Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நிதி அறிவோம் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நேர்காணல்
பின்னோக்கிப் பார்ப்பதே எதிரியாக அமையலாம் - ஏஞ்சல் முதலீட்டாளர் எம். ஆர். ரங்கஸ்வாமி
எழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல்ல - சல்மா
- மனுபாரதி|ஜூலை 2007|
Share:
Click Here Enlargeஅடக்குமுறைக்குள் புழுங்கித் தவிக்கும் அடையாளமற்ற பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கின்றது சல்மாவின் கவிதை. 'இரண்டாம் ஜாமங்களின் கதை' என்ற இவரது நாவல், ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய சமூகத்தின் பெண்களது அவல நிலையை விவரிப்பதுடன், யதார்த்தத்தில் வார்த்தெடுத்த சித்திரங்களுடன் வாசகரின் கவனத்தை உலுக்கியெடுக்கிறது. சுயானுபவத்திலிருந்து வெடித்துக் கிளம்பியவைதான் சல்மாவின் படைப்புகளில் வெளிப்படும் கேள்விகளும், நசுக்கப்பட்ட கனவுகளுக்கான புலம்பல்களும். எழுதத் தடைவிதித்த கணவருக்கும், புகுந்த வீட்டுக்கும் தெரியாமல் படைப்பைத் தொடர்வதற்கான முகமூடிதான் தனது புனைபெயர் என்று பல நேர்முகங்களில் சொல்லியிருக்கிறார். 2001-இல் பேரூராட்சித் தேர்தலில் போட்டியிட அவர் கணவர் மூலமே வாய்ப்பு வந்தது. மனைவியைக் கைபொம்மையாக்கி, அதிகாரத்தைத் தானே தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்துடன் அவரது கணவர் இருக்க, சல்மாவுக்கோ அந்த வெற்றி பல கதவுகளைத் திறந்துவிட்டது. அவரது நம்பிக்கையும், வைராக்கியமும் பதவி பலத்தில் வளர, அரசியலில் பரவலான கவனத்தைப் பெற்றார். கடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க சார்பில் மருகாபுரியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். அதில் தோற்றாலும், கலைஞரின் வேண்டுகோளின் பேரில், சமூகநல வாரியத் துறைக்குத் தலைவியாகத் தொண்டாற்றி வருகிறார். தமிழ் இலக்கியத்தில் தற்போது இயங்கிவரும் படைப்பாளிகளின் பட்டியல் சல்மாவைச் சேர்க்காமல் நிறைவடையாது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியத் துறை, நார்மன் கட்லர் நினைவாக ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டு, அமெரிக்கா வந்த சல்மாவுடன் ஒரு சிறு உரையாடல்...

கே: வட அமெரிக்கப் பயண அனுபவம் எப்படி இருந்தது?

ப: வட அமெரிக்கப் பல்கலைக்கழகம் என்னை இந்தியாவிலிருந்து வரவழைத்து என் படைப்புக்களைப் பற்றி இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கருத்தரங்கம் முடிந்து நியுயார்க், வாஷிங்டன் டி.சி., பாஸ்டன், கனெக்டிகட், சான் ஹோஸே, சான் ·பிரான்ஸிஸ்கோ எனப் பல நகரங்களைப் பார்த்ததும் இங்குள்ள தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்புகளில் பங்கேற்றதும் இனிய அனுபவங்களே. நான் குறுகிய காலத்தில் சந்தித்த மிகக் குறைந்த மனிதர்களில் சிலருக்குத் தீவிர இலக்கிய வாசிப்பும், ஆர்வமும் குறைவு என்று தோன்றியது. அதற்குத் தொலை தூரத்தில் வாழ்வது காரணமாக இருக்கலாம். தீவிர இலக்கியப் புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருக்கலாம். தமிழ்நாட்டிலேயே தீவிர இலக்கிய வாசிப்பு என்பது குறைந்த அளவிலேயே இருக்கும் போது இங்கிருக்கும் நிலையைக் குற்றமாகச் சொல்லமுடியாது. ஓர் அவதானிப்பாகச் சொல்கிறேன். மற்றபடி தமிழ்நாட்டிலிருந்து ஓர் எழுத்தாளர் வந்திருக்கிறார் என்றால், அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எல்லாரிடமும் பார்த்தேன். அந்த வரவேற்பும், விருந்தோம்பலும் மகிழ்ச்சியைத் தருகின்றன.

கே: 'இரண்டாம் ஜாமங்களின் கதை' என்ற உங்களது நாவல் பற்றிச் சொல்லுங்கள்.

ப: என்னுடைய இஸ்லாமிய சமூகம் சார்ந்த பெண்களுடைய உலகத்தை எழுத்தில் கொண்டு வரவேண்டும் என்பதுதான் என் முதல் நோக்கமாக இருந்தது. ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்துப் பெண்களைப் பற்றி பேசாமல், நான் பிறந்த வளர்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெண்கள் நிலையைச் சொல்லவும், அவர்களது வாழ்க்கை, கனவுகள், துயரங்கள், காதல் இவற்றை வெளிக்கொண்டுவரவும் முயன்றிருக்கிறேன். பொதுவாகவே பெண்களது வாழ்க்கை துயரங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. நான் பார்க்கும் பெண்களின் வாழ்வையே இதில் பதிவு செய்திருந்தாலும் பல விஷயங்கள் எல்லா சமூகத்துப் பெண் களுக்கும் பொருந்தும் என்றே சொல்வேன். இதன்மூலம் என் சமூகத்தில் ஒரு விவாதத்தை உருவாக்கி, என்ன மாதிரி வாழ்க்கை இங்கே இருக்கிறது, என்ன மாற்றம் தேவை, அதை எப்படிக் கொண்டு வருவது எனப் பல கேள்விகளை இந்த நாவல் வாயிலாக எழுப்பவேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது.

கே: இஸ்லாமிய சமூகம் இந்த நாவலை எப்படி எதிர்கொண்டது? நீங்கள் உருவாக்க எண்ணிய விவாதம் நடந்ததா?

ப: நாவலை முழுமையாக வாசித்து, இந்தப் படைப்பு அடிப்படையில் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ, விவாதிக்கவோ என் சமூகத்தில் யாரும் தயாராக இல்லை. மாறாக, அங்கங்கே சில பக்கங்களைப் படித்துவிட்டு, பல விஷயங்களை மிகைப்படுத்தி எழுதியிருக்கிறேன் என்று சிலருக்கு என்மீது வருத்தமும் கோபமும் உருவானதாகத்தான் தெரிகிறது. எந்த நோக்கத்தில் பதிவு செய்தேனோ, அந்த நோக்கத்தை அவர்கள் உள்வாங்கவும், எதிர் கொள்ளவும் இல்லை என்பதில் எனக்கு வருத்தம்தான்.

ஆனால், தமிழ் இலக்கிய உலகத்தில் இந்தப் படைப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதுவரை விவரமாகச் சொல்லப்படாத புதியதொரு வாழ்க்கை முறையை இந்த நாவல் பேசுவதால் பரவலாக நல்ல கவனமும் இதற்குக் கிடைத்தது.

கே: தமிழிலக்கியத்தில் கடந்த பத்து வருடங்களில் பெண்களின் பங்களிப்பு எப்படி முன்னேறியிருக்கிறது?

ப: கடந்து பத்து வருடங்களில் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் ஆறேழு பேர் (மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தாராணி மற்றும் சிலர்) எழுதிக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன் ஒரு நாற்பது ஐம்பது வருடங்களை எடுத்துக்கொண்டால் பெண்கள் கவிதை என்ற வடிவத்துக்குள் பெரிதாக இயங்கவேயில்லை. அதைப்போல் தற்காலத்தில் எங்களுக்குப் பின் கவிதைகள் எழுதும் ஒரு பெண் தலைமுறை உருவாகவில்லை. அது அச்சமும் வருத்தமும் தருவதாக இருக்கிறது.

எங்கள் கவிதைகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. தொடர்ந்து பிரசுரமாகின்றன. கவனம் பெறுகின்றன. இருந்தும் எங்களைத் தவிர்த்து வேறு புதிதாய் இன்னும் பெண்கள் ஏன் கிளம்பவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
கே: உங்கள் கவிதைகளில் பல, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான குரலாய் ஒலிக்கின்றன. இதைத் தாண்டி வேறு தளங்களுக்கு உங்கள் கவிதைகள் போக வேண்டும் என்ற விருப்பமிருக்கிறதா?

ப: 'ஒரு மாலையும், இன்னொரு மாலையும்' தொகுப்பில் இருக்கும் பல கவிதைகள் நீங்கள் சொல்வது போல் ஒரு குறுகிய உலகத்துக்குள் இருப்பதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் மட்டுமல்ல, தற்காலப் பெண் படைப்பாளிகள் சிலரும் இந்தக் குறுகிய உலகத்தைப் பற்றித்தான் எழுதிவருகிறார்கள். இது மாறி, ஒரு பரவலான தளத்துக்குச் செல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களும் விரும்புகிறார்கள் என்றே நம்புகிறேன். பல்வேறு தளங்களில், பல்வேறு விஷயங்களைப் பற்றிக் கவிதைகள் பிறக்கவேண்டும்.

கே: எழுத்து வாழ்க்கையில் தொடங்கிப் பொது வாழ்க்கைக்கு வந்திருக்கிறீர்கள். என்ன விதமான மாற்றமாக இதை உணருகிறீர்கள்?

ப: எழுத்துச் சார்ந்த உலகம் சிறியது. இப்பொழுது நான் ஈடுபட்டிருக்கும் பொது வாழ்க்கையில் நிறைய மக்களைச் சந்திக்கும், அவர்களது வாழ்க்கையை அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கின்றன. இதன் மூலம் என் எழுத்தும் பலவித மக்களின் பதிவாக விரியும் என்றே தோன்றுகிறது. எழுத்தின் மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால் அது எளிதில் நடக்கக்கூடியதல்ல. நம் உணர்வுகளையும், கருத்துக்களையும் பதிவு செய்யும்போது, காலப்போக்கில் ஒரு சமூக மாற்றத்துக்கு என்றாவது அவை உதவிகரமாக இருக்கலாம். ஆனால், அதே சமயத்தில் அரசியல் களத்தில் இறங்கி மாற்றங்களுக்காக உழைக்கும்போது அது உடனடியாகப் பலன்களைத் தர வாய்ப்பு அதிகம்.

கே: உங்கள் கவிதைகள் காட்டும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமிருக்கிறதா?

ப : நிச்சயமாக. நான் தற்போது தலைமை வகிக்கும் சமூக நலவாரியம் பெண்கள் குழைந்தைகள் நலன் சார்ந்த ஓர் அமைப்பு. இதன் மூலம் சில அரசு சாராத் தொண்டு நிறுவனங்களோடும், அனாதை இல்லங்களோடும், பெண்கள் அமைப்புகளோடும் சேர்ந்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னால் முடிந்ததைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன். தொடர்ந்து செய்வேன்.

உரையாடல்: மனுபாரதி
More

பின்னோக்கிப் பார்ப்பதே எதிரியாக அமையலாம் - ஏஞ்சல் முதலீட்டாளர் எம். ஆர். ரங்கஸ்வாமி
Share: 




© Copyright 2020 Tamilonline