அதுதான் தாய்! கே3
|
|
|
|
எஸ்தர் கிணற்றடியில் அமர்ந்திருந்தாள். பூக்களாய்ச் சொரியும் மருதோன்றிச் செடிகளும், கொத்துக் கொத்தாய் காய்த்துக் குலுங்கும் மாதுளை மரங்களும், கேதுரு, வேல மரங்கள், ரோஜா, ஊதா, சாமந்தி, வெண் நிற லில்லி புஷ்பங்களுமாய் அவள் தோட்டம் பட்சிகளும், பறவைகளும் ஆசுவாசிக்கும் தென்றல் வீசும் நந்தவனமாகப் பரிமளித்திருந்தது.
அந்த நந்தவனத்தின் நடுவிலிருந்த கிணற்றடியில் எஸ்தர் அமர்ந்திருந்தாள்.
பெர்சிய நாட்டில் சூசான் மாநகரில் தன் தந்தையின் வயதொத்த, அவர் வழிச் சொந்தமான ஒன்றுவிட்ட அண்ணனாகிய மொர்தெகாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாள் எஸ்தர்.
சிறு பிராயத்திலயே தாய் தந்தையை இழந்த எஸ்தரைத் தன் மகள்போல பாவித்து வளர்த்து வந்தான் மொர்தெகாய்.
யூத குலத்தவர்களாகப் பெர்சிய நாட்டில் பஞ்சம் பிழைக்க வந்து குடியேறியவர்கள். ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்துகொண்டு ஒற்றுமையாய் வாழ்வதுதான் உத்தமம் என்றறிந்தவர்கள். அதைத் தம் வாழ்வியலாய்க் கொண்டவர்கள்.
நற்பேறையும், கருணையையும், அமைதியையும் குறிக்கும் ஹடாஸ்ஸா என்பது எஸ்தரின் இயற்பெயர். யூத மொழியில் ஹடாஸ்ஸா என்றால் மருதோன்றி. நாடுவிட்டு நாடு வந்த காரணத்தினால் பெர்சிய மொழியில் ‘வழி காட்டும் விண்மீன்’ என்ற பொருளில் எஸ்தர் என்று அழைக்கப்பட்டாள்.
அன்றைய நாட்களில் பெர்சியாவை மன்னன் அகாஸ்வேரு, இந்து நதி பாயும் தேசம் முதல் எத்தியோப்பியா வரையுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்டு வந்தான். அவன் போர் புரிவதிலும், கலகங்களை அடக்குவதிலும், நல்லாட்சி புரிவதிலும் சிறந்து விளங்கினாலும் தனது ராஜ்யத்தின் செல்வத்திலும், சொந்த மாட்சிமையின் சிறப்பிலும் பெருமை கொண்டவனாக விளங்கினான்.
அவன் பாபிலோன் மன்னன் நேபுகாத்நேசாரின் கொள்ளுப் பேத்தியும், பெல்ஷாத்சார் ராஜாவின் மகளுமான வஸ்தி என்ற பேரழகியை மனைவியாய், பட்டத்து மகாராணியாய் வரித்திருந்தான்.
அவன் தன் ஆளுகையின் மூன்றாம் வருடத்திலே தனது வெற்றிகளைக் கொண்டாடும் பொருட்டு நூற்றெண்பது நாட்கள் தன்னுடைய மந்திரிமார், தனப்பிரபுக்கள், ஊழியக்காரர்களுக்கு விருந்து தந்து உபசரித்தான். விழாவின் முத்தாய்ப்பாக ராஜா தன் சூசான் அரண்மனையின் சிங்காரத் தோட்டத்திலுள்ள மண்டபத்தில் பெரியோர் முதல் சிறியோர் வரையுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ஏழுநாள் விருந்து படைத்தான்.
அங்கே வெண்கலத் தூண்களின் மேலிருந்த வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலாலான கயிறுகளால் வெள்ளையும், பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தன. சிவப்பும், நீலமும், வெள்ளையும், கறுப்புமான கற்கள் பதித்த தளவரிசையின் மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தன.
பொற்கிண்ணங்களில் முதல் தரமான திராட்சை ரசம் கொடுக்கப்பட்டது.
மகாராணியாகிய வஸ்தியும் அரண்மனையிலே ஸ்திரீகளுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தாள்.
ஏழாம் நாளிலே ராஜா திராட்சை ரசத்தினால் போதையேறி களிப்பாயிருந்த போது, மகா ரூபவதியாயிருந்த மகாராணி வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பித்து பெருமை பீற்ற எண்ணி, மகாராணியை ராஜகிரீடம் மட்டும் தரித்தவளாக அவன் கூட்டியிருந்த விருந்தினர் முன்பாக அழைத்துவரச் சொல்லிக் கட்டளையிட்டான்.
