விருது ஜுரம் தாகத்தின் ஏக்கம் ராக லக்ஷணங்கள் அட்லாண்டாவில் கேட்டவை மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
|
|
இந்திய பத்திரிகைத் துறையில் அந்நிய முதலீடு |
|
- துரை.மடன்|டிசம்பர் 2002| |
|
|
|
பத்திரிகைத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான விதிமுறைகள் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்துக்கு முன்பாகத் தயாராகிவிடும் என்று தெரிகிறது. தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் இதை உறுதி செய்கின்றனர்.
இந்தியாவில் பத்திரிகைத்துறையில் அந்நிய மூலதனமும் சர்வதேச செய்தி நிறுவன அமைப்புகளும் நுழைவதற்கு உள்ள தடை நீக்கப்பட வேண்டும். அதன் மூலம் இத்துறையின் முகமும் குணமும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் கடந்த ஒரு வருடமாக முனைப்புடன் நடைபெறுகிறது.
1991லிருந்து இந்தியப் பத்திரிகைத் துறையில் வெளிநாட்டவர்களை அனுமதிப்பது என்ற கோரிக்கை மூன்று பிரதான வடிவங்களில் எழுந்துள்ளது.
1. இந்தியப் பத்திரிகைகளின் மூலதன உரிமையில் 49 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது
2. வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்துள்ள இந்தியக் கம்பெனிகளை பத்திரிகைத் துறையில் முதலீடு செய்ய அனுமதிப்பது
3. 26 சதவீதம் வரை நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது
இதில் இந்த மூன்றாவது கோரிக்கை மிகவும் தீவிரமாக வலியுறுத்தப்படுகிறது. அரசியல் மற்றும் ஊடகங்களில் உள்ள சிலர் இணைந்து நாடாளுமன்ற நிலைக்குழுவில் வலியுறுத்தி வந்தார்கள். இந்த நிலைகளுக்கு எந்த வடிவத்திலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது என்று முன்பு முடிவு எடுத்திருந்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இக்குழு மாற்றியமைக்கப்பட்டது. மாற்றியமைக்கப்பட்ட புதிய குழுவில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னைய அறிக்கையை மாற்றி புதிய மறு அறிக்கை எழுத வலியுறுத்தினார்கள்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி அரசு நான்கு மாதங்களுக்கு முன் பத்திரிகைத்துறையில் 26 சதவீத நேரடி அந்நிய முதலிட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. அன்றாட செய்திகளை வெளியிடாத பத்திரிகைகளில் 74 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் இதில் அடங்கும்.
செய்தி வெளியிடாத பத்திரிகைகள் எவை என்பதை முடிவு செய்வதில் சிக்கல் இருப்பதால் இதற்கான விதிமுறைகளை உருவாக்குவதில் தாமதம் ஆகிறது. இதற்காக பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகள் அடங்கிய குழு ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையில் இணைசெயலாளர் இதன் தலைவராக இருப்பார். உள்துறை, நிதித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் பத்திரிகைத் துறையினரும் இக்குழுவில் இடம் பெறுவார்கள் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்ட பிறகு அந்தப் பத்திரிகையின் தன்மை மாற்றப்பட மாட்டாது என்று பதிப்பாளரிடம் இருந்து உறுதிமொழி பெறப்படும். பதிப்பக நிறுவனம் ஒன்று, செய்தி அல்லாத ஒரு பத்திரிகையை வெளியிட விரும்பினால் அதற்கு அந்நிய முதலிடு நேரடியாக அனுமதிக்கப்படும்.
ஆக பத்திரிகைத்துறையில் அந்நிய முதலீடு உள்நுழைவது உறுதிப்படுவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அந்நிய முதலீட்டை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பதற்கு அப்பால் பாஜக அரசு அந்நிய முதலீட்டை பத்திரிகைத்துறையில் கொண்டு வருவதில் உறுதியாகவே உள்ளது. இதை வற்புறுத்தும் 'மாற்றவிரும்பிகள்' 'நவீனவாதிகள்' தாராளமாக இயங்கி வருகின்றனர்.
இருப்பினும் பத்திரிகைத் துறையில் அந்நிய முதலீடு உட்புகுவதற்கு எதிர்ப்பு பலமுனைகளில் இருந்து வெளிப்படுவதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். இந்தியப் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் பொருளாதார இறையாண்மையை பலவீனப்படுத்துகின்றன. உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் பன்னாட்டு நிறுவனங்கள், உட்டே ஒப்பந்தம் போன்றவற்றின் நிர்ப்பந்தங்களால் பொருளாதார இறையாண்மை சுருங்கிப் போகிறது என்பதை எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகின்றன.
உலகமயத்தையும் தாராளமயத்தையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு போவதில்தான் இந்தியாவின் எதிர்காலமே தங்கியுள்ளதென்று முடிந்த முடிவுடன் கருத்துக் கூறிவருபவர்களும் உள்ளனர்.
