|
|
அன்புள்ள சிநேகிதியே,
விதியில் நம்பிக்கை உள்ளவர்கள் என் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை நம்பலாம். டெல்லியில் மருத்துவக் கல்வி படித்து முடித்தபின் அமெரிக்கா வரும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய சக மாணவனின் மேல் காதல் கொண்டிருந்த நான் பெற்றோரை எதிர்த்துத் தைரியமாக திருமணம் செய்து கொண்டு இங்கே வந்துவிட்டேன். 5 வருடம் அமர்க்களமாக இருந்தது. 2 பையன்கள் பிறந்தார்கள். பிறகு என் கணவருக்கு வேறு ஊரில் 'Residency' முடித்து வேலை கிடைத்தது.
நான் இருந்த இடத்திலேயே வேலை பார்த்துக் கொண்டு குழந்தைகளுடன் இருந்தேன். இரண்டு வருடங்கள் தனித் தனியாக இருந்தோம். பிறகு என்னுடைய மருத்துவமனையிலேயே அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு வேலை கிடைத்த போது, அவர் சாக்குபோக்குச் சொல்ல ஆரம்பித்தார். சில நாட்களுக்குப் பிறகு தான் அங்கு அவருக்கு ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் தொடர்பு இருந்தது என்ற உண்மை தெரிந்தது. வெறுத்துப் போய் விவாகரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு, குழந்தைகளுடன் இந்தியா திரும்பி விட்டேன்.
பணத்திற்குக் குறைவில்லை. ஆனால் இந்தியாவில் இரண்டு வருடங்களாக எனக்குப் பக்கபலமாக இருந்த என் பெற்றோர், சின்னப் பையன் மூவரையும் ஒரு கார் விபத்தில் இழந்தேன். மருத்துவத் தொழிலிலும், மகனை வளர்ப்பதிலும் 15-16 வருடங்கள் கழித்துவிட்டேன். என்னுடைய முன்னாள் கணவர் எப்போதாவது வருவார். பையனைப் பார்த்துவிட்டுப் போவார். பிறந்தநாள், கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் ஏதாவது பரிசு அனுப்புவார். நான் அவர் வாழ்க்கையைப் பற்றியோ, தொழிலைப் பற்றியோ எதையும் கேட்டதில்லை.
என் மகன் வளர்ந்து எம்.எஸ். படிக்க இங்கே வந்திருக்கிறான். தனியாக இருக்க விருப்பப்படாமல் நானும் ஏதோ fellowship கிடைத்து ஆறு மாதங்களுக்கு முன்பு இங்கே வந்தேன். சமீபத்தில் ஒரு மருத்துவ மாநாட்டில் திடீரென்று அவரைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் அதிர்ச்சியோ, கசப்போ இல்லை. சிறிது வியப்பு இருந்தது. நாங்கள் யாரென்றே தெரியாமல் ஒரு சக டாக்டர் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். நாங்கள் இருவரும் ஒரே துறையில் ஆராய்ச்சி செய்வது தெரிய வந்தது. அப்போது எனக்கு அவருடைய உதவி தேவையாக இருந்தது. ஆகவே அடிக்கடி சந்திக்கவேண்டிய சந்தர்ப்பம் நேரிட்டது. மிகவும் ஜாக்கிரதையாக முதல் மூன்று மாதம் தொழிலைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம்.
ஒருநாள், மிகவும் சிநேகிதமாக இருந்த நேரத்தில் என்னை மறந்து என் பையனைப் பற்றி பேசிவிட்டேன். உடனே அவர் கண்ணீர்விட ஆரம்பித்தார். அவர் 'தொடர்பு' வைத்துக் கொண்டிருந்த பெண் வேறுநாட்டில் வேலை பார்த்துக் கொண்டு போய்விட்டதாகவும், பத்து ஆண்டுகளாகத் தனியாக இருப்பதாகவும், ஆன்மீக வேட்கையில் இறங்கிவிட்டதாகவும் கூறினார். அன்றைய தினத்திலிருந்து அவரைக் கனிவாகப் பார்க்க ஆரம்பித்தேன்.
சிலநேரம் வாரஇறுதி நாட்களில் எங்கள் வீட்டிலேயே தங்கிவிடுவார். பழையவற்றை ஏன் மறந்து மன்னிக்கக்கூடாது என்று தோன்றியது. எங்களுக்குள் மெல்ல மீண்டும் நெருக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் என் மகனிடம் போன் மூலம் அவ்வப்போது தெரிவித்த போது, அவன் அதைப்பற்றி ஒதுக்கித் தள்ளிவிட்டு, வேறு விஷயத்துக்குப் போய்விடுவான். பலமுறை வருத்திக் கூப்பிட்டு, சமீபத்தில் ஒருமுறை வந்துவிட்டு போனான். அவரை அன்னியம் போல பாவித்து ஹலோ சொல்லிவிட்டு போய் விட்டான். என்னிடம் 'எனக்கு அப்பா வேண்டும் என்ற சமயத்தில் அவர் இல்லை. இப்போது அவர் தனிமையில் இருக்கிறார். உன்னுடைய பராமரிப்புத் தேவையாக இருக்கிறது. அவர் ஒரு சுயநலக்காரர். உனக்குத் துணை வேண்டுமானால் வேறு யாரையாவது திருமணம் செய்து கொள். ஆனால் இவருடன் அல்ல' என்று வெறுப்புடன் பேசிவிட்டுக் கிளம்பிவிட்டான். இந்த நிலையில் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. (அன்புள்ள என்னுடைய நெருங்கிய சிநேகிதிக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை. அவர் தமிழர் அல்ல. உங்கள் கருத்து அவளுக்கு ஆறுதலோ, அறிவுரையோ சொல்வதற்கு எனக்குச் சிறிது உதவியாக இருக்கும். நன்றி, இப்படிக்கு ரா.) |
|
அன்புள்ள ரா சிநேகிதியே...
உங்கள் தோழி அனுதாபத்துக்குரியவள். தனியாக, கணவனைப் பிரிந்து, பெற்றோரை இழந்து, ஒரு மகனைப் பறிகொடுத்து, மன உறுதியுடன் இருந்த ஒரே மகனை முன்னுக்குக் கொண்டு வருவதில் தன் பெரும்பாலான வாழ்க்கையைக் கழித்திருக்கிறார்.
அதே சமயம் தந்தைப் பாசம் என்ன வென்றே தெரியாமல், தந்தை செய்த தவற்றை மனதில் இருத்தி, இருத்தி வெறுப்பை வெளியில் தெரியாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறான் மகன். பெற்றோர்களின் மனமுறிவாலும், மண முறிவாலும் சிறு வயதில் இதுபோன்ற குழந்தைகளின் மனதில் என்ன காயம், எவ்வளவு பெரிய காயம் என்று யாரால் சரியாகக் கணித்துச் சொல்ல முடியும்?
வளர்ந்துவிட்ட அந்த மகனின் கேள்வி நியாயமே. இருந்தும் ஒரே மகனே தன் எதிர்காலமாக வாழ்ந்த அந்த தாய்க்கு இப்போது தனிமை கொடுமையாக இருக்கிறது. உடல்ரீதியில் அவர்கள் துணை தேடிப் போகவில்லை. ஆன்மீக வழியில் சென்று தன் வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொண்ட பழைய கணவரின் தொடர்பு, மனரீதியாகவும் தொழில் ரீதியாகவும், அந்த தாய்க்குச் சிறிது நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படுவது புரிந்துக் கொள்ளக்கூடியது.
மகனுக்கு அவகாசம் தேவை. அவன் உணர்ச்சிகளையும், ஆத்திரத்தையும் கொட்டி முடிக்க அவகாசம் தேவை. பிறகு சிந்திக்க ஆரம்பிப்பான்.
இது சுகமாக முடியும் என்று நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. உங்களுடைய தோழிக்கு என் வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம் சித்ரா வைத்தீஸ்வரன்
*****
இந்தப் பகுதிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் thendral@tamilonline.com என்ற முகவரிக்கு snegithiye என்ற தலைப்பிட்டு அனுப்பலாம். சாதாரண அஞ்சலில் தென்றல் அலுவலக முகவரிக்கு 'சிநேகிதியே' என்று குறிப்பிட்டு அனுப்பவும். எழுதுபவர்களின் பெயர் மற்றும் முகவரி வெளியிடப்பட மாட்டாது. வெளியிடுவதில் தென்றல் ஆசிரியரின் முடிவே இறுதியானது. |
|
|
|
|
|
|
|