Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
நூல் அறிமுகம்
அசோகமித்திரனின் தண்ணீர்
ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’
- மனுபாரதி|டிசம்பர் 2002|
Share:
நெடுநாளாக காய்ந்து நீரின்றிக் கிடந்த தடங்களில் காட்டாறு ஒன்று பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடினாற்போல் தமிழ்ப்புனைவுலகில் மார்க்ஸிய சித்தாந்தங்களை மிகப்பெரும் அளவில் மிகுந்த உத்வேகத்துடன் முதன்முறையாக ஜெயமோகன் பாயவிட்டிருக்கிறார். கம்யூனிசம் என்ற சமூக அமைப்பியலின் இயங்குவிதிகளையும், ஆதார தருக்கங்களையும், கனவுகளையும், நடைமுறைபடுத்தப்பட்ட விதங்களையும், விளைவுகளையும், வரலாற்றுப் பதிவுகளையும் ஒரு புனைவின் பரிமாணத்திற்குள் அடக்கி ஒரு பெரும் (723 பக்கங்கள்) புதினத்தைப் படைத்திருக்கிறார். என்னுள் எழும் முதல் உணர்வு பிரம்மிப்புத்தான், காட்டாற்றைப் பார்த்தது போல்.

தொழிற்சங்க அறிக்கைகள், இடதுசாரி பத்திரிக்கைகள் என மிகக்குறுகிய வட்டத்தில் மட்டுமே எழுதப்பட்டு, விவாதிக்கப்பட்ட சித்தாந்தங்களை விரிவான வாசக வட்டத்திற்கு ஆர்வமேற்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தியிருப்பதைப் பாராட்ட வேண்டும்.

தருக்கங்களையும், தத்துவங்களையும் புதினம் போன்ற இலக்கிய வடிவில் விளக்கி, நிறுவி, விவாதிக்க முயல்கையில் பிரச்சார நெடியடித்து வாசகனின் முதல் ஆர்வத்தைக் கொன்றுவிடும் வாய்ப்பிருக்கிறது. அப்படியில்லாமல் புனைவிலிருந்து பிரித்தறியா வண்ணம் இயல்பாய்க் கலந்திருந்து, மேலும் அறிந்துகொள்ளும் ஆவலை ஏற்படுத்துகிறது இப்படைப்பு.

சோவியத் ரஷ்யாவில் ஸ்டாலினுக்குப் பக்கபலமாக இருந்த மார்க்ஸிய சித்தாந்தவாதி புஹாரின், ஐம்பதிகளில் தென்னிந்தியாவில் வாழ்ந்ததாக வரும் இடது சாரி அறிவு ஜீவி இலக்கியவாதி எம்.வீரபத்ரபிள்ளை (புனைவுப் பாத்திரம்) போன்ற மனிதர்களை சுற்றிப் புனைவு பின்னப்பட்டிருக்கிறது.

தொழிற்சங்கத் தலைவர் பதவியில் அமர்த்தப்படும் இடது சாரி சிந்தனையாளன் அருணாச்சலத்தின் பார்வைக்குத் ‘தற்செயலாய்க்’ கிடைக்கும் எம்.வீரபத்ரபிள்ளையின் படைப்புகள் அவனது ‘பொன்னுலகக்’ கனவினையும் நம்பிக்கையையும் உடைத்து, பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி மனப்பிறழ்வின் எல்லைக்குத் தள்ளுகின்றன. மனிதாபமான அடிப்படையில் பிறந்ததாக மார்தட்டும் மார்க்ஸியம், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் கொண்டு ரஷ்யாவில் இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கான அப்பாவி மக்களை பலிவாங்கியிருக்கிறது என்ற உண்மையின் வீர்யம் புஹாரின், வீரபத்ரபிள்ளை, அருணாச்சலம் போன்ற எல்லோரின் சித்தாந்த நேர்மையையும் உருக்குலைக்கிறது. பலியிடப்பட்ட உயிர்களின் குமுறல்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் தேடுகிறார்கள். இந்தத் தேடலே இப்புதினத்தின் கருவாக விரிகிறது. புஹாரினின் குரல் வீரபத்ரபிள்ளையையும், வீரபத்ரபிள்ளையின் குரல் அருணாச்சலத்தையும் நிழலாக பின்தொடர்வது புனைவின் மைய இழை.

