Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | புதிரா? புரியுமா? | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
கோவிந்தவாடியில் அமர்ந்த குருநாதன்
பராம்பரிய மறுமலர்ச்சிக்கு ஒரு அறக்கட்டளை
- |செப்டம்பர் 2004|
Share:
பாரதத்தின் புராதன ஆலயங்களில் சிதிலமடைந்து கிடக்கும் அரிய சிற்பங்கள், உலோகச் சிலைகள் மற்றும் கோவில் கட்டிடங்களைப் புதுப்பித்துப் பராமரித்துக் காக்கவும், கிராமவாசிகளிடையே ஆலயம் வழிப்பாட்டுக்கான வசதிகளை உண்டாக்கவும் பண்பாட்டுப் பராம்பரிய மறுமலர்ச்சி அறக்கட்டளை (Cultural Heritage Renaissance Truse) உருவாக்கப்பட்டது. சென்னை மந்தைவெளியில் வசிக்கும் ஆஸ்திகர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி. பேராசிரியர் ஆர். ராதாகிருஷ்ணன் தலைமையில் காஞ்சி ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் அறிவுரையுடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

சீரமைப்புப் பணிகளுக்காகத் தேர்ந்தெடுத்த சிதிலமடைந்த நான்கு புராதன ஆலயங்கள் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணம் அருகில் பந்தநல்லூர் - சீர்காழி பேருந்துத் தடத்தில் திருமங்கைச்சேரி மற்றும் நெய்க்குப்பை என்னும் கிராமங்களில் உள்ளன. அவற்றில் பழைமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி ஸ்வாமி ஆலயத்தைப் புதுப்பித்து 2002-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடத்தியுள்ளது.

அதன்பின், இங்குள்ள சுமார் 900 ஆண்டுகள் முன்பு சோழ, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு தற்போது புதர் மண்டியுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் - ஸ்ரீ சொக்கநாத ஸ்வாமி (திருமங்கைச்சேரி) மற்றும் ஸ்ரீ சுந்தரேஸ்வர ஸ்வாமி (நெய்க்குப்பை) ஆலயங்களின் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

மேற்கண்ட ஆலயங்களனைத்திலும் பொதுவான கட்டிடச் சிறப்பு அதன் வெளவால் ஒட்டி மண்டபம் (Brick-Arch Mandapam). நடுவில் பளுவைத் தாங்க ஒரு ஆதாரமும் இல்லாமல் செங்கற்களை (சிமெண்ட் பற்றி நாம் அறிவதற்கு முன்பே) சுண்ணாம்புச் சாந்துடன் சேர்த்து பக்கவாட்டில் மிக நேர்த்தியான முறையில் ஒட்டியே அற்புதமான தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்ட இந்த மண்டபம் நம் நாட்டின் புராதனச் சிற்பம் மற்றும் கட்டிடக் கலைகளின் மிக உயர்ந்த நிலைக்குச் சான்று. குறிப்பாக, ஸ்ரீ வரதராஜர் ஆலயத்தின் முன் மண்டபம் (சுமார் 75 அடி நீளம்) வைகுண்டத்தின் ஆதி உலா மண்டபத்தின் அமைப்பைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

மேற்கண்ட ஆலயங்களின் விமானங்களிலும், மேல்தளத்திலும், மண்டபங்களிலும் வளர்ந்திருந்த அடர்ந்த புதர்களையும் மரங்களையும் விவசாயத்துறை வல்லுனர்களின் உதவியுடன் நவீன பயிர்க்கொல்லி மருந்தினால் அகற்றி, இவ்வாலயங்கள் மேலும் சிதிலமடையாமல் இருக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கிராமத்திலேயே தங்கி அங்குள்ள கிராமவாசிகளுக்கு வேலைவாய்ப்பும் கொடுத்து, அவர்களின் முழு ஒத்துழைப்புடன் நடத்தி வருகின்றனர்.

மரஞ்செடிகள் வளர்ந்து சிதிலமடைந்த நிலையிலிருந்த ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீதாயார் சன்னிதிகளில் முழுமையாகப் புனர் அமைப்புப் பணிகளை முடித்துள்ளது. புதிய மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. புதிய பின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. 500 அடி நீளமுள்ள மதில் சுவரின் ஒருபகுதி செப்பனிடப்பட்டது. மரஞ்செடிகள் வளர்ந்து விரிசல் அடைந்த வெளவால் ஒட்டி மண்டபங்கள், சுமார் 3000 சதுர அடி பரப்பிற்கு ஆலய மேல் தளங்கள் யாவும் செப்பனிடப்பட்டுள்ளன. செலவு இதுவரை ரூபாய் இரண்டு லட்சம்.

சுதைவேலைப்பாடுகள், விமானங்கள், 15 அடி உயர வாயில் கதவுகள், 500 அடி நீளமுள்ள உயர்ந்த மதில் சுவர்கள், சுற்றுப் பிரகாரங்கள் யாவும் பழுதடைந்து புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இவ்வாலயத்திற்கான பாக்கிப்பணிகள் அளவில் பெரியது. இவற்றிற்குச் சுமார் ரூபாய் நான்கு லட்சம் வரை தேவைப்படுகிறது.

ஸ்ரீ சொக்கநாத ஸ்வாமி திருக்கோயில், திருமங்கைச்சேரி

பாண்டிய மன்னன் மனைவி - மங்கையர்க்கரசியார் - தான் பிறந்த சோழ நாட்டில், பாண்டிய நாட்டுக்குச் சொக்கருக்கு ஆலயம் கட்ட விரும்பினார். அங்ஙனம், 900 ஆண்டுகள் முன்பு பாண்டிய மன்னனால் சோழநாட்டில் உருவான பல தலங்களில் திருமங்கைச்சேரி ஸ்ரீ சொக்கநாதர் ஆலயமும் சேரும். விலைமதிக்க முடியாத பல அரிய சிற்பங்களையும், ஐம்பொன் சிலைகளையும் கொண்ட இந்த புராதன ஆலயம், சுமார் 50 வருடங்களாக அடர்ந்த மரங்களும் புதர்களும் சூழப்பட்டு இடிந்த நிலையில் இருந்தது.

இவ்வாலயத்தின் புனரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு நடந்து வருகின்றன. உள்ளூர்வாசிகளும் இத்தகைய புனரமைப்புப் பணிகளுக்கு உடலுழைப்பை உதவி வருகின்றனர். ஆலய வாயில்களில் இரும்புக் கதவுகள் அமைக்கப்பட்டன. புதர்கள், மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டன. 2000 சதுரஅடி சுற்றுப் பிரகாரம் வலுவாக அமைக்கப்பட்டது. பலநூறு ஆண்டுகளாக பராமரிப்பில்லாத அரிய சிற்பங்கள், மேல் தளங்கள், விமானங்கள், சுற்றுச்சுவர்கள் ஆகியவை மூன்று லட்சம் ரூபாய் செலவில் முழுமையாகச் செப்பனிட்டு, நற்பணிகள் முடியும் நிலையில் உள்ளன.

ஆலயத்தின் பிரரோஷகாலம், சஷ்டி வழிபாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதர நற்பணிகளுக்கும், இந்த ஆலய கும்பாபிஷேகத்திற்கும் இன்னும் சுமார் இரண்டு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
ஸ்ரீ சுந்த்ரேஸ்வரஸ்வாமி திருக்கோயில், நெய்க்குப்பை

காவிரியின் உபநதியான, மண்ணியாற்றின் கரையில் பல நூற்றாண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்தச் சிவாலயத்தில் கலையழகுடன் செதுக்கப்பட்ட ஸ்ரீ சுந்தரேஸ்வரர், மற்றும் இறைவி செளந்தரநாயகி ஆகியோரின் விக்ரகங்கள் சமயச்சான்றோர்களால் போற்றப்பட்டவை. அரிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. ஒவ்வோர் ஆண்டும் மூன்று நாட்கள் இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் மீது சூரியனின் கிரணங்கள் விழுகின்றன.

இந்த ஆலயத்தின் வாயில்களில் பாழ்பட்ட மரக்கதவுகளை அகற்றிவிட்டு, விக்ரகங்கள் பாதுகாப்பிற்காக இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் மின்இணைப்பும் பெறப்பட்டது. அம்பாள் சன்னிதியிலும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆலயத்தில் சிதிலமடைந்த கட்டிடக் கலையம்சம் மேலும் பழுதுபடாமல் இருக்க (நிதி வசதியில்லாததால்) தற்காலிகமாகச் சரி செய்யப்பட்டுள்ளது. பராம்பரியமாக நாம் அடைந்த அரிய கலாசாராப் பொக்கிஷங்களை சீரிய முறையில் பராமரிக்க வேண்டுவது மிக அவசியம்.

நடைபெற வேண்டிய பாக்கிப் பணிகளுக்காக சுமார் நான்கு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அன்பர்கள் இதற்கு தாராளமாக நிதி உதவி அளித்து நமது பராம்பரியப் பொக்கிஷங்களைப் பாதுக்காக்க உதவவேண்டும்.

உங்கள் நன்கொடைகளை கிராஸ் செய்யப்பட்ட காசோலை (Check) மூலம் CULTURAL HERITAGE RENAISSANCE TRUST என்னும் பெயரில் கீழ்க்காணும் முகவரிகளில் ஏதேனும் ஒன்றிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

S. Chandramouli
36732, Chene Drive, Sterling Heights, MI-48310. USA

அல்லது

T.R. Nagarajan
31, West Circular Road, Mandaveli, Chennai - 600 028. INDIA

அதிக விவரங்களுக்கு :
http://www.geocities.com/cultureheritage

தொடர்புகொள்ள : email : cultureheritage@yahoo.com
More

கோவிந்தவாடியில் அமர்ந்த குருநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline