Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 10
- கதிரவன் எழில்மன்னன்|ஜனவரி 2007|
Share:
Click Here Enlargeமுன் கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். சூர்யாவை மானசீகமாகக் காதலித்தாலும், அவர் தன் கடந்த கால சோகத்தை மறந்து தன்னை வெளிப் படையாக நெருங்கக் காத்திருக்கிறாள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இக்கதையில் இதுவரை: சிறுவயதில் சூர்யாவோடு பள்ளியில் படித்த நாகநாதன் என்பவர் தன் மெய்நிகர் நிறுவனத்தின் உணர்வுத் தூண்டல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சூர்யாவை அழைத்தார். நாகுவின் தலைமை விஞ்ஞானி ரிச்சர்ட் கிரணுக்கு மெய்நிகர் உடுப்பை அணிவித்து, விண்வெளியில் இருப்பது போலவே காட்டியதோடல்லாமல், எடையின்மை (weightlessness) உணர்வைத் தூண்டியும் காட்டினார். ஆனால் அது திடீரென கிரணுக்குத் தாங்க முடியாத தலை வலி அளித்து பெரும் அபாயத்துக்குள்ளாக்கி விட்டது. ஜேம்ஸ் என்னும் உபஆராய்ச்சி யாளரின் புள்ளி விவர அலசலின் மூலம் இந்தப் பிரச்சனை வெளி டெமோக் களின் போது மட்டுமே ஏற்படுகிறது என்று தெரிய வந்தது. நிறுவனத்திலிருந்து விடுமுறையிலிருக்கும் பொழுது இறந்து விட்ட ரஷ்ய விஞ்ஞானி மோட்யஷேவ் தான் உணர்வுத் தூண்டல் தொழில் நுட்பத்துக்கே காரணகர்த்தா என்று ரிச்சர்ட் கூறியதால், சூர்யா அவரது அறையைச் சோதனையிட்டார். அங்கு மோட்யஷேவின் ஆராய்ச்சிக் குறிப்பேடு காணவில்லை என்று தெரியவந்தது. அதன் பிறகு கழிவறைக்குச் சென்ற ஜேம்ஸ், சூர்யா இருவரும் தாக்கப் பட்டனர். ஜேம்ஸின் தலையில் பின்புறம் ரத்தக் கசிவு இருந்ததால் ரிச்சர்ட் அவசரமாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவசர மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ரிச்சர்டும், ஷாலினியும் அவருடன் விரைந்தனர். நாகு போலீஸைக் கூப்பிடலாம் என்றதும் சூர்யா தடுத்தார். அதற்கு அவசியமில்லை, பிரச்சனையின் தீர்வை நெருங்கிவிட்டதால்தான் இந்த விபரீதம் நடந்துள்ளது, மருத்துவ மனைக்குச் சென்றால் நிவர்த்திக்க முடியும் என்று கூறிவிட்டு, கிரணுக்கு எதோ வேலைகளைக் கொடுத்து விட்டு, நாகுவுடன் மருத்துவமனைக்கு விரைந்தார். பிறகு...

ஜேம்ஸ் தீவிரப்பணியறையில் (intensive care) இருக்கமாட்டார், தனியறையில் தான் இருப்பார் என்று கட்டாயமாகக் கூறிய சூர்யா, கிரணுக்கு எதோ சிலக் கட்டளைகளை பிறப்பித்து விட்டு மருத்துவ மனைக்கு நாகுவுடன் விரைந்து விடவும், அவரளித்த ஆணைகளால் பிரமித்து விட்ட கிரண், சில நொடிகள் அவர் சென்று விட்ட வாசலையையே வெறித்து நோக்கிக் கொண்டு நின்று விட்டான். பிறகு ஒரு பெரிய பெருமூச்சுடன் தலையை வேகமாக உலுக்கி தன்னை அந்த வியப்பு மயக்கத்திலிருந்து உலுக்கிக் கொண்டு பணிகளை நிறை வேற்று வதற்காக விரைந்தான்.

சூர்யா கிரணுடன் பேசி முடிப்பதற்குள் நாகு தன் காரை படு வேகமாக நிறுவனத்தின் வாசலுக்குக் கொண்டு வந்து சூர்யாவை அவசரப்படுத்தி ஏற்றிக் கொண்டு தலை தெறிக்கும் அவசரமாக மருத்துவ மனைக்கு ஓட்டவும், சூர்யா அவரை நிதானப் படுத்தினார். "நாகு, இப்படி ஒண்ணும் படு வேகமா ஓட்ட வேண்டிய அவசியமில்லை. ஜேம்ஸ¤க்கு ஒரு ஆபத்தும் இருக்கறா மாதிரி தெரியலை. வெறும் மேல் காயந்தான்னு ஷாலினி சொன்னா. மெள்ளவே போகலாம்." என்றார்.

