Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
நலம்வாழ
பெரு நரகமல்ல, சிறுநீரகம் தான்!
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|ஜூன் 2004|
Share:
இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சி தொற்று நோய் பலவற்றை அறவே ஒழித்து விட்டன. அம்மை, காலரா, டைபாய்டு, மலேரியா முதலிய நோய்களுக்குத் தடுப்பூசி முறைகள், மேம்பட்ட சுகாதாரம் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்து வகைகள் தீர்வு கண்டுவிட்டன. இதனால் அகால மரணம் அடைந்திருக்கக் கூடியவர்கள் நீண்ட காலம் வாழ ஆரம்பித்தனர். இதுவரை மனித இனம் கண்டிராத அளவுக்கு 'நீடித்த நோய்'கள் (chronic diseases) பெருக இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. இதில் குறிப்பிடத் தக்கவை நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் (diabetes and high blood pressure); மேற்சொன்ன இரு நோய்களால் பாதிக்கப்படுகிற முக்கிய உடலுறுப்பு - சிறுநீரகம் (kidney).

கடந்த இருபது ஆண்டுகளில் உங்களுக்கு தெரிந்தவர்கள் எவ்வளவு பேருக்குச் சிறுநீரகத் திறனிழப்பும் (kidney failure), டயலிசிஸ் சிகிச்சை அல்லது மாற்று உறுப்புப் பொருத்துதல் (transplant) போன்றவை தேவைப்பட்டிருக்கிறது? இவர்களில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே சிறுநீரகம் திறனிழந்து விட்டது என்பதை ஒரு திடுக்கிடும் தகவலாகவே கடைசி நிமிடத்தில் அறிந்திருப்பார்கள். இத்தனை அதிர்ச்சிதரும் தகவல் முன்கூட்டியே ஏன் இவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை? சிறுநீரகப் பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் என்ன? இதற்கான பரிசோதனைகள் யாவை? அவை யாருக்கு எப்போது தேவை? வாருங்கள் பார்ப்போம்.

மனிதர்களுக்குச் சற்றே தாராளமாக இரண்டு சிறுநீரகங்களை இயற்கை வழங்கியுள்ளது. சிறுநீரகங்களுக்கு உடலில் நான்கு முக்கிய பணிகள்:

1. கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல்.
2. கனிம, உப்பு அளவுகளைப் பாதுகாத்தல்.
3. இரத்தச் சிவப்பணு (RBC) உற்பத்திக்கான ஹார்மோன்களை சுரத்தல்.
4. நீர் அளவைக் கட்டுப்படுத்தல்.

சிறுநீரக நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் மேற்சொன்ன பணிகள் சம்பந்தப்பட்டவைதாம். உடற்களைப்பு, மிகுந்த சோர்வு, பசியின்மை, கை கால் குடைச்சல் போன்று இன்ன தென்று குறிப்பிட முடியாத குறியீடுகளே ஆரம்பத்தில் இருக்கலாம். மூத்திரத்தில் இரத்தம் கலந்திருத்தல், புரத நீரிழிவு, நீர் அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் உடல் வீக்கம், இரத்தக் கொதிப்பு மற்றும் விலாமடிப்பில் வலி ஆகியவை சில தருணங்களில் தோன்றலாம். முற்றிய நிலையில் தோல் அரிப்பு, நடுக்கம், அரை மயக்கம், குழப்பம், மூச்சில் கெட்ட சுவாசம் மற்றும் மீளாத்துயில் நிலை (coma) ஏற்படலாம்.

நலமாக உள்ள போது சீதோஷ்ண நிலை மற்றும் நீர் அருந்தும் அளவைப் பொருத்து மூத்திரம் அடர்ந்தோ (concentrated) நீர்த்தோ (diluted) இருக்கும்; ஆனால் சிறுநீரகங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அடர்த்தும் பணி முதலில் பாதிக்கப்படுவதால் சிறுநீரின் அளவு வழக்கத்திற்கு அதிகமாக இருக்கலாம். இந்த ஒரு காரணத்தாலே பெரும்பான்மையானோர் தங்களுக்கு சிறுநீரகம் நோய்வாய்ப்பட்டிருப்பதை இறுதி வரை அறிய வாய்ப்பில்லை. பத்து முதல் பதினைந்து சதவிகித அளவு சிறுநீரகப் பணியே ஒருவரை உயிரோடு வைத்திருக்கப் போதுமானது; அது முப்பது சதவிகித அளவுக்குக் குறையும் வரை எந்த விதமான அறிகுறிகளும் தோன்றுவதில்லை.

சிறுநீரக நோய் யாரைப் பாதிக்கும்?

குறிப்பாக கவனமாக இருக்க வேண்டியோர் சர்க்கரை நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் அதிகமாக உடையோர், அடிக்கடி மூத்திரப் பாதையில் நுண்ணுயிர்த் தொற்று (frequent urinary infections) உடையோர் மற்றும் குடும்பத்தில் சிறுநீரக நோய் முன்வரலாறு உள்ளவர்கள். அடிக்கடி தலைவலி, முதுகு வலி போன்ற உபாதைகளுக்கு வலி நிவாரண மருந்துகளைப் பயன்படுத்துவோரையும் இது கடுமையாக பாதிக்கலாம். பிராஸ்டேட் அல்லது சுக்கி எனப்படும் சுரப்பியில் ஏற்படும் பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வயதில் முதிர்ந்தோர் குறிப்பாக கவனமாக இருத்தல் அவசியம் - வேறு நோய்க்கான பரிசோதனைகளான சிடி ஸ்கேன் மற்றும் ஏஞ்சியோகிராம் எடுக்கும் போது கொடுக்கும் கான்ட்ராஸ்ட் திரவங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும் தன்மை உடையவை. மருத்துவமனையில் வேறு காரணங்களுக்காகச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் சிலருக்கு சீழ்ப்பிடிப்பு மற்றும் மிகவும் குறைந்த இரத்த அழுத்தத்தால் குறுகிய கால நிலையில் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம். முடிவாக, சிறுநீரகத்தில் உள்ள குளோமருலம் என்கிற வடிகட்டியில் தான்தோன்றியாகவோ அல்லது தொண்டைக் கட்டு (strep throat), ஈரலழல் (hepatitis) போன்ற உபாதைக்குப் பின் தோன்றும் அழற்சியினாலோ சிறுநீரக நோய் ஏற்படலாம்.

தடுக்கும் வழிகள்

சர்க்கரை நோயினால் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் ஆரம்ப நிலையிலே சிறுநீரில் மைக்ரோ அல்புமின் என்கிற புரதத்தைக் கழிப்பார்கள். இதை மருத்துவர்கள் அலுவலகங்களிலோ கிளினிக்குகளிலோ சுலபமாக ஒரே நிமிடத்தில் மூத்திரப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம். இரத்தத்தில் சர்க்கரை நிலை சீராக இருந்தால் இதற்கான வாய்ப்புகள் குறைவு. மருந்து மாத்திரைகளால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்திவிட்டால் புரதம் கழிப்பது அரிது. அப்படியே புரதம் கழித்தாலும், அதைக் கட்டுப்படுத்த இன்றைய தேதியில் மிகவும் உயர் தர மருந்து மாத்திரைகள் இருக்கின்றன. ACE inhibitors அல்லது ARBs என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் இந்த மருந்து வகைகள் சிறுந்£ரகத்தைக் காக்கும் தன்மை பொருந்தியவை. சர்க்கரை நோயுடன் புரத நீரிழிவு உடையோர் இந்த மருந்துகள் மூலம் சிகிச்சை பெறுவது மிக அவசியம்.

அதே போல், இரத்த அழுத்தம் உடையோர் அடிக்கடி இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்து சீராக வைத்திருத்தல் முக்கியம். இரத்தக் கொதிப்பு சிறுநீரகங்களை காலப்போக்கில் மிக எளிதில் பாதிக்கும் தன்மை படைத்தது. மேற்சொன்ன இரு நோய்கள் உடையோர் மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லும் போது தங்கள் இரத்தத்தில் கிரியாட்டினீன் (serum creatinine) என்ற கழிவுப் பொருளின் அளவைத் தெரிந்து கொள்வது உசிதம். மூத்திரப் பாதையில்ல அடிக்கடி நுண்ணுயிர் தொற்று இல்லாமல் வைத்திருத்தல் அவசியம்; ஒவ்வொரு முறை தொற்று (infection) ஏற்பட்டாலும் அது சிறுநீரகத்திற்குப் பரவும் வாய்ப்பு உண்டு. கூடுமானவரை வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது. மொத்தத்தில் இந்த நிலையைப் பற்றிய அறிவும் எச்சரிக்கையாய் இருத்தலும் சிறுநீரகங்களை காக்க உதவும்.

இதையெல்லாம் மீறிக் கோளாறுகள் ஏற்பட்டால் என்ன செய்வது?

முதல் கட்ட நடவடிக்கையாக இரத்த அழுத்தத்தைச் சீர் செய்ய வேண்டும். உடலில் உள்ள உப்புக்களை வெளியேற்ற முடியாததால் அது இரத்தக் கொதிப்பை மிகைப்படுத்துகிறது; இந்த நிலையில் உணவில் உப்பைக் குறைக்காவிட்டால், சிறுநீரகங்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படுகிறது. 'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்' என்கிற பழமொழிக்கு விஞ்ஞான அடிப்படை சிறுநீரகப் பணியையே குறிக்கும். ஆகவே உப்பை உட்கொள்ளும் போது நம்மையும் அறியாமல் நாம் அதிக நீர் அருந்துகிறோம். சிறுநீரகம் சீராக இல்லாவிட்டால் குடிக்கிற நீர் அனைத்தும் உடலிலிருந்து வெளியேற முடியாமல் வீக்கத்தைத் தருகிறது; நீர்பெருக்கி மருந்துகள் (diuretics) இந்த நிலையில் உதவினாலும் உப்பைக் குறைக்கவில்லையெனில் பலன் அதிகமில்லை. மாமிசம் உண்பவர்கள் மாமிசம் சார்ந்த புரதங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.

நோய் தீவிரமாகும் தருணம் சிறுநீரக நிபுணர்களிடம் ஆலோசிப்பது அவசியம். சிறுநீரக நோய் சார்ந்த இரத்த சோகைக்கு இந்நாளில் எரித்ரோபையிடின் என்கிற ஹார்மோன் வர்த்தக ரீதியாகத் தயாரிக்கப்பட்டு Procrit அல்லது Epogen என்கிற மருந்தாகக் கிடைக்கிறது; முற்று நிலையில் சோகையினால் ஏற்படுகிற சோர்வுத் தன்மையை இது வெகுவாகக் குறைத்து நோயாளியை முடிந்தவரை நலமாகச் செயல்பட வைக்கிறது.
மாற்று உறுப்புப் பொருத்துதல்

இன்றைய நிலைமையில் சிறுநீரகத் திறனிழப்பிற்கு நிறைவான சிகிச்சை என்பது உறுப்பு மாற்றுதலே ஆகும். ஆனால் பலவகை சமூக மற்றும் விஞ்ஞான ரீதியான காரணங்களால் இந்தச் சிகிச்சை எல்லோருக்கும் அமைவதில்லை. டயலிசிஸ் சிகிச்சை பொதுவாக சிறுநீரக நிபுணர்களால் வழங்கப்படுகிறது. சிறுநீரகத்தின் கழிவுப் பொருள் நீக்கு பணியை டயலிசிஸ் சிகிச்சையினால் ஓரளவுக்கு ஈடுகட்ட முடியும். அமெரிக்காவில் மட்டும் சுமார் மூன்று லட்சம் பேர் இந்த சிகிச்சையைப் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். டயலிசிஸ் சிகிச்சை இரு வகைப்படும் - ஒன்று ஹீமோடயலிசிஸ் என்று வாரம் மூன்று முறை இரத்தத்தை சுத்தப்படுத்தும் வகை; மற்றொன்று வயிற்று உறுப்புக்களுக்கு உறை போல் இருக்கும் பெரிடொனியத்தில் நீர் நிரப்பி, தொடர்ச்சியாக வீட்டிலேயே செய்யும் வகை. ஒருவருக்கு எது ஏற்றது என்பது நோயாளியும் நிபுணரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

சுற்றத்தினரோ மற்றவர்களோ ஒரு சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன்வந்தால் அதுவே சிறப்பான வகை உறுப்பு மாற்றுதலாகக் கருதப்படுகிறது. இறந்து போனவர்களின் உறுப்புக்கள் சற்றுத் தரம் குறைந்ததாகவே கருதப்படுகின்றன. அமெரிக்க உறுப்பு மாற்று கண்காணிப்பு அமைப்புக்களின் விதிகளின்படி டயலிசிஸ் சிகிச்சை பெறுவோருக்கு மட்டுமே பிணம் சார்ந்த உறுப்பு மாற்றுதலுக்கான காத்திருப்போர் பட்டியலில் இடமுண்டு. இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு வாழும் உறுப்பு வழங்கிகள் (living donor) சார்ந்த சிகிச்சைகளே பெரும்பாலும் வழங்கப்படுகின்றன.

சிறுநீரக நோய் பற்றி மேலும் விவரம் வேண்டுவோர் www.kidney.org, www.aakp.org ஆகிய வலைதளங்களில் இதைப் பெறலாம். இதுவரை அலசப்பட்ட கருத்துக்கள் சிறுநீரக நோய் பற்றிய பொதுக் கருத்துக்களே ஆகும்; எந்த விதத்திலும் இவை தம்மளவில் முழுமையானவை அல்ல. தனி நபர் ஒருவருக்கு மாறுபட்ட அறிகுறிகள் ஏற்படலாம். யோசித்து, எச்சரிக்கையுடன் பொது அறிவைக் கலந்து நடந்து கொள்ளவும் - ஒரு மன நோயாளி மருத்துவரிடம் கூறியது போல "அதுக்கெல்லாம் கிட்னி வேணும் சார்!".


மரு. நிரஞ்சன் சங்கரநாராயணன் (சிறுநீரக நிபுணர்)
மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 


© Copyright 2020 Tamilonline