|
|
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழுலகிலே புகழ் பெற்று விளங்கிய புலமையாளர்களுள் நல்லூர் ஆறுமுகநாவலரும் ஒருவர். இவரது ஆளுமையும் புலமையும் தமிழ்ச் சிந்தனை மரபில் பிரிக்க முடியாத ஓர் கூறாகவும் விளங்குகிறது. தமிழ்க் கல்வி, தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், சைவசமயம் முதலான துறைகளில் ஆறுமுகநாவலர் காட்டிய ஆர்வமும் உழைப்பும் அவருக்கான இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
தமிழகம், ஈழம் உள்ளிட்ட பிரதேசங்கள் யாவும் பிரிட்டிஷ் ஆதிபத்தியத்துக்குக் கீழ் இருந்த காலம். அன்று தமிழ் மொழிக்கும் சைவசமயத்துக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. சுதேசிய கலாசார உணர்வும் சிந்தனையும் ஆங்கிலேய கலாசார ஆதிபத்தியத்துக்கு உட்பட்டிருந்தது. ஆங்கில மொழியும் கிறிஸ்தவ மதமும் மக்களிடையே மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது.
ஆங்கிலேய ஆதிபத்தியமும் அதனுடன் இணைந்து வந்த சமூக, பொருளாதார, அரசியல், சமயக் கருத்துக்களும் படிப்படியாக சமூகத்தில் பரவின. செல்வாக்கு மிக்க ஆதிக்க சாதிய குடும்பப் பின்புலங்களில் இருந்து 'உயர்குழாம' தோன்றியது. இந்த குழாமில் தோன்றியவர்களில் சிலர் சமய உணர்வுக்கும் மொழி உணர்வுக்கும் 'இயக்கம்' சார்ந்து சிந்திக்கவும் செயல்படவும் கூடிய வாய்ப்புக்களை உருவாக்கினார்கள்.
இந்தக் காலகட்டம் தான் ஆறுமுகநாவலர் எனும் சைவசமய சீர்திருத்தவாதியை, சைவத் தமிழ் இலக்கிய இலக்கண உரையாசிரியரை, பதிப்பாசிரியரை, கண்டனப் பத்திரிகையாளரை, சமூக சேவையாளரைத் தோற்றுவித்தது எனலாம். இதனாலேயே ஆறுமுகநாவலர் வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலமை வரலாற்றின் வரலாறாகவும் விளங்குகிறது.
யாழ்ப்பாணம் நல்லூரில் வாழ்ந்து வந்த கந்தப்பிள்ளைக்கும் சிவகாமியாருக்கும் மகனாக 1822 டிசம்பர் 18இல் ஆறுமுகம் பிறந்தார். மரபு வழிக் கல்வி மரபில் தோய்ந்து வந்த ஆசிரியர்களிடம் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின்னர் 1834 களில் பீற்றர் பார்சிவல் பாதிரியார் நடாத்திய யாழ் வெஸ்லியன் மிசன் கல்லூரியில் ஆங்கிலம் கற்றுத் தேறினார். தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் ஆழ்ந்த புலமை மிக்கவராகவே வளர்ந்து வந்தார்.
பார்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் வெஸ்லியன் கல்லூரியில் ஆங்கில தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பார்சிவல் பாதிரியாருக்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். தொடர்ந்து பாதிரியார் விவிலிய நூலைத் தமிழில் மொழி பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுது ஆறுமுகநாவலரும் பாதிரியாருடன் இணைந்து மொழிபெயர்ப்பு முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார்.
சுதேசிய மக்களிடையே கிறிஸ்தவ மதத்தின் பரவலை பாதிரிமார் திட்டமிட்டு மேற்கொண்டு வந்தனர். இந்தச் செய்கை நாவலருக்கு உடன்பாடாக இருக்கவில்லை. சைவசமயத்துக்கு நேரிடக் கூடிய ஆபத்தை உணர்ந்து, அதற்கெதிராகச் செயல்பட எண்ணினார். சைவமும் தமிழும் காக்கப்பட வேண்டுமென்ற துணிவு அவர் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்தது.
நாவலரது சிந்தனையும் இயக்கமும் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலேயே ஆட்சி காரணமாக ஏற்பட்டு வந்த மாற்றங்கள் சிலவற்றுக்கு ஒர் எதிரான இயக்கமாகவே இருந்தது. ஆட்சியில் இருந்து ஆங்கிலேயரை விரட்டிவிடக் கூடிய அரசியல் வழிமுறை குறித்து அவர் சிந்திக்கவில்லை. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சிக்குத் துணையாக இருக்கக்கூடிய அமிசங்களை வன்மையாக எதிர்த்தார். அதாவது, பாதிரிமார்களது மதமாற்றக் கோட்பாடு பாதிரிமார்களை முதன்மையாகக் கொண்ட கல்விமுறை ஆகியவற்றுக்குத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
1846ல் தமிழகம் சென்று அங்குள்ள வித்தியாசாலைகளையும் வித்துவான்களையும் கண்டு வந்தார். 1847 டிசம்பர் 31இல் யாழ் வண்ணார்பண்ணைச் சிவன் கோவிலில் முதன் முதலாக கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தைக் கண்டித்து சைவப் பிரசங்கம் நிகழ்த்தினார். 'தமிழில் 'பிரசங்கம்' என்னும் நடைமுறையை நாவலரே ஆரம்பித்து வைத்தார். நாவலர் இந்தப் பிரசங்க முறையை சைவத்தையும் தமிழையும் கிறிஸ்தவ பாதிரிமாரிடமிருந்து காக்கும் விதத்தில் ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தி வந்தார்.
1848இல் மீண்டும் பார்சிவல் பாதிரியாருடன் இந்தியப் பயணம் மேற்கொண்டார். தென்னிந்திய தேவலாயத்தில் விவிலிய நூலின் யாழ்ப்பாண மொழி பெயர்ப்பை ஒப்புவிக்கச் செய்தார். இந்த மொழி பெயர்ப்பு இதுவரையான விவிலிய மொழி பெயர்ப்புகளில் தனித்து விளங்குகின்றது. மேலும் கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்கு எதிராகத் தனது நடவடிக்கைகள் எந்தவிதத்தில் அமைய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்வதற்கும் இந்த அனுபவத்தை பயன்படுத்திக் கொண்டார்.
சைவசமயப் பிள்ளைகளுக்கு தொடர்ந்து இலவசமாகப் பாடம் படிப்பித்து வந்தார். இந்த நிலையில் தாமே சைவப் பாடசாலையை உருவாக்கி கல்விச் சேவையைத் தொடர விருப்பங் கொண்டார். 1848இல் சைவப் பிரகாச வித்தியாசாலையை உருவாக்கினார். இதுபோல் சிதம்பரத்திலும் பாடசாலை ஒன்றை உருவாக்கினார். சைவப் பிள்ளைகள் சைவச் சூழ்நிலையில் தான் பாடம் படிக்க வேண்டும். அப்போது தான் சைவத்தையும் தமிழையும் காக்க முடியும் எனக் கருதினார். இதற்காக பார்சிவல் பாதிரியார் பள்ளியில் தான் பார்த்து வந்த தனது ஆசிரியப் பணியைத் துறந்தார். முழுநேரத்தையும் சைவத்துக்கும் தமிழுக்கும் பணிபுரியும் வகையில் அமைத்துக் கொண்டார்.
மாணக்கர்களுக்குச் சைவ நூல்களை அச்சிட்டு வழங்கும் நோக்கில் அச்சுயந்திரம் வாங்குவதற்காக நாவலர் 1849 ஜூலையில் மீண்டும் தமிழகம் செல்கிறார். பல்வேறு நூல்களைப் பதிப்பிக்கவும் திட்டமிடுகிறார். இத்தருணத்தில் திருவாவடுதுறை ஆதீனம் 'நாவலர்' எனும் பட்டத்தை அவருக்கு வழங்கி கெளரவித்தது.
யாழ்ப்பாணம் வந்த நாவலர் 'வித்தியாநுபாலன யந்திரம்' என்னும் அச்சியந்திர சாலையை நிறுவினார்.
முதலாம் நான்காம் பால பாடங்களும் நீதி நூல்களும் எழுதி அச்சிட்டு வெளியிட்டார். சூடாமணி நிகண்டு உரை உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு கற்கும் நோக்கில் நூல்களை வெளியிட வேண்டுமென்பதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தார். |
|
கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு எதிராகப் பல்வேறு துண்டுப் பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார். கொலை மறுத்தல் என்னும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். சைவ தூஷண பரிகாரம், சுப்பிரபோதம், வச்சிரதாண்டம் ஆதியன அச்சிட்டு வெளியிட்டார். சைவ தூஷண பரிகாரத்தில் சைவசமயம் பற்றிய கிறிஸ்தவ மிசனரிகளின் தாக்குதலை எதிர்த்தார். நன்னூல் விருத்தியுரை, அச்சிடல், சிவாலய தரிசன விதி இயற்றல், பெரிய புராண வசனம் எழுதித் தயாரித்தல், திருமுருகாற்றுப்படைக்கு உரை இயற்றுதல் இவ்வாறு நாவலர் பதிப்பித்த நூல்களும் அவர் எழுதிய உரைகளும் நாவலரின் ஆளுமைக்கும் புலமைக்கும் சான்று.
ஆக நாவலர் கிறிஸ்தவ மதமாற்றத்துக்கும், கிறிஸ்தவம் சைவ சமயத்துக்கு எதிராக மேற்கொண்ட கண்டனங்களுக்கு எதிராகவும் எழுத்து, உரை, பிரசங்கம் என மேற்கொண்ட பணிகள் ஆழமானவை. இவை தமிழ் இலக்கிய இலக்கண மரபின் செழுமை மீள்கண்டு பிடிப்பதற்கும் காரணமாயிற்று. சைவ சமயம் செழித்து ஓங்கி வளர்வதற்கும் உரிய புலமைப் பரப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான அடித்தளம் நாவலரால் தொலை நோக்குப் பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.
அதுகாறும் ஏட்டிலே இருந்த நூல்கள் பல அச்சில் ஏறுவதன் மூலம் அனைவருக்கும் அறிவு புலமை பரவலாக்கப்படுவதற்கான சாத்தியங்களை நாவலர் உருவாக்கிக் கொடுத்தார். ஈழம், தமிழகம் என விரவிக் காணப்பட்ட தமிழ்ப் புலமையின் சைவத் தமிழ் இலக்கிய முகிழ்ப்பின், தமிழ் இலக்கண மரபின் வளங்கள் பரவலாக்கப்படக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. கிறிஸ்தவக் கல்லூரி முறைமையால் வழங்கப்பட்ட அறிவியல் கண்ணோட்டம் தமிழ்க் கல்வி முறைமைக்கும் சாத்தியமாக்க முடியும் என்பதை நாவலரது பணிகள் மேலும் நிரூபித்தன.
கிறிஸ்தவர் பிரச்சாரத்திற்குச் செய்யுளைப் பயன்படுத்தாது வசனத்தைப் பயன்படுத்தினார்கள். வசனம் மக்களிடையே ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் எல்லோருக்கும் புரியக் கூடியதாகவும் காணப்பட்டது. இதைக் கண்ட நாவலர் தாமும் இலக்கியங்களை வசன நூல்கள் மூலம் அறிமுகம் செய்தார். தமிழ் உரைநடை மரபில் நாவலர் வழிவந்த வசனநடை என்றொரு வகையைத் தோற்றுவித்தார். இதுபோல் பதிப்பு முறையிலும் நாவலர் பதிப்பு கைக்கொண்ட நெறிமுறைகள் பதிப்பு வரலாற்றில் சிறப்பாகப் பேசப்படுகிறது.
கிறிஸ்தவச் சூழல் காட்டிய வழிமுறைகளை தமிழுக்கும் சைவத்துக்கும் உரிய பங்களிப்பாக மாற்றியமைத்து நாவலர் காட்டிய புதுப்பாதைத் தமிழ்ப்புலமை வரலாற்றில் அவர் ஒரு முன்னோடி என்பதை புலமையாளர்கள் ஆய்வாளர்கள் எல்லோருமே ஏற்றுக் கொள்ள வைத்துள்ளது.
நாவலர் காட்டிய புதுப்பாதை என்பதாக கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. தமிழிலேயே முதன் முதலாக பிரசங்கம் என்பதை அறிமுகப்படுத்தி தொடர்ந்து மேற்கொண்டமை.
2. தமிழில் எழுந்த பாட நூல்களுக்கு இவரே வழிகாட்டி.
3. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பதிப்பாசிரியர்களுள் 'நாவலர் பதிப்பு' என்பதாகப் பின்னர் இனங்காண வழிகாட்டி.
4. சைவ-ஆங்கிலப் பாடசாலைகளை முதன் முதல் ஆரம்பித்தவர்.
5. வசன நடையிற் குறியீட்டு முறையை முதன் முதலிற் புகுத்தியவர்.
6. தமிழிலே கட்டுரை என்பது முதலில் இவரால் நல்லமுறையில் எழுதப்பட்டது.
இதுபோன்ற சாதனைகள் நாவலரால் அவர் காலத்தில் ஏற்பட்டமையால் தான் இருபதாம் நூற்றாண்டின் தமிழியல் ஆராய்ச்சியின் பரப்பு மேலும் நுண்ணியதான ஆய்வுப் பொருளாக மாறியது. ஆக தமிழ்ப் புலமைத்தளத்தில் நாவலர் வழிவந்த மரபு ஆழமான தடங்களை விட்டுச் சென்றுள்ளது.
1879 டிசம்பர் 5இல் நாவலர் மறைந்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரது சிந்தனையும் செயல்பாடும் சைவத்தின் மீட்சிக்காக இருந்தது. வேறு வார்த்தையில் கூறினால் இந்துமத மறுமலர்ச்சியில் நாவலர் வகிபாகம் மையம் கொண்டிருந்தது. தமிழர்களிடையே ஆன்மிகப் பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை வளர்த்து தூய்மையான இந்துமத சடங்கு ஆசாரங்கள் வளர்வதற்குக் காரணமாக இருந்துள்ளார். அதாவது சமஸ்கிருத மயப்படுத்தப்பட்ட இந்துமரபு சைவம் பற்றியதாதவே சிந்தனையும் செயல்பாடும் இருந்தது.
மேனாட்டு மயப்படுத்தலினால் கலாசார மாற்றம் சிதைவு ஏற்படாது தடுப்பதற்கு நாவலரது போராட்ட இயக்கம் உதவிற்று. ''சைவமே தமிழ் தமிழே சைவம்'' என்னும் கருத்து நிலைபேறாக்கத்துக்கும் நாவலரே காரணமாக இருந்துள்ளார்.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|