Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
பொது
தெரியுமா?
காதில் விழுந்தது......
- நெடுஞ்செவியன்|நவம்பர் 2004|
Share: 
தென்கலிஃபோர்னியா இந்துக் கோவிலுக்கு எதிர்ப்பு

சான் பெர்னார்டினோ மாவட்டத்தில் சினோ ஹில்ஸ் பகுதியில் மாபெரும் இந்துக்கோவில் கட்ட நகரத்திடம் அனுமதி கேட்டிருந்தது பாப்ஸ் (BAPS) என்ற இந்து அமைப்பு. கோவில் எழுந்தால் இந்துக்கள் வந்து குவிந்து சினோ ஹில்ஸ் ஒரு மூன்றாம் உலக நகரமாக மாறிவிடும். பயங்கரவாதிகள் பதுங்குமிடமாகிவிடும். போக்குவரத்து நெரிசல் கூடிவிடும். அமைதியான நாட்டுப்புறச் சூழல் சிதைந்து விடும் என்கிறார்கள் கோவில் எதிர்ப்பாளர்கள். "இந்துக் கோவில் நமது மரபைச் சார்ந்ததல்ல, இது நம்முடைய சமுதாயமும் இல்லை" என்றார் ஒருவர். 1989ல் தொடங்கிய இந்தக் கோவில் திட்டம் முதலில் நகர மையத்தில் வாங்கிய இடத்தை நகர சபை எடுத்துக் கொண்டபின், ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தொழிற்சாலைகளுக்கும், கழிவுச் சுத்தகரிப்பு ஆலைக்கும் இடையில் உள்ள 20 ஏக்கர் வயலை ஏற்றுக் கொண்டது. அங்கேயும் கோவில் கட்டுவதில்தான் இந்தச் சிக்கல். சான் ஹோசே நகரத்தில் சீக்கியர்கள் 10 ஆண்டுகளாக இது போன்ற எதிர்ப்புகளுடன் போராடி ஆகஸ்டில் தான் ஒரு கோவிலைத் திறந்து வைத்தார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்

*****


கறிவேப்பிலை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்

கிங்ஸ் கல்லூரி லண்டன் விஞ்ஞானிகள் குழு இந்திய உணவில் பெரிதும் புழங்கும் கறிவேப்பிலை மாவுப்பொருள் (ஸ்டார்ச்) சக்கரையாகச் (குளுகோஸ்) சிதைவதைக் கட்டுப்படுத்தும் வல்லமையுள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், ஏற்கனவே கறிவேப்பிலையைச் சாப்பிடுபவர்களைப் போல் அல்லாமல் புதிதாக இதை மருந்தாக உட்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

லண்டன் கார்டியன்

*****


அற்புதம் : விபத்தில் அடிபட்ட இளம்பெண் சோறு தண்ணீர் இல்லாமல் 8 நாட்கள் பிழைத்திருந்தாள்.

17வயது இளம்பெண் லாரா ஹேட்ச், சியாட்டல் நகரத்தின் அருகே நடந்த கார் விபத்தில் மலையிடுக்கில் மாட்டிக் கொண்டார். 8 நாட்களாகச் சோறு, தண்ணீர் இல்லாமல் வாடிக்கொண்டிருந்தார். காவல்துறை இவர் வீட்டை விட்டு ஓடிப் போயிருப்பார் என்று அலட்சியமாக இருந்தது. ஆனால் குடும்ப நண்பர் திருமதி ஷா நோர் கடவுளே தன் கனவில் வந்து லாரா இருக்கும் இடத்தைச் சொன்னதாக நம்பினார். ஒரு குன்றுக்கு அருகில், அடர்த்தியான புதருக்கு இடையில், யார் கண்ணுக்கும் தெரியாத இடத்தில் விழுந்திருந்த காரைத் தேடிக் கண்டுபிடித்தார் ஷா நோர். தலைக்காயம், எலும்பு முறிவு, உடைந்த கால், முகக்காயம் எல்லாம் இருந்தாலும், லாரா முற்றிலும் தேறிவிடுவார் என்கின்றனர் மருத்துவர்கள்.

சியாட்டல் டைம்ஸ்

*****


இரண்டாம் மொழி கற்பதால் மூளை வளர்ச்சி

இரண்டு மொழி பேசுபவர்களின் மூளையில் பழுப்புப் பொருள் (கிரே மேட்டர்) கூடுதலாக இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள் மூளை விஞ்ஞானிகள். இளம் வயதிலேயே இரண்டாம் மொழியைக் கற்பவர்களின் மூளையில் பழுப்புப் பொருள் இன்னும் கூடுதலாக இருக்கிறது. மொழித்திறனுக்கும் பழுப்புப் பொருள் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இளம் வயதிலேயே இரண்டாம் மொழி கற்பது நல்லது. மூளை அதற்கேற்ப வளர்கிறது. வயதான பிறகு இந்த மூளை வளர்ச்சி குறைகிறது.

எம்.எஸ்.என்.பி.சி.

*****


அதிபர் புஷ் (கெர்ரியுடன் விவாதிக்கையில்) 21ஆம் நூற்றாண்டு வேலைகளுக்குத் தேவையான பயிற்சியளிக்க சமூகக் கல்லூரிகளுக்கு மான்யம் வழங்குவதைப் பற்றிப் பேசினார். இந்தியர்களிடமோ, ரஷ்யர்களிடமோ தம் வேலையைப் பறிகொடுத்த கணினி மென்பொருள் வல்லுநர்கள் 21ஆம் நூற்றாண்டு வேலைக்கு என்ன பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் அதிபர் புஷ்?

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆசிரியருக்குக் கடிதம்.

*****
அமெரிக்கத் தேர்தல்கள் நம் பள்ளிப் பாடநூல்கள் பறைசாற்றும் அளவுக்கு நேர்மையானவை இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். 1888ல் குரோவர் கிளீவ்லண்டும், பெஞ்சமின் ஹாரிசனும் கள்ள ஓட்டுப் போடக் கூலிக்கு ஆள் எடுத்தது மட்டுமல்ல, மாற்றுக் கட்சிக்கு விழுந்த ஓட்டுக்களையும் அழித்துக் கொண்டிருந்தார்கள். 1948-ல், லிண்டன் ஜான்சன் செனட் தேர்தலில் வெற்றி பெற ஆலிஸ், டெக்சாஸில் பெட்டி நிறையக் கள்ள ஓட்டுகளைத் திணித்ததும் ஒரு காரணம். 1960 அதிபர் தேர்தலில் கென்னடி நிக்சனைத் தோற்கடிக்க செத்தவர்கள் ஓட்டுக்களும், திருட்டு வாக்குக் கருவிகளும் துணை புரிந்தன.

நியூஸ்வீக்

*****


"ஏன் என்னால் ஜோர்ஜ் புஷ்ஷுக்கு வாக்களிக்க முடியாது" - நியூயார்க் போஸ்ட் தலையங்க எழுத்தாளர்.

40 ஆண்டு பனிப்போர்க் காலத்தில் நம்மைப் பலமுறை அழிக்கக்கூடிய பேராற்றல் பெற்றிருந்த சோவியத் யூனியனை எதிர்த்தபோதுகூட குடிமை உரிமைகளை இன்று இருக்கும் அளவுக்குக் குறைக்கவில்லை. நான்காம் உலகப்போர் என்று சிலர் அழைக்கும் இன்றைய போராட்டத்தில், சோவியத் யூனியனை விட மிகக் குறைவான வல்லமையுள்ள எதிரியைக் காரணம்காட்டி அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிறது புஷ் அரசு.

நியூ ரிபப்ளிக் இதழில் வலதுசாரி ரிபப்ளிகன் ராபர்ட் ஜோர்ஜ்

*****


அமெரிக்கர்கள் அனைவருக்கும் குறைந்த செலவில் சுகாதார வசதி அளிக்கிறோம் என்று வாஷிங்டனில் திட்டம் மாற்றித் திட்டம் கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒன்று விடாமல் எல்லாமே தவறி விட்டன. குறைவான சுகாதாரக் காப்புறுதி உள்ளவர்கள், காப்புறுதியே இல்லாதவர்கள் எண்ணிக்கை முன்னெப்போதையும் விடக் கூடியிருக்கிறது. செலவும் கட்டுக்கடங்காமல் திமிறிக்கொண்டிருக்கிறது. இந்தத் திட்டங்களின் அடிப்படை ஓட்டையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. சந்தை அடிப்படையில் லாபநோக்குடன் செயல்படும் மருத்துவத்தால் அரசியல் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடிவதில்லை.

சோளப்பொரி, அழகுச் சாதனங்கள், ஊர்திகள், கணினிகள் போன்ற நுகர்பொருட்களை விற்க வல்ல சந்தையால், சுகாதார வசதி வழங்க முடிவதில்லை. அது இதய அறுவைச் சிகிச்சை செய்து பணம் செய்யும் திறமையுள்ளது. அதைத் தவிர்த்து, நோயையும், பிணியையும் தடுக்க முனைய வேண்டும். ஆனால், நோய்த்தடுப்பில் லாபமில்லை, நோய்க்கு மருந்தில்தான் லாபம். அதனால் சந்தைக்கும் நல்ல சுகாதார முறைக்கும் முரண். இந்தநிலை லாபம் இல்லாத ஃபுளூ காய்ச்சல் தடுப்பு மருந்தைத் தேவையான அளவுக்கு உற்பத்தி செய்யாததால் விளைந்த பற்றாக்குறையில் தெளிவாகத் தெரிகிறது.

டானால்ட் பார்லெட், ஜேம்ஸ் ஸ்டீல், டைம் இதழ் ஆசிரியர்கள் "கவலைக்கிடமான நிலை : அமெரிக்கச் சுகாதாரம் பெரிய வியாபாரமாகவும் கெட்ட மருத்துவமுமானது எப்படி" என்ற நூலில்.

நெடுஞ்செவியன்
More

தெரியுமா?
Share: