Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஒரு விவாகரத்து
பாறைகள்
சிந்துஜா கதை எழுதுகிறாள்
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|மார்ச் 2004|
Share:
"நான் கதை எழுதப் போறேன்" திடீரென்று சிந்து என்கிற சிந்துஜா அறிவித்தாள்.

மாலை ஏழைத் தாண்டிய நேரம். 'மெட்டி ஒலி'க்க ஆரம்பித்த சுப முஹுர்த்தத்தில் சிந்துஜா மேற்கண்ட அறிவிப்பைச் செய்தாள். மகன் பிரணவ்வுக்குக் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த அவள் கணவன் பிரேமும், தொலைக்காட்சிப் பெட்டிக்குக் கண்ணையும் காதையும் தத்தம் செய்துவிட்டிருந்த அவள் மாமியார் பாகீரதியும் ஒரு கணம் திடுக்கிட்டுத் திரும்பினர். "என்ன சிந்து, புதுசு புதுசாப் பயமுறுத்துறயே" என்று கிண்டலடித்தான் பிரேம்.

சிந்துஜாவின் கையில் அமெரிக்காவில் வெளியாகும் பிரபல தமிழ் மாதப் பத்திரிகை இருந்தது. "ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு எழுத்தாளர் ஒளிந்திருக்கிறார் என்று இதில் போட்டிருக்குது பாருங்கள். நான் பள்ளிக் கூட நாட்களிலேயே கட்டுரை எல்லாம் நல்லா எழுதுவேன். இனித் தீவிரமா எழுத ஆரம்பிக்கப் போறேன்" என்று பிரகடனமே செய்துவிட்டாள்.

"நீ அவளை ஊக்கப்படுத்தாட்டாலும் வேரிலே வெந்நீரை ஊற்றாமலிரு போதும்" என்று தன் மகனை அதட்டிய பாகீரதி "என்னாலான எல்லா ஒத்தாசையும் பண்ணுகிறேன். நீ பெரிய எழுத்தாளரானால் எனக்கும் பெருமைதானே" என்று உதவிக் கரம் நீட்டிவிட்டாள்.

"எப்படியும் மாமியாரும் மருமகளும் தீர்மானிச்சாச்சு. ஏதோ வேளைக்கு நைவேத்யம் காட்டி இந்த ஏழையைக் கவனிச்சுக்க மறந்துடாதீங்க" என்று கூறிவிட்டு விலகிக்கொண்டான் பிரேம்.

மறுநாள் முதலே சிந்துஜா எட்டடி பாய்ந்தால் பாகீரதி அறுபத்து நாலடி பாய ஆரம்பித்து விட்டாள். சிந்துஜாவுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கெல்லாம் அவளே பதிலளிப்பதுடன் சந்தடி சாக்கில் சிந்துஜாவின் தோழிகளுக்குப் பதிலளிக்கும் பொழுது "அவள் மும்முரமா எழுதிண் டிருக்கா. சற்று ஒழிந்ததும் அவளைக் கூப்பிடச் சொல்லுகிறேன்" என்று தன் மருமகள் கதை எழுதுவதை விளம்பரப்படுத்தவும் தவறவில்லை. ·ப்ரீமான்ட்டிலிருந்து மீரா, க்யூபர்டினோ கிரிஜா என்று செவிவழி ஒலிபரப்பாகி அவளுடைய சினேகிதிப் பட்டாளம் பூராவுக்கும் இது தலைப்புச் செய்தியாகிவிட்டது. நம் கதாநாயகியுடன் தொலைபேசி "ஹை, கதை எழுதுறயாமே. நல்ல காதல் கதையா எழுது" என்றும், "என்ன கதை வேணும்னாலும் எழுது, சமையல் குறிப்பு மட்டும் எழுதிடாதே!" என்றும் தங்களாலான ஆலோசனைகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

"இதோ பார் சிந்து. அவ சொன்னா, இவ சொன்னான்னு கண்ட காதல் கழிசடைக் கதையெல்லாம் எழுதாதே. அலமேலு மேடம் எழுதறாப்போல ஆன்மீகம் எழுது. எங்க ஊர்லே ஒன்பது கோடிப் பொன்னை ஓட்டால் மறைத்து வீற்றிருக்கும் மாரியம்மனின் வரலாறு சொல்றேன், எழுது" என்று உத்தரவு போட்டுவிட்டாள் பாகீரதி. பிரணவ் மட்டும் சும்மா இருப்பானா? "அம்மா, அனிமல் ஸ்டோரி, காமிக்ஸில் வரமாதிரி யெல்லாம் எழுதும்மா" என்று தன்னுடைய விருப்பத்தை முன்வைத்தான்.

"பீர்பால் ஒருமுறை கன்னத்தைப் பிடிச்சுண்டு கேட்டவாளுக்கெல்லாம் பல்வலின்னு சொல்லிண்டு தெருவில் போனாராம். நூறு கஜம் போவதற்குள் நாற்பது வித வைத்தியக் குறிப்புகள் கெடைச்சுதாம். அது போல, நீ பேப்பர் பேனாவை எடுத்ததுமே உனக்கு எத்தனை ஆலோசகர்கள்!" என்று பிரேம் கேலி செய்தான்.

சிந்து எழுத உட்கார்ந்ததும் மனக் கண்முன் வரிசையாக லக்ஷ்மி, அனுராதா ரமணன், சிவசங்கரி எல்லாரும் அணி வகுத்து வந்தனர். அந்த நீண்ட வரிசையில் தானும் நிற்பதாகக் கற்பனை செய்ததுமே பெருமையில் ஒரு சுற்றுப் பருத்தது போலத் தோன்றியது.

