|
சிவாஜி என்னும் விந்தை |
|
- மதுரபாரதி, கேடிஸ்ரீ, அரவிந்த், ஜோலியட் ரகு|ஜூலை 2007| |
|
|
|
மதுரபாரதி தகவல் உதவி: கேடிஸ்ரீ, அரவிந்த், ஜோலியட் ரகு (சிகாகோ).
தமிழர்களுக்கு திரைப்பித்துப் பிடித்து வெகுநாளாகிறது. ஆனால் அவர்கள் தம் படங்களினால் உலகையே அதிரவைத்ததில்லை. இப்போது நடப்பதைப் பார்த்தால் அதையும் செய்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது. எல்லாம் ரஜினிகாந்தின் 'சிவாஜி, தி பாஸ்' செய்கிற அமர்க்களம்தான்.
கதை சாதாரணம், கதாநாயகருக்கு வயது 50க்கும் மேல் என்றெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. அந்தப் படத்தின் மாயமே அதுதான். ரஜினியின் மாயமும் கூட. ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி கூட்டணி வடநாட்டையும் கலக்கிவிட்டது. டெல்லித் திரையரங்கில் ஹிந்தி சப்டைட்டிலுடன் வெளியான தமிழ்ப்படத்தைப் பார்க்க அதிகாலையிலிருந்து வடவர்கள் கூட்டம் அலைமோதியது. மலேஷியாவில் சில தொழில்நுட்பச் சிக்கல்களால் படத்தைத் திரையிட முடியாமல் போக, அங்கே ரசிகர்கள் திரையரங்கையே அடித்து நொறுக்க, அது 'வாஷிங்டன் போஸ்ட்'டில் செய்தியானது.
டெல்லியில் நடக்கும் விஷயங்கள்தான் உலகுக்கே முக்கியம் என்று செயல்படும் NDTV கூட பங்களூரு, சென்னை, டெல்லி என்று எல்லா இடங்களிலும் படம் வெளியான அதே நாளில் நிருபர்களை அனுப்பித் தியேட்டர் வாசலில் ரசிகர்களின் எல்லையற்ற பெருமிதத்தைக் காட்டியது. டி.வி. செய்தியாளரைக் கண்டால் ஓடி ஒளியும் ரஜினி இந்தச் சேனலுக்குக் கொடுத்த பேட்டியில் 'நான் ராஜாவாக இருக்கலாம்; ஆனால் அமிதாப்பச்சன் தான் சக்ரவர்த்தி' என்று திருவாய் மலர்ந்தருளினார். விடுவாரா அமிதாப் 'ரஜினி சொல்வதையெல்லாம் நம்பாதீர்கள், அவர்தான் சக்ரவர்த்தி. உழைப்பு, எளிமை இவற்றின் உருவமே அவர்தான்' என்று பதிலுக்குச் சூட்டினார் ஒரு இமாலய மாலையை.
ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலும் பீரும் அபிஷேகம். கற்பூரம், சாக்லேட், ஆடு வெட்டிப் பலி இன்னும் சொல்ல முடியாத கொண்டாட்டங்கள். ரஜினி டி-ஷர்ட், ரஜினி தொப்பி, ரஜினி கைக்குட்டை-எங்கும் ரஜினி எதிலும் ரஜினி. முதல் நாள் முதல் காட்சி பார்த்த NDTV நிருபர் காமிராவில் கத்தினார் 'Sivaji Rocks'; ஒருமுறையல்ல பலமுறை. அங்கஹீனமுற்ற ஒரு மும்பை இளைஞர் விமானமேறிச் சென்னைக்கு வந்து ஆயிரம் கொடுத்து டிக்கட் வாங்கி முதல்நாள் முதல் காட்சியைப் பார்த்தார். நண்பரின் மகன் ஸ்விட்ஸார்லாந்திலிருந்து ·போன் செய்கிறான் 'அப்பா, நான் சிவாஜி படத்துக்கு டிக்கட் வாங்கிவிட்டேன்' என்று. இந்தியாவில் மட்டுமல்ல சிகாகோவிலும் சூடம் கொளுத்தி, கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். முதல் 15 காட்சிகளும் அரங்கு நிறைந்து போயின.
கனடாவில் ஓடும் படங்களில் வசூலில் இரண்டாவது இடம், இங்கிலாந்தில் ஒன்பதாவது இடம் (பைரேட்ஸ் ஆ·ப் தி கரீபியன் கூட இதற்கப்புறம் தானாம் அங்கே!) என்று பணத்தை அள்ளிக் கொட்டுகிறது. எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல், இணையதளம் என்று பல வழிகளிலும் டிக்கட் விற்கப்பட்டது இந்தப் படத்துக்குத்தான். |
|
அப்படி என்னதான் இருக்கிறது படத்தில்? ரஜினி, ரஹ்மான், ஷங்கர். அது மட்டுமல்ல. ரோலோவிஷன் கேமராவில் எடுக்கப்பட்ட முதல் படம் இதுதான். சாதாரணமாக இந்தியாவில் வண்ணப் படங்களை டிஜிட்டல் பிராசஸிங் செய்வது 2K DI வழியேதான். ஆனால் சிவாஜியில் இருக்கும் கிரா·பிக்ஸ் சிறப்பைப் பார்த்த பிரசாத் EFX ஸ்டூடியோவினர் இதை மிக முன்னேறிய 4K DI பிராசஸிங் செய்தால் வண்ணங்கள் துல்லியமாக, பிரமிக்க வைப்பதாக இருக்கும் என்றனர். இதில் பிரச்னை என்னவென்றால் இந்த முறையில் பிராசஸிங் செய்ய அதிக நேரமாகும், மிக அதிக கணித் திறன் கொண்ட கணினிகள் வேண்டும்; செலவு அதிகமாகும். ஆனால் படத்தைத் தயாரித்த ஏவி.எம் நிறுவனம் செலவுக்கும், அதிக நேரம் தரவும் ஒப்பியதால் ஏற்பட்ட பிரம்மாண்டம் படத்தில் தெரிகிறது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவது என்றால் இதுதான் போலும்!
இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களிலேயே மிக அதிகச் செலவில் தயாரானது சிவாஜி. இதில் ரஜினிக்கு 15 வகை ஹேர் ஸ்டைல்களாம், மொட்டைத்தலை உட்பட. லண்டன் பல்கலைக்கழக மாணவர்கள் ரஜினியின் ஸ்டைல், உத்தி, வேகம், ரசிகர்கள் ஆகியவற்றைப் பற்றி ஒரு ஆவணப்படம் தயாரிக்கிறார்கள். ரஜினியின் மகள் சௌந்தர்யா அவரையே கதாநாயனாக வைத்து 'Sultan, the Warrior' என்ற அனிமேஷன் படம் ஒன்றைத் தயாரித்து வருகிறாராம்.
'மக்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியும். அதை நான் கொடுக்கிறேன். வேறொன்றுமில்லை' என்று சொன்னதோடு, 'நான் திரும்பிப் பார்க்கும் போது எனக்குக் கடவுளின் பெரிய வரம் கிடைத்திருப்பதாகத்தான் தெரிகிறது' என்கிறார் ரஜினி, மிக அடக்கத்தோடு. எளிமை, அடக்கம் இவைதான் ரஜினி காந்தின் மிகப்பெரிய சொத்துக்கள் என்று அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.
சிவாஜியின் மூலம் கோலிவுட் உலகின் கவனத்தை ஈர்த்துவிட்டது. மகிழ்ச்சிதான். அது போதாது, சாதிக்க வேண்டும்.
மதுரபாரதி தகவல் உதவி: கேடிஸ்ரீ, அரவிந்த், ஜோலியட் ரகு (சிகாகோ). |
|
|
|
|
|
|
|