நாகு, "ஆங், அதெப்படி. ஆம்புலன்ஸ்லயில்ல போட்டுக்கிட்டு போயிருக்காங்க?! அங்க போய் என்ன ஆகுதுன்னு பார்த்தாத்தான் எனக்கு நிம்மதியாகும்." என்று படு வேகத்தோடு சென்று கிறீச்சென்று மருத்துவமனையின் கார் நிறுத்தும் இடத்தில் அவசரமாக நிறுத்திவிட்டு அவசர மருத்துவப் பணியறைக்கு (emergency care) விரைந்தார். சூர்யா நிதானமாக அவர் பின்னால் தொடர்ந்தார்.

அவசர மருத்துவ அறையில் ஜே ஜே என்று ஒரே கும்பல். ஆனாலும், ஷாலினி முன்பே தொலை பேசியில் கூறியிருந்ததால் ஜேம்ஸ் உடனே கவனிக்கப்பட்டார். பட படவென ஒரு பெரிய மருத்துவரும் இரண்டு உப மருத்துவர்களும், நர்ஸ்களும் ஜேம்ஸின் ஸ்ட்ரெட்சரைச் சூழ்ந்து கொண்டு சோதித்தனர்.

கூடவே ஷாலினியும் இருந்தாள். அருகே விரைந்த ரிச்சர்டையும் நாகுவையும் தூரவே தள்ளியிருக்கும் படி மருத்துவப் பணியாளர் கள் தடுத்து விலக்கினர்.
ஆனால் வெகு விரைவிலேயே அக்குழுவின் தலைமை மருத்துவர் குழப்பத்துடன் ஷாலினி யைப் பார்த்து, "ஷாலினி, என்ன இது. இவருக்கு ரொம்ப ஒண்ணும் அடி இருக்கறா மாதிரி தெரியலையே? இவரைப் போய் ஆம்புலன்ஸ்ல கொண்டு வந்திருக்கீங்க? இவரை விட ரொம்பப் பயங்கரமா அடி பட்டிருக்கவங்க வெளியில அல்லாடிக் கிட்டிருக்காங்க. இது ரொம்பக் கால விரயம்." என்றார்.

ஷாலினியும் தலையாட்டி ஆமோதித்து மன்னிப்புக் கேட்டாள். "வெரி ஸாரி, நீங்க சொல்றது சரிதான். ஆனா அவர் மயக்கம் போட்டு விழுந்துட்டதால ஒரு பாதுகாப்புக்காக அவரோட தலைமை விஞ்ஞானிதான் அவசரமா அனுப்பி வச்சிருக்கார். உள் காயம் இருக்கான்னு எதுக்கும் சோதிச்சுடலாம்னு நானும் விட்டுட்டேன்." என்றாள்.

தலைமை மருத்துவர் சிறிது யோசித்து விட்டு சற்றே சாந்தமாக, "சரி அப்படின்னா இவரை தனி அறையில வச்சு ஒரு நாள் கண்காணிச் சுடலாம். உள்காயம் இருக்கான்னு ஸ்கேன் எல்லாம் செய்ய ஏற்பாடு செய்யுங்க. இருந்தாலும் அவசர மருத்துவ அறைக்கு வந்து களேபரம் செஞ்சிருக்க வேண்டிய தில்லை" என்று கொஞ்சம் கொசுறுக் குமுறுலுடன் அடுத்த கேஸைப் பார்க்க விரைந்தார்.

ஷாலினியும் அவர் விட்டதே போதும் என்று நிம்மதிப் பெருமூச்செறிந்து விட்டு அந்தக் காரியங்களைக் கவனிக்க ஆயத்தமானாள். அவள் பரிசோதனையறையை விட்டு வெளி வந்ததும் ரிச்சர்டும் நாகுவும் அவளை மொய்த்தனர்! "என்ன ஆச்சு? ஜேம்ஸ் எப்படி இருக்கார்? ஆபத்து ஒண்ணுமில்லையே?" என்று படபடத்தார் நாகு. "உள்காயம் எதாவது இருக்கா? எதாவது தெரிஞ்சுதா?" என்றார் ரிச்சர்ட்.

ஷாலினி அவர்களை நிதானப் படுத்தும் வகையில் மென்மையாகப் புன்னகை புரிந்து, "அவருக்கு வெளியில ஒண்ணுமில்லை. உள்காயமும் இல்லைன்னுதான் நினைக் கிறோம். மேலாத்தான் பட்டிருக்கு. இருந்தாலும் தனியறையில ஒரு நாள் கண்காணிச்சு, ஸ்கேன் பண்ணி நிச்சயப் படுத்திடலாம்னு இருக்கோம்." என்றாள்.

ரிச்சர்டின் முகத்தில் பெரும் நிம்மதி மலர்ந்தது. "அப்பாடா, இப்பத்தான் நிம்மதியா இருக்கு. நான் தான் என்னவோ ஏதோன்னு வீணா அலறிட்டேன் போலிருக்கு." என்றார்.

அதற்குள் பணியாளர்கள் ஜேம்ஸ் படுக்கையை அவரது தனியறைக்கு உருட்டிச் செல்லவே, அனைவரும் படுக்கைப் பின்னாலேயே விரைந்தனர். சூர்யா கூறிய காரியங்களை செய்து முடிக்க கிரணுக்கு அதிக நேரம் ஆகவில்லை. தன் வண்டியில் வைத்திருந்த சாதனங்களைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்துக்குள் முடித்துக் கொண்டு மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்து விட்டான். சூர்யா கூறிய படியே ஜேம்ஸைத் தனியறையில் வைத்திருப்பதாக முன்னலுவலகம் தெரிவித்தது கிரணுக்கு ஒரு ஆச்சர்யமும் அளிக்கவில்லை! சூர்யாவுடன் இருந்த வெகுநாள் பழக்கத்தினால், அப்படியில்லாவிட்டால்தான் ஆச்சர்யம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு ஜேம்ஸின் அறைக்குச் சென்று, தான் ஒரு பையில் பத்திரமாக எடுத்துக் கொண்டு வந்திருந்த பொருட்களை சூர்யாவிடம் அளித்து விட்டு அவனுக்கு அளித்த வேலைகள் வெற்றிகரமாக முடிந்தன என்பதை கண்ணடித்து தலையை மெள்ள ஆட்டி உணர்த்தினான். கிரண் அளித்தப் பொருட்களை மேலாக நோட்டம் விட்ட சூர்யாவும் திருப்தியுடன் மெல்ல தலையாட்டிக் கொண்டு முறுவலித்து விட்டு மற்றவர்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினார்.

ஷாலினி ஜேம்ஸின் மருத்துவக் குறிப் பேட்டையும் (medical chart), பளிச் பளிசென்று ஸிக்னல் காட்டிக் கொண்டிருந்தக் கருவியை யும் சோதித்துக் கொண்டிருந்தாள். நாகுவும் ரிச்சர்டும் ஒரு புறமாக என்னவோ மெல்லிய குரலில் குசுகுசுத்துக் கொண்டிருந்தனர். ஜேம்ஸோ கண்ணை பெரிதாக விழித்துக் கொண்டு எல்லாரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். ஜேம்ஸின் படுக்கைக்கு அருகில் சென்ற சூர்யா பெரிதாகக் கனைத்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தார். எல்லாரும் கேள்விக் குறியுடன் அவர் மேல் கவனம் செலுத்தியதும் ஒரு பெரும் அதிர்வேட்டை எடுத்து வீசினார்! "எல்லாரும் இங்கே வந்து ஜேம்ஸோட படுக்கையை சுத்தி உக்காருங்க. நான் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு. இந்தப் பிரச்சனைக்கான காரணம் என்ன, அதை எப்படி தீர்க்கறதுன்னு எனக்குத் தெரிஞ்சுப் போச்சு!"

அந்த வேட்டு அறையிலிருந்தவர்களுக்கு விளைவித்த நிலை கிரணுக்கு மிகவும் தமாஷாகத் தோன்றியது! ஜேம்ஸின் வாய் ஆவென பிளந்து அப்படியே நின்று விட்டது. நாகுவோ பெரும் கோலி குண்டுகள் போன்று முட்டையாக விரிந்து விட்ட கண்களுடன் பேச முடியாமல் திணறி திறந்து மூடிய வாயுடன் படுக்கையருகே வந்து கிரண் அளித்த இருக்கையில் அமர்ந்தார். ரிச்சர்டின் முகம் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டிருந்தது. அதே இறுகிய முகத்துடன் இன்னொரு இருக்கையில் விறைப்பாக உட்கார்ந்து கொண்டு சூர்யா சொல்லப் போவதைக் கேட்க ஆயத்தமானார். ஏற்கனவே படுக்கையருகே நின்றிருந்த ஷாலினி மட்டும் ஆர்வத்துடன் ஆனால் கொஞ்சம் கூட வியப்பின்றி கவனிக்கலானாள்.

அடுத்து சூர்யா கூறியதோ இன்னும் வியப்பளிப்பதாக இருந்தது! "இந்தப் பிரச்சனையின் காரணத்தையும் நிவாரணத் தையும் நான் சொல்ல வேண்டியதில்லை. ரிச்சர்டுக்கே தெரியும்."

நாகு ஒன்றும் விளங்காமல், "என்ன இது சூர்யா?! ரிச்சர்டுக்கே தெரியும்னா அவரே ஏற்கனவே தீர்த்திருக்க முடியுமே? உன்னை நான் கூப்பிட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லையே?"

சூர்யா நிதானமாக, ஆனால் தீவிரமான அழுத்தத்துடன் ரிச்சர்டைப் பார்த்தார். "நீங்களே விளக்கறீங்களா ரிச்சர்ட்?"

ரிச்சர்ட் குழப்பத்துடன் தலையசைத்து மறுத்தார். "என்ன சொல்றீங்க? எனக்குப் புரியலை."

சூர்யா அடுத்த வேட்டை வீசினார். "சரி, என்னையே சொல்ல வைக்கறீங்க, பரவாயில்லை. பிரச்சனைக்குக் காரணமே நீங்கதான். ஏன் செஞ்சீங்கன்னு எனக்குப் புரியுது. எனக்கு அந்தக் காரணம் மேல அனுதாபமும் இருக்கு. ஆனா உங்க அணுகுமுறையில எனக்கு துளிக் கூட சம்மதமில்லை! நாகுவும் ஜேம்ஸ¤ம் அதிர்ச்சியால் சிலை களாகிவிட்டனர்! ரிச்சர்ட் ஆட்சேபிக்க வாய் திறந்தார். ஆனால் சூர்யா விடாமல் தொடர்ந்தார். "உங்களை மாதிரி பெரும் அறிவுடைய ஒருத்தர் வேற வழி காண முடியாதது மிக வருத்தமா இருக்கு. உங்க விஞ்ஞானத்துக்கே தடைகளை உருவாக் கினீங்க. அதுவுமில்லாம உங்களோட வேலை செய்யறவரையே தாக்கற அளவுக்குத் தாழ்ந்துட்டீங்க!"
Click Here Enlargeரிச்சர்ட் கொந்தளித்து வெடித்த கோபத் துடன் எழுந்தார். "என்ன சொல்றீங்க சூர்யா. முதல்ல வாயை மூடுங்க. துப்பறியறேங்கற பேர்ல இது வரைக்கும் நீங்க செஞ்ச கோமாளித்தனங்களை நான் பொறுத்துக் கிட்டிருந்தது தப்பாப் போச்சு. என்ன தைர்யம் இருந்தா என் மேலயே குற்றம் சாட்டுவீங்க? எதுக்காக என் தொழில் நுட்பத்தையே நான் கெடுக்கணும்? வீணா உளறாதீங்க. இத்தோட நிறுத்திட்டு நான் கோபத்துல எதாவது எசகு பிசகா செய்யறத்துக்கு முன்னாடி இங்கிருந்து போயிடுங்க."

ஜேம்ஸ¤ம் அவருக்கு வக்காலத்து வாங்கி னார். "சே, சே, சூர்யா, என்ன பைத்தியக் காரத்தனமா எதோ சொல்றீங்க? ரிச்சர்ட் என்னை நிச்சயமாத் தாக்கியிருக்க மாட்டார். மேலும் இந்தத் தொழில் நுட்பம் அவர் வாழ்க்கை பூரா யோசிச்சு, தளராம முயற்சி செஞ்சு உருவாக்கினது. அதைப் போய்... சே... என்னால நம்பவே முடியாது."

நாகுவும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, அடக்க முடியாத கோபத்துடன் சூர்யாவை ஏசினார். "பிரச்சனையைத் தீர்க்க உதவுவேன்னுதான் உன்னைக் கூப்பிட்டேன். நீ என்னன்னா என்னமோ பினாத்தறே?! சும்மா ரெண்டு தடவை எதோ அதிர்ஷ்டவசத்துல பலனில் லாத சின்ன விஷயங்களை சரியாக யூகிச்சுட்டேங்கற திமிர்ல என்னவோ பெரிய விஷயத்துல விளையாடறயா? வேண்டாம். நிறுத்திட்டு, எப்படி சரியா உதவலாம்னு பாரு. இல்லைன்னா ரிச்சர்ட் சொல்றா மாதிரி மரியாதையா போயிடு."

இதைக் கேட்டக் கிரணும் ஷாலினியும் பொங்கி எழுந்து சூர்யாவுக்கு சாதகமாக ஒரே சமயத்தில் உரத்த குரலில் பேச ஆரம்பிக் கவும், சூர்யா கையைத் தூக்கி அவர்களை அடக்கி விட்டு சாந்தமாகத் தொடர்ந்து விளக்கினார். "நாகு, ஜேம்ஸ் - உங்க அதிர்ச்சியும் கோபமும் எனக்கு நல்லாவே புரியுது. முதல்ல இந்த எண்ணம் உதிச்ச வுடனே என்னாலயே கூட நம்ப முடியலை. யாரோ வெளி ஆசாமி ரிச்சர்டை மாட்ட வைக்கறா மாதிரி மிக புத்திசாலித்தனமா செய்யறாங்கன்னுதான் நினைச்சேன். ஜேம்ஸ் மேல நடந்த தாக்குதலும் அதற்கப்புறம் ரிச்சர்ட் நடந்துகிட்ட முறையும் என்னை நம்ப வச்சுடுச்சு. அதற்கப்புறம் நான் சேகரிச்ச விஷயங்கள் மூலமா ரிச்சர்ட்தான் செஞ்சிருக் கார்ங்கறது மறுக்க முடியாத உண்மையா நிரூபணமாயிடுச்சு."

ரிச்சர்ட் தன் குமுறலைத் தொடர்ந்தார். "எல்லாம் வெத்து யூகங்களும் பொய்களுந் தான். ஜேம்ஸ், நாகு நம்பாதீங்க. இவரை முதல்ல வெளியிலனுப்புங்க. நாம மேல நடக்க வேண்டியதைக் கவனிக்கலாம்." சூர்யா அமைதியாக, "பொய்யில்லை ரிச்சர்ட். வெறும் யூகமுமில்லை. என்னால இப்பவே நிரூபிக்க முடியும்."

ரிச்சர்ட் ஹ¥ம் என்று அலட்சிய மூச்சு விட்டார்.

நாகு வாய் பிளந்தார். "என்ன?! நிரூபிக்க முடியுமா? எப்படி?!" சூர்யா தன்னிடமிருந்த ஒரு கருப்பட்டை போட்ட குறிப்பேட்டை பைக்குள்ளிருந்து எடுத்து நாகுவிடம் கொடுத்தார். அதைக் கண்ட ரிச்சர்டின் முகம் வெளுத்தது. ஜேம்ஸ் வியந்தார்.

"இது மோட்யஷேவின் குறிப்பேடாச்சே. காணலைன்னு எல்லா இடத்தையும் தலை கீழாக்கித் தேடினோமே. உங்களுக்கு எப்படி கிடைச்சது?" சூர்யா ஒரு காகிதக் கோப்பையும் எடுத்து ஜேம்ஸிடம் கொடுத்தார். "இது என்ன?!" என்று கேள்விக்குறியுடன் வாங்கிய ஜேம்ஸின் முகத்தில், அதைப் புரட்டிப் பார்த்ததும் அளவில்லா ஆச்சர்யமும் குழப்பமும் ஓரளவு பயமும் கூட கலந்து விளையாடின. "இது... இது..." என்று தடுமாறினார்.

சூர்யா மெள்ளத் தலையாட்டினார். "ஆமாம் ஜேம்ஸ். இது மோட்யஷேவின் கம்ப்யூட்டரி லிருந்து நீக்கப் பட்டிருந்த அவரது மின் கோப்புகள் தான் (electronic files). இந்த பேப்பர் குறிப்பேடும், இந்த மின்குறிப்புக்களும் ரிச்சர்டின் மேஜையிலிருந்தும் அவரது கம்யூட்டரிலிருந்தும் எடுக்கப்பட்டவை. கிரண் இப்பதான் எடுத்துக்கிட்டு வந்தான். இது ரிச்சர்ட் தான் பிரச்சனை செய்தவர்னு நிரூபிக்கறது மட்டுமல்லாமல், அவர் ஏன் செய்தார்னும் தெளிவா விளக்குது."

ரிச்சர்ட் அதிர்ச்சியடைந்திருந்ததை அவர் முகப் போக்கு தெளிவாகக் காட்டியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, ஆனாலும் பலகீனமாக, எதிர்க்க முயன்றார். "இதெல்லாம் நீங்களா தயாரிச்சிருக்கற சாட்சியங்கள். எங்கிருந்தோ திருடிட்டு என் கம்ப்யூட்டர்ல போட்டு என் மேல பழி போடறீங்க."

சூர்யா தலையாட்டி மறுத்துவிட்டு தொடர்ந் தார். "இனிமேலும் மறுக்க முடியாது ரிச்சர்ட். மோட்யஷேவ் கம்ப்யூட்டர்லிருந்து நீங்க நீக்கிய மின்கோப்புக்களை கிரண் திரும்பவும் தன் திறமையைக் காட்டித் திரும்ப கொண்டு வந்துட்டான். உங்கக் கம்ப்யூட்டர்ல இருக்கறது அதேதான்னு தெரிஞ்சு போச்சு.

அதை உங்கக் கம்ப்யூட்டர்ல வச்சுகிட்டது நீங்க செஞ்ச பெரிய தவறு. இன்னொறு தவறை உங்களுக்கே தெரியாம கடைசியில அவசரத்துல யோசிக்காம செஞ்சுட்டீங்க..."

ஷாலினி ஆர்வத்துடன் கேட்டாள். "இன்னொறு தவறா? எப்படி தெரியாம செஞ்சார்?"

சூர்யா விளக்கினார். "எங்களுக்கு அடிபட்ட ஒரு சில நொடிகளுக்குள்ளயே முதல்ல ஓடி வந்தது ரிச்சர்ட் தான். வர பாதையில சரிஞ்சிருந்த என்னைத் துளிக் கூட கவனிக்காம நேரா ஜேம்ஸ் கிட்ட ஓடினார்." ரிச்சர்ட் "அதுனாலென்ன, என் சக ஊழியர் அதுனால அவர் கிட்ட முதல்ல ஓடினேன்." என்றார்.

சூர்யா மெல்ல தலையசைத்து விட்டு "தவறு அதில்லை ரிச்சர்ட். என்ன ஆச்சுன்னு தெரியறத்துக்கு முன்னாலயே கையோட முதலுதவிப் பெட்டி எடுத்துக் கிட்டு ஓடி வந்தீங்க, அதுதான். அதுவும் கொஞ்சம் கூட தயங்காம என்ன ஆச்சுன்னு கேட்காம ஜேம்ஸை நிமிர்த்தி கழுத்துப் பக்கத்துல துடைக்க ஆரம்பிச்சிட்டீங்க..."

ரிச்சர்ட் அதிர்ந்து போனார். இருந்தாலும் சமாளிக்க முயன்றார். "நான் போய் ஜேம்ஸை ஏன் தாக்கணும். இப்படி காரணமில்லாததை சொல்றதே உங்க கருத்துக்கள் எல்லாம் வெத்து யூகம் தான்னு காட்டுது." சூர்யா மேலும் விளக்கினார். "நீங்க ஜேம்ஸை விசாரணையிலிருந்து உடனே அகற்றணுங்கற அவசரத்துல, அவரை மருத்துவமனைக்கு அனுப்பிச்சிட்டா நான் அவர்கூட மேலும் பேச முடியாதுன்னுதான் தாக்கினீங்க. அந்த சமயத்துல நானும் வெளி வரவே, என்னைப் பயமுறுத்தி அனுப்பவும், நீங்க அங்கிருந்து விலக நேரம் கிடைக்கவும் என்னையும் தாக்கினீங்க. உங்க தொழில் நுட்பம் வெளிவராமல் இருக்க நீங்க அதுவரை எடுத்துக்கிட்ட முயற்சிகள் வீணாகிடுமோங்கற கலவரத்துல செஞ்சிட்டீங்க." நாகு தலை சுற்றும் குழப்பத்துடன் வினா வினார். "என்னால இன்னும் நம்பவே முடியலை. அவர் தன் தொழில்நுட்பத்தை தானே ஏன் தடுக்கணும்?" சூர்யா தொடர்ந்தார். "அதுக்கான காரணம் என்னவோ சரிதான். மோட்யஷேவ் குறிப்பேடு களில் பார்த்தீங்கன்னா, இந்தத் தொழில் நுட்பத்தை அவர் வளர்த்து, சர்வாதிகார நாடுகளுக்கு விற்கலாம்னு நினைச்சது தெரிய வரது. நல்ல வேளை அவர் தற்செயலாக இறந்து போனார். அப்படி இல்லைன்னா உலகத்துல பல விபரீதங்கள் விளைஞ்சிருக் கலாங்கற பயத்துல அந்தக் குறிப்பேடுகளை மறைச்சு வச்சு, சரியான கட்டுப்பாடுகள் உருவாக்கும் வரைக்கும் தொழில்நுட்பத்தை மறைச்சு வைக்கத்தான் ரிச்சர்ட் முயன்றார். ஆனா நாங்க அந்த குறிப்பேடுகளைப் பத்திக் கேட்டு உண்மைக்குக் கிட்ட வந்துடவே படபடப்பாகி இந்த மாதிரி செஞ்சுட்டார். சரிதானே ரிச்சர்ட். இனிமே மறுத்துப் பயனில்லை.

