Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
நேர்காணல்
திரு. பிரபஞ்சன்
நடனக்கலைஞர் ராதிகா சூரஜித்
- கேடிஸ்ரீ|நவம்பர் 2004|
Share:
Click Here Enlargeபாரம்பரிய பரதநாட்டியத்தை நடனம் அறியாதவர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் ஆசை...

கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக 'தக்க திமித்தா' என்கிற நடன நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சியில் நடத்தி வரும் ராதிகா சூரஜித், பிரபல 'மூன்று சகோதரிகளி'ல் (trio sisters) மூத்தவர்.

பாரம்பரிய நாட்டியத்தின் இலக்கணம் மாறாமல், இன்றைய காலத்திற்கேற்ப, புதுமையான சிந்தனைகளுடன் நாட்டிய நிகழ்ச்சிகளை தயாரித்து அதில் சாதனையும் படைத்து வருகிறார். சின்னத்திரையின் மூலம் பல லட்சக்கணக்கான இல்லங்களின் வரவேற்பறைக்கு நம் பாரம்பரிய நடனத்தை இட்டுச் செல்லும் பணியை மேற்கொண்டிருக்கும் ராதிகா திரைப்படங்களிலும் நடன அமைப்புச் செய்கிறார்.

இந்திரா படத்தில் தொடங்கி இவர் நடனம் அமைத்துப் பல வெற்றிப் பாடல்கள் வந்துள்ளன. 'டிரையோ' நாட்டியப் பள்ளியைச் சென்னையில் அமைத்து நாட்டியப் பயிற்சி அளிப்பது, நாட்டிய நாடகங்களைத் தயாரிப்பது என்று எப்போதும் பம்பரம் போல் சுழல்கிறார் ராதிகா. அவரைச் சந்தித்தபோது.....

எங்கள் பெற்றோருக்கு மூன்று பெண்கள். 'பெண் குழந்தைகளா?' என்று சொல்பவர்கள் மத்தியில் எங்களுடைய பெற்றோர் வேறுபட்டவர்கள். 'லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்று மூவருமே எங்கள் வீட்டில் வந்து பிறந்திருக்கிறார்கள்' என்று சொல்வார்கள். பரத நாட்டியத்தின் மேல் என் அம்மாவிற்கு ஆர்வம் அதிகம். ஆனால் அம்மாவால் நாட்டியம் கற்றுக்கொள்ளமுடியவில்லை. அதை எங்கள் மூவர் மூலம் நிறைவேற்றிக் கொள்ள நினைத்தார்.

அந்தச் சமயத்தில் எங்கள் வீட்டிற்கருகில் புகழ்பெற்ற நடனக்கலைஞர் தனஞ்ஜெயனும், சாந்தா தனஞ்ஜெயனும் வசித்து வந்தனர். கலா§க்ஷத்திராவிலிருந்து நடனம் கற்றுக்கொண்டு, தனியாக நடனப்பள்ளி நடத்த ஆரம்பித்த தனஞ்ஜெயன் தம்பதிகளிடம் அம்மா எங்கள் மூவரையும் அழைத்துச் சென்றதுதான் எங்கள் நாட்டியத்திற்கான ஆரம்பம். சுமார் 15 வருடங்கள் தொடர்ந்து அவர்களிடம் நடனம் கற்றுக்கொண்டோம்.

என்னதான் அழகாக நாங்கள் நாட்டியம் ஆடினாலும் என் அம்மாவும், அப்பாவும் லேசில் திருப்தியடையமாட்டார்கள். எங்களின் முதல் விமர்சகர் எங்கள் பெற்றோர்.

அரங்கேறுமுன்னரே நூறு நிகழ்ச்சிகள்!

அரங்கேற்றத்திற்கு முன்னாலேயே தனஞ்ஜெயன் அவர்களுடன் பல நிகழ்ச்சிகளில் ஆடி இருக்கிறோம். அரங்கேற்றம் எங்களது 100வது நிகழ்ச்சியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். கலாமந்திர் விஸ்வநாதன் தலைமையில் சென்னை ஆர்.ஆர். சபாவில் நடைபெற்ற எங்கள் அரங்கேற்றம் கைதேர்ந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சி போல இருந்ததாகச் சொல்வார்கள்.

