கல்வியா? கலையா? தொண்டர்களின் ஆத்திரம் காதில் விழுந்தது... வார்ட்டன் போட்டிகள்: வெளுத்துக் கட்டும் இந்தியர்கள்! யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ் காலத்தின் சுழற்சி
|
|
பாராளுமன்றத் தேர்தல் 2004 |
|
- |ஜூன் 2004| |
|
|
|
திடுக்கிடும் திருப்பங்கள்
ஆயிரம் மில்லியன் மக்கள் கொண்ட மிகப்பெரியதொரு ஜனநாயக நாட்டின் தேர்தல் முடிவுகளை முன்கூட்டிச் சொல்வது எளிதல்ல. மிகச் சல்லிசாகத் தனிப்பெரும் பான்மையோடு பாரதீய ஜனதா கூட்டணி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று முதலில் வந்த நிர்ணயங்கள் கூறின. காங்கிரஸ்காரர்களோ வழக்கமான வீர வசனங்களை உதிர்த்தாலும் குரலில் சுரத்து இல்லை. பா.ஜ.க. கூட்டணியோ தான் பதவிக்கு மீள்வதுதான் இயல்பு என்பது போலப் பேசியது. ஆனால் இவை நீடிக்கவில்லை.
மறுகணிப்புச் செய்த மாயம்
வந்தது மறு கருத்துக் கணிப்பு. இப்போது பா.ஜ.க.வும் காங்கிரசும் கிட்டத்தட்ட சமநிலையில் இருந்தன. காங்கிரசுக்கு இது உற்சாகமூட்டியதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் பா.ஜ.க. இதை NDTV-யின் பிரணாய் ராய் போன்றோரின் காங்கிரசுக்குச் சாதகமான வஞ்சகச் செயல் என்று கூறினர். இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய குருமூர்த்தி இன்னும் ஒருபடி மேலே சென்று "இப்படிப்பட்ட கருத்துக் கணிப்புக்களைச் சொல்லி, அதிகப் பார்வையாளர்களைப் பெற்று, நாற்பது கோடி ரூபாய் நஷ்டத்தில் ஓடிய NDTV-யின் பங்குகளை லாபத்தில் விற்கும் தனது திட்டத்தில் பெருத்த வெற்றி பெற்று, கடனை அடைத்துவிட்டார் பிரணாய் ராய்" என்று எழுதினார். ஆனால் சன் டி.வி.யும் ஜெயா டி.வி.யும் போட்டி போட்டுக்கொண்டு தமது முதலாளிகளின் கருத்துக்களையே செய்திகள் என்ற போர்வையில் கொடுத்துக்கொண்டிருந்த காலத்தில் NDTV-யை விட்டால் தமிழக மக்களுக்கு நம்பகமான செய்திகளுக்கு வேறு வழியிருக்கவில்லை.
ஆனால் நடந்ததே வேறு. காங்கிரஸ் 147 இடங்களைப் பிடித்து, தனிப்பெரும் கட்சியாக வந்தது. அதனுடன் கூட்டணியில் இருந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெப்போதும் இல்லாத அளவில் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் பெரிய வெற்றிபெற்று 63 இடங்களைப் பிடித்தது. தமிழ்நாட்டில் கருணாநிதியின் தலைமை யிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றி ஜெயலலிதா வுக்கு சிம்ம சொப்பனமானது. 137 இடங்களையே பெற்ற பா.ஜ.க. பேச்சிழந்தது. ஆனால் இந்த முடிவுகள் பிரணாய் ராய் போன்றோரின் ஆரூடங்களையும் பொய்யாக் கியது என்பதே உண்மை.
சோனியா! சோனியா!
திடீரென்று எங்கு பார்த்தாலும் சோனியா! "சோனியா வெளிநாட்டவர் என்ற பிரச்சாரத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை" என்றனர் காங்கிரசாரும் உடனிருப்போரும். தேர்தல் நடந்து முடியும்வரை காங்கிரஸ் கூட்டணி ஜெயித்தால் யார் பிரதமாராவார் என்ற கேள்வியையே அணுகத் தயங்கிய இவர்கள் "இந்த வெற்றி சோனியாவுக்குக் கிடைத்த வெற்றி, மக்கள் அவரைப் பிரதமராகப் பார்க்க விரும்புகிறார்கள்" என்றனர். காங்கிரஸ் எதுவும் சொல்லாமல் போகவே சரத் பாவர், முலாயம் சிங் யாதவ் ஆகியோரெல்லாம் 'வாய்ப்புக் கிடைத்தால் நான் பிரதமராவேன்' என்பது போலப் பேசத்தொடங்கினர்.
புதிய தலைமுறையின் ராஹ¤ல் காந்தி, பிரியாங்கா வதேரா ஆகியோர் பிரச்சார சமயத்தில் மிகுந்த பாடுபட்டு உழைத்தனர். ராஹ¤ல் அமேதியிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதுமட்டுமல்ல. காங்கிரஸ் கூட்டணி இந்தமுறை பல இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்திருந்தது. குறிப்பாக தலைவர்களின் வாரிசுகள் வாய்ப்புக்களைப் பெற்றார்கள். ராஹ¤ல் காந்தியில் தொடங்கிய பட்டியல் ஜ்யோதிராதித்ய சிந்தியா (மாதவராவ் சிந்தியாவின் மகன், குவாலியர்), சச்சின் பைலட் (ராஜேஷ் பைலட்டின் மகன், டவுசா), சந்தீப் தீக்ஷ¢த் (டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷ¢த்தின் மகன்), தயாநிதி மாறன் (முரசொலி மாறனின் மகன், மத்திய சென்னை), மிலிந்த் தேவ்ரா (முரளி தேவ்ராவின் மகன், தென்மும்பை) ஆகியோர் இதில் குறிப்பிடத் தக்கவர்கள். நடப்பதற்குச் சிரமப்படும் முதிய தலைமுறை அரசியல்வாதிகளின் மீது மக்கள் நம்பிக்கை யிழந்திருந்த சமயத்தில், காங்கிரசின் இந்த 'இளையமுகம்' பொதுமக்களுக்குப் பிடித்த மாய் இருந்ததும் இந்தப் பெரும் வெற்றிக்குக் காரணம் என்று சொல்கின்றனர் சில நோக்கர்கள். பிரியாங்கா போட்டியிடவில்லை.
பங்குச் சந்தை படும் பாடு
இது இப்படியிருக்கையில் பங்கு வர்த்தகக் குறியீடான சென்செக்ஸ், தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதுமே சரியத் தொடங்கியது. வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொருமுறை காங்கிரஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணிப்போ, வாக்கு எண்ணிக்கையோ சொன்னதும் குறியீடு கீழே போனது. தனியார் மயமாக்கலுக்கும், பொருளாதாரச் சீர் திருத்தங்களுக்கும் எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இடதுசாரிக் கட்சிகள் பெருவெற்றி பெற்று, இப்போது காங்கிரஸ் அரசில் வலுத்த செல்வாக்கோடு இருக்கின்ற நிலையே பங்குச் சந்தையை இவ்வாறு நடக்கவைத்தது.
அதற்கேற்றாற்போல் "எங்களுக்குப் பங்குச் சந்தையைப் பற்றிக் கவலையில்லை; ஏழை எளியவருக்கு வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்" என்று தெளிவாக ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் (பொதுச் செயலாளர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சீதாராம் யெச்சூரி ஆகியோர் பேசவே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல ஆனது. இந்தியப் பங்குச் சந்தை முன்னெப் போதும் காணாத கடும் சரிவாக சென்செக்ஸ் 565 புள்ளிகள் விழுந்து 4505 புள்ளிகளில் போய் நின்றது. ஒரு கட்டத்தில் 800 புள்ளிகள் விழுந்துவிட்டுப் பின் மேலேறிய பின் முடிந்த நிலை இது. நடந்த நாள் மே 17. அன்றைய தினம் மொத்தப் பங்குகளின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு 135,000 கோடி ரூபாய்கள்! ஆனால் காங்கிரஸ் கட்சி இன்னமும் யார் பொறுப்பேற்கப் போகிறார் கள் என்று நிர்ணயிக்காத நிலையில் இதற்குச் சரியான வாக்குறுதிகளைக் கொடுத்து, சரிவைத் தடுக்கும் நிலையில் இல்லை.
