Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
குமரி அனந்தன்
சுதா ரகுநாதன் - ஒரு சுகமான சந்திப்பு
அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்
- அலர்மேல் ரிஷி|ஜனவரி 2003|
Share:
Click Here Enlargeசந்திப்பு: டாக்டர். அலர்மேலு ரிஷி
உடன் உரையாடியவர்: பேராசிரியர் வைத்தியலிங்கம்
படங்கள்: ஆப்ரகாம்

வேளாண் பரம்பரையைச் சேர்ந்த பி. நாச்சிமுத்து கவுண்டருக்கும் ருக்குமணி அம்மாளுக்கும் 1923 மார்ச் மாதம் 21ந் தேதி பிறந்தவர் மகாலிங்கம். பெற்றோருக்கு ஒரே மகன். பொறியியல் வல்லுநரான மகாலிங்கம் கலை, கல்வி, வேளாண்மை, விளையாட்டு, ஆன்மீகம், அரசியல் சமூக நலன் என்ற பல்வேறு துறைகளில் அக்கறையும் ஆர்வமும் உடைய வராய்த் திகழ்பவர். 'செல்வத்துப் பயன் ஈதலே' என்பதற்கு எடுத்துக் காட்டாய் வாழ்ந்து வரும் 'அருட்செல்வர்' என்றே அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். மாணவப் பருவம் முதற் கொண்டே காந்தீயத்தில் ஈடுபாடு கொண்டு சிறந்த காந்தீயவாதியாய் வாழ்ந்து வரும் இவர் அருட்பிரகாசர் இராமலிங்க வள்ளலாரின் அடியொற்றி நடப்பவர்.

சக்தி சுகர்ஸ், சக்தி இன்டஸ்ட்ரீஸ், சக்தி இதழ் போன்று சக்தி என்ற பெயரில் பலப்பல நிறுவனங்களின் தொழிலதிபராக விளங்குகின்ற அருட்செல்வரைப் பட்டங்களும் விருதுகளும் தேடி வந்தடைவதில் வியப்பில்லை. கல்வி நிலையங்கள் பல தொடங்கி தொழில் ரீதியான முன்னேற்றங்களைக் காண்பதற்கேற்ற போதனா முறைகளைச் சிந்தித்துச் செயல் படுத்தி வரும் சிந்தனைச் சிற்பி. இவருடைய இன்னும் பலப்பல சாதனைகளையும் சிந்தனைகளையும் அவரிடமே உரையாடித் தெரிந்து கொள்வதுதான் சுவை யாக இருக்கும்.

தொழில் தொடர்பாகவும் ஆன் மீகம் இலக்கியம் கலை ஆகியவை தொடர்பாகவும் உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று வந்திருக் கிறீர்கள். குறிப்பாக அமெரிக்கா உங்களுக்கு அண்டை மாநிலம் போல. இருந்தும் இவையெல்லாம் உங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாற்றம் என்று நான் குறிப்பிடுவது நடை, உடை, பேச்சு, பண்பாடு, மொழிப்பற்று, எளிமை. இதற்குக் காரணம்?

நான் காந்தியினுடைய சீடன். வெள்ளையனை வெளியேற்றுவது, இந்திய நாகரீகம், பண்பாடு இவற்றை மதிப்பது இவைதான் காந்தியின் கொள்கை. நானும் இவற்றை மதிக்கிறேன். முக்கியத்துவம் கொடுக்கிறேன். நம்முடைய தமிழ் நாட்டுப் பண்பாடு வேட்டி, சட்டை. அமெரிக்கா வுக்குப் போனால் அங்குள்ள தட்பவெப்ப நிலைக்குத் தேவைப்படுவதால் உடை நாகரீகம் மாறுபடுகிறது. டில்லியில் நான் பாண்ட் ஷர்ட்டு போடுகிறேன். பஞ்சாபில் குர்தா ஷர்வானி போடுவது போல் சென்னை மியூசிக் அகாடமிக்கு வரும் நம்மவர்களும் அணிந்து வருவதைப் பார்க்கிறேன். இது தேவை யில்லை. வெள்ளைக் காரனை அனுப்பிவிட்ட பிறகும் நம்முடைய வெப்பம் நிறைந்த தமிழ்நாட்டில் அவர்களைப் போல் உடுத்தி அவதிப்பட அவசியமே யில்லை. நமக்கென்று இருக்கும் பண்பாடு மிகவும் உயர்ந்தது. காந்தியின் மொழிப்பற்று, எளிமை எனக்கும் பிடிக்கிறது.

40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டிலிருந்து அமெரிக்கா வுக்குச் சென்றவர்களின் எண்ணிக்¨ கயை விட, இந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் சென்றவர் எண்ணிக் கை பெருகிக் கொண்டே போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் போக்கு ஆரோக்கியமானதா?

முன்காலத்திலெல்லாம் மலேசியா, ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளுக்கெல்லாம் வறட்சி, பஞ்சம் காரணமாக சாப்பாட்டிற்கு இல்லாமல் இங்கிருந்து விவசாயக் கூலிகளாக தோட்டத் தொழிலாளியாகத்தான் போய்க் கொண்டிருந் தார்கள். சமீப காலத்தில் நிலைமை ஒரளவு மாறியிருக்கிறது. இப்போது போகின்றவர் களெல்லாம் மேற்படிப்பிற்காகப் போகின்றார்கள். பட்டதாரியாகிவிட்டால் இங்கு போதுமானதாகி விடுகிறது. அதற்குமேல் உயர்மட்ட கல்வியில் ஆராய்ச்சியில் தங்களை வளர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் அங்கே போகிறார்கள். இதில் தவறேதும் இல்லை. மேலும் அங்கு படிப்பிற்கும் தகுதிக்கும் வாய்ப்பு நிறைய கிடைக்கிறது. சொல்லப்போனால் முற்பட்ட வகுப்பினர்தான் அதிகம் போகிறார்கள். காரணம் அவர்கள் கல்விக்கு முதலிடம் தருவபர்கள். தங்கள் வாரிசு கல்வி கற்க வேண்டும் என்பதற்காகப் பிச்சை எடுத்துப் படிக்க வைக்கவும் தயங்க மாட்டார்கள். மற்றவர்கள் அப்படியல்ல; வசதியில்லாதவர்கள் உயர்கல்விபற்றிக் கவலைப்படுவதில்லை. வியாபாரம் என்று இறங்கி விடுவார்கள். அங்கு போகின்றவர்கள் படித்துப் பட்டம் பெற்று வேலையைத் தேடிக் கொண்ட பின்னும் மாலைநேரங்களில் மேலும் மேலும் பல துறைகளில் படிப்பைத் தொடர வாய்ப்புக்கள் நிறைய உள்ளன. கல்விமுறை அங்கு நெகிழ்வாக உள்ளது (flexibility). அதனால் அறிவுப் பசிக்குத் தீனி கிடைக்கும் நாடு.

ஒரு உதாரணம் சொல்லுகிறேன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் இந்திய நதிகளை ஒருங்கிணைக்கும் ஒரு திட்டம் வரைந்து அதை வேளாண் பல்கலைக் கழகத்திற்குக் கொண்டு போய்க்காட்டி "இந்த ஆராய்ச்சியை ஏற்றுக் கொண்டு Ph.D பட்டம் தருவீர்களா?" என்று கேட்டேன். அவ்வளவு ஆழமான ஆராய்ச்சி. அதற்குப் பல்கலைக் கழகம் மறுத்து விட்டது. காரணம் அந்தத் துறையில் நான் பட்டம் வாங்கியிருக்க வேண்டும் என்பது அடிப்படைக் கட்டாயமாம். நான் படித்தது மெகானிக்கல் என்ஜினீயரிங். இதே ஆராய்ச்சியை அமெரிக்காவில் கொடுத்திருந்தால் எனக்கு மிக எளிதாக Ph.D தந்திருப்பார்கள். அவர்களுக்குத் தேவை டாகுமென்ட்ஸ். References மட்டுமே. அண்ணா பல்கலைக்கழகமும், கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகமும் எனக்கு 'டாக்டர் ஆப் ஸயன்ஸ்' என்ற பட்டமளித்தும் கோவை பாரதியார் பல்கலைக் கழகம் 'Doctor of Laws' என்ற பட்டமும் அளித்துக் கெளரவித்திருப்பது வேறு விஷயம். இங்கு நம்நாட்டில் கல்வியில் முன்னேறுவதில் நிறைய தடைக்கற்கள் இருக்கின்றன.

இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் பட்டம் பெற்று வெளிவரும் நம்மவர் நீங்கள் சொல்வது போல் மேற்படிப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் அங்கே போகின்ற வர்கள் நிரந்தர மாக அங்கேயே தங்கி விடுகிறர்களே இது Brain Drain இல்லையா?

இல்லை. எல்லோருமே அங்கு தங்கி விடுவதில்லை. நிறையபேர் கொஞ்ச காலம் வேலை செய்துவிட்டு அங்கே சம்பாதித்ததைக் கொண்டு வந்து நம் நாட்டில் தொழில் ஆரம்பிக்கின்றனர். இங்கு திரும்பி வராததற்குக் காரணம் நியாயமாகவும் இருக்கிறது. சொந்தத் தொழில் நடத்துவதற்கு தன்னம்பிக்கையும் தைரியமும் வேண்டும். இதை எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது. திறமைசாலிகளாக உண்மையாக உழைக்க அவர்கள் தயார். ஆனால் நம்நாட்டில் உயர்நிலைக் கல்விக்கு கிடைக்கும் வாய்ப்பு குறைவு. 15 ஆண்டுகள் உழைத்துப் படித்தபின் I.A.S என்றால் நம் நாட்டுக்குத் தேவை 5000 பேர். I.P.S என்றால் 10,000 பேர். நல்ல தகுதியுடைய 27 லட்சம் பேருக்கு மேல் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனைக்கு நீங்களே ஏதாவது தீர்வு கூற முடியுமா? உங்கள் அனுபவங்களைக் கொண்டு நீங்கள் சொல்லக் கூடிய தீர்வு?

முதல் ஐந்து வகுப்புவரை எல்லாப் பள்ளிகளிலும் பட்டம் பெற்று ஆசிரியப் பயிற்சியும் பெற்றுள்ள பெண் ஆசிரியைகள் அமர்த்தப்பட வேண்டும். உயர்நிலைப் பள்ளிக்கு முதுகலைப்பட்டம் பெற்றவர்களும், மேல் உயர்நிலைப்பள்ளி வகுப்புக்களுக்கு Ph.D பட்டம் பெற்றவர்களும் வேலையில் அமர்த்தப்பட வேண்டும். இதனால் உயர்கல்வி படித்தவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். இப்போது கல்வி நிலையங்களில் ஆசிரியர்களுக்குப் போதிய கல்வித்தகுதி இல்லாத காரணத்தாலேயே படித்து வெளிவரும் மாணவர் களின் கல்வியில் தரம் இல்லை. லஞ்சம் கொடுத்து விட்டுப் போதிய தகுதி இல்லாமல் ஆசிரியப்பணியில் நுழைந்து விடுகின்றவர்களாலும் தரம் குறைகிறது. அவர்களைக் கேள்வி கேட்கவும் முடியாது. அவர்கள் கொடுத்திருக்கும் லஞ்சம் அதைத் தடுத்துவிடும். தகுதி அடிப்படையில் தேர்வு என்பது மிகவும் அவசியம்.

உயர்மட்டத் தகுதி என்றால் ஊதியப் பிரச்சனை வருமே?

வராது. ஆரம்பநிலை ஆசிரியர்க்கு பஞ்சாயத்தும் கார்ப்பொரேஷனும் பொறுப்பேற்கட்டும். உயர் நிலைப் பள்ளிவரை மாநில அரசும் மேல் உயர் நிலைப் பள்ளியின் பொறுப்பை மத்திய அரசும் ஏற்றால் போதும். வேலை கிடைக்காமல் போவதனால் தான் பிரச்சனைகள் வரும். தகுதி இல்லாதவர் வேலையில் அமர்த்தப் படுவதால் டியூஷன் இப்போது பெருகிக் கொண்டு போகிறது. தரமுள்ளவர்கள் கற்பித்தால் மந்தநிலையிலுள்ள மாணவர்களுக்குக் கூடுதல் அக்கறை காட்டினால் டியூஷனுக்குப் போகும் அவசியம் ஏற்படாது.

