பிரட் ஸ்பெஷல் பிரட் வடை பிரட் இட்லி பிரட்- கோகோ ஸ்வீட் பிரட் கேரட் கட்லெட்
|
|
அன்னாசிப்பழம் |
|
- பூர்ணா|மே 2003| |
|
|
|
மனித ஆரோக்கியத்திற்குச் சிறந்த ஆகாரம் பழங்களே. மனிதனின் ஜீரண உறுப்புகள் எளிதில் செரிக்க வல்ல நிலையில் பழங்களில் இரசாயனப் பொருள்களும், புரதச் சத்து, மாவுச்சத்து, கொழுப்பு முதலியவைகளும் இயற்கையாக அமைந்துள்ளன. பழம் என்ற சொல்லுக்குப் பக்குவம் என்ற ஒரு பொருளும் உண்டு.
அன்னாசிப்பழம்
அன்னாசி செடி வகையைச் சேர்ந்தது. முதன் முதலில் இது பிரேசில் நாட்டில் தோன்றியது. தற்பொழுது உஷ்ண மண்டலப் பிரதேசங்களில் எல்லாம் பயிராகிறது. இந்தப் பழம் சற்று நீண்ட, உருண்டையாகவும், சொறசொறப் பாகவும் ஆரஞ்சு நிறத்துடனும் காணப்படும். இப்பழத்திற்குத் தனிப்பட்ட மணமும் நேர்த்தியான சுவையும் உண்டு. எனவே உஷ்ணப் பிரதேசப் பழங்களுள் இது உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இது எவ்வித மண்ணிலும் வளரும். இதில் பல வகைகள் உள்ளன. சிலவகைப் பழங்களில் நார் கிடையாது. சிலவற்றில் நடுப்பகுதி (core) கிடையாது. இதனுடைய ரகம் சர்க்கரைச் சத்தைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. இதில் சராசரி 12 சதவிகிதம் சர்க்கரைச் சத்து உள்ளது. அதில் 4 சதவிகிதம் குளுக்கோஸ் வகையைச் சேர்ந்தது. அது எளிதில் ஜீரணிக்கக் கூடியது. பெரிய பழங்களில் குளுக்கோஸ் சத்து அதிகமாக இருக்கும்.
இப்பழத்தின் அடிப்பாகத்தில் அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. கோடையில் உண்டாகும் பழங்கள் மிகவும் இனிப்பானவை. நன்கு முதிர்ந்த பழங்களில் அதிக இனிப்புச் சத்து உண்டு. பழுக்க ஆரம்பிக்கும் காலத்தில் இரண்டு வார காலத்திற்குள் 4 முதல் 15 சதவிகிதம் வரை சர்க்கரைச் சத்து உண்டாகிறது. அரைப்பழம் ஆகும் காலத்தில் கிட்டத்தட்ட 3/4 பாகம் சர்க்கரைச் சத்து தயாராகிவிடுகிறது.
நன்கு பழுத்தபழம் மஞ்சள் நிறமானதாகவும், இருண்ட ஆரஞ்சு நிறமுள்ளதாகவும் மாறிவிடும். எனவே, பச்சை நிறமுடையதைப் புசிக்கக் கூடாது. புசித்தால் வயிற்றுழைச்சல் நோய் ஏற்படும். பழுக்காத காயைச் சாப்பிட்டால் பெண்களுக்குக் கர்ப்பச் சிதைவு ஏற்படும். இதிலுள்ள அமிலச்சத்தில் சிட்ரிக் அமிலம் 87%, மாலிக் அமிலம் 13% ஆகும். இவ் வமிலங்கள் எளிதில் ஜீரணமாகக் கூடியதால் உடம்பிற்கு உஷ்ணத்தையும், சக்தியையும் கொடுக்கின்றன.
இப்பழத்தில் கீழ்க்கண்டவாறு சத்துப் பொருள்கள் அடங்கியுள்ளன.
வைட்டமின் - ஏ - 61 I.U. வைட்டமின் - சி - 63 I.U. ரிபோ·ப்ளேவின் - 120 மை. கி. சுண்ணாம்புச் சத்து - 0.12 சதவிகிதம் எரியம் - 0.01 சதவிகிதம் இரும்பு - 0.9 சதவிகிதம் புரதம் - 0.6 சதவிகிதம் கொழுப்பு - 0.1 சதவிகிதம் உணவு தரும் உஷ்ண அளவு 50 Calorific Value. இதில் உணவாகும் பகுதி 50 முதல் 67 சதவிகிதம். சக்கை - 34 சதவிகிதம்.
இப்பழத்தில் Brosmelin என்ற ஒருவித நொதி (Enzyme) இருக்கிறது. அது 'பெப்சின்' இயல்பு உடையது. எனவே புரதச் சாப்பாட்டிற்குப் பின் இப்பழத்தை உண்டால் ஜீரணம் எளிதில் ஏற்படும். குடல்புண் வியாதிக்கு இது ஒரு உரமருந்து (Tonic) போன்றது. அரை டம்ளர் பழச்சாற்றை சாப்பாட்டிற்குப் பின் குடித்தால் குடற்புண் பற்றிய சங்கடங்கள் தீரும். புதிய பழரசம் தொண்டைக்கு மென்மையைக் கொடுக்கிறது. பாடகர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். தொண்டை அழற்சி நோய் (Diptheria) கண்டால் புண்ணைக் கழுவுவதற்கு இந்தப் பழச்சாற்றை உபயோகிக்கலாம்.
இப்பழத்தில் குளோரின் சத்து இருப்பதால் அது சிறுநீரகங்களைத் துரிதமாக வேலை செய்யத் தூண்டுகிறது. மேலும் உடம்பிலுள்ள கழிவுப் பொருள்களை வெளியே தள்ளவும் உதவுகிறது. பலஹீனர்களுக்கு இதன் சாற்றில் தேனைக் கலந்து கொடுத்தால் புத்துணர்வும் மென்மையும் ஏற்படும். காய்ச்சலின் போதும் மஞ்சள் காமாலை நோயின் போதும் இச்சாறு வாயு உபத்திரவத்தை நீக்கும்.
இப்பழச்சாறு ஜாடராக்கினி போன்ற தனி இயல்பு உடையது. எனவே, மரக்கறி உணவு கொள்பவர்கள் சாப்பாட்டிற்கு முன் இச்சாற்றை அருந்தலாம். இப்பழம் பெரும்பாலும் டின்களில் அடைத்துப் பாதுகாக்கப்படுகிறது. அப்படிப் பதமிடுவதில் சுவை அதிகரிக்கிறதேயன்றி குறைவதில்லை. ஆனால் தொண்டைப்புண் வியாதிகட்கு டின்னில் அடைக்கப்பட்ட சாறு அவ்வளவு உகந்ததில்லை. இப்பழத்தினின்றும் பழப்பாகு, பழக்கலவை முதலியன தயாரிக்கலாம். இதன் மேல்பாகத்தில் ஈரப்பசையுடன் கூடிய தவிட்டு நிறப் புள்ளிகள் ஏற்பட்டால் அவை பழத்தின் அழிவு நிலையைக் காட்டும். அப்பழத்தைப் புசிக்கக் கூடாது. |
|
அன்னாசிப்பழம் ரசம்
தேவையான பொருட்கள்
அன்னாசிப் பழத் துண்டுகள் - 3 - 4 (நன்றாகத் தோலுரித்து நறுக்கியது) நன்கு பழுத்த தக்காளிப்பழம் - 2 ரசப்பொடி - 1 1/2 தேக்கரண்டி துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி புளிக்கரைசல் - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு காயம் - சிறிதளவு எண்ணெய் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
செய்முறை
துவரம் பருப்பை சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்த பருப்பை நன்றாக மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.
புளிக்கரைசலை இரண்டு கிண்ணம் தண்ணீரில் கரைத்து அத்துடன் ரசப் பொடி, காயம், உப்பு போன்றவற்றையும் கலந்து கொள்ளுங்கள். ரசப் பொடியின் வாசனை போகும் வரை இந்தக் கரைசலைக் கொதிக்க விடுங்கள்.
அன்னாசிப்பழத் துண்டுகளையும், தக்காளிப் பழத்தையும் மிக மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். கொதித்த ரசக் கலவையுடன் இந்த நறுக்கிய பழத் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை மேலும் மூன்று நிமிடம் கொதிக்க விடுங்கள். ஏற்கனவே மசித்து வைத்த பருப்பை இதனுடன் சேர்த்துக் கலக்குங்கள்.
கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை இந்தக் கலவையில் சேர்த்துத் தேவையான அளவு இதை நீர்க்கச் (dilute) செய்யுங்கள்.
ரசத்தை நுரைக்கும் வரை கொதிக்க விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து ரசத்தில் கொட்டுங்கள். கடைசியாக கொஞ்சம் கொத்தமல்லி இலையைத் தூவி விடுங்கள். கொஞ்சம் எலுமிச்சைச் சாறை இதில் பிழிந்து விடுங்கள். மணக்கமணக்க ருசியான அன்னாசிப்பழ ரசம் தயார். இதை இருபதே நிமிடத்தில் தயாரிக்கலாம்.
பூர்ணா |
|
|
More
பிரட் ஸ்பெஷல் பிரட் வடை பிரட் இட்லி பிரட்- கோகோ ஸ்வீட் பிரட் கேரட் கட்லெட்
|
|
|
|
|
|
|