Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க
Tamil Unicode / English Search
இலக்கியம்
தந்தை சொல் மிக்க மந்திரம் உண்டு! - பகுதி 1
- பெரியண்ணன் சந்திரசேகரன்|ஜனவரி 2004|
Share:
முன்பு: தலைவனுடன் போகிய தலைவியைத் தேடிப் பாலைநிலத்து வழியே சென்ற செவிலிக்கு முனிவர் ஒருவர் சொன்ன அறிவுரை கேட்டோம். அங்கே அவர் "கற்பினாளுக்கு வருந்தாதே; தன் மனத்துட் புகுந்த சிறந்தவனோடு செல்வதுதான் சிறந்தது" என்று சொன்னதையும் கண்டோம்.

ஆனால் சில வினாக்கள் எழுகின்றன:

1. தந்தை தாயிடம் சொல்லாமல் கூடத் தன் காதலனோடு செல்வது எப்படித் தகும்? "தாயின் சிறந்த கோவிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்றது என்னாயிற்று? தந்தை அவளைத் தடுத்தால் என்னாவது? அதற்குப் பணிய வேண்டாமா? அவ்வாறு பணியாமல் என்ன குடும்பப்பெண் ஆகப் போகிறாள் அவள்?

2. சரி. தன்னுள்ளத்தில் புகுந்தவனை மணப்பதைத் தடுக்கும் தந்தை சொல்லை அவள் ஏற்காவிடினும் பெற்றோரே இல்லாமல் திருமணச் சடங்கு நடத்துவது எப்படித் தகும்?

3. அது சரியானாலும், தெரிந்தோர் யாருமே இல்லாமல் காதலன் காதலி மட்டும் திருமணம் செய்துகொள்வது எப்படி அடுக்கும்? அப்படிச் செய்யும் திருமணம் ஒரு திருமண நிகழ்ச்சியா?

இவையெல்லாம் வினவ வேண்டிய வினாக்களே. அவை நம் பண்பாட்டை உண்மையாகவே உணர உதவும்.

பெற்றோருக்குத் தமிழ்கொடுக்கும் இடம் சிறிதில்லை. மேலே மேற்கோள் காட்டிய "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. தாயிற் சிறந்த கோவிலுமில்லை" என்பன இரண்டும் இடைக்கால (கி.பி 800) ஔவையார் பாடிய கொன்றைவேந்தன் என்னும் நூலின் 37-38 ஆம் சூத்திரங்கள்.

"இனியவை நாற்பது" என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. திருக்குறளும் அந்தப் பதினெட்டில் ஒன்று. கீழ்க்கணக்கு வகையைச் சேர்ந்த நூல் அறம், பொருள், இன்பத்தைக் குறுகிய செய்யுள்களால் போதிப்பது. இனியவை நாற்பது என்ற நூல் ஒருவன் செய்யத் தக்க நல்ல இனிய ஒழுக்கச் செயல்களை நாலடி வெண்பாக்கள் நாற்பதின் மூலம் தெரிவிப்பது. அந்த நாற்பதில் ஒரு செய்யுள்:

மன்றில் முதுமக்கள் வாழும் பதிஇனிதே;
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே;
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது
(இனியவை நாற்பது: 18)

[மன்று = பொது இடம், நீதி மன்றம்; பதி = ஊர்; தந்திரம் = நூல், விதிமுறைப் புத்தகம்; எஞ்சா = குறையாத; விழு = விரும்பத்தக்க; சீர் = ஒளி, பெருமை]

"பொதுஇடத்தில் அனுபவமுடைய மூத்தோர் நிறைந்த ஊர் இனியது; தவமுறை நூல்களின்படி வாழும் தவசிகளின் பெருமை இனியது; குறைவில்லாத விரும்பத்தக்க ஒளியுடைய இரண்டு பெற்றோரையும் காலையில் விழித்தவுடன் கண்டு அடி தொழுது எழுவது இனியது" என்பது பொருள்.

இன்னொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலான 'சிறுபஞ்சமூலம்' ஐந்து வகை நாய்களைக் கூறுகிறது:

நாண்இலான் நாய்;நன்கு நள்ளாதான் நாய்;பெரியார்ப்
பேண்இலன் நாய்;பிறர்க்குச் சேவகன் நாய் - ஏண்இல்
பொருந்திய பூண்முலையார்ச் சேரி,கைத்து இல்லான்
பருத்தி பகர்வுஉழி நாய்"
(சிறுபஞ்சமூலம்: 93)

[நாண் = நாணம்; நள்ளு - நட்புக்கொள்; சேவகன் - வேலையாள், அடியாள்; ஏண் = வலிமை, கற்பு; பூண் = நகை; பகர்வு = கூவல், கூவி விற்றல்; உழி = இடம்]

"தீய செயல்களைச் செய்ய நாணம் இல்லாதாவன் நாய்; நன்கு மனமார நட்புக்கொள்ளாதவன் நாய்; பெரியோராகிய பெற்றோரைப் கவனிக்காதவன் நாய்; பிறர்க்கு அடியாளாய் இருப்பவன் நாய்; கற்பில்லாதவர்களும் பொருந்த நகைஅணிந்த நெஞ்சுடையவர்களுமான பொதுமகளிர் சேரியிலே கைக்காசு இல்லாதவன் பருத்தி விற்குமிடத்தில் திரியும் நாய் போன்றவன்" என்கிறது!

கொன்றைவேந்தன் பாடிய ஔவையார் தம்முடைய இன்னொரு நூலான ஆத்திசூடியிலும் "தந்தைதாய் பேண்" என்று கூறுகிறார். ஆகவே பெற்றோரைக் கவனிப்பதிலும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதிலும் அவர்சொற்கேட்டலிலும் நம் பண்பாட்டில் உள்ள முக்கியத்துவம் தெளிவு.

ஆயினும், தன் பெற்றோரும் சொல்வதை எல்லா நிலையிலேயும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. திருக்குறளில் ஓரிடத்திலும் பெற்றோரின் பெருமையைத் தனியாகச் சொல்லவில்லை! கூடவே அவர்கள் கடமையைச் சொல்கிறது.
ஓரிடத்தில் திருக்குறள் தந்தையின் கடமையைச் சொல்கிறது:
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
(திருக்குறள்:புதல்வரைப்பெறுதல்: 7)

[ஆற்று = செய்; நன்றி = நன்மை; அவையம் = சபை, குழு; அவையத்து = சபையில்]

தந்தை என்ற சொல்லை மீண்டும் புழங்கும்போது மகன் தந்தைக்குச் செய்யும் உதவியைச் சொல்கிறது:

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
(திருக்குறள்:புதல்வரைப்பெறுதல்: 10)
[நோல் = துன்பத்தைப் பொறு, தவமிரு]

"மகன் தந்தைக்குச் செய்யும் நன்மை இவன் தந்தை இவனைப் பெற என்ன தவம் செய்தானோ என்னும் சொல்லே ஆகும்" என்கிறது அக்குறள்.

இங்கே தந்தை என்ற சொல்லைச் சொல்லும்போது உடனே ஒழுக்கத்தையும் இணைப்பதைக் காண்கிறோம்.

(அடுத்த இதழில் தொடரும்)

பெரியண்ணன் சந்திரசேகரன்
Share: 
© Copyright 2020 Tamilonline