|
கடல்புரத்தில் - ஓர் அறிமுக விமர்சனம் |
|
- மனுபாரதி|மார்ச் 2003| |
|
|
|
“அப்பா.. தாத்தா என்ன வேலை பாத்தாருப்பா..?”
- நாமெல்லாரும் ஏதாவது ஒரு காலத்தில் நமது பாட்டனார்கள் செய்து வந்த தொழில்கள் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருக் கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒரு குலத்தொழில் செய்யும் பரம்பரையிலிருந்தும் வந்திருக்கலாம். விவசாயம், மரவேலை, வியாபாரம், வைதீகம் என்று எத்தனையோ. கடந்த நூற்றாண்டில் பெருகி வரும் நகரங்களினால் வக்கீல் தொழிலும், மருத்துவமும், பொறியியலும் கூட குலத்தொழிலாக மாறியிருக் கின்றன. இன்னும் வரும் தலைமுறையில் கணிப்பொறியியலும் (Computer Science) சேர்ந்துகொள்ளும். காலப்போக்கில் அந்தத் தொழிலே நமக்கு ஓர் அடையாளமாகிவிடுகிறது.
மற்ற தொழில்கள் வம்சாவழியாகத் தொடர்ந்து செய்யப்படுகிறதோ இல்லையோ, இன்னமும் மீன்பிடித்தல் குலத்தொழிலாகத்தான் இருக்கிறது. கடல்புரத்தில் வாழ்பவர்களுக்கு அதுதான் வாழ்க்கைக்கான மையம், பிடிமானம் எல்லாம். இந்த மக்களின் வாழ்க்கைக்கு மிக அருகில் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த “கடல்புரத்தில்..” நாவல். தமிழில் பரதவர்கள் (மீனவர்கள் இனம்) பற்றி எழுதப்பட்டு ‘இலக்கிய’மாகிவிட்ட புதினம் இது. இதில் வரும் அவர்களின் எளிமையான வாழ் முறைகளும், மீனும், கருவாடும், கடலின் உப்பு நீரும், அலைகளும், வல்லங்களும், வலைகளும், மாதா கோவில் மணியோசையும், கடற்சேரி பாஷையும் நம் பாட்டனார் தொழிலில் நாம் காட்டும் ஆர்வத்தை இந்தக் குலத்தொழில் செய்வோர் மீதும் காட்ட நம்மைத் தூண்டுகின்றன.
நாகரீகத்தின் உயர்குடிகளான நகரவாசி களிலிருந்து வித்தியாசப்படும் மனிதர்கள் இவர்கள். கடலே வாழ்க்கையாய், தெய்வமாய், “மரியன்னை யாய்” கொண்டவர்கள். பிறந்த குழந்தையின் வாயில் முதன்முதலில் தாய்ப்பாலை பீய்ச்சாமல் கடலின் உப்பு நீரை விடும் அளவிற்கு பக்திகொண்டவர்கள். வல்லம்(அல்லது கட்டுமரம்) ஓட்டி மீன் பிடிப்பது ஆணின் வேலை. அவனுக்குத் தூக்குசட்டியில் கருவாடும், சோறும் ஆக்கிப்போட்டு அனுப்பி, அவன் காலையில் கொண்டு வரும் மீன்களைக் கரையில் காத்திருந்து கூடையில் எடுத்து வருவதும், மீன்களைக் உப்புக்கண்டமிட்டுக் காயவிடுவதும், இதற்கு நடுவில் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதும் பெண்ணின் கடமைகள். பிறக்கும் ஆண்பிள்ளைகள் பருவ வயதிலேயே கட்டுமரம் தள்ள வந்து விடுகிறார்கள். பிறக்கும் பெண்பிள்ளைகள் முதலில் கடற்கரையோரம் சிப்பி பொறுக்கி விளையாடிவிட்டு, (வசதியிருந்தால் பள்ளிக்கூடம் சென்று), வயது வந்தவுடன் இன்னுமொரு பரதவனை மாதா கோவிலில் ஓலை படித்து, பாதிரிமார்கள் வேதம் படிக்கக் கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.
