Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கோடிகளை விடக் கொள்கை முக்கியம்: டாக்டர் கிருஷ்ணஸ்வாமி
இந்திய சதுரங்கத்தின் முன்னோடி - மனுவேல் ஆரான்
பண்டிதரும் பாமரரும் இரசிக்கும் இசை - அருணா சாயிராம்
- பத்மப்ரியன்|அக்டோபர் 2003|
Share:
Click Here Enlargeமாலை நேர மூடுபனி கடலோர கலிபோர்னியாவில் மெல்லப் படர்கிறது. மரவீட்டின் மாடி. பசிபிக் சமுத்திரத்தின் காற்று வருடுகிறது. தூரத்தில் மலைகளின் நடுவே கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். இரவு வரவா என்று கேட்டது. என் கையில் அருணா சாயிராம் அவர்களின் சங்கீத் ஸீடீ.

கர்நாடக இசை உலகில் தனக்கெனச் சிறந்த இடத்தை பெற்றிருப்பவர் அருணா சாயிராம். காஞ்சி பெரியவர் வழங்கிய 'சங்கீத கலாமணி', சென்னை ஸ்ரீராகம் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய 'சங்கீத கலாரத்னா', ஆஸ்டின் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய 'இசைப் பேரொளி' போன்றவை அவருக்குத் தரப்பட்ட சில பட்டங்கள். உணர்ச்சி பூர்வமான அவரது பாட்டு அவருக்குப் பண்டிதர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மனதிலும் முக்கியமான இடத்தைத் தந்துள்ளது.

அருணா சாயிராமின் கச்சேரி ஸீடீயில் ஒலிக்கத் தொடங்கியது. அத்துடன் இணைந்து ஓரிரு நாட்களுக்கு முன் அவருடைன் உரையாடியது மனதிற்குள் மீண்டும் கேட்கிறது...

ஸ்ருதி சேர்கிறது...

தஞ்சாவூரில் காவேரிக்கரையில் என் பெற்றோர்களின் பூர்வீகம். பம்பாயில் மாதுங்காவில் நான் பிறந்து வளர்ந்தேன். வீட்டில் எப்போதும் கர்நாடக சங்கீதம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். என் அம்மா ராஜலக்ஷ்மி சேதுராமன் ரேடியோவில் பாடுவார். என் அப்பா சேதுராமன் பாரதீய சங்கீத நாட்டிய சபையின் ஸ்தாபகர்களில் ஒருவர். அம்மா தன் மாணவர்களுக்கு இசைப் பாடம் நடத்தும் போது பார்த்துக் கொண்டேயிருப்பேன். என்னையும் அறியாமல் நான் இசையைக் கற்க ஆரம்பித்ததும் அப்போது தான். கேள்வி ஞானத்தில் பெற்ற இசை அறிவில் இயற்கையாகப் பாட ஆரம்பித்ததும் அப்போது தான்.

ஸ்ரீரஞ்ஜனி வர்ணம்...

பம்பாயின் சராசரி அபார்ட்மெண்ட் குடியிருப்புதான் என் தந்தை வீடு. என் தந்தையின் கலை ஆர்வத்தினால் சிறிய வீடானாலும் எங்கள் வீட்டில் எப்போதும் இசை, நாட்டிய, இலக்கிய கலைஞர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். நாட்டிய மேதை பாலசரஸ்வதி, எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, வீணை தனம்மாளின் வழியில் வந்த T.ப்ருந்தா, புல்லாங்குழல் மாலி (மாதக் கணக்கில் இருப்பார்), எம்பார் விஜயராகவாச்சாரியார், கீரன், கி.வா.ஜ, சுகப்ரும்மம், தஞ்சாவூர் சங்கர ஐயர் போன்ற பலரும் எங்கள் வீட்டிற்க்கு வந்தது, கலாச்சாரத்தின் சாராம்சம் என்னைத் தேடி வந்தது போலிருந்தது. அவர்கள் வருகை என் கலை ஆர்வத்தை வளர்த்து, என் இசை ஞானத்திற்கு வித்திட்டது.

அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். பம்பாயில் நடக்கும் ராம நவமி போன்ற கோவில் உற்சவங்களில் பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பிறகு என் அம்மாவிடமே பத்து வயதிற்குள் பல வர்ணங்களையும் கீர்த்தனங்களையும் கற்றேன். ஐந்து, ஆறு காலப் ப்ரமாணங்களில் தாளம் போட்டுக்கொண்டு பாடுவதற்குப் பயின்றேன். அந்தப் பயிற்சி எனக்கு பலமான அஸ்திவாரத்தை அமைத்தது.

