அக்கரைப் பச்சை காதில் விழுந்தது.. கண்முன் நடந்தது ஒரு மருத்துவரின் பார்வையில்
|
|
|
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்த 26 வருடங்களில் அன்னையர் தினப் பரிசுகளாக நான் பெற்றவை விதவிதமானவை. என் மகன் மிகச் சிறு குழந்தையாக இருந்தபோது, ''எனக்கு அன்னையர் தினப் பரிசு என்ன?" என்று என் கணவரைக் கேட்பேன்.
''என் அம்மாவிற்கு நான் வாங்கித் தருவேன். நீ உன் மகனைக் கேள்'' என்று கேலி செய்வாரே தவிர, ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு பரிசு வாங்கி வைத்திருப்பார் - மைக்ரோவேவ் அவனிலிருந்து, சில, பல தினசுகளில் தோசைக்கற்கள் வரை! (சரவண பவனும், உடுப்பியும் இல்லாத காலம் அது. ஏதோ இப்படியாவது முறுகல் தோசை கிடைக்காதா என்ற நப்பாசை அவருக்கு!)
என் மகன் பள்ளிக்குப் போக ஆரம்பித்தபின் வந்த பரிசுகள் சுவாரஸ்யமானவை - பலவித குச்சி மனிதர்கள் வரையப்பட்ட காகிதங்கள், இனந்தெரியா எழுத்துக்களால் எழுதிய வாழ்த்து மடல்கள்,வண்ணக் கிறுக்கல்கள், இத்யாதி.
அவன் மேல்நிலைப் பள்ளிக்குப் போனபிறகு இன்னும் சுவையான பரிசுகள் வரத்தொடங்கின. செய்கலை வகுப்பில் மாக்கல்லைத் தானே தேய்த்துச் செய்த சங்கு, மண்பாண்ட (pottery) வகுப்பில் செய்த கோணல் மாணலான சட்டிகள், பூச்சாடிகள், மரவேலை (woodcarving) வகுப்பில் செய்த சாவிக்கொத்து போன்றவை. (ஒரு தாயால் மட்டுமே ரசிக்க முடியும் என்று சொல்வார்களே அதைப் போன்றவை) எல்லாமே எங்கள் வீட்டை இன்னும் அலங்கரிப்பது உண்மையே.
ஆனால் இந்த வருடம் என் மகனும், கணவரும் சேர்ந்து தந்திருக்கும் பரிசு... கொஞ்சம் பொறுங்கள் சொல்கிறேன். (எனக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது). ஆறேழு வாரங்களுக்கு முன், இருவரும் அடிக்கடி 'Home Depot' போய்வரத் தொடங்கினார்கள். பிறகு ஒவ்வொரு சனிக்கிழமையும் என் கணவர் தோட்டத்தில் குழிதோண்டுவதும், பாத்திகள் கட்டுவதுமாக முனைப்பாயிருந்தார். எனக்கு இது அதிசயமாகப் படவில்லை - தோட்டவேலை என் கணவருக்கு மிகப் பிடித்த பொழுது போக்கு.
ஆனால் போனவாரம், எதேச்சையாக நான் இந்தப் பாத்திகளைப் பார்த்தபோது, ஒவ்வொன்றிலும் குறுஞ்செடிகள் முளைத்திருந்தன. பார்த்தால், அவை எனக்குப் பிடித்த டேலியா, கிளாடியோலா பூச்செடிகள்! ஏகப்பட்ட பாத்திகள், ஏகப்பட்ட குருத்துக்கள். |
|
எல்லாச் செடிகளும் அன்னையர் தின வாரத்தில், விதவிதமான வண்ணங்களில் (அதிகப்படியானவை எனக்குப் பிடித்த லாவெண்டர் வண்ணம்) பூக்கத் தொடங்கிவிடும் என்றும், ஆகஸ்டு இறுதிவரை பூக்குமென்றும் சொன்னார்கள். இதுவே என் அன்னையர் தினப் பரிசாம். நான் மலைத்துப் போய்விட்டேன்.
எத்தனை வித்தியாசமான பரிசு! தேர்வுகளுக்குப் படிக்கவே நேரம் சரியாக இருந்ததால் தன் அப்பாவின் உழைப்பில்தான் இவ்வளவும் என்று கூறிய என் மகன், விதைகள் வாங்கவும், வண்ணங்கள் தேர்ந்தெடுக்கவும் தான் உதவியதாகச் சொன்னான்.
ஆக, இந்த அன்னையர் தினத்தன்று ''பூப் பூக்கும் ஓசையைக் கேட்க'' இந்த அன்னை ஆசையோடு காத்திருக்கிறாள். அவளுக்கு இருக்கும் ஒரே கவலை, இதைவிடச் சிறப்பாகத் தந்தையர் தினத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதே.
எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
மாலா பத்மநாபன் |
|
|
More
அக்கரைப் பச்சை காதில் விழுந்தது.. கண்முன் நடந்தது ஒரு மருத்துவரின் பார்வையில்
|
|
|
|
|
|
|