கல்வித் தரத்தை உயர்த்த இவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரக்கல்வி என்று இரண்டு காலகட்டத்தில் (shift) நடத்தலாம். வருடத்தில் 160 வேலைநாட்கள் என்றிருப்பதை 220 நாட்கள் என்று வைத்துக் கொள்ளலாம். வகுப்பில் கூட்டமும் குறையும். தரமும் உயரும். நாள் முழுவதும் பள்ளியில் கழித்துவிட்டு பள்ளி முடிந்த பிறகு மீண்டும் பள்ளிக் கூடத்தில் இருப்பதுபோல் டியூஷன் வகுப்புக்குப் போகும் அவலம் குறையும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 7.30 முதல் 12.30 வரை மீண்டும் பிற்பகல் முதல் மாலை வரை 2 shift வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

அந்நிய நாட்டில் இந்தியக் குழந்தை களின் கல்வி பற்றி ஒரு கேள்வி. தாய்மொழியில் பேசவும் எழுதவும் அங்கே திணறுகிறார்கள் என்பது பற்றிப் பெற்றோர்கள் கவலைப் படுகிறார்கள். இங்கே நம்மவர்கள் குழந்தைகளை வற்புறுத்தி ஆங்கிலம் பேச வைக்கிறார்கள்.

அங்கே போய் நிரந்தரமாகத் தங்கி விடுபவர்கள் குழந்தைகளைத் தொல்லைப் படுத்தாமல் இருப்பது நல்லது. பெற்றோர் வீட்டிலே பேசிப் பேசித்தான் தாய் மொழியில் பேச வைக்க முடியும். நம்முடைய நாட்டிலேயே பாட்டை ஆங்கிலத்தில் எழுதிக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் வளரும் குழந்தை இந்தியக் குழந்தையாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஏதாவது ஒரு Route தான் பின்பற்ற முடியும். ஏதாவது ஒரு வகையில் Compromise செய்து கொள்ள வேண்டும். நம் நாட்டில் ஒரு காலத்தில் அவிநாசிலிங்கம் செட்டியார் காலம் வரை பதினொன்றாம் வகுப்புவரை தமிழில் தான் போதனா முறை இருந்தது. அகில இந்தியப் பணியில் இருப்பவர்கள் அதற்கான சான்றிதழுடன் speical permission வாங்கித் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி போதனாமுறையில் சேர்த்தார்கள். பின்னால் காமராஜர், சி. சுப்ரமணியம் போன்றவர்கள் சிபாரிசில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பிரிவு ஆங்கில போதனாமுறை என்று அமுல்படுத்தினார்கள். அதில் இடம் பெறத் தனி அனுமதி தேவை. தாய்மொழி தமிழென்றாலும் அயல்நாடு அனுப்பப் போகிற எண்ணம் உள்ளவர்கள் மேற்படிப்பைக் காரணம் காட்டி இதில் அனுமதி பெறுவார்கள். இது நியாயமான ஒன்றாகத் தான் இருந்தது. நர்சாகப் பணிபுரியும் தமிழ் நாட்டுப் பெண்ணுக்கும் விவசாயம் போன்ற தொழிலை மேற்கொள்பவர்க்கும் வேறு துறைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கம் தமிழில் கல்வி பயில்விப்பதால் தரம் நன்றாக இருக்கும். எவ்வளவு கஷ்டப்பட்டும் கற்றுக் கொள்ளத் தடுமாறும் அன்னிற மொழி ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு திரும்பத்திரும்ப எழுதியும் அதில் தேர்ச்சி பெற முடியாமல் ஒரு கால கட்டத்தில் படிப்பு அத்துடன் நின்றும் போய் விடுகிறது. கணக்குப் பாடமும் இப்படித்தான். விருப்பமில்லையென்றாலும் Algebra, Geomentry, Trigmentry என்று எல்லாவற்றையும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். கணிதம் முதல்தாள் இரண்டாம்தாள் இதில் ஒன்று படித்தால் போதும் என்றால் படிப்பார்கள். கட்டாயப்படுத்துவதால் கல்வி பயனில்லால் போகிறது. இதனால் எதிர்காலமே பாழ்பட்டுப் போகிறது.

நம்நாட்டில் பட்ட வகுப்பிலும் முதுகலைப்பட்ட வகுப்பிலும் தொழிற் கல்வியிலுங்கூட தாய்மொழி போதனா முறையைக் கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதே இது பற்றி?

இவற்றிற்குத் தேவையான பாட புத்தகங்கள் தயாரிப்பதில் தவறு நேர்ந்தது. தமிழ் படித்தவர்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள். புதிய சொல்லாக்கங்கள் விளங்காதவையாகிப் போய் இப்புத்தகங்கள் மூலையில் குவிந்து கிடக்கின்றன. டெக்னிகலாகப் பயன்படும் சொற்களை ஆங்கிலத் திலேயே பயன்படுத்துவதில் தவறே கிடையாது. வேடிக்கையான ஒரு உதாரணம் சொல்கிறேன். எத்தனையோ ஆண்டுகளாக பதி, பசு, பாசம் என்று வழங்கப்படும் ஆன்மீகத் தொடர் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் சொல். இதை ஒருவர் இறை, ஆ, பற்று என்று வழங்க வேண்டுமென்கிறார். யாருக்குப் புரியும்? இப்படிப்பட்ட கோளாறுகள் தான் தமிழில் கல்வி என்ற முயற்சியைத் தடுக்கிறது. தமிழ் முதல் தாள் இரண்டாம் தாள் என்று வைத்து முதல் தாள் சங்க இலக்கியம் போன்ற தூய தழிழைப்படிக்கவும் இரண்டாம் தாள் பேச்சு மொழிக்கு உதவக்குடிய colloguial ஆக இருப்பது தான் நல்லது. ஆங்கிலம் வேண்டாம் என்று உறுதியாகக் கூறி நான் மலையாளம் படிக்கிறேன் அல்லது வேற ஏதாவது ஒரு மொழியைப் படிக்கிறேன் என்றால் அனுமதிக்க வேண்டும். அவன் விருப்பப்படி படிக்க சுதந்திரம் வேண்டும். கட்டாயப்படுத்தி திணிக்கின்ற முறை யினால்தான் கல்வியின் முன்னேற்றத்தில் தடை ஏற்படுகிறது. ஜப்பான், ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் தாய்மொழிக்குத்தான் முதல் இடம் உண்டு. எதைப் படிக்கிறார்களோ அதில் ஆழம் இருக்க வேண்டும். நம்ம ஊரில் தமிழ் M.A. படிக்கிறவர்களுக்கு பாலி, பிராக்ருதம், கிரந்தம், வடமொழி இப்படி எதுவும் தெரியாது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படிக்க வேண்டு மென்றல் Modern English, Ancient English, Classical Language, Modern Language என்று எல்லாவற்றையும் படிக்கிறார்கள். அப்போதுதான் மொழியில் ஆழமான அறிவு பெற முடியும்.

இன்றைக்கு இந்தியா மட்டுமல்ல உலகநாடுகள் எல்லாவற்றிலும் மகிழ்ச்சி வெளிப்பாடாக இருந்தாலும், ஆத்திரத்தில் வெகுண்டாலும் மாணவர்கள் ஆவேசம் கொண்டு விடுகின்றனர். நாட்டுடைமை களையும், பொது மக்கள் உடைமை களையும் அடித்து நொறுக்கி எரித்து சாம்பலாக்கி விடுகின்றனர். தவறு எங்கே?

முதற்காரணம் சினிமா. கொடூரம், வக்கிரம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவைகளை வீட்டிலுள்ள குழந்தைகளும் பார்க்கின்றனர். கொலை செய்யப்பட்டவன் இன்னோரிடத்தில் மீண்டும் நடிப்பதைப் பார்க்கிற சிறுவர்களுக்கு அவனுக்கு உயிர்போய்விட்டது என்ற எண்ணமே வருவதில்லை. இதனால் கொலை பற்றிய கொடூரத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விடுகின்றனர். பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மேல் நாடுகளில் குழந்தைகள் தொலைக்காட்சியில் காட்டூன் பார்க்கிறார்கள். 6 மணிக்கு டின்னர் 8 மணிக்குத் தூங்கப் போய்விட வேண்டும். அங்கு வசதியான வாழ்க்கை. நம் நாட்டில் இட நெருக்கடி. தொலைக்காட்சி, படிப்பு, படுக்கை எல்லாமே ஒரு சிறிய வட்டத்திற்குள். இதில் பெற்றோர்களும் தங்கள் விருப்பத்தை அடக்கிக் கொண்டு குழந்தைகளுக்கான சின்னச் சின்ன தியாகங்களைக் கூடச் செய்வதில்லை. என்னைக் கேட்டால் தொலைக்காட்சியில் மாலை 6 முதல் 9 வரை ஒளிபரப்பே இருக்கக் கூடாது என்பேன். அப்போது தான் மாணவர்களால் முன்னேற முடியும். காலை பத்து மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு வரை 4 அல்லது 5 காட்சிகள் வேலை நாட்களில் கூடி (workings days) திரையிடும் திரையரங்குகள் உள்ளன. இதனால் பொய் சொல்லிப் பகல் நேரத்திலே திரைப்படம் பார்க்கப் போகிறார்கள். பெங்களூரில் பரவாயில்லை. 3.30 மணிக்கு 6.30 மணிக்கு என்று இரண்டே காட்சிகள் தாம். சனி ஞாயிறுகளில் மட்டும் மூன்று காட்சிகள். இங்கும் அதுபோல் பின்பற்றப்பட வேண்டும்.

இதைத் தடுத்து நிறுத்த வழியே யில்லையா?

அரசாங்கம்தான் இதைத் தடுக்க முடியும். ஆனால் அவர்களே திரை உலகை நம்பியிருக்கிறார்களே!

சென்னையில் இப்போது இசை விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் ஸீசன். நூற்றுக்கணக்கான சந்தா தாரர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட சபாக்கள் இசைக் கச்சேரிகள் நடத்துகிறார்கள். இவர்களுக்கிடையே தனி மனிதர் ஒருவராக நீங்கள் இராமலிங்கர் பணிமன்றம் என்ற அமைப்பில் இசைக்கலை விழாவை யாருடைய பக்கபலமும் நிதிபலமும் இல்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தி வருகிறீர்கள். சென்னை மட்டுமல்ல வேறு மாவட்டங்களிலும் 5 நாள் விழா ஒரு வார விழா என்று காலை 7.30 முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து நிகழ்ச்சிகளை உங்கள் செலவில் நடத்திவருகிறீர்கள். இது எப்படி?

இசையில் எனக்கு ஆர்வம் உண்டு. சாஸ்திரீய சங்கீதம் என்பதில்தான் நான் கருத்து வேறுபாடு உடையவன். கணக்குக்கு எண்கள் எப்படி முக்கியமோ அப்படித்தான் சங்கீதத்திற்கு ஸரிகமபதநி என்ற ஸ்வரங்கள். பாட்டிலுள்ள சொற்களுக்குரிய இடம் இந்த ஸ்வரங்களைக் கொண்டு அமைகின்றன. அதற்கு வேலை அவ்வளவுதான். பாட்டை அனு பவித்து, பொருளுணர்ந்து உச்சரிப்பு தெளிவாக அமையப் பாடவேண்டும். ஸ்வரங்கள் வார்த்தைகளை அமுக்கிவிடக்கூடாது பாட்டிற்கு முக்கியத்துவமே இல்லாமல் ஸ்வரங்களை பாடுவதில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. நாட்டியமும் அப்படித்தான். அலாரிப்பு, ஜதிஸ்வரம் இவையெல்லாம் ஆரம்ப நிலைக்கு அடித்தளம். அதுவே நாட்டியம் ஆகாது. அப்பர், சம்பந்தர் போன்றோரின் தேவாரப் பாடல்களும் ஆழ்வார் பாசுரங்களும் மேடையில் ஒலிக்க வேண்டும் என்பது என் அவா. பெரிய வித்துவான்கள் எல்லாம் இதற்குக் கிடைக்க மாட்டார்கள். நான் பொருட்படுத்துவதில்லை. சபாக் களில் கச்சேரிசெய்ய கலைஞர்களே கூட காசு கொடுக்கும் நிலையை ஆங்காங்கே கேள்விப் படுகிறோம். திறமையிருந்தும் வாய்ப்புக் கிடைக்காத இளம் கலைஞர்களுக்கு நான் வாய்ப்புக் கொடுக் கிறேன். பாட வைத்துப் பணமும் கொடுக்கிறேன். அழகாகவும் ஆர்வத்தோடும் பாடும் இக்கலைஞர் களுக்குத் தங்களை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி.

இராமலிங்கர் பணி மன்றத்தைப் போல 'காந்தியடிகள் வள்ளலார் விழா' ஒன்றையும் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ராஜேசுவரி கல்யாண மண்டபத்தில் ஒருவாரம் நடத்துகிறீர்கள். காந்தீய ஈடுபாடுதான் காரணமா?

இராமலிங்க வள்ளலாரைப் போன்ற மனிதத் தன்மையுடனும், காந்தியைப் போலக் கொள்கைப் பிடிப்புடனும் வாழ வேண்டும் என்பதை இன்றைய தலைமுறைக்கு விளக்குவதற்குதான் இவ்விழா. விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட எத்தனையோ காந்தீயவாதிகளெல்லாம் முகவரி தெரியாத அளவிற்கு ஒதுக்கப்பட்டு விட்ட நேரத்தில் நான் வெங்கட கிருஷ்ணாரெட்டி, எஸ்.ஏ. ரஹீம் போன்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மேடை ஏற்றி அவர்களது அனுபவங்களை எடுத்துக் கூறச் செய்திருக்கிறேன். காமராஜர் கூட வியந்து பாராட்டியிருக்கிறார். வள்ளலாரை நன்கு அறிந்து வைத்துள்ள சான்றோர் பெருமக்களை அழைத்து உரை நிகழ்த்தச் செய்கிறேன். இதில் நிறைய ஆத்ம திருப்தி அடைகிறேன் நான்.
சென்ற ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி உலக வர்த்தக நிறுவனம் தகர்க்கப்ட்டபின் அமெரிக்கப் பொருளாதாரம் சீர்கெட்டது. H1 விசாவில் வேலையிலிருந்த ஆயிரக்கணக்கானோர் வேலை யிழந்து தாய்நாடு திரும்பபும் துரதிருஷ் டம் ஏற்பட்டதே இந்த நிலை பற்றி?

1999 ஆம் ஆண்டு மாறி 2000 ஆவது ஆண்டு பிறக்கின்ற நேரத்தில் கணினியில் செய்ய வேண்டிய மாற்றத்திற்காக ஆள்பலம் தேவைப்பட்டபோது Programmer பணித்தகுதி பெற்றவர்கள் ஆயிரக் கணக்கில் அங்கு சென்றார்கள். தேவை முடிந்ததும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். பேராசிரியர் களையும் தொழில் வல்லுநர்களையும், ஆராய்ச்சி யாளர்களையும் பொருளாதாரம் பாதிக்கவில்லை. அமெரிக்காவின் பொருளாதார நிலை விரைவில் சீர்ப்பட்டுவிடும். இது பெரிய பிரச்சனையில்லை.

வேதங்களின் அடிப்படையில் வானியல் விஞ்ஞானத்தைக் கொண்டு இந்திய வரலாற்றின் தொன்மையை ஆராயும் தேசிய கருத்தரங்கு சென்ற மாதம் சென்னையில் நடைபெற்றது. அதன் நிர்வாகக் குழுவின் தலைவ ராக நீங்கள் வீற்றிருந்து நடத்தினீர் கள். இந்தியாவின் பல பாகங்களி லிருந்து அறிஞர் பெருமக்கள் இதில் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கு பற்றிய கருத்து?

1979ல் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் முதன் முதலாக இந்தத் தலைப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதிகாச மகாபாரத வானசாஸ்திர அடிப்படையில் தமிழக வரலாறு குறித்து ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பட்டன. வானியல் துணைகொண்டு இதிகாச காலங்களை நிர்ணயிப்பது என்பதில் N.P. இராமதுரை என்பவருடைய "வானியல் மூலம் வரலாறு காண்போம்" என்ற புத்தகம் இந்தியாவின் இதிகாச நிகழ்வுகளைக் கணிக்க ஏற்ற நம்பிக்கைக்குரிய அளவுகோலாக ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. இந்த ஆசிரியரின் ஆராய்ச்சி முடிவுகள் ஒவ்வொரு யுகத்தின் ஆரம்பம் முடிவு இவற்றைத் தேதியிட்டுக் கணித்துத் தந்திருக்கிறது. எதிர் காலத்தில் இன்னும் வியக்கத்தக்க பல உண்மை களைக் கண்டறியும், வழிகாட்டும் இக்கருத்தரங்கு.

அகில உலக அளவில் வெஜி டேரியன் காங்கிரஸ் அமைப்பில் அங்கம் வகிப்பவர் நீங்கள். அது பற்றிய சாத்தியக் கூறு என்ன?

மேல்நாடுகளில் இதைப் பிரச்சாரம் செய்வதில் சிக்கலேயில்லை. வளமான வாழ்க்கை நடத்துகிற மக்களுக்கு உணவுக்குக் கவலையில்லை. அங்கு லீக் என்று ஒருவர் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். பால் தயிர் போன்றவற்றை சைவ உணவாகக் கொள்ளலாமா என்று நான்கு ஆண்டுகள் சர்ச்சை நடந்தது. Animal Product என்பதால் தேன் உட்கொள்வதில் கூட கருத்து வேறுபாடு இருந்தது. காந்திஜீ கூட முதலில் மறுத்தார். பின்னர் பூச்சிகள் அழிக்கப்படாமல் எடுப்பதில் தவறில்லை என்று கூறி ஏற்கப்பட்டது. இவ்வாறு வெஜிடேரியன் காங்கிரஸ் அசைவத்தை ஒதுக்குவதில் நல்ல முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது.

உங்கள் தலைமுறைக்கும் அதன் பின் வந்துள்ள இரண்டாவது தலை முறைக்கும் இடையே உள்ள மாற்றங் களை நிறையவே காண்கிறீர்கள். இது குறித்து நீங்கள் தெரிவிக்கும் கருத்து.

என் தலைமுறையினர் குழந்தைகளுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். அதே நேரத்தில் ஒழுக்கமும் கற்பித்தார்கள். இயற்கையோடு இயைந்து வளர்த்தார்கள். எனக்கும் என் மக்களுக்கும் கிடைத்த Freedom என் பேரப் பிள்ளைகளுக்கு இல்லை. எப்போதும் படி படி என்று Peear Pressure தான். கேட்டால் அந்தக் காலம் வேற இந்தக் காலம் வேறு என்பது தான் பதில்.

நாங்கள் குளிர்சாதனம் தேடவில்லை. இன்றைக்கு A.C. அறை இல்லாமல் அவர்களால் முடியவில்லை. எனக்கு அதிகாரம் கொடுத்தால் சினிமா, AC, Fridge எல்லாவற்றையும் தடை செய்து விடுவேன். எளிமையாக வாழ முயல வேண்டும். வீடுகளிலும் சினிமா அரங்கிலும் பிற இடங்களிலும் பயன் படுத்தப்படும் மின்சாரம் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படுமானால் நாடு முன்னேறும். நகர்ப்புறங்களில் தான் இந்த ஆடம்பரம் அதிகம். கிராமப்புறங்களில் இயற்கைச் சூழலில் இன்னமும் மக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

நன்றி.

வள்ளலார் வழி நிற்கும் ஆன்மீகப் பெருமகனார், அண்டி வருவோர் வாட்டம் போக்கும் மாமனிதர் இவரை 'வாழ்க நீவிர் பால்லாண்டு' என்று வாழ்த்துவது பொருத்தமாகும்.

சந்திப்பு: டாக்டர். அலர்மேலு ரிஷி
உடன் உரையாடியவர்: பேராசிரியர் வைத்தியலிங்கம்
படங்கள்: ஆப்ரகாம்
More

குமரி அனந்தன்
சுதா ரகுநாதன் - ஒரு சுகமான சந்திப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline