|
|
|
தமிழ் இலக்கிய உலகில் பரவலான வாசக வரவேற்பைப் பெற்ற ஓர் இலக்கிய அமைப்பு குவிகம். 'இலக்கிய வாசல்' ஆகத் தொடங்கி 'குவிகம்' ஆக மலர்ந்து ஒளிவீசிக் கொண்டிருக்கும் குவிகம், பல ஆண்டுகளாகவே மின்னிதழ், சிறுகதை, குறுநாவல் போட்டிகள், நூல் வெளியீடு, இலக்கிய விமர்சன அரங்குகள், கருத்தரங்குகள், ஜூம் உரையாடல் என்று தீவிர இலக்கியப் பணி ஆற்றிவருகிறது. அதன் பின்னணியாக இருந்து உழைத்து வருபவர்கள் திரு. சுந்தரராஜன் மற்றும்
திரு. கிருபானந்தன் ஆகியோர். அவர்களுடனான மின் உரையாடலில் இருந்து...
★★★★★
கே:குவிகம் இலக்கிய அமைப்பு, எப்போது, யாரால் தொடங்கப்பட்டது, அதன் பின்புலம் என்ன? ப: பாங்க் ஆஃப் பரோடா வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அங்கு பயிற்சி பெற்ற இணையவழிக் கல்வியை உபயோகித்து ஒரு ஜனரஞ்சக மின்னிதழைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற உந்துதலில் 2013 நவம்பரில் சுந்தரராஜனால் துவக்கப்பட்டது குவிகம்.
தமிழ் இலக்கியம், சிறுகதை, நாவல், கவிதை போன்றவற்றில் உள்ள ஈடுபாட்டின் காரணத்தால் குவிகம் இதழ் ஆரம்பிக்கப்பட்டது. சுந்தரராஜன் அந்நாள் வரை எழுதிய படைப்புகளை மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவும் புதிய படைப்புகளை உருவாக்கவும் மற்ற நண்பர்களின் இலக்கியத் திறனை வெளிப்படுத்தவும் உண்டாக்கிய தளம்தான் குவிகம் மின்னிதழ்.
கே:'குவிகம்' என்ற பெயருக்கு ஏதாவது சிறப்புக் காரணம் உள்ளதா? ப: கு வி க ம் = குமுதம் - விகடன் - கல்கி - குங்குமம் என்ற பிரபல பத்திரிகைகளின் முக்கிய எழுத்துக்களைக் கொண்ட ஒரு புதிய சொல்லாகவும் கருதலாம். 'குவி' என்ற தமிழ் எழுத்தின் தன்மையைப் பிரதிபலித்து 'குவிவோம் - ஒன்று சேர்வோம்' (Gathering) என்ற பொருளிலும், இலக்கியத்தின் குவிமையமாக விளங்குவோம் (FOCUS) என்ற கருத்திலும் புதிதாக உருவாக்கப்பட்ட சொல் குவிகம்.
கே:குவிகம் மின்னிதழ் குறித்துச் சொல்லுங்கள்... ப: குவிகம் மின்னிதழ் துவங்கியபோது நண்பர்கள் கேட்ட கேள்வி இது கல்கண்டா? குமுதமா? முதலில் ஒருவரே எழுதிய கல்கண்டு பத்திரிகையாகத் துவங்கி பின்னர் 20க்கும் மேற்பட்டவர்கள் எழுதும் முழுப் பத்திரிகையாக இன்று மாறியுள்ளது என்று சொல்லலாம். முதலில் tumbler என்ற அமைப்புடன் இணைந்து குவிகம் மின்னிதழ் வெளிவந்தது. பின்னர் 2018லிருந்து wordpress மூலமாக https://kuvikam.com என்ற பதிவு செய்யப்பட்ட இணையதள முகவரியுடன் வந்துகொண்டிருக்கிறது.
மாதம் குறைந்தது 25 மின் பக்கங்கள். ஒவ்வொரு மின் பக்கமும் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் படங்களுடன் வெளிவருகிறது. கதை, கவிதை, கட்டுரை திரை/நாடக விமர்சனங்கள், குவிகம் நிகழ்வுகள் பற்றிய அறிவிப்பு, நிகழ்வு முடிந்த பிறகு அது பற்றிய செய்தித் தொகுப்பு, காணொளி, ஒலிச் சித்திரம் ஆகியவற்றின் தொகுப்பாகக் குவிகம் அமைந்துள்ளது.
2015 இல் பாங்க் ஆஃப் பரோடாவில் பணிபுரிந்த இலக்கிய நண்பர் கிருபானந்தன் குவிகத்தில் இணைந்த பிறகு, அதுவரை தவழ்ந்து கொண்டிருந்த குவிகம் நடக்கத் தொடங்கியது. நூறு பேருக்கு அறிமுகமான குவிகம் ஆயிரம் பேருக்கு அறிமுகமானது. நிறைய நண்பர்கள் குவிகத்தில் எழுத முன்வந்தனர்.
கே:குவிகம் மின்னிதழில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பகுதி அல்லது தொடர் எது? ப: ஜெய் சீதாராமன் எழுதிய 'மணி மகுடம்' (பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி), சுந்தரராஜன் எழுதிய 'மீனங்காடி' (பிரபலமான fish என்ற புத்தகத்தின் தமிழ் வடிவம்), 'ஷாலு மை வைஃப்' என்ற நகைச்சுவைத் தொடர், உலக இதிகாசங்கள் வரிசையில் 'கில்காமேஷ்', 'இலியட்' மற்றும் 'ஒடிஸி', 'யாரோ' என்ற பெயரில் ராமமூர்த்தி எழுதிவரும் 'சரித்திரம் பேசுகிறது' என்ற இந்திய சரித்திர நிகழ்வுகள்; மாலதி சுவாமிநாதன் எழுதிவரும் 'மனவளக் கதைகள்', டாக்டர் பாஸ்கரன் அவர்களின் 'குவிகம் கடைசிப் பக்கக் கட்டுரைகள்', 'குவிகம் பொக்கிஷம்' என்ற பெயரில் தமிழில் வந்த சிறந்த கதைகளின் மீள்பதிவு, தென்காசி கணேசன் அவர்களின் 'திரை இசைக் கவிஞர்கள்' தொடர்கட்டுரை.
முனைவர் வ.வே.சு. அவர்களின் 'இடம், பொருள், இலக்கியம்' தொடர் மற்றும் ஆடியோ கேள்வி பதில்கள், வாசகர்கள் பெரும் அளவில் பங்குகொள்ளும் சாய் கோவிந்தனின் 'குறுக்கெழுத்துப் போட்டி', சதுர்புஜன் எழுதி வீடியோவுடன் வந்த 'சிறுவர் கவிதைகள்', குமுதம் இதழில் பணியாற்றிய வேதா கோபாலன் எழுதிவரும் என் குமுத நாட்கள் தொடர் என்று பலவற்றைச் சொல்லலாம்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வரைந்த கதைக்கேற்ற படங்கள் மற்றும் நகைச்சுவை, காதலர், சிறார் சிறப்பிதழ்களும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. குவிகம் இதழில் வரும் தொடர்கதைகள், கட்டுரைகள் குவிகம் பதிப்பகம் மூலமாகப் புத்தகங்களாக வெளியிடப்படுகின்றன.
கே:குவிகம் இலக்கியத்தை வளர்க்கத் தொடர்ந்து பல போட்டிகளை நடத்தி வருகிறது. அந்தப் போட்டிகள் குறித்துச் சொல்லுங்களேன். ப: குவிகம் குறும்புதினப் போட்டியில் வருடா வருடம் 24 கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுள் மூன்றுக்கு 10,000, 6,000, 4,000 ரூபாய் பரிசுகளும், மற்ற 21 கதைகளுக்கு 1,000 ரூபாய் சன்மானமும் கொடுக்கப்படுகிறது. அந்தக் கதைகள் குவிகம் குறும்புதின இதழில் வெளிவருகின்றன. 100க்கும் மேற்பட்ட குறுநாவல்கள் போட்டியில் இடம்பெறுகின்றன.
பிரபா ராஜன் அறக்கட்டளைக்காகச் சிறுகதைப் போட்டியை குவிகம் இரண்டு ஆண்டுகள் செய்தது. 300க்கும் மேற்பட்ட கதாசிரியர்கள் பங்கு பெற்றனர். அவ்வப்போது குவிகம் சிறுகதைப் போட்டி நடத்தி வருகிறது. போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் பின்னர் புத்தக வடிவம் பெறுகின்றன. குவிகம் மின்னிதழில் குறுக்கெழுத்துப் போட்டிக்கு மாதந்தோறும் 100 ரூபாய் பரிசு குலுக்கல் முறையில் தரப்படுகிறது. குறும்புதினம் இதழில் சிறந்த வாசகர் கடிதத்திற்கு 100 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
கே:குவிகத்திற்கு இருக்கும் வாசக வரவேற்பு மற்றும் எழுத்தாளர்களின் ஆதரவு குறித்துச் சில வார்த்தைகள்... ப: குறும்புதின இதழிற்கு 150 அங்கத்தினர்கள்; மின்னிதழை மாதம் 1,000 பேர் படிக்கிறார்கள்; காணொளிகளை 200 - 500 பேர் பார்க்கிறார்கள்; வாரந்தோறும் ஜூம் மூலம் நடைபெறும் நிகழ்வுகளில் 30 - 40 நண்பர்கள் பங்கு கொள்கிறார்கள். குவிகம் நண்பர்கள் அனைவரும் எழுத்தாளர்கள்/ நாடக ஆசிரியர்கள். அவர்கள் குவிகம் மின்னிதழ், குறும்புதினம் மற்ற சிறுகதைப் போட்டிகள் ஆகியவற்றிற்குத் தங்கள் படைப்புகளை அனுப்பி ஆதரவளிக்கின்றனர்.
கே:குவிகம் பதிப்பகம் பற்றி, அதன் மூலம் வெளியான நூல்கள் பற்றி... ப: நண்பர்களுக்காக அச்சுக்கூலி மட்டும் வாங்கி, தரமான முறையில் இலவசமாக DTP செய்து அட்டைப்படம் தயாரித்து வழங்கும் சேவையை குவிகம் கடந்த 7 ஆண்டுகளாகச் செய்து வருகிறது. இதுவரை 250 புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. கோமலின் 'பறந்துபோன பக்கங்கள்', 'பொன்னியின் செல்வன்' (ஆங்கிலத்தில்), தென்காசி கணேசன் அவர்களின் 'நாளாம் நாளாம்' கட்டுரைத் தொகுப்பு, குவிகம் சிவசங்கரி சிறுகதைத் தேர்வுக் கதைகள் போன்றவை பலரால் பாராட்டப்பட்ட புத்தகங்கள்.
குவிகம் இலக்கிய அமைப்பு * குவிகம் மின்னிதழைக் கடந்த 12 வருடங்களாக வெளியிட்டு வருகிறது. * குவிகம் இலக்கியவாசல் நேரடி நிகழ்வை மாதந்தோறும் 2015 முதல் இன்றுவரை (கோவிட் காலம் தவிர்த்து) நடத்தி வருகிறது. * குவிகம் அளவளாவல் இணையவழிக் கூட்டங்களை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2020 முதல் இன்றுவரை நடத்துகிறது. * முனைவர் வ.வே.சு வழங்கும் 'மகாகவியின் மந்திரச் சொற்கள்' நிகழ்ச்சி, 190 நிகழ்விற்கு மேல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. * குவிகம் பாட்காஸ்ட் (Podcast) 128 வாரங்கள். * குவிகம் குறும்புதினம் – குறுநாவல்களுக்காக வெளிவரும் மாத இதழ். – 150 சந்தாதாரர்கள்; வருடச் சந்தா 1200 ரூபாய், மாதம் மூன்று குறும்புதினங்கள். தற்போது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது * குவிகம் பதிப்பகம் கடந்த 7 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 250 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எழுத்தாள நண்பர்களுக்கு அவர்கள் படைப்புகளைப் புத்தக வடிவில் குறைந்த செலவில் (அச்சுச் செலவு மட்டும்)நூலாகக் கொண்டுவர குவிகம் உதவுகிறது. * குவிகம் நிகழ்வுகளின் காணொளிகள் (500க்கும் மேல்) யூ டியூபில் பதிவாகியுள்ளன. குவிகம் ஷார்ட்ஸ் விரைவில் வர இருக்கிறது. * இலக்கியச் சிந்தனை 50 ஆண்டுகளாக நடத்திவந்த மாதந்தோறும் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து பின்னர் அந்த வருட இறுதியில் 12 கதைகளையும் புத்தகமாக வெளியிடும் திட்டத்தைக் குவிகம் கடந்த மூன்று ஆண்டுகளாகச் செய்து வருகிறது. பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி செய்வதால் 12 கதைகளில் முதல் மூன்று கதைகளுக்கு 10000 6000, 4000 ரூபாய் என்று சிறப்புப் பரிசுகளும் மற்ற 9 கதைகளுக்கு 2000 ரூபாய் பரிசும் வழங்கப்படுகின்றன. * 2018 பிப்வரி முதல் முதல் கொரோனா காலம்வரை சென்னை தி.நகரில் ஓர் அடுக்ககத்திற்குக் குவிகம் இல்லம் என்ற பெயர் வழங்கி நூலகம், வாரந்தோறும் அளவளாவல், ஆவணப்படம் திரையிடல், குவிகம் புத்தகப் பரிமாற்றம் போன்றவை நடைபெற்றன. * குவிகம் குறும்புதினம் மற்றும் குவிகம் பதிப்பகத்தில் வெளியான நூல்கள் ஆசிரியர் அனுமதியுடன் அமேசான் கிண்டிலில் பதிவிடப்படுகின்றன. குறும்புதின இதழ்கள் வெளிநாட்டு நண்பர்களுக்கு மின்னூல்களாக அனுப்பப்படுகின்றன.
கே:குவிகம் வாரம் தவறாமல் ஞாயிறு தோறும் ஜூம் மூலம் நடத்திவரும் இலக்கிய நிகழ்ச்சிகள் குறித்தும், ஒலிச்சித்திரம் குறித்தும் சில வார்த்தைகள்... ப: ஞாயிறு தோறும் ஜூம் நிகழ்வுகள் வாரத்திற்கு வாரம் வித்தியாசமாக நடைபெற்று வருகின்றன. இலக்கிய உரை, கவியரங்கம், புத்தக வெளியீடு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், தொடர் நேர்காணல், வினாடி வினா, கலந்துரையாடல், காந்தி - சிற்றிதழ்கள் - சாகித்ய அகாதமி புத்தகங்கள் பற்றி 5 வார மினி சீரிஸ், நாடகம் நடித்தல், சிறுகதை சொல்லல், சிறுகதை படித்தல், இசைக்கச்சேரி போன்றவை குவிகம் நிகழ்வில் தொடர்ந்து நடக்கின்றன. நிகழ்வுகளைச் சரியான நேரத்தில் ஆரம்பித்து, சரியான நேரத்தில் முடிப்பது குவிகத்தின் அடையாளம்.
வாராவாரம் ஞாயிறன்று ஒலிச்சித்திரம் என்ற பாட்காஸ்ட் 15 நிமிடங்களுக்கு ஸ்பாட்டிஃபை மூலம் ஒலிபரப்பப்படுகிறது. அதில் 3 நிகழ்வுகள். மூன்றும் அதிக பட்சம் 4 நிமிடங்கள் இயல்-இசை-நாடகம் என்ற தலைப்பில் கதை சொல்லல், இசைப் பாடல்கள், சினிமா/ நாடக வசனங்கள் போன்றவை இடம் பெறும். சதுர்புஜன் - கிரிஜா இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
கே:குவிகத்தின் பின்னணியில் இருந்து அதற்காக உழைப்பவர்கள் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள்... ப: குவிகத்தின் இரட்டையர் என்று கருதப்படும் சுந்தரராஜனும், கிருபானந்தனும் குவிகம் ஆரம்பிப்பதற்கு முன் ஒரே வங்கியில் ஒரே இலக்கிய ரசனையுடன் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள். இருவரும் இணைந்தே அனைத்து நிகழ்வுகளையும் திட்டமிடுகிறார்கள் நடத்துகிறார்கள்.
மின்னிதழின் ஆசிரியர் சுந்தரராஜன்; பதிப்பகப் பொறுப்பாளர் கிருபானந்தன். கிருபானந்தன் சென்னையில். சுந்தரராஜன் அமெரிக்காவில். இருவரும் குவிகம் பற்றி தினமும் ஒருமணி நேரத்திற்குக் குறையாமல் உரையாடுகிறார்கள். திட்டமிடுகிறார்கள்.
குவிகத்திற்கென்று ஒரு சிறிய ஆனால் பொறுப்புள்ள நண்பர்கள் கூட்டம் உண்டு. திருப்பூர் கிருஷ்ணன், வ.வே.சு, வைதீஸ்வரன், அழகியசிங்கர் போன்றவர்கள் குவிகத்தின் வளர்ச்சிக்குத் தொடக்க காலத்திலிருந்தே உதவியவர்கள். டாக்டர் பாஸ்கரன், மதுவந்தி, ராஜாமணி, சதுர்புஜன், பானுமதி, கிரிஜா ராகவன், முத்து சந்திரசேகர், நாகேந்திர பாரதி, ராய செல்லப்பா, ஆர்க்கே, ராமமூர்த்தி, சாய் கோவிந்தன், தென்காசி கணேசன், நாகேந்திரபாரதி, நாணு நித்தியானந்தம், வளவதுரையன் போன்ற பல நண்பர்களின் உதவியால் குவிகம் இன்று வெற்றிநடை போடுகிறது.
சிறியதே அழகானது (Small is beautiful) என்பது குவிகத்தின் தத்துவம். குவிகத்தின் நிகழ்வுகள் அனைத்தும் எந்த விதமான லாப நோக்கும் இல்லாமல் நடைபெறுகின்றன. குவிகத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.
"தொடர்ந்து இலக்கியப் பணியில் ஈடுபட்டு நாமும் மகிழ்ந்து மற்றையோரையும் மகிழ்விக்க வேண்டும், என்பதே குவிகத்தின் இலக்கு" என்கின்றனர், சுந்தரராஜனும் கிருபானந்தனும். அவர்களது முயற்சிகளை வாழ்த்தி விடைபெறுகிறோம்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன் |
|
குவிகத்தின் நற்பணிகள் * கவிஞர் வைத்தீஸ்வரன் பற்றிய ஆவணப்படம் ஒன்றைக் குவிகம் நண்பர்கள் இணைந்து தயாரித்து வெளியிட்டனர். * 'அகஸ்தியர் மிஷன்' நடத்தும் ராக்கெட் (வரைபடம் முதல் ஏவுவது வரை) பயிற்சிக்காக பல்லாவரம் அரசுப்பள்ளி மாணவர்கள் ரஷ்யா சென்றபோது, குவிகம் நண்பர்கள் கிட்டத்தட்ட ₹1,20,000 கொடுத்து உதவினர். * மகாத்மா காந்தி நூலகம் சைதாப்பேட்டையில் புதிய கட்டிடத்தில் வருவதற்காக குவிகம் நண்பர்கள் ₹200,000 கொடுத்து உதவினார்கள். |
|
|
|
|
|
|
|
|