|
நெற்களஞ்சியத்தில் புகையும் எலிக்கறி |
|
- துரை.மடன்|பிப்ரவரி 2003| |
|
|
|
திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில் கண்ணகி சிலையை திறந்து வைத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. மெரீனா கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட கண்ணகி சிலையை அதே இடத்தில வைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் புதிய கண்ணகி சிலையை திமுக தனது தலைமையகத்தில் பெரும்விழாவாக நடத்தி திறந்து வைத்துள்ளது.
அத்துடன் திமுக தலைவர் தொல்காப்பியத்துக்கு தனது பாணியில் உரை எழுதி 'தொல்காப்பியப் பூங்கா' என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த வெளியீட்டுவிழா பெரும் பரபரப்புடன் நடைபெற்றது. பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட அரசியலுக்கு அப்பாலான இலக்கியத் திருவிழா வாகவே நடைபெற்றது. பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்டவர்களின் வாழ்த்துச் செய்தியும் கிடைக்கப் பெற்றது.
******
தமிழகத்தில் வறட்சி, காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பட்டினியில் தினமும் செத்து பிழைக் கிறார்கள். எவ்வளவோ கடன்பட்டு விவசாயத்தில் ஈடுபட்டும், அவை தண்ணீரின்றி கருகிப் போகிறது. கழுத்தை நெருக்கும் கடன் விவசாயியைத் தற்கொலைக்கு தூண்டுகிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் உயிரை மாய்த்து விட்டனர்.
சிலர் அதிர்ச்சியிலும் சிலர் தற்கொலையிலும் உயிரை மாய்த்துவிட்டனர். தஞ்சை டெல்டா பகுதியில் மரணப்பயம் கவ்வியுள்ளது. காப்பாற்ற அரசு துரிதமாக உரிய நேரத்தில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. தற்கொலை செய்யும் போக்கால் தமிழக அரசு விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்க தீர்மானித்துள்ளது. தட்டு ஏந்தி பிச்சைக்காரர்கள் போல் விவசாய மக்களை அரசு நடத்துவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்குவதைவிட உணவுப்பொருட்கள் பணம் என்ற அடிப்படையில் வழங்குவதால் மக்களது கெளரவம், சுயமரியாதை காக்கப்படும். இதைப் பலரும் சுட்டிக்காட்டியும் அரசு தனது முயற்சியில் இருந்து பின்வாங்குவதாக இல்லை.
பட்டினியின் கொடுமை எலிக்கறி சமைத்து சாப்பிடும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இது இத்துடன் நிற்கவில்லை. குளம் குட்டையில் கிடக்கின்ற நத்தைகளை கறி சமைத்து சாப்பிடும் அளவிற்கு நிலைமை வளர்ந்துள்ளது.
ஆக டெல்டா பகுதி விவசாயிகள் சொல்லமுடியாத இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியுள்ளார் கள். பசியைப் போக்கி உயிரைப் பாதுகாக்க அரசு போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென்ற கோரிக்கை பலமட்டங்களில் இருந்து வெளிப் பட்டுள்ளது.
******
சாத்தான்குளம் இடைத்தேர்தல் தமிழக அரசியல் கட்சிகளிடையே புது உறவு கூட்டணி பிறப்பதற்கு கட்டியம் கூறிவருகிறது. இத்தேர்தலில் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் பங்கு கொள்வதில்லை என முடிவு எடுத்துள்ளனர். காங்கிரஸ், அதிமுக தேர்தலில் போட்டியிடுகின்றனர். மும்முரமான பிரச்சாரத்திலும் இருகட்சிகளும் ஈடுபடத் தொடங்கிவிட்டன.
பாஜக தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா? என்ற குழப்பத்துக்கு உள்ளாகி உள்ளது. தமிழகத்தில் திமுகவுடன் சுமுக உறவு பாஜகவுக்கு இல்லை. அதிமுகவுடன் உறவு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மத்தியில் உள்ள கூட்டணியில் பாஜக திமுக உறவு இன்னும் தொடர்கிறது.
சாத்தான்குளம் தேர்தலில் பாஜகவுக்கு திமுக ஆதரவு தெரிவிக்காது என்று வெளிப்படையாகவே கூறிவிட்டது. அத்துடன் தான் தேர்தலில் இருந்து ஒதுங்குவதால் மறைமுகமாக காங்கிரசுக்கு திமுக உதவுகிறது.
காங்கிரஸ் திமுக உறவு கூட்டணி வருவதற்கான சமிக்ஞைகள் தொடங்கிவிட்டன. அனேகமாக இடைத்தேர்தலில் பாஜக நிற்காது என்ற எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது. ஆக இடைத்தேர்தலில் அதிமுக காங்கிரஸ் இடையேதான் பலத்த போட்டி இருக்கும். சாத்தான்குளம் காங்கிரஸ் கோட்டையாக இதுவரை உள்ளது. 1958க்கு பிறகு ஒருமுறை மட்டும் தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ள தொகுதி இது.
****** |
|
மெரீனா கடற்கரையை சர்வதேச அளவில் கவர்ச்சிகரமாக்கும் திட்டத்தில் மலேசியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது தமிழக அரசு. மகாபலிபுரம் அருகே புதிய நிர்வாக நகரம் அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது. அதிமுக அரசுக்கும் மலேசியா அரசுக்கும் இடையில் உறவுகள் புதுமலர்ச்சி பெறத் தொடங்கியுள்ளன.
******
தமிழக அரசு லாட்டரி உள்பட அனைத்து மாநில லாட்டரி விற்பனைக்கும் கடந்த 8ம்தேதி தமிழக அரசு தடைவிதித்தது. தமிழக அரசின் லாட்டரி (ஒழுங்கு முறை) சட்டம் 1998, விதி 5-ன் கீழ் இந்த உத்தரவை ஆளுநர் பி.எஸ். ராமமோகன் ராவ் பிறப்பித்தார்.
1968 இல் அண்ணா தலைமையிலான திமுக அரசால் கொண்டுவந்த லாட்டரிகளுக்கு தற்போது ஜெயலலிதா அரசு தடைவிதித்துள்ளது. இதை பலரும் வரவேற்றாலும் இத்தடைக்கு எதிர்ப்புகளும் உண்டு.
இத்தடையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தடை ஆணையால் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று பாதிக்கப்பட்டோர் சார்பில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழகத்தில் ஒருவாரம் மட்டும் லாட்டரி விற்க அனுமதி வழங்கியுள்ளனர். லாட்டரி சீட்டு விற்பனைக்கு அரசு தன்னிச்சையாக தடை விதித்துள்ளது குறித்து இறுதி விசாரணையின் போது பரிசீலிக்கப்படும். இடைக்கால தடை உத்தரவு கோரும் மனுக்கள் பைசல் செய்யப்படுகின்றன என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
துரைமடன் |
|
|
|
|
|
|
|