எல்லாம் சரிதான். கதை எழுதுவ தென்றால் கரு ஒன்று வேண்டுமே; முதல் முதல் எழுதுவது சோகம் வேண்டாம் என்று அவளே தவிர்த்துவிட்டாள். உணர்ச்சி பூர்வமாக ஏதாவது எழுதலாம் என்றால் எதை நினைத்தாலும் அவள் எங்காவது படித்ததாகவே இருந்தது. இரண்டாவதாக, அது என்னவோ கையில் பேப்பர் பேனா எடுத்தவுடனே யோசித்து வைத்ததெல்லாம் எங்கோ பறந்து போய்விடுகின்றன. "எது எப்படியிருந்தாலும் முதலில் பாத்திரங்களைப் படைத்துவிடலாம். பின்னால் போகப் போகக் கதை தானே வரும்" என்று தீர்மானித்து நாலைந்து கதா பாத்திரங் களைப் படைத்து விட்டாள்.
"சிந்து, எங்கேயோ படித்தேன். சில எழுத்தாளர்களுக்கு ஏதாவது ஒரு வழக்கம் உண்டாம். ஒருவர் ஒரு கதை எழுதி முடிப்பதற்குள் பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை ஊதித் தள்ளிடுவாராம். இன்னொருவருக்கு வாயில் மிக்ஸி மாதிரி வெற்றிலை சீவல் குதப்பிண்டிருந்தாத்தான் எழுதவே ஓடுமாம். அதுமாதிரி நீ ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே எழுதப் பாரேன்" என்று பாகீரதி ஒரு ஆலோசனை கொடுத்தாள். சிந்துவுக்கும் அது சரியென்று பட்டது. அவ்வப்பொழுது வயிற்றுக்கும் ஈவதனால் சிந்தனைக்கும் தீனி கிடைக்கலாமோ? அன்றே மளிகைப் பட்டியலில் நொறுக்குத் தீனிகள் கணிசமாக வந்திறங்கின. எண்ணத்தை அசைபோடுவதற்குப் பதில் தீனியை அசைபோட்டுக் கிண்ணம் தான் காலி ஆயிற்று. எழுத்தில் பிள்ளையார் சுழிக்கு மேல் ஒரு வரி கூட நகரவில்லை.

"என்ன எண்ணெயில் பண்ணினதோ, எத்தனை நாள் பழசோ, இதையெல்லாம் சாப்பிடாதே." என்று பாகீரதி பாதாம், முந்திரி, வால்நட் எல்லாம் கலந்து, அளவாக உப்பு காரம் சேர்த்து நெய்யில் வறுத்து ஒரு ஜாடியில் எடுத்து வைத்தாள். அந்த ஜாடியும் காலியானது; பேப்பர் நிரம்பவில்லை. நிகரலாபம் - சிந்துவின் எடை பத்து பவுண்டு ஏறிவிட்டது.

"கம்ப்யூட்டர் கோலோச்சும் இந்தக் காலத்தில நீ பேப்பரையும், பேனாவையும் வச்சுண்டு ஏன் தவிக்கிறாய்?" என்று நிஜமான கரிசனத்துடன் பிரேம் அவளுக்குத் தமிழ் எழுத்து மென்பொருளை அறிமுகப்படுத்திக் கொடுத்தான். "ஏதோ நீகூட ஒத்தாசை பண்றயே. இனிமேல் சிந்து தூள் கிளப்பிவிடுவாள்" என்று மகனுக்கு நற்சாட்சிப் பத்திரம் படித்தாள் பாகீரதி. கைநோக எழுதி எழுதிக் குப்பைக் கூடையை நிரப்பியது போய், உடனுக்குடன் கம்ப்யூட்டரில் எழுதி வைக்க ஆரம்பித்தாள் சிந்து.

குழம்பு பாதி கொதிக்கும் பொழுதும், அடுப்பில் கறியை வதக்கிக் கொண்டிருக்கும் பொழுதும் ஓடி வந்து குறித்துக் கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். பலன், குழம்பில் உப்பு மறக்கும், கறி கரியாகிவிடும். போதாக் குறைக்குக் கண்ணை மூடினாலும் திறந்தாலும் அவள் படைத்த கதா பாத்திரங்கள் அவளைச் சுற்றி வந்து "எனக்கு என்ன வழி வைத்திருக்கிறாய்?" என்று காலைச் சுற்றும். புலி வாலைப் பிடித்த கதையாக ஏன்தான் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டோமோ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.

வீடு வாசல் போட்டது போட்டபடி கிடக்க, வயதானவரை வேலை செய்ய விட்டுவிட்டு, பையனின் ஸ்கூல் பாடங்களையும் கவனிக்காமல் - அப்படியாவது ஏதாவது எழுத முடியுமா என்று பார்த்தால் எதுவும் தோன்றக் காணோம். இப்போதைக்கு இந்த ப்ராஜெக்டை நிறுத்தி வைப்போம். பின் னால் ஓய்வு கிடைக்கும்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து விட்டாள் சிந்துஜா.

பாகீரதி மட்டும் விட்டுக் கொடுக்காமல் "பாவம், குழந்தைக்கு வீட்டுப் பாடத்தில் ஹெல்ப் பண்ண வேண்டியிருக்கு; ஸ்கூல் லீவு விட்டதும் பார்த்துக்கொள்ளலாம் என்று நான்தான் கொஞ்சம் இதை யெல்லாம் நிறுத்தி வைன்னு சொல்லி வச்சிருக்கேன்" என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி வருகிறாள்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி
More

ஒரு விவாகரத்து
பாறைகள்
Share: