முரண்பாடுகள்
|
|
|
வயது நாற்பதுகளில் இருக்கும். மாநிறத்துக்கும், கருப்புக்கும் இடையே சண்டை பிடிக்கற ஒரு நிறம். நல்ல ஒசரம். காக்கி நிற மேல் சட்டையும், கால் சட்டையும் - என சுத்தமான சீருடை, நாள் தவறாமல் நெற்றியில் பளிச்சிடும் திருநீற்றுக் கீற்று. அதிகாலையே சுறுசுறுப்பாக வேலைக்குள் இறங்கிவிடும் ராகவய்யாவைப் பார்த்தால் யாருக்கும் சோம்பல் மறைந்துவிடும், என்னைத் தவிர!
மணக்கும் பில்டர் காப்பியோடு போர்டிகோ படிக்கட்டுகளில் அமர்ந்து பேப்பர் படிப்பது எனக்கு மிகவும் பிடித்த காலைச் செயல். கடிகாரத்தில் ஏழு தோன்றும் வரை இப்படியே தொட்டிப் பூக்களோடு ஒரு சுக சஞ்சாரம். அவ்வப்போது, "பேப்பர்லே என்னா பாப்பா சேதி" என்று தமது தமிலங்கு பாஷையில் கேட்டறிவார் ராகவய்யா.
படித்து அறிந்துகொண்டதைச் சொல்லி, தவறாமல் அவரது மகளைப் பற்றி விசாரிப்பது என் வழக்கம். வகுப்பில் முதலாவதாக தேறும் மகள் பற்றி பெருமை பொங்க கூறுவார்.
சுமார் பத்து மணியளவில் குப்பை அள்ளும் வேலை முடிந்து கார்பரேஷன் லாரிகளுக்குள் அவற்றை ஏற்றியதும், பரிசுத்தராக வேலைக்கு வந்த ராகவய்யா, தூசும், அழுக்கும் சுமந்து களைப்போடு நிற்பார். அம்மாவிடம் தண்ணீர் கேட்டு அருந்திவிட்டு. முகம் அலம்பிக் கொண்டு, எங்கள் வீட்டு பவழமல்லி மரத்து நிழலில் சிறு பொழுது இளைப்பாறி விட்டு நடையைக் கட்டுவார். அடுத்த நாள் காலையில் மறுபடியும் அதே வெள்ளைச் சிரிப்போடு, தனது துடைப்பமும், சுகாதார பட்டாளம் சமேதமுமாய் ஆஜராகி விடுவார்.
சுமார் பத்து வருடங்களாக காலனி வாழ் மக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்ட சுகாதாரப் பணியாளராக இயங்கி வந்தார் ராகவய்யா. காலம் உருண்டோடியது. கல்லூரி, பணி என்கிற கட்டங்கள் கடந்து, எனக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்தன.
ராகவய்யாவும் அவரது மனைவியும் வீட்டு வேலைகள் அத்தனையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்கள்.
வெள்ளை அடிக்க ஆள் பிடித்து, சிரத்தையாக அவர்களிடம் வேலை வாங்கி, திருமண வீட்டுக்கு களை சேர்த்துக் கொண்டிருந்தார் ராகவய்யா. திருமண அழைப்பிதழ்கள் போஸ்டிலும், கூரிய ரிலும், நேரிலும் மும்முரமாக விநியோகிக்கப் பட்டன.
திருமணத்துக்கு இரண்டு நாட்களே இருந்த போது, ராகவய்யாவையும், அவரது மனைவி யையும் அருகே அழைத்து கண்டிப்பா உங்க மகளைக் கூட்டிகிட்டு கல்யாணத்துக்கு வரனும். வந்து ஆசீர்வாதம் பண்ணனும் என்றேன். அதுக்கென்ன பாப்பா. கண்டிப்பா வர்றோம்னு அவங்களும் சொன்னாங்க.
விறுவிறுவென வேலைகள் நடக்க, அமெரிக்க விசா, சாம்பார் பொடி, கறி மசாலா, புதுமண விருந்து என்று அவர்களை மறந்தும் போனேன். |
|
இன்னும் சில மணி நேரங்கள். விமான நிலையம் கிளம்ப வேண்டும். விளையாடித் திரிந்த வீடு, நாய்க்குட்டி, பதியம் போட்டு இதயத்தில் வளர்த்த ரோஜாச் செடிகள். கனத்த நெஞ்சத்தோடு - தென்னங்கிளையில் கூடு கட்டி, குஞ்சு பொறித்து, மொட்டை மாடிக்குச் செல்பவர்களின் தலைகளை எல்லாம் பதம் பார்த்த காகம் நினைவுக்கு வர. அப்பா, தயவு செய்து காக்கா கூட்டை கலைச்சுடாதீங்க என்று கேட்டுக் கொண்டேன். அப்பா கண்களில் நீர் தளும்ப, சரி என்று சிரித்தார்.
அந்நேரம், படிகட்டுகளில் ராகவய்யாவின் மனைவி தீட்டிய காவிக் கோலம் கண்ணில் பட. ராகவய்யா கல்யாணத்துக்கு வந்தாராம்மா? என்றேன். அச்சோ, மறந்துட்டேனம்மா. அவர் வரலேடா, ஆனா இதைக் கொடுக்கச் சொன்னார். என்று ஒரு பரிசுப் பொட்டலத்தை நீட்டினார்கள் அம்மா. அழகான விநாயகர் சிலை. நேர்த்தியாக பேக் செய்து கொடுத்திருந்தார். அதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இந்தியா சென்றேன். அதிகாலையில் - அதே ராகவய்யா. சிறிதும் மாற்றமில்லை.
என்னைப் பார்த்ததும் உற்சாகப் பெருக்கோடு ஓடி வந்தார்! கேட்டுக்கு அப்பால் நின்றபடி, "எப்ப வந்தீங்கம்மா. செளக்கியமா இருக்கீங்களா? அய்யா நல்லா இருக்காங்களா?" அடி மனத்திலிருந்து எழுந்த அக்கறையான விசாரிப்பு.
அவரை பார்த்ததில் சந்தோசம் என்றாலும், திருமணத்துக்கு அவர் வராதது நினைவுக்கு வர. பொய்க் கோபம் காட்டி, அதெல்லாம் சரி, எத்தனை அன்போடு அழைத்தும் நீங்க கல்யாணத்துக்கு வரலியே. சும்மா பேருக்கு கூப்பிட்டேன்னு நெனச்சீங்களா. என்றேன்.
"கோவிச்சிக்காதீங்கம்மா. நீங்க நிஜமான அன்போடுதான் அழைச்சீங்க. எங்களுக்கும் வர ஆசதான். ஆனா, பெரிய பெரிய ஆளுங்க வந்து உங்களுக்கு வாழ்த்து சொல்லுவாங்க. அவங்க மத்தியில எங்களுக்கு எப்படி நடந்துகனுமின்னு தெரியாதம்மா. நீங்க தவறா நினைக்க மாட்டீங்க. ஆனா, போகுமிடத்துல உங்களுக்கு சொல்லு வந்துடக் கூடாதேம்மா. நீங்க விமானத்துக்கு போகும் போது கூட, நானும் விஜயாவும் தெருமுனையில நின்னுகிட்டு உங்களை கண்ணார பார்த்துட்டுதான் வீட்டுக்கு போனோம்." என்றார்.
கண்களில் நீர் பனித்தது எனக்கு. கொஞ்சம் இருங்க, என்று கூறி, அவரது மகளுக்காக சில பரிசுகளும், சாக்லேட்டுகளும் கொடுத்தனுப்பினேன்.
குழந்தை ரொம்ப சந்தோசப்படுவாம்மா என்று கூறி விடைபெற்றார்.
அடுத்து -
"ஏங்கண்ணு சொகமா இருக்கியா..." வாடிக்கையாக எனக்கு மல்லிப்பூ கொடுத்து வந்த சரசுவதி பாட்டி!
"ஏங்கண்ணு சொகமா இருக்கியா... நீ ஊருக்கு கெளம்பின நாளா பாத்து, ஒனக்கு பிடிச்ச குண்டு மல்லியே கிடைக்கல. சாதி மல்லி எடுத்துக்கன்னு சொன்னா, வேணாம் ஆயா, நான் வழியில வாங்கிக்கறேன்னு சொல்லிட்டு போனியே, மனசே கஷ்டமா போச்சு! அதான் - அம்மா நீ வர்றேன்னு சொன்னதுமே, ரவைக்கே பூக்கடைக்கு போயி புது மல்லியா வாங்கி செண்டு கட்டி கொண்டாந்தேன். தலை சீவி வெச்சுக்கடா கண்ணு" என்று பாசத்தோடு மல்லிப் பந்தைத் தந்தார்.
விடுமுறையின் முதல் நாளே... மீண்டும் டாலர் தேசத்துக்கு திரும்பத்தான் வேண்டுமா என்று தோன்ற ஆரம்பித்து விட்டது!
கற்பகம் இளங்கோவன், மிச்சிகன் |
|
|
More
முரண்பாடுகள்
|
|
|
|
|
|
|