திருச்செந்தூர் அருகில் மணப்பாடு என்ற கடற்கிராமம் தான் கதையின் களம். கதாநாயகன், நாயகி எல்லாம் இதில் வரும் மீனவக் குடும்பங்கள் தான். பிரதானமாக வருவது குரூஸ்மிக்கேல் என்னும் பரதவனின் குடும்பம். அவன் மனைவி மரியம்மை, மகன் செபஸ்தி, மகள்கள் அம்லோற்பவமும், பிலோமியும் மற்றும் அவர்களின் பிரியத்தையும் ஸ்னேகத்தையும் தனித்தனியே பெற்ற வாத்தி(யார்)யும், ரஞ்சியும், சாமிதாஸ¤ம் நம் முன் நிஜ மனிதர்களாய் வந்து போகிறார்கள். இந்த எளிமையான ஸ்னேகமும் அன்பும்தான் புதினம் முழுதும் மண்ணுக்கடியில் கண்ணுக்குத் தெரியாமல் ஓடும் நதியாய் எல்லா மக்களின் மனதிலும் ஓடிப் பரவுகிறது. வெளித் தோற்றத்திற்குக் கோபம் தெறிக்கும் பேச்சுகளும், ஏசும் வார்த்தைகளும் இருந்தாலும் உள்ளூரப் பிரியமாக இருக்கவும் எல்லாருக்கும் தெரிந் திருக்கிறது. அதனால் நாகரீக சமுதாயங்களைப் போல அல்லாமல் கற்பு, காதல், கல்யாணம், ஆண்-பெண் உறவு என எல்லாவற்றிலும் உள்ள எல்லைக்கோடுகள் அங்கங்கே தாண்டப் படுகின்றன.
வல்லத்தை விற்று, மீன்பிடித்தொழிலை விட்டுவிட மனசில்லாத குரூஸ் மிக்கேலின் வைராக்கியம் அவனது முரட்டுப் பிடிவாதத்தைக் காட்டினாலும், மனைவி மரியம்மையின் இறப்பில் இளகும் அந்த வைராக்கியம், அவனது பாசமான மனதையும் திறந்து காட்டத்தான் செய்கிறது. ரஞ்சி-செபஸ்தி, பிலோமி-சாமிதாஸ் - இவர்கள் மனதில் இருக்கும் பரஸ்பர பிரியத்தை எதைக்கொண்டும் மூடி மறைக்க இயலாமல் தொடர்ந்து சுரக்கும் அன்புடன் இவர்கள் போராடுவது யதார்த்தமாய்ச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. வாத்தியார் மற்றும் பிலோமிக்கு இடையில் பிறக்கும் ஸ்னேகம் கூட இயல்பாய் பிரியத்தின் வழியில் சொல்லப்பட்டிருக்கிறது. |
|
இந்த மீனவக் குடும்பங்களின் வாழ்வில் கிறிஸ்துவ மதம் பின்னிப் பிணைந்து இருக்கிறது. டிசம்பரில் பனியுடன் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையும், அதற்கு தேவ கீதத்தைக் கூட்டமாகப் பாடத் தயாராகும் குழந்தைகளும், வீடுதோறும் கட்டப்பெறும் ஸ்டார் லைட்களும் (மின் நட்சத்திரங்கள்), முதல் நாள் நள்ளிரவு பிரத்யேக சர்வீஸ¤ம் (பிரார்த்தனை), சொந்தம் சுற்றம் சூழ புதுத் துணி உடுத்தி, பலகாரங்கள் செய்து உண்ணும் கொண்டாட்டமும், ஒலை படித்து நிச்சயம் செய்வதும், வேதம் படித்துத் திருமணம் செய்வதும், அறுப்புத்திருநாளும், சப்பரம் வீதி ஊர்வலமும் இவர்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள், அங்கங்கள்.
கணையாழியில் 70-களில் தொடர்கதையாய் வெளிவந்த படைப்பு இது. இதை எழுதிய திரு.வண்ணநிலவன் ஒரு மௌனமான பார்வை யாளனாய்த்தான் கதை முழுதும் சித்தரிக்கிறார். எந்த ஜோடனையும் இல்லை. அந்த மக்கள் நம் முன் அதனால் மிக இயல்பாய் தங்கள் மரபு பிசகாமல் (authentic) வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். நடுவில் ஆசிரியர் குறுக்கிட்டு எதையும் வாசகனுக்குத் தனியாகச் சொல்வதில்லை. கதை மனிதர்களும், அவர்களின் பேச்சும், செயல்களும், எண்ணங்களுமே நமக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடுகின்றன. இது ‘இலக்கிய’மாகிவிட்டதை நியாயப்படுத்திவிட இன்னும் காரணங்கள் தேவையில்லை என்று தோன்றுகிறது.
தகழியின் மலையாள படைப்பு செம்மீன் பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூடும். திரைப்படமாக எடுக்கப் பட்டுப் பிரசித்திப் பெற்ற படைப்பு அது. தமிழில் அதைப்போல ஒரு படைப்பு தான் “கடல்புரத்தில்”.
மனுபாரதி |
|
|
|
|
|
|
|