இவர்களுக்கு செய்தி என்பதும் ஒரு விற்பனைச் சரக்குதான். சோப்பு, பற்பசை, குளிர்பானங்கள், இருசக்கர வாகனங்கள் இதையெல்லாம் விற்பது மாதிரி செய்தித்தாள் நடத்துவதும் ஒரு வியாபாரம்தான் என்கிறார்கள். இதிலிருந்து பத்திரிகைத்துறையில் அந்நிய முதலீட்டையும், சர்வதேச ஊடகங்களையும் அனுமதிக்க கிளம்பும் கோரிக்கை வெறும் பொருளாதாரக் கோரிக்கைதான் என்ற முடிவுக்கு வருவது மிகப் பெரிய தவறாகும்.
பலமுன்னேறிய நாடுகளில்கூட ஐரோப்பிய சமூகங்களில் கனடா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் செய்தித் தொடர்பூடகங்களில் அந்நியர் உரிமை கொண்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
செய்தி நிறுவனங்கள் என்பவை 'ஒரு தேசத்தின் அரசியல் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன' 'அந்நியர் உரிமையும் கட்டுப்பாடும் சொந்த நாட்டின் அடையாளத்தைக் கட்டிக் காப்பதற்கு எதிரான விஷயங்கள்'. குறிப்பிட்ட நாட்டின் கலாசார, அரசியல், சமூக பொருளாதார கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும்' இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக அந்த நாடுகளில் செய்தி நிறுவனங்களில் அந்நியர் முதலீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
1954ல் முதலாவது பத்திரிகைகள் குழு (பிரஸ் கமிஷன்) தன் பரிந்துரைகளை அளித்தது. அதன் அடிப்படையில் நேரு தலைமையிலான அமைச்சரவை ஒரு கொள்கை முடிவை எடுத்தது. இதையொட்டி 1955 செப் 30ஆம் தேதி B.V. கேஸ்கார் நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டார். |
|
'செய்தி மற்றும் அன்றாட நடப்புகளைத் தாங்கி வெளிவரும் அயல்நாட்டுப் பத்திரிகைகள் இந்தியாவில் தம் பதிப்புகளை வெளியிட அனுமதிக்கக்கூடாது' என்ற பிரஸ் கமிஷனின் பரிந்துரையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேற்கண்ட முடிவின்படி 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அவர்கள் இந்தியாவில் தங்கள் பதிப்பைக் கொண்டு வருவது என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டோம்.
1955 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவு நீண்டகாலக் கொள்கை முடிவாக உறுதிப்படுத்தப்பட்டு விரிவான கொள்கை முடிவாக 1956இல் அமைச்சரவை முடிவாக ஆக்கப்பட்டது.
பின்னர் 1982ல் நீதிபதி கே.கே. மேத்யூ தலைமையில் இரண்டாவது பிரஸ் கமிஷன் அமைந்தது. இந்தியப் பத்திரிகைத்துறையில் அயல்நாட்டு முதலீடு என்ற விஷயத்தை ஆராய்ந்து தன் பரிந்துரையில் இவ்வாறு கூறியது:
'இந்தியாவில் எந்தப் பத்திரிகையிலும் அந்நியர் உரிமையாளராவது என்பது கூடவே கூடாது'. அந்த முதலீடு 'பங்குகளை வாங்குதல்' என்ற வடிவத்திலோ கடன் வழங்குதல் என்ற வடிவத்திலோ எந்த வடிவத்திலும் அந்நிய முதலீடு கூடாது என்று குறிப்பாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும்.'
ஆக அயல்நாடுகளிடமிருந்து நிதிஉதவி பெற்று அதன் மூலம் தம் சுயாதிகாரத்தை இந்தியப் பத்திரிகைகள் இழந்துவிடக்கூடிய அபாயம் உண்டு என்பதை பிரஸ் கமிஷன் சுட்டிக்காட்டியது. அந்நிய உதவி பெறுவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென்ற ஆலோசனையையும் கமிஷன் கூறியது.
1991க்குப் பிறகு தாரளமயம், உலகமயம், பொருளாதார சீர்த்திருத்தம் என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் இந்தியாவின் இறையாண்மை சுயாதிபத்தியம் பாதிக்கப்படும் ஆபத்து உண்டு என்பதை பலரும் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து கருத்து கூறி வருகின்றனர்.
ஆகவே பத்திரிகைத்துறையில் அந்நிய முதலீடு என்பது இந்தியாவின் பன்முகத்தன்மைகளும் அவற்றின் சுயசார்புக்கும் இறையாண்மைக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் உண்டு. ஆகவே பத்திரிகைத்துறையில் அந்நிய முதலீடு என்பது தமக்குத்தாமே சவுக்குழி வெட்டுவதற்கு ஒப்பானது என்ற கூற்று பலமடைந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
துரை.மடன் |
|
|
More
விருது ஜுரம் தாகத்தின் ஏக்கம் ராக லக்ஷணங்கள் அட்லாண்டாவில் கேட்டவை மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
|
|
|
|
|
|
|