாழ்க! வளர்க!!
பின் குறிப்பு: மேலே கூறிய நிகழ்ச்சி முடிந்த மறுநாள் இதை எழுதுமுன் சில தெரிந்தவர்களிடம் அவர்கள் அபிப்ராயம் கேட்போம் என போன் செய்து பேசினேன். அவர்கள் கொடுத்த ·பீட் பேக்கும் என் எழுத்தில் உண்டு. சிறிது வெளியே போய்விட்டு வந்த போது GATS தலைவர் போன் செய்தார் என்ற தகவல் கிடைக்க என்ன விஷயம் என்று திரும்ப போன் செய்தேன். அவரிடம் வாழ்த்துக்களைக் கூறி எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் சங்கம் நிறைய நல்ல நிகழ்ச்சிகளை நடத்தி அட்லாண்டா தமிழர்களை அசத்திவிட்டீர்கள். எப்படி முடிந்தது என்று நான் போக முடியாத சில நிகழ்ச்சிகளைப் பற்றி பேச ஆரம்பித்தேன். சிறிது நேரம் பேசிய அவர் திடீரென யாரோ வந்துவிட்டார்கள் ஒரு 5 நிமிடத்தில் கூப்பிடுகிறேன் என்றார். சரி எனக் கூறி நானும் போனை வைத்து விட்டேன். ஆனால் இதை எழுதி முடிக்கும் வரை அவரிடமிருந்து போன் வரவில்லை. ஆகவே அந்த தகவல்களை உங்களுக்குக் கொடுக்க முடியவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.
அட்லாண்டா கணேஷ் |
|
|
More
தென் கலிபோர்னியாவில் 'காசு மேல காசு' விமர்சனம் - காசு மேல காசு அபிநயா நாட்ய குழுவின் ஆட்டம்
|
|
|
|
|
|
|