புதினத்தின் வடிவம் முழுமையான ஒற்றைப் பெரும் கல்லில் வடித்த சிற்பம் (monolithic statue) போலில்லை. மாறாக இது (வீரபத்ரபிள்ளையின்) சொந்த மற்றும் ரஷ்ய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள், (அபத்த) நாடகங்கள் எனச் சிறு சிறு கற்களாய்த் தேர்ந்தெடுத்து இணைத்துச் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரே குரலில் அலுப்புத்தட்ட (monotonous) முழு புதினத்தையும் விவரித்தபடி செல்லாமல், பல படைப்பாளர்களின் குரல் வழியாக கதையை நகர்த்தியிருப்பது வித்தியாசமான முயற்சி. ஆனால் வாசகரின் கவனத்தை இடைவெளியின்றி ஆள முடியாமல் போகும் அபாயம் இதில் இருக்கிறது. மேலும் புதினம் என்பதே மறந்து ஒரு படைப்புத் தொகுப்பை வாசிக்கும் பாவனையையும் இது ஏற்படுத்தலாம்.

மார்க்ஸியம், ஜனநாயகம், காந்தியம், நாஸிஸம், முதலாளித்துவம் எனப் பல இயங்களைப் பற்றி புதினத்தில் வரும் பாத்திரங்கள் விவாதித்துக் கொள்கிறார்கள். கடிதமெழுதிக் கொள்கிறார்கள். உள்ளிடப்பட்ட படைப்புகளும் இவற்றில் ஒன்றை மையக் கருவில் தரித்துக்கொள்கின்றன. இத்தகைய பலவித உள்போக்குகளை கலந்து ஒற்றை வடிவமாக வடிப்பது ஞாயமாகாது என்று ஜெயமோகன் தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்கிறார்.

இப்புதினத்தைத் ‘தொகுத்து’ முடித்ததும் அவரே ஒரு சுயவிமர்சனமும் செய்திருக்கிறார். சமூக இயக்கத்தை “இப்படித்தான்” என்று புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் முன்னகர ஒரு கனவை உருவாக்கி, அதைச் சித்தாந்தப்படுத்தி, அதை அதிகாரம் துணைகொண்டு நடைமுறைப்படுத்துகிறார்கள். சித்தாந்தபடுத்தியதில் உள்ள குறையோ, புரிந்துகொண்டதில் ஏற்பட்ட தவறோ, நடைமுறைப்படுத்தத் தேர்ந்தெடுத்த வழியின் பொருத்தமின்மையோ மிகப்பெரும் அழிவுகளை விளைவிக்கும்பொழுது அந்தச் சித்தாந்திகள், இலட்சியவாதிகள், இயக்கவாதிகள், அதன் பொருட்டு பலியானவர்கள், தியாகிகள் என எல்லோரும் மதத்தையும் ஆண்டவனையும் நோக்கி ஓடி, பாவமன்னிப்பு கேட்டு, தங்கள் பாதுகாப்பைக் கண்டடைகிறார்கள். மதமும் ஆண்டவனும் மனிதனது கேள்விகளுக்கு மிக எளிதான விடைகளைக் கொடுக்கின்றன. முறையீடுகளுக்கு மிக எளிய வழிமுறைகளைக் காட்டுகிறது. இவற்றை ஆசிரியர் “இறுதி விடைகள்” என்று கூறுகிறார். இவற்றின் எளிமைகளில் மயங்கி, சிந்தனை சோம்பேறித்தனத்தை வளர்த்துக்கொண்டு, ஒரு தேக்க நிலையில் நின்றுவிடாமல் மானுட அறத்திற்கான தேடல் தொடர வேண்டும் என்று விழைகிறார். மிக மிக நியாயமான வேண்டுகோள்.

கதையில் கெ.என்.ஜோணி எழுதியதாக வரும் ஒரு கடிதத்தில் மார்க்ஸிய சித்தாந்தத்தின் அடிப்படைத் தவறு தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டப்பெறுகிறது. அதன் சாராம்சம்...

“தனி மனிதன் என்பவன் சமுகத்தின் ஒரு துளி. சிறந்த சமூக அமைப்புகள் உருவாகும்போது அச்சமூகத் துளியான தனிமனிதனும் சிறந்தவனாக ஆகிவிடுவான். செவ்வியல் மார்க்ஸியம் சமூகத்தையும் தனி மனிதனையும், இயந்திரம், இயந்திரத்தின் பாகமாக உருவகித்தது. ஜடஅமைப்புக்கு ஒப்பிட்டது. அதனால் ஓர் அரசியல் செயல்பாடு மூலம் ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்களை ஒரு சமுக அமைப்புத்திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளவைத்தால் போதும் என்ற எளிய நடைமுறை தீர்வுக்கு அது வந்தது. அதுவே பேரழிவின் விஷ ஊற்றுக்கு அடிப்படையானது.”

எவ்வளவு உண்மை! நெஞ்சில் வந்தறையும் நிதர்சனம். மார்க்ஸியத்தைத் தலைமேல் பல வருடங்களாக தாங்கிப்பிடித்து வரும் தமிழ் எழுத்துலகில் சாட்டையடியாய் தோலுரித்துக்காட்டும் உண்மையிது.

“தனிமனிதர்கள் பலர் சேரும்பொழுதுதான் சமூகம் என்ற ஒன்று உருவாகிறது. சிறப்பான தனிமனிதர்கள் உருவானால் அத்தனிமனிதர்களின் தொகுப்பாக சிறந்த சமூகம் தானாகவே உருவாகிவிடும். “மார்க்ஸியம் இந்தப் பழைய கோழிக்கனவின் எதிர் கோழிக்கனவுதான் என்கிறார் ஆசிரியர். ஆனால் இந்தப் பழைய கனவுதான் மானுட இனத்தை காலம் காலமாக தழைக்கச் செய்திருக்கிறது.

அடிப்படையில் எந்த மனிதனும் (ஏன், எந்த உயிரும்) குறியாய் இருப்பது தான் வாழவேண்டும் என்பதில்தால். உயிர்களின் அடிப்படை தன்னலம் தான்.

நான் உணவு உண்பது எதற்காக? என் பசியடங்க. என் உயிர் தழைக்க. நான் உழைப்பது எதற்காக? என் உணவிற்காக, என் உடமைக்காக, என் சுகங்களுக்காக, என் அந்தஸ்திற்காக.

நான் உறவு கொள்வது எதற்காக? என் சந்தோஷத்திற்காக. என் திருப்திக்காக. எனக்கு சந்ததி வேண்டும் என்பதற்காக.

நான் உன்னுடன் வியாபாரம் செய்வது எதற்காக? எனக்கு ஒரு தேவை இருக்கிறது உனக்குள்ளது போல். அதை பூர்த்தி செய்வதற்காக. (நீயே வலிய வந்து உன் தேவைக்கு என் பொருளை நீ கேட்கும்பொழுது, நானே வலிய வந்து உன் பொருளை வாங்கி பதிலுக்கு என் பொருளைத் தருகிறேன். பலாத்காரம் இந்த பண்டமாற்றில் எங்கும் இல்லை.)

நான் நன்கொடை தருவது எதற்காக? என் பெயர் சொல்வதற்காக. அல்லது என்னால் காணச் சகிக்கமுடியாத ஒரு துக்கம் துடைக்க. அல்லது என்னால் வாங்க முடிந்த பொருள்களையெல்லாம் வாங்கி அலுத்து, என் அலுப்பு நீங்க.

நான் படைப்பது எதற்காக? எனக்கு வடிகாலாய் அது இருப்பதால், என் பெயரில் காலம் தாண்டி அது இருப்பதற்காக. அல்லது என் தன்னிறைவுக்காக. அல்லது செல்வத்தையும் புகழையும் பெறுவதற்காக.

நான் தியாகம் செய்வது எதற்காக? “தியாகமே உயர்ந்தது. உனக்கது எல்லாவற்றையும் தர வல்லது” என்று என் நன்மையை குறித்த நம்பிக்கையை எனது அறியாமையால் நம்பியதற்காக.

நான் மதங்களின் பேச்சைக் கேட்டு துறவு கொள்வது எதற்காக? இக உலகில் கிடைக்கும் இன்பங்களுக்கு எல்லாம் மேலாக பரமானந்தம் ஒன்று எனக்கு கிடைக்கும் என்றது தரும் கனவிற்காக.

அடிப்படைத் தேவைகள் தொடங்கி ஆதம தேவைகள் வரை இப்படி தன்னல அச்சாணியில் தான் உயிர் சுழல்கிறது என்பதை மறுக்க இயலாது. தன்னலம் என்பது இருமுனை வாளும் கூட. வலியவன் மெலியவனை பலாத்காரம் செய்ய மிக மிக அதிக வாய்ப்பிருக்கிறது இதில். இதற்குத்தான் அரசாங்கம் என்ற பாதுக்காப்பு வளையம் தேவைப்படுகிறது. அடிப்படையில் மனிதர்கள் எல்லோரும் நேர்மையானவர்களாய் இருந்தால், இச்சித்தாந்தத்தின்மூலம் தனி மனிதர்கள் உன்னதங்களை நோக்கி முன்னேற முடியும். விளைவாக அவர்கள் உருவாக்கும் சமூகமும்.

இந்த அடிப்படை உயிரியல்பை மறுத்து, தனிமனிதர்களை ஜடப்பொருள்போல் நடத்திய மார்க்ஸிய சித்தாந்தத்தை வன்முறையின்றி வேறு எவ்வகையில் நடைமுறைப்படுத்த முடியும்? அதனால் விளைவது பேரழிவுதானே தவிர மேலான சமூகம் இல்லை. மிஞ்சப்போவது கரிந்து போன நிலமும், சுடுகாடுகளும், தலைக்கு மேல் ஒன்றிரண்டு சர்வாதிகாரிகளும் தான் என்று ஆசிரியர் வருத்ததுடன் சொல்கிறார். இது போன்ற சித்தாந்தங்களே வன்முறைக்கான நியாயங்களை உருவாக்கிக் கொடுத்துவிடும் என்பதும் ஆசிரியரின் கவனிக்கத்தக்க வரிகள். (Good observation!)

விவசாயியைச் சுரண்டி, தொழில் வளத்தையும், இராணுவத்தையும் பெருக்கி, ரஷ்யாவை பலம் பொருந்திய, சோஷலிசக் கட்டுமானம் உள்ள நாடாக மாற்ற வேண்டி நடந்த அரசியல் இன்று வரலாறாகிவிட்டது. ஒரு புரட்சியின் அடிப்படைத் தத்துவக்கோளாறு எப்படி ஒரு பேரழிவை நோக்கி மனிதர்களை முடுக்கிவிடும் என்பதற்கு ரஷ்யா உதாரணமாகிவிட்டது. இப்புனைவில் உள்ள பல்வேறு படைப்புகள் இதைப் பல கோணங்களில் அலசுகின்றன.

இந்த அழிவிற்கான பொறுப்பை, பழியை - சித்தாந்தத்தின் மீது போட்டு, மார்க்ஸையும், எங்கல்சையும், லெனினையும், ஸ்டாலினையும், இன்னும் தாங்கிப் பிடித்த அனைவரையும் அதன் கருவிகளாக மட்டும் அடையாளம் காண்பது ஒரு “தப்பித்தல்” மார்க்கமே.

இன்னொன்றின் மேலும் பழியைப் போடுகிறார்கள். ‘வரலாறு’ எனும் அருவப் பண்புக்கூறும் இவ்வழிவிற்குப் பொறுப்பேற்க வேண்டுமாம். புனைவில் உள்ள பாத்திரங்கள் பழி சுமத்துகின்றன. வரலாறுதான் அறிவு ஜீவிகளைக்கொண்டு சித்தாந்தங்களை உருவாக்குகிறது என்றும், அதுவே அந்தச் சித்தாந்தத்தின் பொருட்டு இலட்சியவாதிகளை ஆயுதம் ஏந்த வைக்கும் என்றும், முடிவில் அனைத்தையும் அழித்து நிர்மூலமாக்கும் என்றும் வரிசையாக களங்கங்களை சுமத்துகிறார்கள். இதுவும் ஒரு “தப்பித்தல்” மார்க்கமே. மனிதர்களின் செய்கைகள் வரலாறு ஆகிறதே அன்றி, வரலாறு மனிதர்களை ஆட்டிப் படைப்பதில்லை.

மனித மூளையில், அறிவின் தேவைக்கேற்ப உருவாகும் தேடல்களில்தான் சித்தாந்தங்கள் உதிக்கின்றன. அவற்றின் கற்பனை எவ்வளவு தூரம் விரியுமோ அதற்குள்தான் ஊகங்களை உருவாக்கிக்கொள்கின்றன. அதன் மூலம் முழு சமூகத்தையும் அதன் நியதியையும் புரிந்துகொண்டுவிட்ட நிலையை எய்திட முடியாது என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி உறுதிப்படுத்துகிறார்கள் கதைப் பாத்திரங்கள். ஆனால் இதற்காக சமூகம் எனும் கூட்டு இருப்பைப் புரிந்துகொள்ள முயற்சியே செய்யக் கூடாது என்று கூறுவது அபத்தமாகிறது. முயற்சி செய்யலாம். அதன் மொத்த விளைவுகளின் பொறுப்பை முயல்பவர்கள்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். உருவற்ற கூறுகளின் மேல் சுமத்திவிட்டு எளிதான இறுதி விடைகளைத் தரும் மதத்தையும் ஆண்டவனையும் நோக்கி ஓடி ஒளியக்கூடாது. தவறுகளைக் கண்டறிந்து களைய முற்படவேண்டும்.
விளைவுகளை உண்டு செறிக்கும் தொடர் சீர்திருத்தங்களில் தான் எந்த முன்னகர்வும் சாத்தியம்.

வாசகனாய் எனக்கு இச்சிந்தனைகளை கிளறிவிட்டது இப்படைப்பின் வெற்றி எனலாம்.

ஒரு குறை: புனைவின் பாத்திரங்கள் எல்லாம் தங்கள் மனதுடன், அல்லது மற்றவருடன் பேசுகையில்தான் இது போன்ற தருக்கங்களையும் தத்துவங்களையும் அலசுகிறார்கள். பாத்திரங்களின் செயல்களை(action) வைத்துச் சொல்ல வரும் விஷயங்கள் மிகக்குறைவு. சில சமயங்களில் வெற்றுத் தர்க்கங்களை, உரையாடல்களை படிக்கிறோமோ என்ற பாவனையை இது ஏற்படுத்துகிறது.

தொழிற்சங்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் இன்று வெறும் தரகர், வக்கீல் வேலைப் பார்க்கும் நிலைக்குத் தம்மை மாற்றிக்கொண்ட அவல நிலையை நாராயணன் போன்ற பாத்திரம் மூலம் படம் பிடிக்கிறார் ஆசிரியர். இந்திய கம்யூனிஸ்டுகள், ரஷ்ய உண்மைகள் வெளி வந்தபின்பும், எப்படி தங்களை சமாதானம் செய்துகொள்ள நியாயங்களையும், தருக்கங்களையும் கண்டுபிடித்துக்கொள்கிறார்கள் என்பதற்கு கதிரைப் பிரதிநிதியாக்கிக் காட்டுகிறார். நல்ல பாத்திரப் படைப்புக்கள்.

நான் மிகவும் ரசித்த சில நிதர்சனங்கள் புதினத்தில் அங்கங்கே ஊடும் பாவுமாய்ப் பரவியிருக்கின்றன.

“உண்மைகளை தத்துவம் அறிகிறது. உணர்வு நிலைகளை கவிதை அறிகிறது. நடுவே ஒரு பாலமாக புனைகதையாளன்... அவனில் கவித்துவத்தின் கால்களாக தருக்கமும், தருக்கத்தின் சிறகுகளாக கவித்துவமும் செயல்படுகின்றன.”

“வரலற்றில்தான் எத்தனை மாமனிதர்கள், தியாகிகள், புனிதர்கள். அவர்களையெல்லாம் புத்தகங்களாகவும், சிலைகளாகவும் மாற்றி அலமாரியில் வைத்துவிட்டுத்தான் மனிதர்கள் பூமியில் வாழமுடிகிறது.”

“சமூகம் பிரிந்து பிரிந்து பரவுகிறது. ‘பொது’க்களிலிருந்து முடிவின்றித் ‘தனி’க்களை உருவாக்குகிறது. ‘சிறப்பு’க்களைக் கண்டுபிடிக்கிறது. முட்டி மோதி முன்னேற அறைகூவுகிறது. ஆனால் ராணுவமாதல் சமூகத்தின் மீது சமப்படுத்தும் உருளையை உருட்டிச் செல்கிறது. அதில் அனைத்துவகை சிறப்பியல்புகளும் நசுங்கி அழியும்.”

லெவ் டால்ஸ்டாயைப் பார்த்து ஒரு சூதாடி, “என்னை விட பெரிய சூதாடி நீர். கருணையை வைத்துப் புனிதத்திற்கு ஆடினீர்.

இதோ மரணத்தை வைத்து நிரந்தரத்திற்கு ஆடுகிறீர்.”

“நீதி வழுவுவதும், வன்முறை சார்ந்து இயங்க நேர்வதும் பிரிட்டிஷாரைப் பொறுத்தவரை தற்கொலைக்குச் சமம். இப்பலவீனமே காந்தியால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.”

“மனப்பிறழ்வு ஓர் இடைவெளி. அல்லது இளைப்பாறல்.”

“எதிர்காலமே நமக்கு வாழ்வின் அர்த்தத்தைத் தர முடியும்.”

இறுதி இயந்திரம் என்ற கதையில் வரலாற்றிலிருந்து ஒருவரை அழிப்பது முடியாது என்பதை ஒரு முரண்பாட்டைக் கொண்டு நிறுவுவது அறிவார்ந்த கவிதை.

சுருங்கச் சொன்னால், காட்டாறாய் ஆர்பரித்து ஓடி முடிவில் சில வினாக்களை விட்டுவிட்டு ஓய்கிறது இப்புதினம். ஒரு படைப்பு மானுட அறத்திற்கான இவ்வினாக்களை எழுப்பி விடை தேடும் ஆவலை உருவாக்குகிறது என்பது அதற்குப் பெரும் வெற்றி.

ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ அப்படி ஓர் படைப்புத்தான்.

“பின் தொடரும் நிழலின் குரல்”

ஜெயமோகன்.
தமிழினி பதிப்பகம்.
நவம்பர் 1999

மனுபாரதி
More

அசோகமித்திரனின் தண்ணீர்
Share: 
© Copyright 2020 Tamilonline