Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
கவிதைப்பந்தல்
- |நவம்பர் 2004|
Share:
மதுமிதா கவிதைகள்

சோன்பப்படிக்காரன்

வீட்டிற்குத் திரும்பும்
அனைத்து வாகனங்களின் ஒலியும்
சன்னமாய்
அடங்கும் வேளையில்
டிங் டிடிங் டிங் டிடிங் டிங் டிடிங் என
வண்டியைத் தள்ளிக் கொண்டு வருகிறான்
தூண்டிய கூண்டு வெளிச்சத்துடன்
சோன்பப்படிக்காரன்

வீட்டின்
வலப்பக்கமிருந்து
இடப்பக்கமாய் கடந்தபடி
கிராமமாயும் நகரமாயும் இல்லாத
இந்த நகரில் தினமும்
யாரேனும் பதிவாய் வாங்குவார்களோ
இரவில் இந்நேரம் வரையிலும்
காத்திருந்து சோன்பப்படியை

சோன்பப்படிக்காரனின் வீடு
அருகிலோ தூரமோ
அவன் வரும் வரையிலும்
அவன் வருகையினை எதிர்பார்த்து
அவனுக்காக மட்டுமே
காத்திருக்கும் எவரேனும் இருப்பரோ
அவன் வீட்டில்

சோன்பப்படிக்காரனுக்கு
மனைவி குழந்தைகள் இருந்தால்
எப்போதேனும்
ருசித்துப் பார்த்திருப்பார்களா
சோன்பப்படியை

இந் நேரத்தில்
தொலைக்காட்சியின் சேனலை மாற்றிக்கொண்டோ
புத்தகம் வாசித்துக் கொண்டோ எழுதிக் கொண்டோ
உறவு கொண்டோ உறங்கிக் கொண்டோ
இருக்கும் உலகில்
பூட்டிய கதவின் அருகில் அமர்ந்து
சற்றே தெரியும் இடைவெளியில்
தெருவிளக்கு உமிழும் ஒளியில்
கூண்டு வெளிச்சத்துடன் செல்லும்
அவனை அவதானிப்பதை அறியாது
தொடர்ந்து கடந்து செல்வான்
சோன்பப்படிக்காரன்

தினமும் கேள்விகள் பொதிந்த
எண்ணங்களைத் தூண்டியவண்ணம்

******


ஒப்படைத்தல்

பின்னோக்கிக் கடந்து
பயணிக்க
பாதைகளில்லை

வேகத்தோடு இணைந்து
முன்னேற
திசைகளில்லை

கொடியதும் இனியதுமான
காலத்தின் கரங்களில்
வாழ்வினை
ஒப்படைத்து விட்டேன்

******


தாய்மை உணர்வில்

அதிகாலை அடுப்பங்கரை ஆசையாய்
அனல் குளிக்க அழைக்கும்
நண்பகல் சாலையும் இரயில்பாதையும்
இன்பம் ருசித்திட விளிக்கும்
மாலை மதியை மயக்கிய வண்ணம்
கிணறு வாவாவென விரிந்திருக்கும்
இரவு விழித்து
மல்லாந்து கிடைக்கையில் மின்விசிறி
சுருக்குடன் அணைத்துக் கொள்ள
சுருதி இசைத்து அழைத்திடும்
எல்லாவற்றையும்
முயல நினைத்துத் தவிர்க்கும்
மனம்
மொத்த உலகில்
தனித்துத் தவிப்பாயெனும்
தாய்மை உணர்வில்...

******


உன் வரவு

மலரைக் கேட்டுக் கொண்டா
மணம் பரவும்
எப்படியோ உன் வரவு
மறைக்க முடியாததாகிறது
காட்டிக் கொடுக்கும்
காரணிகள் பல
கண்டு கொள்ளும்
கண்களும் உள
வழியனுப்பவும்
வரவேற்கவும்
வேறு வழியின்றி
வேட்கை தீர்க்க உதவும்
அருமருந்தாய்
உதிரும் வார்த்தைகள் சில
பாடல்கள் சில
உயிர்ப்புடன் வாழ வைக்கும்
நீ அறியாது
காட்டிக் கொடுக்கும் காரணிகள்

******
உன்னை உச்சரித்து...

ஒவ்வொரு எழுத்தாய்
எழுத்துக் கூட்டிச் சொல்லி
பின் உன் பெயரை
முழுவதுமாய் உச்சரித்து
இனிமையை ருசித்து
உயிர்ப்புடன் வாழும் மனம்

ஒவ்வொரு எழுத்தாய்
எழுத்துக் கூட்டிச் சொல்லி
பின் என் பெயரை
முழுவதுமாய் நீ உச்சரிக்கக்
கேட்டு ரசிக்கவும் காத்திருந்து
உயிர்ப்புடன் வாழும் மனம்
******

தொடருமா?

இடிக்குப் பின்னே மின்னல்
இருளுக்குப் பின்னே ஒளி
புயலுக்குப் பின்னே அமைதி
போதைக்குப் பின்னே தெளிவு

இன்பத்தின் பின்னே துன்பம்
துன்பத்தின் பின்னே இன்பம்
உறவுக்குப் பின்னே பிரிவு
பிரிவுக்குப் பின்னே புது உறவு

தொடரும்
பகையின் பின்னே பாசம்
தொடரும்
துரோகத்தின் பின்னே பாடம்
தொடரும்
கேள்விக்குப் பின்னே கேள்வி
தொடருமா
தொடர்ந்து கிடைக்குமா
நேசத்திற்கான பதில்
******

நாளை முதல் எழுதமாட்டேன்

நாளை முதல் எழுதமாட்டேன்
நாளை முதல் எழுதமாட்டேன்
நாளை முதல் எழுதமாட்டேன்
என

குடி தேர்ந்த
அல்ல
கை தேர்ந்த
குடிகாரன் போல் கூறிய வண்ணமே
ஒவ்வொரு இரவும் கழிகிறது

தாகமின்றி எழும்
ஒரு விடியலின் எதிர்பார்ப்போடு.
Share: 




© Copyright 2020 Tamilonline