Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
நலம்வாழ
மாரடைப்பே கொஞ்சம் நில்லு!
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|ஏப்ரல் 2004|
Share:
சுரீலென்று வந்த மின்னஞ்சல் நெஞ்சைப் பிளந்தது: விடுமுறைக்காகச் சென்னை சென்றிருந்த தோழியின் சகோதரன் 41 வயதில் மாரடைப்பில் மரணம். "மரணமும் வரியுமே மனித வாழ்க்கையில் உறுதி" என்றான் தத்துவ ஞானி சாக்ரடீஸ். இறப்பது நிச்சயம் என்ற போதும் இருக்கும் வரை உடல் நலத்தோடு வாழ்வது முக்கியமல்லவா? வெள்ளத்தையும், சூறாவளியையும், காட்டுத் தீயையும் நம்மால் தடுக்க இயலாது. ஆனால் ஆளைக் கொல்லும் மாரடைப்பு நோயைத் தடுக்கலாமே. மாரடைப்பு நோய் பற்றி அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய மருத்துவ உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

மாரடைப்பு என்றால் என்ன?

இதயம் என்பது உணர்ச்சிகளை உடையதாக, காதல் சின்னமாக வருணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது உடலில் உள்ள உறுப்புகளுக்கு உதிரத்தைப் பாய்ச்சுகிற 'பம்ப் செட்', அவ்வளவுதான். ஆனால், இந்த இதயத்திற்கும் வேலைசெய்ய இரத்தம் தேவை! அது கொரோனரி ஆர்டெரி (Coronary Artery) என்ற இரத்த நாளங்கள் மூலமாக இதயத்திற்குக் கிடைக்கிறது. இவற்றில் அடைப்பு ஏற்பட்டால் போதிய இரத்தம் இதயத்தின் தசைகளுக்கு வராமல் இதயம் செயலிழந்து போகிறது. இதை நாம் மாரடைப்பு என்கிறோம்.

இதயம் செயலிழந்தால் உடலில் மற்ற உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் நின்று போகிறது.

இதனால் பின்னால் பல்வேறு கோளாறுகள் ஏற்ப்பட வாய்ப்புண்டு. மாரடைப்பு ஏற்பட்டால் இதயத்துடிப்பு நின்று போவதற்கும் (Asystole), மிக வேகமாக, கண்மூடித்தனமாகத் துடிப்பதற்கும் (Ventricular Fibrillation) வாய்ப்புண்டு. இந்த இரண்டு காரணங்களால் உடனடி மரணம் நிகழலாம். அமெரிக்காவில் வாழ்வோர் 911 அழைத்தால் கிடைக்கும் உடனடி மருத்துவ உதவி மூலம், மின் அதிர்ச்சி (shock treatment) மூலம் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு.

மாரடைப்பு நோய் யாருக்கு வரலாம்?

மாரடைப்பு நோய் எந்த வயதிலும், எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற போதும் குறிப்பாகச் சில காரணங்கள் அபாய அறிகுறிகளாக (Risk factors) திகழ்கின்றன. அவை முறையே:

நீரிழிவு நோய் (Diabetes Mellitus)

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure)

அதிகக் கொழுப்புச் சத்து (High cholesterol)

புகை பிடித்தல்

ஆண்பால் (ஆமாம், ஆண்களுக்கு மாரடைப்பு நோய் வருவதற்கான வாய்ப்புகள் பெண்களை விடவும் அதிகம்!)

வயது (ஆண்களுக்கு 45க்கு மேல், பெண்களுக்கு 55க்கு மேல்)

குடும்ப வரலாறு (குறைந்த வயதில் மாரடைப்பு நோய் ஏற்பட்ட வரலாறு)

இதில் குறிப்பாக நீரிழிவு நோய் உடையவர்களை, மாரடைப்பு நோய் வந்தவர்களுக்குச் சமானமாகவே மருத்துவ உலகம் நோக்குகிறது. நீரிழிவு நோய் வருவதற்கு முன்னர் தோன்றும் சில அறிகுறிகள் உடையவர்களை 'வளர்சிதை நோய்க்குறிகள்' (Metabolic Syndrome) என்று மருத்துவ உலகம் அழைக்கும். இந்தக் கோளாறு இந்தியர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இதைப் பற்றிய விவரங்களை வரும் இதழ்களில் காணலாம்.
மாரடைப்பு நோயின் அறிகுறிகள் எவை?

யானை அழுத்துவது போல் நெஞ்சை அழுத்தும் வலி, இடது தோள்பட்டை, முகவாய்க் கட்டை, கழுத்துப்பகுதி போன்ற இடங்களுக்குப் பரவலாம். வியர்வை பெருகுதல், மூச்சு வாங்குதல், வயிறு உப்புசம், வாந்தி எடுத்தல், மயங்குதல் போன்ற உபாதைகளும் தோன்றலாம். நீரிழிவு நோய் உடையவர்களுக்கு வலியில்லாமலே மாரடைப்பு நோய் (Silent Heart Attack) ஏற்படவும் வாய்ப்புண்டு. இந்த அறிகுறிகள் தோன்றி னால் உடனடியாக 911 அழைக்க வேண்டும். மேலும் ஒரு ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரை கைவசம் இருந்தால் தாமதிக்காமல் உட்கொள்வதின் மூலம் மரணத்திற் கான வாய்ப்பை 50 சதவீதம் குறைக்க முடியும்.

மாரடைப்பு நோய்க்கான சிகிச்சை என்ன?

இதற்குப் பல்வேறு முறைகள் இருப்பினும் குறிப்பாக இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை அகற்றுவதே முக்கியமான நிவாரணமாகும். இதை மருந்துகள் மூலமாகவும், ஆஞ்சியோப்பிளாஸ்டி (Angioplasty) முறையிலும், இதய அறுவை சிகிச்சை (Bypass Surgery) மூலமாகவும் செய்யலாம். இதில் எந்த முறை பொருந்தும் என்பதை மருத்துவர்கள் நோயாளியின் உடல் நலத்தையும், நோயின் தீவிரத்தையும் கொண்டு முடிவு செய்வர்.

மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?

மேலே குறிப்பிடப்பட்ட அபாய அறிகுறிகள் உடையவர்கள் சத்தான உணவு உண்டு, தினமும் தவறாமல் உடற் பயிற்சி செய்து, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து களை உட்கொள்வதின் மூலம் மாரடைப்பு நோய் வராமல் தடுக்க முடியும். குறிப்பாக நீரிழிவு நோய் உடையவர்கள் உடற் பயிற்சி செய்வது மிக மிக அவசியம். உடற் பயிற்சி மையத்தில் எடைகள் தூக்கவும், ஓடு பலகையில் ஓடவும் முடியாமல் போனால் வேகமாக நடந்தாலே போதுமானது. வாரத்தில் மூன்று நாட்கள் 20-30 நிமிடங் களை உடற்பயிற்சிக்கென்று ஒதுக்குதல் வேண்டும். இந்தப் பழக்கத்தை தலையாய கடமையாகக் கொண்டு அதைச் சுற்றி நாளின் மற்ற காரியங்களைத் தீர்மானம் செய்வது நல்லது.

அப்படியே மாரடைப்பு வந்துவிட்டாலும் அதனால் சோர்ந்து போகாமல், அடுத்து என்ன நடக்குமோ என்று அச்சப்படாமல் சுறுசுறுப்புடன் செயல்படுவது மிகவும் முக்கியம். இன்னும் சில வருடங்கள் உயிர் வாழும் ஆசை இருக்குமேயானால் புகை பிடிப்பதை அறவே நிறுத்த வேண்டும். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதின் மூலம் மேற்கொண்டு மாரடைப்பு நோய் வராமல் தடுக்கமுடியும். வேண்டாத விருந்தாளியாய் வந்து பார்க்கும் எமனைச் சற்று தொலைவில் நிற்க வைப்பதோ, அல்லது வெகுதூரத்திற்கு ஓடவைப்பதோ நம் கையில் தான் இருக்கிறது.

இன்னும் வரும்...

மரு. வரலட்சுமி நிரஞ்சன், மரு. நிரஞ்சன் சங்கரநாராயணன்
Share: 


© Copyright 2020 Tamilonline