|
|
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மறுமலர்ச்சிக் கவிஞர் களுள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடத் தக்கவர். இவர் 1876-ஆம் ஆண்டு முதல் 1954-ஆம் செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள்வரை தமிழகத்தின் நாஞ்சில் நாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர். பாரதியாருக்கு ஆறு ஆண்டுகள் முன்னே பிறந்தவர். பாரதியின் வாழ்வுக் காலம் கவிமணியின் வாழ்வுக் காலத்திற்குள் அடங்குகின்றது.
1882 ஆம் ஆண்டு முதல் 1921 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த பாரதியாரின் கவிதைகள் மக்களிடையே பெற்ற அத்துணைச் செல் வாக்கை கவிமணியின் பாடல்கள் பெற்ற தாகத் தெரியவில்லை. இன்றும் இந் நிலைமையே தொடர்கிறது. இதற்குக் காரணம் இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் எழுந்த உரிமை வேட்கை பாரதியின் உள்ளத்தைத் தாக்கிக் கனல் கக்கும் தேசியப் பாடல்களை வெளிக் கொணர்ந்தது.
விடுதலை அரசியல் வேண்டி நிற்கும் மக்களின் உணர்வுக்கும் சிந்தனைக்கும் சொல், செயல் வடிவம் கொடுத்தது தமிழ்க்கவிதை வரலாற்றில் பாரதி ஒரு திருப்பு மையமாகவே மாறினார். கவிமணி விடுதலைப் போராட்டம் அல்லாத சமயம், சமரச நோக்கு, நீதிநெறி போன்ற அடிப்படைக் கருத்துகளை மையமாக வைத்து அழகிய ஆழமான அமரத் தன்மை மிகு தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார். எனினும் அவர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடாததாலோ அல்லது புரட்சிக் கனல் கக்கும் விடுதலைப் பாடல்கள் பாடாததாலோ பாரதியைப் போற்றிய அளவுக்குக் கவிமணியை மக்கள் போற்றத் தவறிவிட்டனர்.
கவிமணியின் பாடல்கள் சிந்தனை, கற்பனை மற்றும் சொல்லாட்சியில் எளியன, இனியன. அதேநேரம் அவற்றில் ஆழமும் உண்டு. கவிமணி பாடிய பாடல்கள் ஆயிரக்கணக்கானவை. எல்லாப் பாடல்களையும் ஒட்டுமொத்தமாக வைத்துக் கொண்டு எளிமை நிறைந்த பாடல்கள் என வகைப்படுத்த முடியாது. கவிமணியின் சிந்தனைத்தளம் ஆழமானது. கவிஞர் மட்டுமல்ல மிக விரிவான ஆராய்ச்சி நோக்குவயப்பட்ட மனவமைப்பும் கொண்ட படைப்பாளி. பன்முகத்திறன் கொண்ட சிந்தனாவாதி.
கவிமணியின் பாடல்களுள் அடங்கியுள்ள செய்திகளைச் சமூகம், தேசியம் என்ற பரப்புகளில் வைத்து ஆழ்ந்தகன்று பார்க்க முடியும். இதனை மெய்ப்பிக்கும் விதத்தில் கவிமணியைத் திறனாய்வு செய்த டாக்டர் சு.பாலச்சந்திரன் பின்வருமாறு பகுத்தறிகிறார்:
1. சாதி மத பேதங்களைக் களைவது 2. தீண்டாமையை ஒழிப்பது 3. அரிஜனங்களின் நல்வாழ்வு சிறக்க நாட்டு மக்கள் செயற்படுவது 4. நாட்டு ஒருமைப்பாட்டின் அடிப்படையில் நின்று இந்தியப் பெருமக்கள் நாட்டின் உரிமை வாழ்வுக்காகப் போராடுவது 5. விடுதலை இந்தியாவின் முன்னோடி யாக காந்தியடிகளைப் போற்றுவது 6. காந்தியடிகள் வலியுறுத்திய ‘சுதேசிய’ இயக்கத்தை அனைவரும் ஆதரிப்பது 7. சுதேசிய இயக்கத்தின் சின்னமாகிய கதர் ஆடையை உடுப்பது, வேற்று நாட்டு ஆடைகளை வெறுத்தொதுக்குவது, இவை போன்ற திட்டங்களில் தன்னிறைவுக் குறிக்கோளை நோக்கி முன்னேறுவது. 8. கடுமையான உழைப்பினால் அரசியல் சுதந்திரத்தோடு பொருளாதாரச் சுதந்திரத்தையும் உருவாக்குவது.