நிறைய நிகழ்ச்சிகள், பல மேடைகள் என்று எங்கள் நாட்டியம் தொடரவே பத்திரிகைகளில் நாங்கள் உலா வர ஆரம்பித்தோம். நாட்டியத்தில் திருவாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினிக்குப் பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளின் பரதநாட்டியம் என்பது எங்கள் நாட்டியம்தான் என்று பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. மூவரும் சேர்ந்து 1000 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியிருக்கிறோம். இந்தியா தவிர இலங்கை, நைஜீரியா, ஜெர்மனி, ரஷ்யா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், தென் அமெரிக்கா என்று பல நாடுகளில் நாட்டியம் நிகழ்த்தியிருக்கிறோம். தென்அமெரிக்காவிற்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றோம். அந்த நிகழ்ச்சி ICCR மூலம் நடைபெற்றது.

ஈராக்கில் நாங்கள் ஆடியதுதான் எங்களால் மறக்க முடியாது. ஏனென்றால் தொங்கும்தோட்டம் என்றழைக்கப்படும் 'பாபிலோனியா'வில் ஆடினோம். 36 நாடுகள் அதில் பங்கேற்றன. அதில் எங்களைச் சிறந்தக் கலைஞர்கள் என்று தேர்வு செய்தார்கள். அது எனக்குப் பெருமையான விஷயம்.

இதற்குப் பிறகு சகோதரிகள் நாங்கள் மூவரும் சேர்ந்து 'ட்ரையோ' என்கிற நாட்டியப் பள்ளியை சென்னையில் எங்கள் வீட்டில் தொடங்கினோம். தனஞ்ஜெயன் தம்பதிகளிடம் நாங்கள் கற்றுக்கொண்ட பயிற்சிகளும், அனுபவங்களுமே எங்களுக்கு நடனப்பள்ளியை அமைத்து நாட்டியம் கற்றுக் கொடுக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் அளித்தது.

பாரம்பரிய நாட்டிய மரபுகளை மீறாமல் புதிய சிந்தனைகளில் நாட்டிய நிகழ்ச்சிகளை உருவாக்கத் தொடங்கினோம். ஒரு பாரம்பரிய நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினால் அடுத்துப் புதுமையான சிந்தனைகளுடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினோம்.

முதலில் சங்க இலக்கியத்திலிருந்து ஒரு நிகழ்ச்சி தயாரித்தோம் என்றால் அடுத்து வைரமுத்து அவர்களின் 'பெண்' என்கிற கருவை வைத்து நிகழ்ச்சி வழங்கினோம். பெண்களைப்பற்றி, மருத்துவத்தைப் பற்றி, சுற்றுப்புறச்சூழலைப்பற்றி என்று பல சமூக விழிப்புணர்வுமிக்க கருத்துகளை எடுத்துக்கொண்டோம்.

நாங்கள் அதிக அளவில் குழு நடனங்களையே தயாரித்து வழங்கினோம். இது நடனம் கற்கும் குழந்தைகளுக்கு மேடைகளில் நாட்டியம் ஆடுகிற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அவர்களுக்குப் பல மேடைகளில் ஆடிய அனுபவமும் கிடைக்கிறது.

காமிரா என்னும் கண்

பாரம்பரிய நடனங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது, நேரிடையாக சபா அரங்கில் பார்க்கையில் ஏற்படும் உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏன் ஏற்படுத்தவில்லை என்று ஒரு கேள்வி என்னுள் பிறந்தது? ஒரு சினிமாவோ, தொலைக்காட்சித் தொடரோ பார்வையாளர்களை அழவைக்கும் போது, நடனம் மட்டும் ஏன் அழ வைக்கவில்லை? இந்த விஷயம் என்னை அதிகம் யோசிக்க வைத்தது. இதை என் ஆய்வுக்கான கருவாக எடுத்துக் கொண்டேன். 'காமிராவின் வழியாக நடனம்' என்கிற தலைப்பில் நான் மேற்கொண்ட ஆய்வு எனக்குப் பல உண்மைகளை அறிய வைத்தது.

எனக்கு ஊடகமும் தெரியும். நடனமும் தெரியும். இரண்டும் தெரிந்த நான் நடனத்தை ஊடகத்தின் மூலம் எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக புரிந்துக் கொண்டேன். ஒரு காட்சியைக் காமிராவின் மூலம் எப்படி அழகாகப் படைக்க முடியும் என்கிற நுணுக்கத்தைப் புரிந்துக் கொண்டேன். இதற்குத் தேவை சில மாற்றங்கள்.

லட்சக்கணக்கான பார்வையாளர்களைச் சென்றடைகிற பரத நாட்டியத்தில் இத்தகைய சின்னச்சின்ன, பாரம்பரியத்தை மீறாத, சில மாற்றங்கள் தேவை. தொலைக்காட்சி காமிராதான் பார்வையாளர்களின் கண். ஊடகங்களில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி நடனம் ஆடுகிறபோது அது அற்புதமாக இருக்கும்.

என்னுடைய இந்த முயற்சிக்கு பலவிதமான எதிர்ப்புகளும், விமர்சனங்களும் ஆரம்பத்தில் நான்கு முனைகளிலிருந்தும் வந்தன. ஆனால் நான் என்னுடைய வாதங்களை, கருத்துகளை செயல்விளக்கவுரைகளின் மூலம் ஆணித்தரமாகச் சொல்லிப் புரியவைத்திருக்கிறேன்.

தொலைக்காட்சிகளில் மேற்கத்திய இசை, சினிமா நடனம் போன்றவைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பரதம் என்கிற அழகிய கலைக்கு அதிகம் கொடுக்கப்படுவதில்லை. பரதம் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்குத் தொலைக்காட்சியில் அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லையே, ஏன்? சினிமா நடனத்திற்கும், மேற்கத்திய நடனத்திற்கும் வரும் ரசிகர்கள் கூட்டம் பாரம்பரிய நடனத்திற்கு வருவதில்லை, ஏன்? இதுபற்றிப் பலரிடம் பேசினேன். பேசியதில் அவர்களுக்குச் மற்ற நடனங்கள் புரிந்தவிதத்தில், பாரம்பரிய நடனம் புரியவில்லை என்பது புரிந்தது.

இதன்விளைவாக பரதநாட்டியத்தை எளியவரும் புரிந்துக் கொள்ளும் விதத்தில், ரசிக்கும் விதத்தில், மாற்றியமைக்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாக, முதன் முதலாக ஜெயா தொலைக்காட்சியில் 'தீம் தரிகிட' என்கிற தொலைக்காட்சித் தொடரைத் தயாரித்தேன். அந்நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

சரவணபவன் மினிடிபன்தான் எனக்கு 'தீம் தரிகிட' நிகழ்ச்சியைத் தயாரிப்பதற்கு உந்துதல் என்று சொல்வேன். இதில் குட்டி தோசை, குட்டி இட்லி, கொஞ்சம் கேசரி என்று எல்லாவற்றையும் வைத்திருப்பார்கள். எல்லாவற்றையும் சாப்பிட்ட உணர்வு சாப்பிடுபவர்களுக்கு ஏற்படும். அதுபோல் நடனமே தெரியாதவர்களுக்கு எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் கொடுக்கலாம் என்றெண்ணி உருவானதுதான் இந்நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி லண்டன் சி தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.
பானுப்ரியாவும் ஷோபனாவும்

'தீம் தரிகிட'வைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக 'தக்க திமித்தா' நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறோம். முதன்முதலாக நடிகை பானுப்ரியாவை வைத்துச் செய்தேன். பாமரனுக்கும் இந்நிகழ்ச்சியைக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கம் நிறைவேற வேண்டுமானால் எல்லோரும் அறிந்த திரைமுகங்களை வைத்துச் செய்யலாம் என்று தோன்றியது. ஒவ்வொரு வாரமும் ஞாயிறு காலை 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. அவரைத் தொடர்ந்து ஷோபனா செய்தார்கள்.

முதலில் பாரம்பரிய நடனம் ஆடுவார்கள். அடுத்து ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி நிகழ்ச்சி. எளிமையான கேள்விகள். பார்ப்பவர்களும் இந்த கேள்விகள் மூலம் கற்றுக்கொள்வார்கள். ஆக இந்த நிகழ்ச்சி பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமல்லாமல் நடனத்தைப் பற்றிய அறிந்து கொள்ளும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது.

சென்னையில் உள்ள பெரிய நடனக் கலைஞர்கள், இசைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்று எல்லோரையும் அழைத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்திருக்கிறேன். இன்று 'தக்க திமித்தா' மூலம் சின்னத்திரையில் பரதநாட்டியத்தை எல்லோர் வீட்டிற்கும் கொண்டு வந்திருக்கிறோம் என்று பெருமையுடன் சொல்கிறேன். ஐரோப்பிய நாடுகள் முழுவதும் என்னுடைய 'தக்க திமித்தா' போகிறது என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். வாரம் ஒரு பிரபலம் வருவார்கள். அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சச்சு, ஐஸ்வர்யா என்று பலர் விருந்தினராக வருகிறார்கள். இதுவரை 600 குழந்தைகள் பங்கேற்றிருக்கிறார்கள்.

இனி வருகிற வாரங்களில் பிரபல நடனக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் மூலம் முதன்முறையாகத் தொலைக்காட்சிவழியே நடனத்தைக் கற்றுக் கொடுக்கப் போகிறோம். நடனமே தெரியாதவர்கள்கூட வாரம் ஒரு நடனஅசைவைக் கற்றுக்கொள்ளலாம்.

சுகாசினி கூப்பிட்டார்

நடனத்தை கற்றுக்கொடுப்பது, வடிவமைப்பது, மேடையேற்றுவது என்று எல்லாவற்றையும் நாங்கள் மூவரும் செய்தோம். ஆனால் எனக்குச் சினிமாமேல் தீராத காதல் இருந்தது. நான் ஒரு சினிமா பைத்தியமாக இருந்தேன். சினிமாவில் இயக்குநராக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன்.

எல்லா சினிமாவையும் நான் பார்ப்பேன். தரமான சினிமாக்களை அதிகம் விரும்பிப் பார்ப்பேன். அவை என்னுள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அந்தக் காலத்தில் 'ஊட்டி வரை உறவு' படத்தில் வரும் 'பூமாலையில் ஓர் மல்லிகை' பாடல் என்னை ரொம்பவும் பாதித்தது. இந்தப் பாட்டிற்கு நடனஅசைவுகள் எதுவும் இருக்காது. ஆனால் காமிராவின் அசைவுகள் மூலமே அற்புதம் செய்திருப்பார்கள். அப்போதுதான் காமிராவின் மூலம் சினிமாவில் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்பதை தெரிந்து கொண்டேன்.

ஒருநாள் எனக்கு சுகாசினி மணிரத்தினத்திடமிருந்து அழைப்பு. 'இந்திரா' படத்தில் குழந்தைகளை வைத்து ஒரு நடனம் செய்ய வேண்டும் என்றார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான 'நிலா காய்கிறது' பாடலுக்கு நான் நடனம் அமைத்துக் கொடுத்தேன். இதற்கு நான் 'சிறந்த நடன இயக்குநர்' விருது பெற்றேன். அதன்பிறகு வரிசையாக பாரதி, சொர்ணமுகி, அழகி, சொல்ல மறந்த கதை, இவண், தென்றல், கனவுமெய்ப்பட வேண்டும் என்று படங்களின் எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது. இன்றும் தொடர்கிறது. 'கனவு மெய்ப்பட வேண்டும்' படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு அம்மாவாக சுதா ராணி ரகுபதி நடித்தார்கள். இதில் சதிர்கச்சேரி நடக்கும் காட்சி அற்புதமான ஒன்று. புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதனின் 3 பாடல்களுக்கு 'யுவன்' படத்திற்காகப் பணியாற்றிய அனுபவமும் உண்டு.

மறக்கமுடியாத சௌந்தர்யா

சமீபத்தில் விமானவிபத்தில் மரணமடைந்த நடிகை செளந்தர்யாவை என்னால் மறக்க முடியாது. எனது நடன இயக்கத்தில் சில படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவரின் கடைசிப் படமான 'ஆத்மமித்ரா'வில் அவருக்கான நடனக்காட்சி ஒன்றை அமைத்துக் கொடுத்தேன். நல்ல நடிகை, எதைச் செய்தாலும் அதில் முழு அளவில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிற குணம் கொண்டவர் செளந்தர்யா. படத்தின் நடனக் காட்சியில் ஒவ்வொரு அசைவிலும் அவரின் அலாதியான ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து நான் வீடு வந்த இரண்டு நாட்களில் அவரின் மரணச்செய்தி வந்தது.

பல பட்டங்கள். பல விருதுகளை நான் பெற்றுள்ளேன். கலா சேவா பாரதி, பரதகலா விபூஷணா, நிருத்ய வித்யா ரத்னா, நாட்டியப் பேரொளி, நாட்டிய பூரணா, சிறந்த நாட்டிய ஆசிரியர் விருது என்று பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.

நேர்காணல்: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி

******


'நிஜங்கள் நிழல்கள்'

கடந்த வருடம் பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் ஸ்கேன் டெக்னாலஜியைப் பற்றி 'நிஜங்கள் நிழல்கள்' என்கிற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியைப் பல்லூடகத்தில் (Multimedia) வழங்கினோம்.

ஸ்கேன் மூலமாக வயிற்றில் இருக்கும் குழந்தையின் குறைப்பாடுகளை பார்க்கிறார்கள். குறைபாடுகளை பார்த்தவுடன் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்கப் பார்க்கிறார்கள் அக்குழந்தையின் பெற்றோர். ஆனால் மருத்துவர்கள் அவர்களிடம் இது சிறிய குறைபாடுதான் குழந்தையை அழிக்கத் தேவையில்லை, சரி செய்ய முடியும் என்கிறார்கள். இப்படிப் போகிறது அந்த நிகழ்ச்சி.

இதில் ஸ்கேன் பகுதியை அப்படியே ஒரு பெரிய திரையில் திரையிட்டோம். இந்த முழு நிகழ்ச்சியையும் நாட்டியமாக அளித்தோம். குழந்தையை கருவுக்குள் பார்ப்பது போன்றவை எல்லாம் நாங்கள் பல்லூடகம் வழியே செய்தோம். எங்கள் நாட்டியம் முடிந்தவுடன் மருத்துவர்கள் அதைப் பற்றிய விளக்கங்களை அளிப்பார்கள்.

அந்த நிகழ்ச்சிக்கு உலக அளவில் தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் வந்திருந்தார்கள். மிகவும் பாராட்டினார்கள்.

******


காதலருடன் பாட்டுக்குப் பாட்டு

முதலில் நான் வானொலியில் அறிவிப்பாளராக சேர்ந்தேன். அங்குதான் என் கணவர் சூரஜித் கோபாலகிருஷ்ணனைச் சந்தித்தேன். இருவருமே 'இளையபாரதத்தில்' நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளித்துக் கொண்டிருந்தோம்.

நிகழ்ச்சியில் அவர் என்னைக் கேள்வி கேட்கும் விதத்தில் பாடல்களை ஒளிப்பரப்புவார். 'என்றுமவள் எங்கள் வீட்டு மருமகளாவாள்' என்று அவர் பாடலை ஒலிபரப்ப நான் அதற்குப் பதில்தரும் விதமாகப் பாடலை ஒலிபரப்ப, இப்படித் திரைப்படப் பாடல்கள் மூலமாகவே காதலைப் பரிமாறிக்கொள்வோம். சில நேரங்களில் சண்டையும் போட்டுக் கொள்வோம். சண்டைக்குப்பிறகு 'மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பாடலை ஒலிபரப்புவேன். வானொலி நிலையத்தில் இருந்த அனைவருக்குமே இது தெரியும். இன்று அது குழந்தைத்தனமாகத் தோன்றினாலும், அந்த நேரத்து உணர்வுகள் அத்தனையும் நிஜம்.

என் கணவர் ரொம்ப நன்றாக பாட்டுப் பாடுவார். அதுவும்கூட எங்கள் காதலுக்கு முக்கியமான விஷயமாகும். அவர் எங்கள் நடன நிகழ்ச்சிகளுக்கு நிறைய பாடியிருக்கிறார்.
More

திரு. பிரபஞ்சன்
Share: