கல்வியா? கலையா? பாராளுமன்றத் தேர்தல் 2004 தொண்டர்களின் ஆத்திரம் காதில் விழுந்தது... வார்ட்டன் போட்டிகள்: வெளுத்துக் கட்டும் இந்தியர்கள்! யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்
|
|
காலத்தின் சுழற்சி |
|
- |ஜூன் 2004| |
|
|
|
நாம் 'காலத்தின் கோலம்' என்று கூறுவதுண்டு. தமிழ்கூறும் நல்லுலகம் இதையே 'சகடக்கால் போல வரும்' என்றும் கூறுகிறது. என் கண்முன்னாலேயே காலத்தால் மாறிப் போன சிலவற்றை இங்கு கூறுகிறேன்.
நான் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்தவன். மின்சாரம் இல்லாத காலம். ஆனால் பருவமழை தவறாது பெய்து, ஆறு, கண்மாய், கிணறுகள் நிரம்பி வழியும். பகலில் பச்சைப் பசேலென்று குளுமையாகவும் இனிமையாகவும் இருக்கும் வாழ்க்கை, இரவானால் சிறிய கைவிளக்குகளுடன் இருட்டோடு போராடித் துன்பப்பட வைக்கும். பெரிய திரை கிடையாது. பொழுபோக்கு என்பது பாவைக்கூத்து அல்லது நாடகம் மட்டும் தான். வருடத்தில் ஓரிருமுறை இதை நடத்தும் கலைஞர்கள் (அந்தக் காலத்தில் 'கூத்தாடிகள்' என்று அழைக்கப்படுவார்கள்) கிராமத்தின் பண்ணையார் அல்லது ஜமீன்தாரின் தயவில் கொஞ்ச நாட்கள் தங்கி நல்ல நாடகங்கள் நடத்துவார்கள். இரவில் பளபளப்பாக மின்னும் உடையுடன் ராஜாவாகவும், மந்திரியாகவும், ராணி யாகவும் தோன்றுகின்ற இந்தக் கூத்தாடிகள் பகலில் சாப்பாட்டிற்கும், சன்மானத்திற்கும் கூனிக்குறுகி ஜமீன் வீடுகளில் பரிதாபமாய் நிற்பர். இப்படிஏழையாயிருந்த கூத்தாடிகள் வாழ்விலும் காலம் விளையாடியது. பேசும்படம் வந்தது. கூத்தாடிகளில் பலர் சினிமா நடிகர்களாக மாறிப் பெரும் செல்வந்தர்களாகிவிட்டனர்.
இந்தக் காலக்கட்டத்தில் அரசியல் மாற்றங்களால் நிலங்களைப் பறி கொடுத்து ஜமீன்தார்களின் சந்ததியர்கள் சாதாரண வேலை செய்யும் ஏழைகளாக மாறிப் போனார்கள். இது ஒரு கால மாற்றம். இதுபோல் இன்னுமொன்று பாருங்கள். அந்தக் காலத்தில் கல்யாண வீடுகளுக்கு விருந்தினர்களையும் உறவினர்களையும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பார்கள். மேலும் சாப்பாட்டுச் சமயத்தில் பலமுறை விருந்தினர்களைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி அழைக்க வேண்டும். அப்படி அழைத்தால்தான் சாப்பிடுவார்கள். காலப்போக்கில் இது எப்படி மாறிவிட்டது பாருங்கள். சென்னையில் பல கல்யாணங்களிலும் இப்பொழுது பார்த்தால் மணமகன் தாலி கட்டினவுடன், யாரும் கூப்பிடக் கூடக் காத்திருக்காமல் தடதடவென்று உணவுக் கூடத்தை நோக்கி மக்கள் ஓடுகிறார்கள். இடம் கிடைக்காதவர்கள் வாயிலின் அருகில் காத்திருக்கிறார்கள். சில சமயங்களில் பாதி சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களின் பின்னால் நின்றவண்ணம் காத்திருப்பார்கள். எச்சில் இலையை எடுப்பதற்கு முன்னாலேயே உட்காரவும் செய்வர். இதை எல்லாக் கல்யாண வீடுகளிலும் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இதுவும் காலத்தின் கோலம்தான். இதுபோல் இன்னொரு உதாரணமும் சொல்கிறேன்.
இது எனது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட உண்மை நிகழ்ச்சி.
அந்தக் காலத்தில் எங்கள் பாட்டி வீட்டிற்குச் செல்வதற்கு நாங்கள் மாட்டு வண்டியில் போவோம். மாட்டு வண்டிகளில் மூன்று ரகம் உண்டு. ஒன்று வில் வண்டி என்று அழைக்கப்படுகிற சொகுசு வண்டி. இதில் சக்கரங்களுக்கு ரப்பர் பொருத்தப்பட்டு, கூண்டிற்குள் வெல்வெட்டினால் மெத்தை தைத்துப் போட்டிருக்கும். உடம்பு குலுங்காமலிருக்க 'ஸ்பிரிங் பிளேட்' வேறு உண்டு. மொத்தத்தில் இந்தச் சொகுசு வண்டி பண்ணையார்களுக்கும் ஜமீன்தார்களுக்கு மட்டுமே கட்டிவரும்.
இரண்டாவது கூண்டு வண்டி. நடுத்தர குடும்பத்தினர் பயன்படுத்துவது. கட்டை வண்டியில் ஒரு கூண்டு பொருத்தி உள்ளே வைக்கோல் பரப்பி அதன் மீது ஒரு ஜமக்காளம் விரித்து விட்டால் பிரமாதமாக இருக்கும். மூன்றாவது கட்டை வண்டி. இது திறந்த வண்டி. பக்கவாட்டில் நாலைந்து மூளைக்கொம்பு பொருத்தியிருக்கும். வண்டியின் ஆட்டத்தில் விழுந்துவிடாமல் இதைப் பிடித்துக் கொண்டு வெயிலில் காய்ந்து கொண்டு பிரயாணம் செய்ய வேண்டும். இந்த வண்டியில்தான் சக்கரங்களின் சுழற்சியைப் பார்க்க முடியும்.
நாங்கள் இந்த மாதிரி வண்டியில் பயணிக்கையில் கூஜாவில் தண்ணீர், கட்டுச்சோற்று மூட்டை, மசால்வடை சகிதம் என் தாயார் வருவார். வழியில் மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடும் போது வண்டிக்காரருக்கும் தருவோம். பிற்காலத்தில் காடுகளைக் கொஞ்சம் சரியாகக் கவனிக்காததால் நாங்கள் ஏழையாகிப் போனோம். நான் வளர்ந்து சினிமா ஆசையில் சென்னை வந்து சேர்ந்து துன்பப்பட்டு டிரைவராகி டாக்சி ஓட்ட ஆரம்பித்தேன். |
|
என் டாக்சியில் எனக்கு நிறையப் பணக்கார வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். இவர்கள் குடும்பத்துடன் மகாபலிபுரம், காஞ்சிபுரம் என்று என் வண்டியில் பயணம் செய்யும் போது வீட்டிலிருந்து பிரைட் ரைஸ், லெமன் சாதம், தயிர் சாதம், சிப்ஸ் என்று நிறையக் கொண்டு வருவார்கள். வழியில் சவுக்குத் தோப்பில் பாய் விரித்து அமர்ந்து சாப்பிடுகையில், ''டிரைவர் வாங்க நீங்களும் சாப்பிடுங்க'' என்று ஒரு தட்டில் எல்லா உணவும் வைத்துக் கொடுப்பார்கள். நான் அதை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே நினைத்துக் கொள்வேன், ''ஆஹா, வண்டிக்காரனுக்கு உணவளித்துக் கொண்டிருந்த நாமே காலச்சக்கரத்தின் சுழற்சியால் வண்டிக்காரனாக மாறிப்போய் உணவை வாங்கிச் சாப்பிடுகிறோமே" என்று.
ஆனால் இதில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இருந்ததில்லை. ஆனால் இதே கால மாற்றத்தால் சிதைந்து போய் நிற்கும் எனது கிராமத்தைப் பார்க்கிற போது என் கண்களில் இரத்தம் கசிகிறது. நீர்நிலைகள் வற்றி, திரும்புகிற இடமெல்லாம் காய்ந்த முட்செடிகளும் வறண்ட நிலமும்தான் இன்றைய கிராமம்.
இதைப் பார்த்து, ''இறைவா! எங்களுக்கெல்லாம் கோடி கோடி இன்பங்களைக் கொடுத்துவிட்டு பின்னால் வரும் பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் இந்தத் தண்டனை'' என்று கேட்கத் தோன்றுகிறது.
ஆனால் இறைவனின் திருவுள்ளத்தை யாரால் தெரிந்து கொள்ளமுடியும். அவனது நெஞ்சருகே பின் சந்ததியருக்காக என்ன துருப்பு சீட்டை வைத்துக் கொண்டிருக்கிறானோ!? காலம் தன் பாட்டுக்கு சுற்றுவதில் மேலும் கீழுமாய் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது.
எஸ். மோகன்ராஜ், நியூயார்க் |
|
|
More
கல்வியா? கலையா? பாராளுமன்றத் தேர்தல் 2004 தொண்டர்களின் ஆத்திரம் காதில் விழுந்தது... வார்ட்டன் போட்டிகள்: வெளுத்துக் கட்டும் இந்தியர்கள்! யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்
|
|
|
|
|
|
|