"சோனியாதான் பிரதமர்"
அது இன்னும் சுவாரசியமான நாடகம். காங்கிரஸ் அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்ற கட்சியாக ஆன வுடனேயே அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி சோனியாவைத் தம் தலைவராகத் தேர்ந்தெடுத்துவிட்டனர். அதன் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை செய்ய அழைத்திருந்தார். மே மாதம் 18ஆம் தேதி மாலை சோனியா குடியரசுத் தலைவரைச் சந்திக்கவேண்டும். பகலிலேயே தேநீருக்கு என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துவிட்டு, சோனியா உள்ளே தோழமைக்கட்சித் தலைவர்களோடு ஆலோசனையில் இருந்தார். வெகுநேரத்திற்குப் பின் வெளியே வந்த ஹர்கிஷன், லல்லுபிரசாத் மற்றும் தலைவர்கள் சோனியா 19-ஆம் தேதி பிரதமராகப் பதவி ஏற்பார் என்று சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியளித்தார்கள்.
உள்ளே நடந்த ஆலோசனையின்போது சோனியா தனக்குப் பிரதமராகும் எண்ணம் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும். இதுவும் தோழமைக் கட்சிகளைப் பணிய வைக்கும் தந்திரம் என்றே கருதப்பட்டது. "சோனியா பிரதமராக மாட்டேன் என்று சொல்லுமளவிற்குப் போனதற்கு வாஜ்பாயி தான் காரணம்" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் சோம்நாத் சாட்டர்ஜி பேச, காங்கிரஸ் தொண்டர்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டனர். ஒரு அணிதிரண்டு சென்று பா.ஜ.க. அலுவலகத்தைத் தாக்க முயல தொண்டர்களுக்கிடையே கைகலப்பும் ஏற்பட்டது.
இதற்கு ஒரு பின்னணி உண்டு. சோனியா பிரதமரானால் தான் தலையை மழித்துக் கொண்டு, வெள்ளைப் புடவை உடுத்தி, வெறும் வறுத்த பயறு வகைகளையே உண்டு வாழப் போவதாக சுஷ்மா சுவராஜ் சூளுரைத்தார். பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் யாருமே பதவியேற்பு வைப வத்துக்கு வரப்போவதில்லை என்று அறிவித்திருந்தனர். மத்தியப் பிரதேச முதல்வர் உமாபாரதியோ தனது பதவி விலகல் கடிதத்தைக் கட்சித் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஒப்படைத்திருந்தார்.
இங்கே இப்படி நடந்து கொண்டிருக்க, சோனியா டாக்டர். மன்மோகன் சிங்கை மட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டு அப்துல் கலாமைச் சந்திக்கப் போனார். இது வழக்கத்துக்கு மாறானது. காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. எனவே தோழமைக் கட்சிகளின் ஆதரவுக் கடிதம் மட்டுமின்றி, தன் அரசை ஆதரிக்கப் போகும் முந்நூற்றுச் சொச்சம் எம்.பி.க்க ளோடு சென்று ஆட்சியமைக்கத் தன் கூட்டணி தகுதிபெற்றிருப்பதை நிரூபித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இருவர் மட்டுமே போனது யோசிக்க வேண்டிய விஷயம். அங்கே சென்ற சோனியா அரசு அமைப்பது பற்றிய முடிவைத் தெரிவிக்க ஒருநாள் அவகாசம் கேட்டுத் திரும்பியது பின்னர் தெரியவந்தது. |
|
உள்மனத்தின் குரல்
திரும்பி வந்த சோனியா, முகத்தில் கவிந்த சோகத்துடனும், சற்றே கம்மிய குரலிலும் "நான் பிரதமர் பதவியை ஏற்கக் கூடாது என்று எனது உள்மனம் சொல்கிறது. என்னுடைய உணர்ச்சிகளை மதியுங்கள் வற்புறுத்தாதீர்கள்" என்று கூறினார். அவர் சொன்ன விதத்தில் 'இவர் தன் முடிவை மாற்றிக்கொள்பவரல்ல' என்பது தெரிந்தது.
உடனே தொடங்கியது காங்கிரஸ் எம்.பி.க்களின் பேச்சுமழை! 'என்னை வற்புறுத்தாதீர்கள்' என்று சோனியா சொன்னது யார் காதிலும் விழுந்ததாகவே தெரியவில்லை. "காந்தி குடும்பத்தினர் தலைமையின்கீழ் இல்லாத போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவல நிலமையை யோசித்துப் பாருங்கள்" என்று கூறிய மணிசங்கர் ஐயரிலிருந்து, துக்கம் தொண்டையை அடைக்கப் பேசிய ரேணுகா சவுத்திரி வரை எல்லோரும் 'இந்திராவே இந்தியா' என்பதைக் கொஞ்சம் மாற்றி 'சோனியாவே இந்தியா' என்று பேசினார்கள். வேறு யாருக்குமே அந்தப் பதவியை வகிக்கத் திறமை இல்லை என்பதும், அவர் பதவியை ஏற்க மறுப்பது அவரை நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் புறக்கணிப்பதாகும் என்பதும் பெரும்பாலோர் பேசியதன் சாரம்.
மறுநாள் மாலை மீண்டும் டாக்டர் மன்மோகன் சிங்கை மட்டும் அழைத்துக் கொண்டு சோனியா குடியரசுத் தலை வரைச் சந்திக்கச் சென்றார். ராஷ்டிரபதி பவனத்துக்கு வெளியே செய்தியாளர்கள் பெரும் எதிர்பார்ப்புகளுடன். இரவாகி விடுகிறது. வெள்ளைக் காரிலிருந்து வெள்ளை உடை அணிந்த மன்மோகன் சிங் இறங்குகிறார். மறுபக்கத்திலிருந்து சோனியா. ஆனால் சோனியாவின் முகத்தில் முதல் நாள் தென்பட்ட களைப்பும் அழுத்தமும் இல்லை. மாறாகப் பளிச்சென்ற புன்னகை. இருவரும் மைக்குகள் வைத்திருக்கும் மேடைக்கு அருகில் வந்ததும் சோனியா சற்றே இடதுபுறம் ஒதுங்கி, மன்மோகன் சிங்கைப் பேசச் சொல்கிறார். செய்தியாளர்களின் ஏகோபித்த கூக்குரல். இரண்டு மூன்று முறை முயன்ற பின் சிங்கின் குரல் எடுபடுகிறது "சோனியா அவர்களும் நானும் மேதகு குடியரசுத் தலைவரைச் சந்தித்தோம். என்னை அவர் அரசு அமைக்கும்படி அழைப்பு விடுத்திருக் கிறார். இதோ கடிதம்" என்று சொல்லி எடுத்துப் படித்தார்.
"மகத்தான தியாகம்" என்று இதை 'தி ஹிந்து' வர்ணித்தது. இன்னும் ஒருபடி மேலே போய் 'தி எகனாமிக் டைம்ஸ்' "சோனியா பீஷ்மரையும் காந்தியையும் தியாகத்தில் தோற்கடித்தார்" என்று உருகியது. "எங்கள் வீட்டில் யாருக்கும் பதவி ஆசை கிடையாது" என்று பிரியங்கா டி.வி. பேட்டியில் சொன்னார். ராகுல் காந்தியோ "என் பாட்டி (இந்திரா காந்தி) குண்டடி பட்டு வந்து கீழே விழுந்தபோது எனக்கு ஏற்பட்டதைவிட அதிகப் பெருமிதம் என் தாயின் இந்தச் செயலால் ஏற்பட்டிருக் கிறது" என்று தொலைக்காட்சியில் சொன்னார். சோனியாவின் இத்தாலிய உறவினர்களும், இரண்டு வாரிசுகளும் 'பிரதமரானால் அவரது உயிருக்கு ஆபத்து' என்று கூறி வற்புறுத்தியதுதான் சோனியா வின் முடிவுக்குக் காரணம் என்று பல பத்திரிக்கைகள் எழுதின. அதே நேரத்தில் இந்தச் செயல் 'அரசியல் ரீதியாக மிகச் சாமர்த்தியமான காய் நகர்த்தல்' என்றும் கூறத் தவறவில்லை.
மன்மோகன் சிங் மடியில் விழுந்த பதவி
"என்னை அரசு அமைக்கச் சொல்லி அழைத்திருக்கிறார்" என்று அவர் சொன்னது ஏராளமான கேள்விகளைத் தெளிவுபடுத்திவிட்டது. அதிக வசதியில்லாத குடும்பத்தில் பிறந்து, கல்வியாளராக, பொருளாதார நிபுணராக, ரிசர்வ் வங்கி கவர்னராக மெல்ல மெல்ல வளர்ச்சியுற்ற டாக்டர் மன்மோகன் சிங் (பார்க்க: அவருடைய வாழ்க்கைக் குறிப்பு) இந்திய ஜனநாயகத்தின் சாத்தியங்களுக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு. சுதந்திரச் சிந்தனை, செயல்பாடு இவற்றை மதிப்பவர். சமுதாயத்தின் பின் தங்கிய மக்கட் கூட்டத்துக்கு முன்னேற்றம் வேண்டும் என்று கருதுகிறவர். அதே நேரத்தில் உலகத்தோடு தன்னை இணைத்துக் கொள்ளாவிட்டால் இந்தியா வளர்ச்சியில் பின் தங்கிவிடும் என்று எண்ணுகிறவர். இந்த இடத்தில்தான் இவருக்கு மிகுந்த சாதுரியம் தேவைப்படுகிறது.
"குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் (Common Minimum Program) நான் கேட்டவரையில் எங்களுக்கு ஏற்புடைய தாகவே இருக்கிறது என்று சோம்நாத் சாட்டர்ஜீ கூறியிருக்கிறார்" என்பதே இடதுசாரிக் கட்சிகளுடனான கூட்டுறவைப் பெறுவதில் இவர் கண்ட வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். இதை எழுதும் போது இன்னும் தோழமைக் கட்சிகளுக்கு பதவிப் பங்கீடு முடியவில்லை. "நாங்கள் கேட்ட துறைகளைக் காங்கிரஸ் தரவில்லை. இந்தப் போக்கு நல்லதல்ல. நான் கோபத்தில் இருக்கிறேன். ஆனாலும் ஒரு நிலையான அரசை அளிக்கவேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்" என்று லல்லுப் பிரசாத் யாதவ் பேசத் தொடங்கிவிட்டார். சரத் பாவரும் கொஞ்சம் சலசலப்புக்குப் பின் அடங்கியிருக்கிறார். இதுவரையில் கருணாநிதியுடன் பிரச்சனை இல்லை. தயாநிதி மாறன், அன்புமணி ராம்தாஸ் (பா.ம.க. தலைவர் டாக்டர் ராம்தாஸின் மகன்), டி.ஆர். பாலு (தி.மு.க.), ஏ. ராஜா (தி.மு.க.), ப.சிதம்பரம் (காங்) ஆகியோருக்கு காபினெட் அந்தஸ்தில் மந்திரிப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர சுப்புலட்சுமி ஜகதீசன் (தி.மு.க) இணையமைச்சர் ஆகிறார். தமிழகத்துக்கு வேட்டைதான். ஆனால், மாநில அரசுடன் இவர்கள் ஒத்துழைக்கும் சூழ்நிலை வந்து அதனால் மாநிலம் பயன்பெறுமா என்பது பெரிய கேள்விக்குறிதான்.
காங்கிரசுக்கு இது முதல் கூட்டணி அனுபவம். எல்லோரையும் அனுசரித்து, அதே நேரத்தில் தேசநலனைப் புறக் கணித்துவிடாமல் அரசு நடத்துவது பெரிய சவால். சோனியாதான் திரைமறைவுப் பிரதமர், மன்மோகன் சிங் பொம்மைப் பிரதமர் என்ற நிலையும் ஆகிவிடக்கூடாது. ஒரிஜினல் மன்மோகன் சிங் இத்தகைய வற்றைச் சகித்துக் கொள்பவரும் அல்ல. ஆனால் காலம் யாரை எப்படி மாற்றி யிருக்கிறது என்று யார் சொல்லமுடியும்?
இது ஒரு வெற்றிக் கூட்டணியாக வேண்டும் என்பதுதான் தேசத்தின் எதிர்பார்ப்பு. |
|
|
More
கல்வியா? கலையா? தொண்டர்களின் ஆத்திரம் காதில் விழுந்தது... வார்ட்டன் போட்டிகள்: வெளுத்துக் கட்டும் இந்தியர்கள்! யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ் காலத்தின் சுழற்சி
|
|
|
|
|
|
|