சிகாகோ பட்டினத்தில் ருத்ரப்பட்டணம் சகோதரர்கள் சிகாகோவில் திரைஇசை மழை கிளீவ்லாண்டில் பெருகிய 'கிருஷ்ணரஸம்' ரூபா மஹாதேவன்: இளைய தலைமுறையின் பாரம்பரிய சங்கீதம் தெற்கு சான் ஹோஸே திருக்கோவிலில் தியானம்
|
|
|
சூரிய கிரணங்களின் சூடு மெல்லக் குறையத் தொடங்கிய அந்த செப்டம்பர் 13ன் மாலைப் பொழுதில் ஹேவர்டின் ஷேபோ கல்லூரி அரங்கின் முன் திரளாகப் பல இந்தியர்களும் ஓரிரண்டு மற்ற நாட்டவரும் காணப்பட்டனர். "என்னங்க, சினிமாப் பாட்டு பாடுவாரா?" ஒருவர் கேட்டுக்கொண்டிருந்தார். "இன்று என் ஜன்ம சாபல்யம்" இன்னொருவர் தன் நண்பரிடம் விவரித்துக் கொண்டிருந்தார். "ஹவுஸ் ·புல்" ஒருவர் அன்றைய அரங்கின் நிலையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தது இன்னும் சில நிமிடங்களில் நடக்க இருந்த பத்மபூஷண் டாக்டர் கே.ஜே. யேசுதாசின் இசை நிகழ்ச்சியைப் பற்றித்தான். விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தைப்பற்றியும் மற்றும் சங்கரா கண் ·பவுண்டேஷன் பற்றியும் அமைந்த முன்னுரைகளுடன் இந்த நிகழ்ச்சி சரியாக 5 மணிக்கு ஆரம்பித்தது.
இசை வல்லுநர்களின் அறிமுகத்தின் துவக்கமாக ராதாகிருஷ்ணன் நாராயணசாமி அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்து மேடையேறியவர் மிருதங்க வித்வான் த்¢ருவாரூர் பக்தவத்ஸலம். இவரையடுத்து வயலின் வித்வான் எஸ்.ஆர். மஹாதேவ சர்மா. பின்னர் யேசுதாஸ் மேடையின் நடுவில் அமர இவர்களை அரங்கம் ஆவலோடு வரவேற்றது.
சுமார் 1400 பேர் இருந்த அன்றைய அரங்கில், சிறுவர், முதியவர், கர்நாடக இசை மேதைகள், சினிமாப் பாடல்களன்றி கர்நாடகப் பாடல்களில் அதிக ஆர்வம் இல்லாதோர், தென்னிந்தியர், வட இந்தியர் எனப் பலதரப் பட்டோரும் கூடியிருந்தனர். இவ்வனைவரையும் பிணைக்கும் ஓர் அற்புத சக்தியாக, எளிமையும் அமைதியுமாக அமர்ந்திருந்தார் ஏசுதாஸ். அன்றைய நிகழ்ச்சியிலிருந்து வரும் நிதி சங்கரா கண் மருத்துவமனைக்கு வழங்கப்படுவதைப் பற்றிப் பேசுகையில் அதற்கு உதவியளிக்கும் வகையில் கூடியிருக்கும் அனைவருக்கும் கடவுள் மேன்மேலும் நன்மையை வழங்குமாறு இறைவனை நெகிழ்வுடன் வேண்டிக்கொண்டார்.
நிகழ்ச்சியின் முதல் பாடலாக வந்தது சரசாங்கி ராக வர்ணம்; இதை 27ஆம் மேளகர்த்தா ராகம் என்று அறிமுகப்படுத்தி, கல்பனா ஸ்வரங்களுடன் வழங்கினார். தொடர்ந்து வினாயகப் பெருமானைப் போற்றி அமைந்த இரண்டு பாடல்களைப் பாடினார் (கனகாங்கி ராகத்தில் தியாகராஜ கீர்த்தனை, ஹம்ஸவினோதினியில் தமிழ்ப் பாடல் ஒன்று). தொடர்ந்து அடாணா ராகத்தில் "பாலகனகமய" பாடலை அவர் பாட ஆரம்பித்ததும் அரங்கில் பலத்த வரவேற்பு. "ஐயப்பனைப் பணிவோம்" ஆரபி ராகப் பாடலுக்கு முன் வந்த சிறிய ஆலாபனையின் போது, அரங்கிலிருந்த ஒரு சிறு குழந்தை அழத் தொடங்கியது. பசியோ தூக்கமோ தெரியாது. பாடகர் என்ன சொல்வாரோ என்று அனைவரும் பதட்டப்பட்ட அந்நிலையில் "ஆகா, ஆரபி அதற்கு தெரியுமோ தெரியாதோ, அதன் அழுகையிலும் ஆரபி தெரிகிறதே" என்று ஹாஸ்யமாகப் பேசி பாடலைத் தொடர்ந்தார். தொடர்ந்து ரக்ஷமாம் சரணாகதம் (நாட்டை), சாமஜ வர கமனா (ஹிந்தோளம்), நகுமோமு (பேரி) ஆகிய பாடல்களின் மூலம் அனைவரையும் மகிழ்வித்தார். பேரி ஆலாபனையின் போது மேல் ஸ்தாயியின் மேல் ஸ்வரங்களைத் தொட்ட அதே லாவகத்துடன் கீழ் ஸ்தாயியின் கீழ் ஸ்வரங்களையும் ஸ்பரிசித்த அவர் குரலின் அந்த மென்மையில் "இந்த வயதிலும் இவர் குரலில் இத்தனை இளமையா?" என்று அரங்கே வியந்தது.
அடுத்து வந்தது 'ராகம் தானம் பல்லவி'. சங்கராபாரண ராகத்திலும் கண்ட்ட சாப்பு தாளத்திலும் அமைந்த பல்லவியைப் பாடினார். தொடர்ந்து வந்த ஸ்வரங்களுக்கு வயலினிலிருந்து பதில் ஸ்வரங்கள் பலமாய் வந்தன. தனி ஆவர்த்தனத்தின் போது லய வித்வான்கள் தங்கள் புலமையை நன்கு வெளியிட்டனர். |
|
இடைவேளைக்குப் பிறகு வந்த பகுதியில் பக்தி/மெல்லிசைப் பாடல்களை வழங்கினார். முன்னமே கொடுக்கப்பட்டிருந்த நேயர்களின் விருப்பப் பாடல்களின் பட்டியலிலிருந்த ஒவ்வொரு பாட்டையும் சிரத்தையுடன் அவர் பாடியது பாட்டில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தையும் நேயர்களின்பால் அவருக்கு இருந்த அபிமானத்தையும் தெள்ளென எடுத்துக் காட்டியது. முதலில் வந்தது, "திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே". அனைவருக்கும் விருப்பமான பாடல் அது. முதற்பகுதிப் பாடல்கள் ஒவ்வொன்றிற்கும் ராகம் மற்றும் பாடலின் அறிமுகத்தை வழங்கி வந்தவர், இந்தப் பகுதிப் பாடல்களுக்கு முன்னுரை ஏதும் வழங்கவில்லை. என்றாலும் அவர் ஒவ்வொரு பாடலையும் தொடங்குகையில் தந்த சிறு ஆலாபனை அல்லது மெட்டே, வரப் போகும் பாடலை தெள்ளத்தெளிய அறிமுகப்படுத்த, தங்கள் நெஞ்சைத் தொட்ட அந்த இனிய படலைக் தம் அபிமானப் பாடகர் நேரில் பாடக் கேட்கும் குஷியில் பாடல்களின் ஆரம்பத்திலேயே கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அடுத்து "ப்ரமத வனம்" (மலையாளம்), க்ருஷ்ணா நீ பேகனே (கன்னடம்), என்ன வரம் கேட்பேன் நானே (தமிழ்), ஷடஜ் நே பாயா யே வரதான் (தான்ஸேன் படத்திற்காக இயற்றப்பெற்ற ஹிந்தி பாடல்), கொண்டலலு நெல கொன்ன (தெலுங்கு), அலை பாயுதே (தமிழ்), மாமாங்கம் - பலமுறை (மலையாளம்), தேனினிமையிலும் ஏசுவின் நாமம் (தமிழ்), அதிசய ராகம் (தமிழ்), ஜப் தீப் ஜலே ஆனா (ஹிந்தி), உய்யாலா ஜம்பாலா (தெலுங்கு), ஹரிமுரளீரவம், ஹரிவராசனம், க்ருஷ்ண லீலா என்று மொழி மத பேதங்களின்றி மாறி மாறி இனிய பல பாடல்களை வழங்கினார்.
இப்படி பலதரப்பட்டவரையும் வசீகரிக்கும் அந்த கம்பீரக்குரல், கம்பீரத்திலும் வரும் அந்த மென்மை, மென்மையால் யாரையும் கவரக்கூடும் என்ற தன்னம்பிக்கை, தன்னம்பிக்கையும் அயராத உழைப்பும் தந்த சாரீரம், இவற்றையெல்லாம் பெற்றிருப்பினும் பெரியவர்களுக்கு அழகு அவர்களின் எளிமையே என்பதை ஆணித்தரமாய் காட்டியது அவர் சுபாவம். 5 மணி முதல் சுமார் 10 மணி வரை தொடர்ச்சியாக இவர் பாடிய பாடல்களுக்கு கிடைத்த கரகோஷமும் ஆரவார வரவேற்புமே இவரது குன்றாத புகழுக்குச் சாட்சியம் தந்தன. அன்று அந்த அரங்கின் காவலுக்காக நின்றிருந்த ஆப்ரிக்க அமெரிக்க பெண்மணி ஒருவர், யேசுதாஸின் பாடல்களில் கண்ட மென்மையிலும் உணர்ச்சியிலும் தன்னை மறந்து நின்று விட்டது "கர்நாடக இசையை அறியாதவரும் அதை முழுதும் ரசிக்கலாம்" என்பதற்கு அத்தாட்சியாய் அமைந்தது.
சங்கரா கண் ·பவுண்டேஷன் நிதிக்காக இந்த தேவகான மாலைப் பொழுதை எமக்குத் தந்த தமிழ்மன்றத்துக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.
வித்யா நாராயணன் |
|
|
More
சிகாகோ பட்டினத்தில் ருத்ரப்பட்டணம் சகோதரர்கள் சிகாகோவில் திரைஇசை மழை கிளீவ்லாண்டில் பெருகிய 'கிருஷ்ணரஸம்' ரூபா மஹாதேவன்: இளைய தலைமுறையின் பாரம்பரிய சங்கீதம் தெற்கு சான் ஹோஸே திருக்கோவிலில் தியானம்
|
|
|
|
|
|
|