ஹிந்தோளத்தில் ஆலாபனை...

ப்ருந்தா அம்மா தனது பம்பாய் மாணவர்களுக்கு எங்கள் வீட்டில் தங்கி பாட்டு சொல்லிக் கொடுப்பது வழக்கம். அதைக் கேட்ட நான் அந்தப் பாடல்களையும் பாட ஆரம்பித்தேன். சிறுமியான என் பாட்டு அவரை ஆச்சரியப்பட வைத்து, அவர் என்னையும் தனது மாணவியாக ஏற்றுக் கொண்டார். அவரிடம் நான் முறையாகப் பல கீர்த்தனங்களும், பதங்கள் மற்றும் ஜாவளிகளும் பயின்றேன். என் அம்மா தொடர்ந்து தந்த ஊக்கத்தில், பத்து வருடம் இசையின் பரிமாணங்களை ப்ருந்தா அம்மாவின் மூலமாக அறிந்து கொண்டேன். பள்ளியிலும் கல்லூரியிலும் இசைப் போட்டிகளில் பல பரிசுகளையும் பெற்றேன்.

கல்லூரியில் BSc படித்துக் கொண்டிருக்கும் போது திருமணம் நடந்தது. என் திருமணத்தில் எம்.எஸ். பாடிய ஊஞ்சல் பாட்டும், ராமநாதபுரம் கிருஷ்ணன், ப்ருந்தா-முக்தா கச்சேரிகளும் என் நினைவில் இன்றும் இனிக்கின்றன.

பாபநாசம் சிவனின் மா ரமணன்...

என் தாய் மறைந்தார். ப்ருந்தா அம்மாவுக்கு முதுமை காரணமாகத் தொடர்ந்து பம்பாய்க்கு வந்து இசை சொல்லிக் கொடுக்க முடியாத நிலை. நான் சிறு கச்சேரிகள் செய்து கொண்டிருந்தேன். மியூசிக் அகடெமியில் செய்த ஜூனியர் கச்சேரிகளும் இதில் அடங்கும். முதல் குழந்தையும் பிறந்தது. என் கணவரும் மாமியாரும் சங்கீத சூழ்நிலை தொடர்ந்து இருக்க ஊக்கம் தந்தனர்.

கர்நாடக சங்கீதத்தில் விதூஷகர்களின் உதவியுடன் இசையின் வேறு பல பரிமாணங்களை கற்கும் வாய்ப்பை பெற்றேன். வீணை வித்வான் கே.எஸ். நாராயண ஸ்வாமி (எம்.எஸ் அவர்களுக்கும் குருஸ்தானத்தில் இருந்தவர்) இரண்டு மூன்று வருடத்திற்கு சொல்லிக் கொடுத்தார். சங்கீத பூஷணம் ஏ.எஸ். மணி, டைகர் வராதாச்சாரியாரின் சிஷ்யர்; ஸ்வரம் பாடுவதில் பயிற்சியளித்தார். முசிறி சிஷ்யர் டி.ஆர். சுப்ரமணியம், எஸ். ராமச்சந்திரன் எனப் பலரும் மிகவும் தாராள மனதுடன் என் இசை அறிவுக்கு வலுவூட்டினர். சங்கீத கலாநிதி டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் எனக்கு ஒரு inspiration.

புன்னாகவராளியில் விருத்தம்...

தற்போது அமெரிக்காவில் இசைப் பயணத்தை முடித்துக் கொண்டு பாஸ்டனில் உள்ள என் மகள் வீட்டில் விடுமுறையில் இருக்கிறேன். அமெரிக்காவில் உள்ள கலை, குறிப்பாக கர்நாடக இசை ஆர்வம் என்னை மிகவும் பெருமைப்படச் செய்கிறது. இங்கு உள்ளவர்கள், மற்றொரு துறையை தொழிலாகக் கொண்டு, கர்நாடக இசை இங்கு வளர்வதற்க்கு தங்கள் நேரத்தை அர்ப்பணிக்கிறார்கள். இசை நன்கு வளர்ந்தும் இருக்கிறது. இந்த இரண்டு மாதத்தில் நான் ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று கச்சேரிகள் செய்தேன்.

அமெரிக்காவில் இருபத்து ஐந்து ஊர்களுக்குச் சென்று பாடினேன். ஒரு குறிப்பிட்ட இசை ஆர்வம் அதிகம் உள்ள ரசிகர்கள் குழு ஐந்து, ஆறு ஊர்களுக்குத் தொடர்ந்து வந்தனர்! பலரும் என்னைப் பாட்டு கற்றுக் கொடுக்கவும் மற்றும் Lecture and Demonstration செய்யும்படி கேட்டும் வந்தனர். ஆனால், இப்போது கச்சேரிகளில் மட்டுமே கவனம் செலுத்த நேரமிருப்பதால், அந்த கோரிக்கைகளை ஏற்க முடியாத நிலை. அந்த வகையில், எனக்கு இன்னமும் சிஷ்யர்களை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்று வருந்துகிறேன். சீக்கிரமே, தகுந்த சந்தர்ப்பத்தில் எனக்கு சிஷ்யர்கள் அமைத்துக் கொள்ள நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

ஷியாமா சாஸ்திரிகளின் கிருதி...

இசை மொழிக்கு அப்பாற்பட்டது என்றாலும், நாம் பாடுவதன் அர்த்தம் தெரிந்து கேட்கும் போது, அந்த அனுபவம் மேலும் சிறப்படைகிறது என்று எண்ணுகிறேன். நான் ஐரோப்பா மற்றும் சில இடங்களில் பாடும் போது பாட்டிற்கு முன்னால் சிறு விளக்கம் அளித்துவிட்டுப் பாடுவேன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அவ்வாறே, வட இந்தியாவில் பாடும் போது, நம் ராகங்களையும் அவற்றின் கமக வித்தியாசங்களையும் சொல்லிவிட்டுப் பின் பாடும் போது, அதுவும் மிக நல்ல வரவேற்பை பெறுகிறது. அதே போல், நான் பாடும் ஹிந்துஸ்தானி அபங்கம், கர்நாடக சங்கீத ரசிகர்களைக் கவர்கிறது. நம் கச்சேரிகளில் ஊத்துக்காடு பாடல்களுக்கோ, புரந்தர தாஸர் பாடல்களுக்கோ விளக்கம் சொல்ல ஒரு நிமிடம் கூட ஆவதில்லை. ஆனால், அந்த விளக்கத்தினால், ரசனை பன் மடங்கு கூடுகிறது என நினைக்கிறேன்.

ராக மாலிகையில் பல்லவி

சென்னையில் நான் பதினைந்து பதினாறு வருடங்களாகப் பாடி வருகிறேன். சென்னையின் சிறப்பு அங்குள்ள தேர்ந்த ரசிகர்கள். வேறெங்கு பாடியிருந்தாலும் கர்நாடக சங்கீதம் அங்கு பாடும் போது ஒரு சிறப்பு. முன்பு நான் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து பாடிவிட்டுத் திரும்பிவிடுவேன். இப்போது சில மாதங்களாக நான் ஒரு சென்னைவாசி. இருந்தாலும், கச்சேரிக்காகப் பல நாடுகளுக்கு போக வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் தொடர்ந்து சென்னையில் தங்கமுடிவதில்லை.
இசை உலகில் போட்டி தேவை. போட்டிதான் புதிய வளர்ச்சிகளுக்கு முதல் படி. எல்லோரிடமும் நட்பாக இருப்பது என் இயல்பு. இப்போதும் என் வீட்டிற்கு இசைக் கலைஞர்கள் பலர் வந்த வண்ணம் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இசையுலகில் உள்ளவர்கள் அனைவரும் எனக்கு நண்பர்கள். அவர்களுடைய நட்பை நான் என் வாழ்கையில் முக்கியமான அம்சமாக நினைக்கிறேன்.

பல புதிய சாஹித்ய கர்த்தாக்கள் உருவாகியிருப்பதை நான் வரவேற்கிறேன். அண்மையில் நடந்த Rivers of India என்ற என்னுடைய சிறப்புக் கச்சேரியில் பல நதிகளின் தீரத்தில் உருவான சாஹித்யங்களைப் பாடினேன். மும்மூர்த்திகள், பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி போன்வர்கள் பாடலைப் பாடினேன். எல்லா நதிகளையும் இணைக்கும் பாடலை புதிய சாஹித்ய கர்த்தா ரேவதி எழுதியிருந்தார். எனக்குப் பிடித்த பாடலாக இருந்தால் அதை எப்படியும் கற்றுக் கொண்டு பாட வேண்டும் என்று நினைப்பேன். சென்னையில் உள்ள ராமமூர்த்தி ராவ், அமெரிக்காவில் வசித்த N.S.ராமச்சந்திரன் போன்ற தற்கால சாஹித்ய கர்த்தாக்கள் எழுதியிருக்கும் பாடல்களையும் கச்சேரிகளில் பாடுகிறேன்.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த இசைக் கலைஞர்களுடன் அவர்கள் இசையுடன் கர்நாடக சங்கீதத்தை இணைத்துப் பாடியிருக்கும் அனுபவம் மறக்க முடியாதது. நான் பிரான்ஸில் பாடும்போது, அவர்கள் நம் மோகனம், ஹிந்தோளம் போன்ற ராகங்களை மட்டுமில்லாமல், தோடியை மிகவும் ரசித்தனர். கர்நாடக சங்கீதம் இன்னும் பல திசைகளில் உள்ள மனித மனங்களை அடையும் சக்தி பெற்றது என்று நிச்சயமாகச் சொல்லுவேன். அமெக்காவில் இந்தியர்கள்தாம் கச்சேரிக்கு வருகிறார்கள். ஐரோப்பாவில், அங்குள்ள ஐரோப்பியர்களும் நம் இசையை நாடி வருகிறார்கள்.

சில நடன நிகழ்ச்சிகளுக்கும் இசை அமைக்கும் வாய்ப்புகள் வந்தன. அதில் குறிப்பாக சந்திரலேகாவுடன் இணைந்து வழங்கிய 'யந்த்ரா' நிகழ்ச்சியைச் சொல்லலாம். ராஜிகா பூரியுடன் இசையுடன் நாட்டியத்தை இணைத்து நிகழ்ச்சிகள் அளித்திருக்கிறேன்.

பாஸ்டன் நகரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சூடும் குளிரும் கலந்த இதமான வெப்பநிலை. அருகில் இருக்கும் பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ் புத்தகக் கடைக்குச் சென்று ஒரு cup காப்பியுடன் புத்தகங்களை படிப்பது மிகவும் பிடித்த பொழுது போக்கு. அமெரிக்க, மற்றும் இத்தாலிய இசைக் கலைஞர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். ஆன்ட்ரூ கார்னகியின் வாழ்க்கைச் சரித்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. கதைகளை எப்போதாவதுதான் படிப்பேன். டிவியில் Wisdom Channel எனக்கு மிகவும் பிடித்திடுக்கிறது. மற்றொரு சானலில் வரும் Inside The Actors Studio நிகழ்ச்சி என்னைக் கவர்ந்த ஒன்று.
ரீதி கெளளையில் ப்ருந்தாவன நிலையே ...

என்னால் மறக்க முடியாத பல கச்சேரிகளில் குறிப்பிடத்தக்கது ராஷ்டிரபதி மாளிகையில் நடந்தது. குடியரசுத் தலைவர் எனனை சிறப்பு விருந்தினராக வரவேற்று கச்சேரி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நம் நாட்டில் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெண்மணிகள் வேலைகளின் நடுவே தங்களுக்கு சிறிதளவே உள்ள நேரத்தில் என் கச்சேரிக்கு வருவது என்னை நெகிழச் செய்கிறது. அப்படி வந்த ஒரு பெண், ஒரு சமயம் என் கச்சேரி முடிந்த பின் என்னிடம், என் வாழ்க்கையை இப்படியே உறையச் செய்துவிட்டு ஒரு வாரம் உங்களுடன் வந்து இருக்க வேண்டும் போலுள்ளது, அப்படி முடிந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றார். மற்றொரு கச்சேரியில் திரை தூக்குபவர் என்னிடம் தனக்கு சங்கீதம் தெரியாது என்றும் இருந்தாலும் அன்றைக்கு ரசித்தது போல் எப்போதும் அவர் ரசித்ததில்லை என்று கூறி என் காலில் உடனே விழுந்து என்னை மனிதருள் மாணிக்கமாக்கினார்.

அபங்கம்....

அமெரிக்காவில் பல ஊர்களுக்குச் சென்று கச்சேரி செய்யும் போது, அங்குள்ள ரசிகர்கள் என்னை விருந்தினராக நடத்தினார்கள். ஒருவர் தன் வீட்டில் 'Wall of Fame' என்று உருவாக்கி, அதில் அவர் வீட்டில் தங்கியிருந்த கலைஞர்கள் புகைப்படங்களை மாட்டி வைத்திருந்தார். அதில் உள்ளவர்களுடன் என்னையும் சேர்த்துக் கொண்டார். மற்றொரு ரசிகர், எங்களை கவனிப்பதற்காக ஒரு அட்டவணையே செய்து வைத்திருந்தார். எங்களுடன் கச்சேரிக்கும் வந்து மீதியிருக்கும் நேரத்தில் எங்களுக்கு விதம்விதமாக சமைத்து விருந்தோம்பல் செய்தது என்னை நெகிழச் செய்தது.

சித்தம் எப்படியோ என்ற துக்கடா ....

மற்ற இசைக்கலைஞர்களைப் போலவே, நானும் விமர்சனங்களுக்கு உட்பட்டவள் தான். என்னைப் பற்றி வரும் விமரிசனங்களை மிகவும் மதிக்கிறேன். விமரிசனங்களை மிகவும் மதிக்கிறேன். விமரிசனங்கள் எனக்கு reality checkup ஆக உதவுகிறது. எனக்கு ரசிகர்களிடமிருந்து நிறைய emailகள் வருகின்றன. சிலவற்றை என் website-ல் படிக்கலாம். பொதுவாக எல்லாவற்றையும் படித்து உரிய பதில்களையும் அனுப்புகிறேன். என்னை சிஷ்யாக ஏற்றுக் கொண்டு என்னுடனேயே ஒரு வருடமாவது இருக்க விரும்பிய, கோலார் நகரைச் சேர்ந்த ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி என் நினைவுக்கு வருகிறாள்.

காலிங்க நர்தன தில்லானா....

நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் இதை முதலில் என் அம்மாவுக்குத் தான் சொல்லிக் கொடுத்தார். நான் அதைக் கேட்டிருக்கிறேன். அதை எனக்கு சொல்லிக் கொடுப்பதற்கு முன் என் அம்மா மறைந்து விட்டார். பிறகு, என் நினைவில் உள்ளதை, வார்த்தைகளை மாற்றாமல், கச்சேரிக்கு வழங்கும் விதத்தில் அமைத்தேன். முதலில் ஐரோப்பாவில் தான் பாடினேன். சம்பிரதாயமான தில்லானாவிலிருந்து வேறுபட்டு சொற்கட்டுக்களை கொண்ட இதை சென்னையில் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கத்தினால் முதலில் பாடவில்லை. ஆனால், சென்னையில் முதலில் பாடிய போது தரப்பட்ட வரவேற்பை இன்றும் என்னால் மறக்க முடியாது. கச்சேரியில் கடைசி பாடலாக அதைப் பாடியப்பின், ஒரு முப்பது நிமிடத்திற்கு மேடையிலிருந்து இறங்க முடியாமல் கூட்டம் நெருக்கி விட்டது. அந்த இடத்திலேயே ஒரு ரசிகர் எனக்கு தன் நவரத்தின மோதிரத்தை அளித்தார். பிறகு நடந்த ஒவ்வொரு கச்சேரியிலும் இந்த தில்லானா என் கச்சேரியின் சிறப்பு அம்சமாக அமைந்து விட்டது.

ரசிகர்களின் கரகோஷம்...

அமெரிக்காவில் இந்தியாவைப் போலவே தமிழ், தெலுங்கு, கன்னட, கேரள மக்கள் கர்நாடக சங்கீதத்தை விரும்பிக் கேட்கிறார்கள். இங்கு வசிப்பவர்கள் தாம் பிறந்து வளர்ந்த கலாசாரத்தை இன்னும் தங்களுடன் வைத்திருக்கிறார்கள்.

இங்குள்ள ரசிகர்கள் இன்னும் சுத்தமான சம்பிரதாயமான கர்நாடக சங்கீதத்தை ரசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

என் வெற்றிக்கு காரணமான எனக்கு சங்கீதத்தை ஊட்டி வளர்த்த என் பெற்றோர், அதைத் தொடர்ந்து வளரச் செய்த என் கணவர், மாமியார், மாமனார், என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்திருக்கும் பல நல்ல மனங்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்...

ஸீடீயில் கச்சேரி முடிந்துவிட்டது. லேசான குளிருடன் பனி நன்கு பெய்யத் தொடங்கியது. வெளியில் இருந்த அமைதி உள்ளத்திலும் நிறைந்தது. ஒரு சிறந்த இசைக் கலைஞரைச் சந்தித்துப் பேசிய மகிழ்ச்சியில் மாடியிலிருந்து கீழே இறங்குகிறேன்.

அவருடைய வலைத்தள முகவரி:
http://www.arunasairam.com

சந்திப்பு: பத்மப்ரியன்
More

கோடிகளை விடக் கொள்கை முக்கியம்: டாக்டர் கிருஷ்ணஸ்வாமி
இந்திய சதுரங்கத்தின் முன்னோடி - மனுவேல் ஆரான்
Share: 


© Copyright 2020 Tamilonline