இவ்வாறு கவிமணியின் உலகம் இயங்கி உள்ளது. சமத்துவம் பற்றிய சிந்தனை அவரது பாடல்களில் ஆழமாக வெளிப் பட்டுள்ளது. மறுமலர்ச்சி வேண்டி நின்ற தமிழ்நாட்டில் கவிமணியின் சிந்தனையும் அதற்கிணைந்து செல்லவே விரும்பியுள்ளது. மனிதனை மனிதன் அன்புடன் நடத்த வேண்டிய கடப்பாட்டை கவிதைகள் மூலம் வெளிப்படுத்தி வந்துள்ளார்.
கவிமணி நாஞ்சில் நாட்டின் தேரூரில் 28.7.1876 அன்று பிறந்தவர். தமிழின் மீது அளவற்ற பற்றுக் கொண்டவர். தமிழ் நூல்களை முறையாகக் கற்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டவர். தேரூரில் படித்துக் கொண்டிருந்த போதே வாணன்திட்டு மடத்தில் வாழ்ந்த சாந்தலிங்கத் தம்பிரானிடம் முறையாகத் தமிழ் படித்தார். பின்னர் கோட்டாறு ஆங்கிலப் பள்ளியில் பயின்றார். எப்.ஏ. வகுப்பில் சிலகாலம் படித்து இடையில் படிப்பை நிறுத்த வேண்டி ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து ஆங்கில நூல்களையும் ஆங்கிலக் கவிதைகளையும் படித்து வந்தார்.
கோட்டாற்றில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் நாகர்கோவில் போதனா முறைப் பாடசாலையிலும் திருவனந்தை பெண் போதனா முறைப் பாடசாலையிலும் உதவியாசிரிய ராகவும் அமர்ந்தார். விஞ்ஞான ஆசிரியராகவே பணி புரிந்தார். ஆனால் இலக்கியக் கல்வியில் தொடர்ந்து தன்னைக் கரைத்துக் கொண்டு வந்தார். மேலும் மேலும் நூல்களைக் கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்களை இயற்றுவதும் இவரது அன்றாட வாழ்க்கையாயிற்று.
தமிழ்க்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் கவிமணியின் பண்பாட்டுணர்ச்சியை மிகவும் ஆழமாக வளர்த்தன. ஓர் அறிவியல் கண்ணோட்டம் இயல்பாக இவரிடம் வெளிப்பட்டது. அத்துடன் நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இயல்பாக வெளிப்பட்டது. அதுகாறுமான மரபுவழிச் சிந்தனை அணுகுமுறைகளுடன் புதிய நவீனப் பாங்குடைய சிந்தனைச் சேகரமும் கவிமணியின் பார்வையை ஆழப்படுத்தியது. அகலப்படுத்தியது.
"கவிமணியின் பாடல்களில் சில சிறு குழந்தைகளின் சிவப்பூறிய மலர் வாயினின்றும் தேனினும் இனியவாய் மதுரித்துச் சுரக்கின்றன; சில நமது பெண்களின் இனிய குரலுக்கு இனிமை அளித்து அவர்களை மாசற்ற இன்ப உலகில் செலுத்துகின்றன; சில இளைஞர்களின் உள்ளத்தைக் கவர்ந்து இடங்கொண்டு அதனை அன்புத் தேனூற மலர்விக்கின்றன; சில அறிவில் முதிர்ந்து, தமிழில் முதிர்ந்து, கவித்துவ உணர்ச்சியிலும் முதிர்ந்து விளங்கும் நல்லறிஞர்களது ஆன்மாவைக் குழைவித்து, இனிமை கனிந்து ரஸம் ஊறிக் களிப்புறச் செய்கின்றன. பல பாடல்கள் பல தலைமுறைகளாகத் தமிழ் மக்களை இன்பூட்டி நிலவுமென்று உறுதி. 'கருணைக் கடல்' முதலிய சில பாடல்கள் என்றும் வாடாமலர்களாய் நித்திய மணங்கமழ்ந்து தமிழன்னையின் திருவடிகளில் ஒளிரும் என்றும் கருதலாம்" எனக் கவிமணியின் கவிதைகளை அனுபவித்துக் கூறியுள்ள பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் கணிப்பு தெளிவானது, நினைக்கத் தக்கது.
தமிழின் குழந்தை இலக்கியத்தைச் செழிக்கச் செய்த கவிமணியின் பணி வரலாற்றில் தனி அத்தியாயம். வருங்கால உலகில் விஞ்ஞான வளர்ச்சிப் போக்கி னையும் குழந்தைகள் மறந்துவிடலாகாது என்ற கருத்துக்கேற்ப கவிதைகளை இயற்றியுள்ளார். |
|
காக்காய்! காக்காய் பறந்துவா, கண்ணுக்கு மை கொண்டுவா கோழி! கோழி! கூவி வா குழந்தைக்குப் பூக் கொண்டுவா.
கோழி! கோழி! வா வா! கொக்கோக்கோ என்று வா; கோழி! ஒடி வா வா; கொண்டைப் பூவைக் காட்டுவா.
தாய் குழந்தையை எழுப்புவதாக வரும் பள்ளியெழுச்சிப் பாடல்களில் பொருளையே எதிரொலிக்கும் இயற்கை ஒலிகளையே கவிமணி அழகுற அமைத்துள்ளார். காகம், கோழி முதலிய பறவைகளைக் குழந்தை விளித்து பாடும் பாடல்களிலும் இவ்வகைச் சொற்கள் இடம்பெறுவதையே மேலே காட்டிய பாடல் உணர்த்துகிறது.
பாங்கி தோழி பங்கஜம்! பாண்டியாட வாராயோ? பாட்டி எனக்குப் பரிசளித்த பல்லாங்குழியைப் பாரிதோ!
மாமா நேற்று வாங்கித் தந்த மாணிக்கத்தைப் பாரிதோ! அத்தை தந்த கட்டிமுத்தின் அழகை வந்து பாரிதோ!
தமிழ் நாட்டில் நீண்ட காலமாயிருந்து வரும் மகளிர் விளையாட்டுகளுள் ஒன்று பல்லாங்குழி விளையாட்டு. சிறுமி ஒருத்தி தன் தோழி பங்கஜத்தைப் பல்லாங்குழி ஆட அழைக்கின்றாள் என்பதையே மேற் குறித்த பாடல் சுட்டுகிறது. இவ்வளவு எளிய செய்தியும் பொருளுமாகவே இச்சிறுமியர் பாடிக் கொண்டு சென்று ஆட்டத்தை முடிப்பது கவிமணிக்குப் பிடிக்கவில்லை போலும். பண்டைத் தமிழ் மகளிர் தமிழகத்தில் மூவேந்தரையும் ஒரு சேர வாழ்த்திய வாழ்த்துக்காதை நினைவுக்கு வருகிறது; வந்ததும் சிறுமியரையும் அங்ஙனமே பாண்டியாடவைக்கின்றார்.
சேரருக்கு மங்களங்கள் செப்பி விளையாடலாம் சோழருக்குச் சோபனங்கள் சொல்லி விளையாடலாம்.
பாண்டியர்க்குப் பல்லாண்டு பாடி விளையாடலாம் உண்ணும் பாண்டியாடலாம் ஓய்ந்து விட்டால் நிறுத்தலாம்!
இவ்வாறு கவிமணியின் சிறப்புகளை கூறிக் கொண்டு செல்லலாம். அது விரிவு பெற்றுவிடும். ஆக குழந்தைப் பாடல்களில் கவிமணியின் அன்பும் பற்றும் ஆழமானது. குழந்தையிலக்கியப் படைப்புகளுக்கு இலக்கியத்தகுதி மட்டுமல்ல பொருள் முறையிலும் கற்பனை வண்ணத்திலும் புதுமை சேர்த்துள்ளார்.
'மலரும் மாலையும்', 'ஆசிய ஜோதி', 'உமர்கய்யாம் பாடல்கள்', 'நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்' ஆகிய நான்கு கவிதைப் படைப்புக்களாலேயே கவிமணி தமிழ்க்கவிதை உலகில் முதன்மை இடம் பெறுகின்றார் 'தேவியின் கீர்த்தனங்கள்' என்ற இசைப் பாடல்களின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பலவற்றை இன்னிசை வித்தகர்கள் பலர் மேடைகளில் விரும்பிப் பாடுவது அந்தத் தொகுப்பின் சிறப்பு என்று கூறலாம். கவிமணியின் சொற்பொழிவுகளும் உரைநடைகளும் ‘கவிமணியின் உரை மணிகள்’ என நூலுருவம் பெற்றுள்ளது. இதன் மூலம் கவிமணியின் சிந்தனைப் பரப்பு எத்தகைய ஆழம் மற்றும் நவீனம் கொண்டது என்பது தெளிவாகிறது. நாஞ்சில் நாட்டு ‘மருமக்கள் வழிமான்மியம்’ சமுதாயச் சீர்கேடான ஒரு பழமையான வழக்கத்தின் தீமையை நீக்குதற்காகப் பாடப்பெற்ற புரட்சிக்காவியம். தந்தையின் உரிமையும் உடைமையும் தம்மக்களுக்குச் சேராது, தங்கையின் புதல்வனுக்கு உரிமையாகிற புதுமையான நடைமுறையால், நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் மிகுந்த அல்லலுக்கு உட்பட்டனர். மன்னர்கள் கொண்டொழுகிய மருமக்கள் தாயமுறை, கேரள மக்களை மட்டுமன்றி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களையும் பற்றிக் கொண்டது. இதனை அழித்தொழிக்கக் கவி ஆயுதம் ஏந்தினார் கவிமணி. அதன் விளைவே 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்'!
"ஒரு கவிதைக்கு விஷயம் எதுவாயுமிருக்கலாம், ஆனால் எடுத்துக் கொண்ட விஷயத்தில் ஆழ்ந்த ஆர்வம் இருக்க வேண்டும் அதாவது ஆசையோ வெறுப்போ அழுத்தமாயிருக்க வேண்டும். உணர்ச்சியானது சொல், இசை, கட்டுக்கோப்பு ஆகியவற்றுடன் ஒத்த உருவத்தில் வெளி வந்து விட்டதென்றால் அதுவே கவி. அது அற்புத சிருஷ்டிதான். இப்படி எழுந்த ஒரு கவிக்காக, அந்த பாஷைக்குரியவர் ஒரு விழாக் கொண்டாடி விடலாம்! தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் இவ்விதமான கவிகள் எத்தனையோ பாடியிருக்கிறார்கள்” என ரசிகமணி டி.கே.சி. ஆய்ந்து அனுபவித்து அளந்து கூறியுள்ள மதிப்பீடு எண்ணிப் பார்க்கத்தக்கது.
எவ்வாறாயினும் இலக்கிய நோக்கோடு கவிமணியின் படைப்புகளைப் பயிலுந்தோறும் அவர் பல்வகை இலக்கியத்திறனுங் கொண்ட ஓர் அற்புதக் கவிஞர் என உணரலாம். அவரது இலக்கியத் தேட்டத்தின் வழியே இழையோடி வந்துள்ள சிந்தனைச் சேகரங்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுதுதான் அவரது ஆளுமை மலர்ச்சி எத்தகையது என்பது தெள்ளத் தெளிவாகும். தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் தமிழ்க் கலைக்கும் நிலையான ஆக்கமான பணி களைச் செய்யத்தூண்டும் 'தமிழ்ப் பிரக்ஞை' கவிமணியின் உள்ளத்தே இருந்துள்ளது.
கவிமணியின் தமிழார்வம் மற்றும் சிந்தனை விகசிப்பு 21ம் நூற்றாண்டின் தமிழ்ச்சிந்தனை மரபுக்குப் புத்தொளி பாய்ச்சும். ஆகவே நாம் கவிமணியின் படைப்புகளுடன் 'ஆழ்ந்தனுபவம்' கொள்வது இன்றைய அவசரப் பணியாகும்.
தெ.மதுசூதனன் |
|
|
|
|
|
|
|