விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் நடத்திய "வாய் விட்டு சிரி" மற்றும் "பாட்டுக்குப் பாட்டு" தமிழ் நாடு அறக்கட்டளை - தமிழ் விழா-2003 சுருதிலயாவின் இசை ராஜாங்கம் பாரதி கலாலயா நிகழ்ச்சிகள் இராம நவமி: 'வில்'அங்கம்! கிரேட்டர் அட்லாண்டா தமிழ் சங்கம் புத்தாண்டுக் கொண்டாட்டம் - சிகாகோ தமிழ் சங்கம் க்ளீவ்லேண்ட தியாகராஜ ஆராதனா 2003 அலர்மேல் வள்ளியின் அற்புதமான நாட்டிய நிகழ்ச்சி தமிழ் ஈஸ்டர் ஆராதனை
|
|
பரதத்தில் பாரதி |
|
- அருணா|மே 2003| |
|
|
|
மகாகவி சுப்ரமணிய பாரதியை அறியாத தமிழன்பர்கள் எவருமிலர். எளிமையான சொல்லழகும் ஆழமான பொருளழகும் கூடிய பாரதியின் பாடல்கள் பலவற்றை இசைக் கலைஞர்கள் இசையமைத்துப் பாடியும், நாட்டியக் கலைஞர்கள் நடன வடிவம் அமைத்து ஆடியும் வருகின்றனர். பொதுவாக நடன நிகழ்ச்சிகளில் பாரதியின் பாடல்களுக்கான நடனங்கள் ஒன்றிரண்டு இடம்பெறும். ஆனால் ஒரு முழு நீள நடன நிகழ்ச்சி அனைத்துமே பாரதியின் பாடல்கள் கொண்டு அமைந்தால்...
அத்தகைய சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியவர் 'லாஸ்யா' (Lasya) நடன நிறுவனத்தின் இயக்குநர் திருமதி வித்யா சுப்ரமணியன் அவர்கள். 'லாஸ்யா'வில் நடனம் பயிலும் மாணவியர் பலருடனும் இணைந்து வித்யா வழங்கிய 'பரதத்தில் பாரதி' எனும் அருமையான நடன நிகழ்ச்சி மார்ச் 29ம் நாள் மாலை, San Jose நகரிலுள்ள 'Mexican Heritage Theater' இல் நடைபெற்றது.
'ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்' என்று விநாயகர், பராசக்தி, முருகன், கலைமகள், கண்ணபிரான், ஆகிய கடவுளரைத் தொழும் பக்திப் பாடல் திருமதி. ஆஷா ரமேஷின் இனிய குரலில் ஒலிக்க, இளம் நடன மாணவியர் கச்சிதமாக ஆட, நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்தே நன்றாகக் களை கட்டியது. தெய்வபக்தி, தேசபக்தி, காதல், இயற்கைத் துதி, கண்ணன் பாடல்கள், சமுதாய உணர்வுப் பாடல்கள், என்று பாரதியின் பல்வேறு கண்ணோட்டங்களையும் வெளிப்படுத்தும் வகையில் பாடல்களைத் தேர்ந்தெடுத்தது பாராட்டுக்குரியது.
பாரதியாகத் தோன்றிய செல்வி கவிதா ராதாகிருஷ்ணனுக்கு நல்ல வேஷப் பொருத்தம். 'பளீ' ரென்ற வெண்மை கொண்ட மடிப்புக் கலையாத வேட்டியும், கம்பீரமான மீசையும் கொண்ட பாரதியாக அவரது தோற்றம் மனதைக் கவர்ந்தது. ஒப்பனைக் கலைஞர்களுக்கு ஒரு 'சபாஷ்'! 'என்று தணியும் இந்த சுதந்திரத்தாகம்' என்று தவிக்கும்போதும், 'சுட்டும் விழிச் சுடர்தான்' என்று காதலியை வர்ணிக்கும்போதும், 'நல்லதோர் வீணை செய்தே' என்று மறுகும்போதும், பாரதி அடைந்திருக்கக் கூடிய உணர்ச்சிகளை கவிதாவின் முகபாவங்கள் தெளிவாக வெளிக்கொணர்ந்தன.
கண்ணனைப் பிரிந்து தனிமையில் வாடும் தலைவியின் தவிப்பைக் 'கண்ணன் மனநிலையைக் கண்டு வரவேணுமடி' என பாரதியார் கவிதையில் வெளிப்படுத்தினார். அத்தலைவியின் தவிப்பு, கோபம், தாபம், விரகம் ஆகிய அனைத்து உணர்ச்சிகளையும் தமது ஆடலில் வெளிப்படுத்தி விட்டார் திருமதி. வித்யா. கவியின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்ச்சி களைத் தமது முக பாவத்திலும், ஆடல் அசைவுகளிலும் முழுமையாக வித்யா வெளிக் கொணர்ந்த விதம், அவர் ஒரு தேர்ந்த நடனக் கலைஞர் மட்டுமல்லாமல், பாரதியின் கவிதைகளில் மயங்கிய உண்மையான ரசிகையும் ஆவார் என்பதைக் காட்டியது. |
|
பாரத மாதாவின் திருப்பள்ளி எழுச்சியின் போது, கதிரவன் உதயத்தைக் காட்டும் வகையில் அமைந்த மேடையலங்காரம் சிறப்பு! 'பாரத தேசமென்று' எனும் தேசபக்திப் பாடலுக்கும், 'தீராத விளையாட்டுப் பிள்ளை' எனும் கண்ணன் பாடலுக்கும் இளமங்கையர் ஆடிய நடனங்கள் பாராட்டும் வகையில் அமைந்தன. பாரதியின் தேசபக்திக் கவிதைகளும், கண்ணன் பாடல்களும், இசை நாட்டியக் கலைஞர்கள் மத்தியில் பிரபலமானவை. ஆனால் அவ்வளவாக பிரபலமடையாத, இயற்கையைப் போற்றும் கவிதைவரிகளைத் தேர்ந்தெடுத்து இசைவடிவம், நடனவடிவம் கொடுத்ததற்காக திருமதி ஆஷாவிற்கும், திருமதி. வித்யாவிற்கும் சிறப்புப் பாராட்டுகள். நெஞ்சையள்ளும் மந்தமாரும் தினப்புகழும் 'காற்று' பாடலுக்கு 'பாகஸ்ரீ' ராகத்திலும், திக்கெட்டும் சிதறிவிழும் 'மழை'யைப் போற்றும் பாடலுக்கு 'அமிர்தவர்ஷினி' ராகத்திலும் திருமதி ஆஷா இசையமைத்திருந்தது மிகப் பொருத்தம். அவரது இனிய பாடல்களுக்கும், திரு. நாராயணனின் எடுப்பான மிருதங்க வாசிப்பிற்கும் பொருந்தும் வகையில், வெண்ணிற ஆடைகள் பறக்க இளமங்கையர் நடனமாடியது, 'இவர்கள் காற்றில் மிதந்தும், மழையில் நனைந்தும் உலா வரும் தேவதைகளோ!' என்று வியக்க வைத்தது. ஒப்பனைக் கலைஞர்களுக்கு மீண்டும் பாராட்டுகள்! திருமதி. சாந்தி நாராயணனின் வயலின் இசை, திரு. ராஜா சிவமணியின் வீணை, திரு. பிரசாத் ராயஸம் அவர்களின்keyboard ஆகியவை, தேனோடு கலந்த தெள்ளமுதமாக இசைக்கு மெருகேற்றின.
கவிதைகளை ரசிக்கும் தமிழன்பர்களுக்கும், நடன ரசிகர்களுக்கும், பாரதி பக்தர்களுக்கும் இந்நிகழ்ச்சி, செவிக்கினிய அமுதாகவும், கண்களைக் கவரும் விருந்தாகவும் அமைந்தது என்பதில் சந்தேகமில்லை!
அருணா |
|
|
More
விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் நடத்திய "வாய் விட்டு சிரி" மற்றும் "பாட்டுக்குப் பாட்டு" தமிழ் நாடு அறக்கட்டளை - தமிழ் விழா-2003 சுருதிலயாவின் இசை ராஜாங்கம் பாரதி கலாலயா நிகழ்ச்சிகள் இராம நவமி: 'வில்'அங்கம்! கிரேட்டர் அட்லாண்டா தமிழ் சங்கம் புத்தாண்டுக் கொண்டாட்டம் - சிகாகோ தமிழ் சங்கம் க்ளீவ்லேண்ட தியாகராஜ ஆராதனா 2003 அலர்மேல் வள்ளியின் அற்புதமான நாட்டிய நிகழ்ச்சி தமிழ் ஈஸ்டர் ஆராதனை
|
|
|
|
|
|
|