காரணம் சரியானாலும் நீங்க கடைசியில செஞ்சது சரியில்லை. நாகுவுக்கு நேரா எடுத்து சொல்லி கட்டுப்பாடுகளுக்கு முயற்சி செஞ்சிருக்கலாம்." இதைக் கேட்ட ரிச்சர்ட் நிலைகுலைந்து முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டு விம்மி தலையாட்டி ஒப்புக் கொண்டு, "என்னை மன்னிச்சுடுங்க ஜேம்ஸ். எதோ படபடப்புல புத்தி பிசகி உங்களைத் தாக்கிட்டேன். கராட்டே பயிற்சியினால மூளைக்கு ஆபத்தில்லாம மேலோடு ரத்தம் வர எவ்வளவு மெல்லத் தாக்கினாப் போதும்னு தெரிஞ்சு தாக்கினேன். இருந்தாலும் அது தப்புத்தான். ஆனா தொழில் நுட்பத்தைத் தடுக்க நான் செயற்கையா அதுல குளறுபடி செஞ்சதுல எனக்கு வருத்தமில்லை. அதை சரியா கட்டுப்படுத்த நமக்கு இன்னும் நேரம் வேணும்னுதான் செஞ்சேன். நான் எடுத்து சொன்னா நாகு தாமதத்துக்கு சம்மதிக்க மாட்டார்னுதான்..." என்றார்.

அதிர்ச்சியிலிருந்து மீண்ட ஜேம்ஸ் மெள்ளத் தலையசைத்துக் கொண்டார். "உங்கக் காரணம் புரியுது.

அது எனக்கும் சம்மதந்தான் ரிச்சர்ட். ஆனா அதுக்காக நீங்க செஞ்சதை என்னால ஏத்துக்க முடியலை. இருந்தாலும் உங்க விஞ்ஞானத் திறன் மேல எனக்கிருக்கற மதிப்பால அதை மன்னிச்சு, நாளடைவில ஏத்துக்க முயற்சிக்கறேன்."

ஆனால் நாகுவோ, ஆத்திரத்துடன் ரிச்சர்ட் மேல் பாய்ந்து அவர் மென்னியைப் பிடித்து நெறிக்கப் போனார்!

"ஏய் ராஸ்கல் ரிச்சர்ட்! உன் மேல நான் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். போயும் போயும் எதோ வருங்காலக் கவலைக்காக என் நிறுவனத்தையே கவிழ்க்கப் பாத்தயே, உன்னை... உன்னை..."

அவரை விலக்க சூர்யாவும் கிரணும் பிரம்மப் பிரயத்தனப் பட வேண்டியதாகிவிட்டது. சூர்யா நாகுவை ஆசுவாசப் படுத்தினார். "சே, சே, என்ன இது நாகு. இப்படியா நடந்துக் கிறது. இப்ப ஒண்ணும் ஆயிடலையே. ரிச்சர்ட் தொழில் நுட்பத்தை அழிக்கலை. ஜேம்ஸோட புள்ளிவிவரப் படி சரியாத்தானே வேலை செய்யுது. என் யூகம் என்னன்னா ரிச்சர்ட் என்னக் கட்டுப்பாடுகள் வேண்டியிருக் குன்னும் யோசிச்சு வச்சிருக்கார்னுதான். அதை கூடிய சீக்கிரம் சோதனை செஞ்சு நடைமுறைக்குக் கொண்டு வரலாம்னுதான் விசாரணையைத் தாமதிக்க ஜேம்ஸைத் தாக்கியிருக்கார். என்ன ரிச்சர்ட் சரிதானே?"

ரிச்சர்ட் பேசாமல் கழுத்தைத் தடவி விட்டுக் கொண்டு மெல்லத் தலையாட்டினார்.

தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட நாகு சூர்யாவுக்கு வியப்புக் கலந்த நன்றி கூறினார். "பிரமாதம் சூர்யா! அடி வாங்கி அரை மயக்கத்திலிருந்தாலும் கூட ரிச்சர்ட் என்ன செஞ்சார்னு சரியா கவனிச்சு அவரைப் பிடிச்சுட்டயே. என் நிறுவனத்தைக் காப்பாத் திட்டே! உனக்கு எப்படி நன்றி செலுத்தறதுன்னே தெரியலை."

சூர்யா கண்ணியத்துடன் பாராட்டை ஏற்றுக் கொண்டார். "அவ்வளவு ஒண்ணும் பிரமாத மில்லை நாகு. எனக்கு அப்பவே தோணலை. அரைக் கவனத்துல பாத்ததென்னவோ சரிதான். ஆனா அப்புறம் ரிச்சர்ட் ஜேம்ஸை அவசரமா ஆம்புலன்ஸ்ல அனுப்பினப்புறப்புந் தான் எனக்கு முழு உண்மையும் விளங்கிச்சு. அப்புறந்தான் அதை நிரூபிக்க கிரணை அனுப்பிச்சு குறிப்பேடுகளைக் கொண்டு வரச் சொன்னேன்."

நாகு பெருமூச்சுடன் ரிச்சர்டைப் பார்த்தார். "ரிச்சர்ட் எப்படியானாலும் நீங்க செஞ்சது தப்புத்தான்.

உடனே மன்னிக்க முடியாது. நீங்க கொஞ்ச நாள் நிறுவனத்துக்கு வராம மனோதத்துவ மருத்துவரைப் பார்த்து உங்க மனநிலையை சரி செஞ்சுகிட்டு வாங்க. நானும் சமூக நெறியாளர்கள் (social ethicists) குழுவை அமைச்சு நம்ம தொழில்நுட்பத்துக்கு என்னென்னக் கட்டுப்பாடுகள் வேணும்னு தீர்மானிக்கச் சொல்றேன். உங்கக் கட்டுப் பாட்டு யோசனைகளை அவங்களோட சேர்ந்து சோதனை செஞ்சு நடைமுறை யாக்கிடலாம்." சூர்யா நாகு கூறியதைப் பாராட்டினார். "ரொம்ப சரி நாகு. தொழில் நுட்பம் எப்பவுமே முன்னேறிக்கிட்டுத் தான் இருக்கு. அதை நல்லதுக்கும் பயன் படுத்தலாம், கெட்டதுக்கும் பயன் படுத்தலாம். பழங்காலத்திலிருந்தே இப்படித்தான் நடக்குது. கெட்ட விளைவு களைக் குறைச்சு, நல்ல விளைவுகளை அதிகரிக்க வேண்டியது மனித இனத்தின் கடமை. அதுக்கானக் கட்டுப்பாடுகளை நியமிக்கறது மிக முக்கியம். துப்பாக்கிகள், அணுசக்தி இப்படி பலத் தொழில்நுட்ப விளைவுகளுக்குக் கட்டுப்பாடு இருக்கு. அதையும் மீறி தீய விளைவுகள் உண்டாகிக் கிட்டிருக்குன்னாலும் அவற்றை மொத்தமா ஒதுக்கித் தள்றது ஒத்து வராது. முடிஞ்ச வரைக்கும் கட்டுப்பாட்டுல வைச்சுப் பயன் படுத்தணும். உங்கத் தொழில் நுட்பத்தையும் அப்படிப் பயன் படுத்த முடியும்னு நான் நம்பறேன்." என்றார்.

நாகு சூர்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு, தழு தழுத்த குரலோடு, "நிச்சயமா சூர்யா. அதுக்கு என்னாலான முயற்சி அத்தனையும் செய்யறேன். ஷாலினி, கிரண் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நீங்க செஞ்ச உதவிக்கும் என் மனமார்ந்த நன்றி." என்றார்.

கிரண் புன்முறுவலுடன், "என் மூளைதான் பத்திக்கிச்சு! அதுனாலென்ன பரவாயில்லை, 3D மெய்நிகர் விளையாட்டு கிடைச்சிருக் கில்லை?! இனிமே உங்க இடத்துக்கே குடி வந்துடறேன்!" என்றான்.

அனைவரும் மனம் விட்டு சிரித்தனர்!

முற்றும்

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline