Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | புதிரா? புரியுமா? | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சிறுகதை
ஸான்ட்ரோ
கிறிஸ்துமஸ் மரம்
- எல்லே சுவாமிநாதன்|டிசம்பர் 2004|
Share:
"என்ன கமலா, மசமசன்னு இருக்க. புள்ளை எங்க... எனக்கு ஆபீசுக்கு நேரமாயிடுச்சு... தலைக்கு மேல வேல இருக்கு... இந்தப் பனியில அரைமணி கார் ஓட்டியாகணும்"

"அவன் அழுதிட்டு இருக்கான்."

"ஏனாம்?"

"அவன் சினேகிதன் பீட்டர், டேவிட் வீட்ல யெல்லாம் கிறிஸ்துமஸ் மரம் வெச்சிருக் காங்களாம். நம்ம வீட்ல வெக்கலேன்னு அழுகை."

"நீ புத்தி சொல்லலியா. நாம எல்லாம் இந்துக்கள் ஆச்சே. நமக்கு ஏது கிறிஸ்துமஸ்?"

"ஆறு வயசுக் குழந்தை அவன். அவனுக்கு இது புரியுமா?"

"இதுக்குத்தான் இந்த ஊரே வாணாம்னு தோணுது. ஏதோ காசுக்கு ஆசைப்பட்டு அமெரிக்காவுக்கு வந்திட்டோம். நம்ம மதம், கலாசாரம், பண்டிகை, ஒட்டு, ஒறவு எல்லாம் இழந்திட்டோம்"

"மதம், கலாசாரம், பண்டிகையெல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. ஒட்டு உறவைப் பிரிஞ்சு இருக்குறது வேணா வாஸ்தவம். ஏதோ குழந்தை ஆசைப்பட்டு..."

"அதுக்குன்னு எத வாணா செய்ய முடியுமா... சரி அவனை முதுகில ஒண்ணு வெச்சு இழுத்திட்டு வா. பள்ளிக்கூடத்துல கொண்டுபோய் விட்டுட்டு நான் ஆபீசு போயாகணும்." கமலா மாடிக்குப் போனாள்.

ரமேஷ் தன் அறையில் குப்புறப்படுத்து அழுது கொண்டிருந்தான்.

"ரமேஷ் கண்ணா, பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிடுத்து, கிளம்பு"

"மாட்டேன். எனக்கு கிறிஸ்துமஸ் ட்ரீ வேணும்"

"இத பாரு, செல்லமில்ல, அப்பாக்கு ஆபீசுக்கு லேட்டாச்சு. சாயங்காலம் வரச்சே ஒரு பெரிய ட்ரீ வாங்கிட்டு வருவாரு," கூசாமல் பொய் சொன்னாள். எப்படியாவது இவனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் கணவன் கோபத்தில் கை ஓங்கிவிடுவான். குழந்தைக்கு படாத இடத்தில் பட்டுவிட்டால்...

அழுகை நின்றது. "நெசம்மாவா" என்றான் ரமேஷ்.

"ஆமாண்டா கண்ணா. ஆனா அப்பாவைக் கேக்காத. நமக்குத் தெரியாம அப்பா வாங்கிட்டு வரப் போறாராம்"

ரமேஷ் இதை நம்பினான். அவன் முகத்தில் ஒரு சிரிப்பு.

"வா, எழுந்திரு. மூஞ்சியத் துடைச்சிக்க. எங்க புத்தகப் பை..."

பையை எடுத்துக் கொண்டு ரமேஷ் கீழே ஓடினான்.

"வாடா ரமேஷ். எதுக்கு அழுதியாம்.. நாம எல்லாம் ஹிண்டுஸ்..."

"போதுங்க. குழந்தைக்கு இதெல்லாம் எதுக்கு? அவன் இன்னம் பிரேக்·பாஸ்ட் சாப்பிடலை. சாப்பிட்ட பிறகு அழச்சிட்டுப் போகலாம்"

இதற்குள் வாயில் ஒரு ரொட்டியைக் கவ்விக்கொண்டு நாய் போல ஓடி வந்தான் ரமேஷ். "நேரமாச்சு. இது போதும்."

"கோட்டை மறந்துட்டியே. குளிர்ல விறச்சிடுவே" என்று ரமேஷின் மேல் கோட்டை எடுத்துக்கொண்டு ராகவன் பின் தொடர்ந்தான்.

அன்று மதியம் அலுவலகக் காண்டீனில் ராகவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"ஹை ராக்" என்று அழைத்தவாறு அருகில் வந்து அமர்ந்தார் ஜான். ஜான் பெரிய மேனேஜர். அடிக்கடி டூரில் போய்விடுவார்.

"எப்போது ஜப்பானிலிருந்து வந்தீர்கள்?" என்றான் ராகவன்.

"இரண்டு நாளாயிற்று. நல்ல வேளையாக கிறிஸ்துமஸ் கொண்டாட வசதியாய்ப் போயிற்று. இந்தத்தடவை பெரிய மரமாக வாங்கிவிட்டோம். அதற்கு அலங்காரம் செய்து மாளவில்லை. இன்னிக்கிப் போகும் போது கூடுதலாக் கலர் லைட் வாங்கிட்டுப் போகணும். நீ ட்ரீ வெச்சிருக்கயா?"

"இல்லை. ஜான் வைக்கவில்லை. நாங்கள் ட்ரீ வைப்பதில்லை. கிறிஸ்துமஸ் கொண்டாடு வதில்லை. என் பிள்ளைக்குக் கூட வருத்தம்."

"எத்தனை வயசு அவனுக்கு?"

"ஆறு."
"ஓ, கமான். சின்னக் குழந்தை. ட்ரீ வைக்கறது பெரிய விசயமா? இருவது டாலருக்கு கிடைக்கிறது. வேணும்னா என்னோட பழைய அலுமினியம் ட்ரீ கூட காரேஜ்ல வீணாக் கிடக்கு. லைட்ஸ், ஆர்னமெண்ட்ஸ் சேர்ந்தே இருக்கு. இலவசமா எடுத்துக்கோயேன்."

"விலையில்ல, ஜான். ஒரு பிரின்சிபிள். நாங்க ஹிந்து. எங்களுக்கு எதுக்கு ட்ரீ? எங்களுக்கு இல்லாத ஒரு பண்டிகைய எதுக்குக் கொண்டாடணும்?"

"ராக், நீ கிருஷ்ணா பர்த்டே, ராமா பர்த்டே, அனுமான் பர்த் டேன்னு கொண்டாடற தில்லயா. அதுபோல கிறிஸ்துவின் பர்த் டே."

"நான் கிறிஸ்துவன் இல்லியே!"

"நீ கிறிஸ்துவனா ஆக வேண்டாம். ஆனா கொண்டாடலாம் இல்லியா. ஆபீசுல கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு நீ போகலியா. கொண்டாட்டத்துல பங்கேற்கறது தப்பில்லை. கிறிஸ்துமஸ்ங்கிறது மகிழ்ச்சியைப் பங்கு போட்டுக்கிற சமாசாரம். மகிழ்ச்சியக் காட்ட ஒருத்தருக்கொருத்தர் பரிசு கொடுத்துக் கறோம், வாழ்த்து சொல்லிக்கறோம்."

ராகவனுக்கு சம்மதப் படவில்லை.

ஜான் தொடர்ந்தார். "ஒரு விசயம் கேளு. நீ இங்க வரதுக்கு முன்னே, மூணு வருசம் முந்தி இந்தியால, பெங்களூரிலே ஒரு பிராஜக்டுக்கு என்னைப் போகச் சொன்னாங்க. ரெண்டு வருச பிராஜக்ட். என்னால குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்க முடியல. அழச்சிட்டு போனேன். என் பெண் ஜென்னிக்கு அஞ்சு வயசு. அங்க ஒரு ஸ்கூல்ல சேர்த்தேன். அங்க நிறைய இந்தியக் குழந்தைங்களோட பழகற அனுபவம் அவளுக்கு கிடைச்சுது. கொஞ்ச நாள் கழிச்சு 'எனக்கு கவுன் போடறது பிடிக்கல. கிளாஸ்ல எல்லாரும் பாவாடை கட்டறாங்க'ன்னா. எனக்கு அது பிடிக்கல. ஆனால் என் மனைவி வாங்கிக் கொடுத்தாள். நல்லாவே இருந்தது. போட்டோ வீட்டுல இருக்கு அப்புறம் நீ வந்தாக் காட்டறேன். இன்னும் சிலநாள் போனதும் நெத்தியில் பொட்டு வெச்சிட்டுப் போவேன்னு அடம் பிடிச்சா. 'நாம கிறிஸ்துவங்க. பொட்டு வெச்சிக்கறது தப்பு'ன்னு சொல்லிப் பார்த்தேன். அவ கேட்கலை. என் மனைவி அவளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வாங்கிக் கொடுத்தா. அப்புறம் தலையைப் பின்னிக்கணும்னு கேட்டா. தலைமயிர் சின்னதா இருந்ததாலே சவுரி வாங்கிக் கட்டி அதையும் பண்ணினோம். 'எனக்கு ஜென்னிங்கற பேரு புடிக்கல. ஜானகின்னு மாத்திக்கவா?'ன்னு கேட்டா. 'இல்லம்மா. ஜென்னிங்கறது ஜென்னிபர்ங்கற பேரோட சுருக்கம். உங்க பாட்டி நினைவா உனக்கு வெச்சிருக்கம். வேணுன்னா மாத்திக்கோ'ன்னோம். பேரை மாத்திக்கலை. ஆனா ஒரு இந்தியக் குழந்தை மாதிரியே இருந்தா. 'ஜெய் ஜெய் ராம்'னு ஒரு பாட்டுக்கூட பாடுவா. பள்ளிக் கூடத்துல பிரேயர் ஹால்ல பாடுவாங்களாம்.

அப்புறம் இங்க திரும்பி வந்தப்பறம் அதெல்லாம் மாறிடுச்சு. சராசரி அமெரிக்கப் பெண்ணா மாறிட்டா. குழந்தைகள் மற்றக் குழந்தைகள் மாதிரி இருக்க ஆசைப்படுவது இயல்பு. ஏன் நாம் கூடத்தான். ஊரோடு ஒட்டி வாழலியா? என் பெண்டாட்டி கூட பெங்களூர்ல வாங்கின ரெண்டு மூணு சில்க் புடவை வெச்சிருக்கா. சரியா கட்டிக்கத் தெரியாட்டியும். எனக்கு வேட்டி வாங்கினா. எனக்கு வேட்டி ஒத்து வரல."

"உங்கள் மனைவிக்கு என் மனைவி உதவி செய்வா புடவை கட்ட. நானும் அவ்வளவா வேட்டி கட்றதில்ல. ஆனா லுங்கி கட்டுவேன்"

"பார்த்தியா. லுங்கி முஸ்லீம்கள்தான் கட்டுவாங்க. இப்ப இந்துவான நீயே கட்டற. இதுனால நீ முஸ்லீமாயிட்டயா? நீ, உன் பெண்டாட்டி ரெண்டு பேரும் பேண்டு, சட்டை போடறீங்க. இதுனால நீங்க இந்து இல்லாம போயிட்டீங்களா? அன்னிக்கி ராஜேந்தர் சிங்கோட குருத்வாரால போயி நாம எல்லோரும் தலையில டர்பன் கட்டிக்கிட்டு சாப்பிட்டோம், நாம இப்ப சீக்கியராயிட்டமா, மதம் மாறிட்டமா?"

ராகவன் புன்னகை பூத்தான்.

"எதுக்குச் சொல்ல வரேன்னா, உடையை மாத்திக்கறதாலயோ, இன்னொரு மதப் பண்டிகையக் கொண்டாடுறதலேயோ, புறச் சின்னங்களாலாயோ நம்முடைய மத நம்பிக்கைகள் மாறாது. ஒரு கிறிஸ்துமஸ் ட்ரீயால நீ கிறிஸ்துவானாயிடப் போறதில்ல. உன்னுடைய இந்து மத நம்பிக்கைக்கும் குந்தகம் இல்ல. குழந்தை மகிழ்ச்சிக்குனு ஒரு ட்ரீ வெச்சா அவன் மனசு சந்தோஷப்படும். அவன் வளர்ந்தப்பறம் அவனே மாறிடுவான். தனக்குப் பிடிச்ச நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்வான். புரியுதா?"

ராகவன் தலையாட்டினான்.

"ராக், நீ என்ன பண்ற, காசு செலவு செய்ய வேண்டாம். சாயங்காலம் வீட்டுக்குப் போறச்ச என் வீட்டுக்கு வா. என்னோட பழய ட்ரீயை எடுத்திட்டு போ. அதுதான் உனக்கு என் கிறிஸ்துமஸ் பரிசு. குழந்தைக்கி பழசு, புதுசெல்லாம் தெரியாது. அடுத்த வருசம் புதிசா வாங்கிக்கயேன்."

"ஓகே. தாங்க் யு ஜான், சாயங்காலம் வீட்டுக்கு வரேன்."

"அப்ப நான் போறேன். ரிப்போர்ட் ஒண்ணு எழுதணும்" என்று சொல்லி ஜான் அகன்றார். கட்டிடத்துக்கு வெளியே போனதும் தன் செல்பேசியில் மனைவியை அழைத்து "இன்னும் அந்தப் பழைய அலுமிமினியம் கிறிஸ்துமஸ் ட்ரீயை நீ குப்பையில போட்டுடலியே. அதை எடுத்திட்டுப் போக ராக் வருவான். கொடுத்திடு" என்றார்.

ராகவன் செல்பேசியில் மனைவியை அழைத்தான். "கமலா. சாயங்காலம் வரச்சே கிறிஸ்துமஸ் ட்ரீ எடுத்திட்டு வரேன். காலணா செலவில்ல. ஜான் கி·ப்டா கொடுக்கறார். ரெண்டு ட்ரீ இருக்காம் அவருகிட்ட. ஒரு நாளைக்கி அவன் பெண்டாட்டிக்கு நீ புடவை கட்ட சொல்லித் தரணும்... என்ன பேத்தற... ஆமா சொன்னேன் நாம இந்துதான்... ஒரு ட்ரீ வெச்சா கொறஞ்சு போயிட மாட்டோம். பாவம் குழந்தை கேட்கிறானில்ல. பேசிட்டு நிக்காத. நீ லிவிங் ரூமை சுத்தமா வெக்கற வேலையைப் பாரு. வாசல் ஜன்னல் பக்கமா வைக்கலாம்னு இருக்கேன்."

மறுநாள் ரமேஷ் பள்ளியில் நண்பர்களிடம் பீற்றிக்கொண்டான் "எங்க அப்பா கிறிஸ்துமஸ் ட்ரீ வாங்கியாந்திருக்கார். சாதாரண மரம் இல்ல. இலையெல்லாம் உதிராதாக்கும். சில்வர் ட்ரீ. கலர் லைட்டு கூட இருக்கு".

எல்லே சுவாமிநாதன்,
லாஸ் ஏஞ்சலஸ்
More

ஸான்ட்ரோ
Share: 




© Copyright 2020 Tamilonline