|
கார்ட்டூனிஸ்ட் சுதர்சன் |
|
- கேடிஸ்ரீ|செப்டம்பர் 2003| |
|
|
|
இவரைத் தமிழ் கார்ட்டூன் உலகின் ஜாம்பவான் என்று துணிந்து சொல்லலாம். சில ஆண்டுகள் முன்வரை இவரது கார்ட்டூன்கள் இல்லாத பத்திரிக்கையைப் பார்த்திருக்கவே முடியாது. தீபாவளி மலர்களிலும் இவரது சிரிப்பு வெடிகள் ஏராளமாக இருக்கும். இவரது துணுக்குகள் மட்டுமல்ல, கோட்டுச் சித்திரங்களே சிரிக்கவைப்பவையாக இருக்கும். பல சிறப்புகளைப் பெற்ற இவர், இன்று தன் 76ஆவது வயதிலும் அதே நகைச்சுவை உணர்வுடன் கலகலப்பாகப் பேசுகிறார். கடந்த இரண்டு வருடங்களாக உடல் நலம் காரணமாக கார்ட்டூன் வரைவதை நிறுத்திவிட்டார். அவரைச் சந்தித்து உரையாடிய போது...
பள்ளிப்பருவம்
சிறுவயதில் நாங்கள் கும்பகோணத்தில் இருந்தோம். அங்குதான் என் அப்பா வேலையில் இருந்தார். என் அப்பா பெயர் தேசிகாச்சாரி, அம்மா பெயர் கனகவல்லி. இவர்களுக்கு நாங்கள் இருவர் மகன்கள்.
''ஓவியம் வரைவது என்பது என் இரத்தத்தில் ஊறிய ஒன்று என்றே கூறலாம். ஏனென்றால் என் ஓவியத்திற்கு அடித்தளம் இட்டவர் என் தாயார் கனகவல்லி அம்மாள் தான். என் அம்மா எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு கலைநயத்தை நான் பார்த்திருக்கிறேன். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் தோசை செய்வதில்கூட ஒரு அழகு இருக்கும். தோசையை எல்லோரும் வட்டமாகத்தான் செய்வார்கள். ஆனால் என் அம்மா தோசையை விதவிதமான வடிவத்தில் செய்வார். கிளி மாதிரி, யானை மாதிரி, பறவை மாதிரி என்று விதவிதமாக தோசை செய்து சாப்பிடகொடுப்பார்கள். பார்க்க அழகாய் இருக்கும். இப்படி என் அம்மா செய்வதை அருகில் இருந்து எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். தோசையில் மட்டும் அல்ல. வாசலில் போடும் கோலத்திலும் பல வகை ஓவியங்கள் வரைவார். தேர், மயில், அன்னம் என்றும் பொங்கல் சமயத்தில் பெண் ஒருத்தி பொங்கப்பானை இடுவது போலவும், விவசாயி கரும்பைத் தலையில் வைத்துக் கொண்டு வருவது போலவும் என்று அந்தந்த சூழ்நிலைக்கேற்றவாறு கோலங்கள் மாறுபடும். இப்படி என் தாயாரின் ஒவ்வொரு செயலையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு என் அறியாமலேயே ஓவியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.
அந்த காலத்தில் எங்கள் வீட்டில் நவராத்திரி வந்துவிட்டால் போதும் ஒரே அமர்க்களம்தான். எனக்கும், என் தம்பி சானுவுக்கும் தலைநிறைய முடி நீளமாக இருக்கும். வாரி பின்னிவிடலாம் போன்று. என் தாயார் தனக்கு பெண் குழந்தைகள் இல்லை என்ற குறையை தீர்ப்பதற்காக எனக்கும், என் தம்பி சானுவுக்கும் தலையை பின்னை, ரோஜாப்பூ வைத்து விதவிதமான ஆடைகள் அணிவித்து மகிழ்வார்கள். அதுமட்டுமல்ல எங்கள் வீட்டில் தன் கைவண்ணத்தில் பலவிதமான பொம்மைகள், தீப்பெட்டிகளில் ரயில்கள் செய்வது, வண்ண வண்ண கைவேலைப்பாடுகளைச் செய்வது என்று எங்கள் வீடே ரொம்ப அழகாக இருக்கும். நாங்கள் வசிக்கும் பகுதியில் எங்கள் வீட்டு கொலுவை பார்ப்பதற்கென்றே நிறையப் பேர் வருவார்கள்'' என்று தன் பழைய நினைவுகளை நம்மிடம் அசைபோட்டார் சுதர்சன்.
இப்படி ஓவியத்தில் தனக்குள் ஏற்பட்ட ஆர்வத்தைத் தன் தாயாரிடம் கூறிய சுதர்சன், தன்னை எப்படியாவது ஓவியப்பள்ளியில் சேர்த்துவிடும்படி கேட்டிருக்கிறார். உடனே அவரது தாயாரும் அவரைக் கும்பகோணத்தில் உள்ள 'முனிசிபல் சித்திரக்கலாசாலை' பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார்.
ஓவியம் கற்றுக் கொள்ள சென்ற இவரை அப்பள்ளியின் மேலாளாராக இருந்த குப்புசாமி அவர்கள் முதலில் கிராப்ட் sectionல் சேர்த்துக்கொண்டார். இது 3 வருடப் படிப்பாகும். இவர் சேர்ந்த வருடம் குப்புசாமி அவர்கள் அப்பள்ளிக்கூடத்தைத் தேர்வு மையமாக அங்கீகரிக்கச் செய்தார். ஒரு சென்டரில் கிட்டத்தட்ட பத்து பேர் தேர்வு எழுதினால்தான் அந்த பள்ளிக்கூடத்தை சென்டராக அங்கீகாரம் தருவார்கள். ஆனால் இவரின் பள்ளிக்கூடத்தில அன்று மொத்தம் 9 பேர்தான் பரீட்சைக்கு தயார்நிலையில் இருந்தனர். உடனே குப்புசாமி அவர்கள், வகுப்பில் சேர்ந்து பத்துமாதமே ஆன சுதர்சன் அவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு பணம் செலுத்தி அவரைப் பட்டியலில் சேர்த்துவிட்டார். பரீட்சை எழுதிய 10 பேரில் 9 பேர் பெயில். சுதர்சன் ஒருவர் தான் பாஸ்.
அந்தக் காலக்கட்டம் எல்லா பள்ளிக் கூடத்திலும் தொழிற்கல்வி ஆரம்பிக்கப்பட்ட நேரம் - அதாவது 1947ம் வருடம். இந்த நேரத்தில் சென்னையில் The Hindu Theological Higher Secondary School என்ற பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியராக இருந்தவர் பாலகிருஷ்ண ஜோஷி. முதன்முதலாக செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக அறிவித்த நேரம் அது. அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கையால் முதன்முதலாக நல்லாசிரியர் விருதைப் பெற்ற ஆசிரியர் பாலகிருஷ்ணஜோஷி என்பது முக்கிய சிறப்பம்சமாகும்.
அப்படிப்பட்ட ஓரூ ஆசிரியரின் கீழ் தான் முதன்முதலாகப் பணிக்கு அமர்ந்ததை மிகப் பெருமையாகக் கருதுவதாக உணர்வுபொங்கக் கூறுகிறார் சுதர்சன்.
நினைத்தது ஒன்று; நடப்பது ஒன்று என்று இவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில் இவரது ஓவிய ஆர்வம் மட்டும் எங்கோ மூலையில் இருந்துக் கொண்டே இருந்தது. இவரின் ஓவியக்கனவு நீடித்துக் கொண்டே இருந்தது.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்துக் கொண்டே ஓவியம் வரைய ஆரம்பித்தார். |
|
சுதேசமித்திரனில் தொடக்கம்
தன் படைப்புகள் இதழ்களில் வெளிவர வேண்டும் என்ற ஆவல் இவரிடம் அதிகரித்தது. தான் வரைந்த கார்ட்டூன்களை எடுத்துக் கொண்டு சுதேசமித்திரன் அலுவலகத்திற்குச் சென்றார். விக்டர் ஹவுஸ் சுதேசமித்திரன் ஆபீசில் அப்போதைய ஓவியர் குஞ்சரன். 'சுதேசமித்திரன் வாரப் பதிப்பு' என்ற இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர் திரு நரசிம்மாச்சாரியார். ஆசிரியரிடம் இவரைக் குஞ்சரன் சிபாரிசு செய்தார். அவர் எதிர்பார்த்தது கதைக்குப் படம் போட சான்ஸ். ஆனால் அவருக்கு கிடைத்தது ஜோக் படம். குஞ்சரனுக்குத் தன் சிபாரிசில் சுதர்சனின் ஓவியங்கள் சுதேசமித்திரனில் வெளிவந்ததில் சந்தோஷம். அந்தக்காலத்தில் சுதேசமித்திரனில் அட்டைப்படத்தில் இவரின் ஓவியம் பிரசுரிக்கப்பட்டது மிகமுக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் அதுவரை யாருடைய ஓவியமும் அட்டைப்படத்தில் பிரசுரம் ஆனதில்லை.
தினமும் குறைந்தது 11 நகைச்சுவை துணுக்குகளை எழுதவேண்டும் என்ற சபதத்தை தன் மனதில் எடுத்துக் கொண்டார் சுதர்சன். இப்படி ஆரம்பமமான வரைதல் மெல்லப் பல பத்திரிகைகளிலும் தொடர்ந்தது. குறிப்பாக 'குமுதம்' வார இதழில் இவரின் நகைச்சுவை துணுக்குகள் அதிகளவில் பிரசுரிக்கப்பட்டன. பெண்களுக்கான பத்திரிகைகள் எல்லாவற்றிலும் ஜோக் எழுதியிருக்கிறார். மற்றும் 'தேவி' பத்திரிகையின் ஜேம்ஸ் அவர்கள் இவரை அழைத்து நிறைய நகைச்சுவை கேட்பார்கள். முதன்முதலாக தினமலர் வாரப்பத்திரிகை ஆரம்பித்தபோது அதன் முதல் இதழில் இவருடைய நகைச்சுவைத் துணுக்கு வந்தது.
குமுதத்தில் இவருக்கான தொடர்பைப் பற்றி குறிப்பிடுகையில் ''ஜ.ரா. சுந்தரேசன் மூலம் எனக்கு ரா.கி. ரங்கராஜனுடைய அறிமுகம் கிடைத்தது. நான் ஜோக் எழுதி வரைந்த ஓவியங்களை ரா.கி. ரங்கராஜனிடம் கொடுப்பேன். அதை அவர் அன்று குமுதத்தின் நிறுவனர் SAP அண்ணாமலை அவர்களிடம் காண்பிப்பார். அண்ணாமலை அவர்களும் நான் எழுதியதைப் படித்து ஓகே சொல்வார். இப்படித்தான் ஆரம்பம் ஆனது எனக்கும் குமுதத்திற்கும் இடையேயான தொடர்பு'' என்கிறார்.
மெல்ல வெளியுலகத்திற்கு சுதர்சன் தெரியவந்தார். தினமணி, தினமணி கதிர், தினமணி சுடர் போன்றவற்றிலும் இவரது ஜோக்குகள் வரத்தொடங்கின.
கல்கியைப் பற்றிக் குறிப்பிடுகையில் அதை 'ஓர் கலைக்கோயில்' என்றே குறிப்பிடுகிறார். 'சாமா' என்பவர் அங்கு கார்ட்டூனிஸ்ட்டாக பணியாற்றிக் கொண்டிருந்தார். சாமா, சந்திரா, மணியன், வினு போன்றோர்கள் அங்கு நிரந்தர ஓவியர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
''கல்கி அலுவலகத்தில் மாடியில் எம்எஸ் அவர்கள் இருப்பார்கள். கீழே சதாசிவம் இருப்பார். அப்போது சதாசிவம்தான் கல்கியை நிர்வகித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஆனந்தவிகடனில் இருந்து வந்தவர்கள்தான் கல்கியை ஆரம்பித்து நடத்திவந்தனர். அதனால் ஆனந்தவிகடனுக்கும், கல்கிக்கும் ஏதோ தகராறு என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கையில் கல்கியின் 10வது நிறைவு ஆண்டோ இல்லை வேறு ஏதோ ஒரு விழாவில் திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் கலந்துக் கொண்டு கல்கி அவர்களை கட்டி அணைத்துக் கொண்டு கல்கி என் தம்பி என்று கூறி எல்லோருடைய சந்தேகங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்ததை மறக்கமுடியாது'' என்கிறார் சுதர்சன்.
''ஒரு சமயம் கல்கி பத்திரிகையில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தங்களுக்குள் யூனியன் ஆரம்பித்து சில கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அந்த சமயத்தில் கல்கி இதழ் வெளிவருவதை நிறுத்திவிட்டனர். கல்கி இதழ் நின்று சில நாட்களுக்குப் பிறகு என் வீட்டிற்கு கல்கியின் வெளிவராத இதழில் நான் எழுதிய ஜோக்கிற்கான சாமானத்தை அனுப்பிவைத்திருந்தார்கள். இது எனக்கு ஆச்சர்யமான விஷயம்...'' என்று சதாசிவம் அவர்களைப் பற்றி பெருமையாக கூறுகிறார்.
குமுதம் SAP, கல்கி சதாசிவம், கலைமகள் கி.வா. ஜெகந்நாதன், சாண்டில்யன், அமுதசுரபி விக்கிரமன் என்று பலர் அறிமுகமானார்கள். SAP அவர்களைத் தன் வாழ்வில் என்றும் எப்போதும் நினைக்காமல் இருக்க முடியாது என்கிறார்.
தனக்கான இந்த ஓவியக்கலையில் பல பரிமாணங்களை அறியசெய்த SAP அவர்களை வாழ்நாளில் எப்போதும் மறக்கமுடியாது சுதர்சன்.
''ஒவ்வொரு வாரமும் SAP என்னையும், ஜரா சுந்தரேசனையும் ஒவ்வொரு ஏரியாவாகச் சென்று கவனிக்கச் சொல்வார். அப்போதுதான் நமக்குத் தேவை யான விஷயங்கள் கிடைக்கும் என் பார். ஒருவாரம் சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகில், ஒரு வாரம் பள்ளிக் கூடம் அருகில், ஒருவாரம் கல்லூரி வாசல்களில் என்று இப்படிப் பல இடங்களுக்குச் சென்று நகைச்சுவை துணுக்குகளை சேகரிப்போம். இயல்பாகவே ஒவ்வொரு மனிதனிடமும் நவரச பாவம் இருக்கும். நான் எப்போதும் எங்கள் வீட்டு ஜன்னலில் அமர்ந்துக் கொண்டு தெருவில் போவோர், வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பேன். ஒருவன் தனியாக பேசிக் கொண்டேசெல்வான். மற்றொருவன் தன் நண்பர்களுடன் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டு செல்வான். அதை அப்படியே நகைச்சுவையாக எழுதுவேன். இப்படி எழுதுவதற்குச் சொன்னவரே SAPதான்'' என்கிறார்.
ஒருசமயம் இவரது நவரச முகபாவம் கொண்ட புகைப்படம் ஒன்றைக் குமுதத்தில் வெளியிட வைத்து அதனடியில் இப்படி எழுதியிருந்தார் SAP: ''சுதர்சன் தான் வரையக் கூடிய படங்களில் வருகின்ற உருவங்களுக்கு தன் முகத்தைத் தானே கண்ணாடியில் பார்த்துக்கொண்டு அந்த பாவங் களைத் தான் வரைகின்ற உருவகங்களுக்கு வடிவமைத்துக் கொள்கிறார்''.
எனக்கு SAP அவர்கள் துரோணச்சாரியார் போன்று என்கிறார் சுதர்சன். கதர் வேஷ்டி அணிவதையே வழக்கமாக்கி கொண்டுள்ள சுதர்சன், தன் வாழ்நாளில் இதுவரை பேண்ட் அணிந்ததில்லை என்கிறார். ''நான் பார்த்த, என் மனதில் பதிந்த பெரியவர்கள் யாரும் பேண்ட் அணிந்ததில்லை. உதாரணத்திற்கு SAP, கல்கி சதாசிவம், ராஜாஜி, காமராஜர், சாண்டில்யன். நம்முடைய கதர் ஆடைகளைத்தான் அணிந்தார்கள். அதனால் நானும் கதர் வேஷ்டியையே அணிந்து எல்லா இடங்களுக்கும் செல்வேன்'' என்று கூறுகிறார்.
இப்படித் தொடர்ந்து கிட்டத்தட்ட 50 வருடகாலம் பல பத்திரிகைகளில் துணுக்குள் மற்றும் கார்ட்டூன்கள் எழுதி வந்த சுதர்சன் கேலிச்சித்திரம் வரைவதை நிறுத்தி இரண்டு வருடமாகிறது. காரணம் உடல்நிலை.
இன்று பல நகைச்சுவை கார்ட்டூனிஸ்ட்கள் நம்மிடையே வலம் வந்தாலும் எல்லோரி டமும் இவரது சாயல் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. சுதர்சன்தான் இவர்களுக்கெல்லாம் முன்னோடி என்பதை நிரூபிக்க இதுவே போதும்.
சந்திப்பு: கேடிஸ்ரீ |
|
|
|
|
|
|
|