ராஜா சொல்லியனுப்பிய கட்டளைக்கு மகாராணியாகிய வஸ்தியோ "அது என்ன எங்குமில்லாத வழக்கமாய் மனைவியை ஒரு காட்சிப்பொருளைப் போன்று அந்நியர்கள் முன்பு வலம்வரச் சொல்வது" என்று எண்ணி வரமாட்டேன் என்றாள். அவளுடைய கீழ்ப்படியாமை கள்ளுண்ட அரசனை கடுங்கோபமுறச் செய்தது.
ராஜாவாகிய அகாஸ்வேரு தன் பிரதானிகள் மூலமாகச் சொல்லியனுப்பின பின்பும் மகாராணி வஸ்தி வராமற் போனதற்கு, அவளுக்கு தேசச்சட்டத்தின்படி செய்யவேண்டியது என்ன என்று தன் மந்திரிகளை ஆலோசனை கேட்டான்.
அப்பொழுது அவனது ஏழு மந்திரிகளில் ஒருவனான மெமுகான் அரசனிடத்தில் "மகாராணியார் வஸ்தி மன்னாதி மன்னர் உங்களை மாத்திரம் அல்ல, உங்கள் ஆட்சிக்குட்பட்ட 127 நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களையும், சகல ஜனங்களையும் அவமதித்தாள். இனி ராஜ்யத்தில் உள்ள பெண்கள் ராணியாரை மாதிரியாய்க் கொண்டு தம் கணவன்மாரையும் பெரியோரையும் அற்பமாய் எண்ணினால் என்ன செய்வது! ஆகவே அரசே, உங்களுக்குச் சம்மதமாயிருந்தால் வஸ்தி இனி அரசராகிய உங்கள் முன்பாக வரும் தகுதியையும், மேன்மையான மகாராணி என்ற பட்டதையும் இழந்து விட்டார் என்று ராஜகட்டளையிட்டு நாடு கடத்துங்கள். அவளுடைய இடத்திற்குத் தகுதியான, அழகும் திறமையும் கொண்ட உத்தமி ஒருத்தியைக் கொணரும்படி கட்டளையிடுங்கள்" என்றான். கள்குடித்த கோபாவேசத்தில் இருந்த அரசனும் அப்படியே செய்தான்.
அரசன் அகாஸ்வேருவின் கோபம் தணிந்தபோது, தான் செய்தவற்றை எண்ணி வருந்தினான். தனிமையில் வாடினான். அவனுக்குப் பணிவிடை செய்த ஊழியக்காரர் மன்னனிடம் "அரசே, ராஜ்யத்தின் எல்லா மாகாணங்களிலும் அதிகாரிகளைக் கொண்டு சௌந்தரியமான கன்னிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து சூசான் பட்டணத்து அரண்மனையின் அந்தப்புரத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான அலங்காரம் மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்து, அரசனின் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தால் வெகு விரைவில் அரசர் தன் மனதிற்குப் பிரியமான இளம்பெண்ணை அரசியாகக் கொள்ளலாம்" என்று யோசனை சொன்னான். அரசனும் அப்படியே ஆகட்டும் என்றார்.
இப்படியாக அரசருக்குப் பெண் பார்க்கும் படலம் தொடங்கிற்று.
இதையறிந்த மொர்தெகாய் தன் சித்தப்பா மகள் எஸ்தர் அழகிலும் தகுதியிலும் ராணியாகக் கூடிய அத்தனை குண நலன்களையும் பெற்றவள், பட்டத்திற்கு ஏற்றவள் என்று எண்ணி அவளைத் தேடி வந்தான். அவள் கிணற்றடியில் ஒரு தேவதையொத்த யௌவனத்தோடு வீற்றிந்தாள்.
எஸ்தரும் மொர்தெகாயின் யோசனைக்குட்பட்டு முழு மனதோடு அரமண்மனைக்குச் சென்றாள். மொர்தெகாய் அவளிடம் தங்கள் பின்புலத்தை, குலத்தைப் பற்றி அரண்மனையில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அறிவுரை செய்து அனுப்பினான். காலச் சூழ்நிலையும் அரசியலும் எப்படி மாறும் என்று தெரியாது. அரண்மனையில் அவர்களைப் பிடிக்காதவர் எவரேனும் இருந்தால் பெண்பிள்ளை அவளுக்குத் தீங்கு எதுவும் நேராதிருக்க இப்படிச் சொன்னான் மொர்தெகாய்.
கன்னிமாடத்தில் இவ்வாறு வந்த ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும் (Myrrh), ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும் அழகு சிகிச்சை பெற்று அனுதினமும் அலங்கரிக்கப்பட்டார்கள். இவ்விதமாய்ப் பன்னிரண்டு மாதங்கள் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, தத்தம் முறை வருவதற்கு அழகுப் பெண்கள் தயாரானார்கள்.
எஸ்தர் தனது முறை வந்தபோது தனது கண்ணியத்திலும், அழகிலும், அறிவிலும், கனிந்த அன்பிலும் அரசரை கவர்த்தாள். அரசருக்கு அவள்பால் அன்பும் காதலும் உண்டாயிற்று.
மன்னன் தன் அரண்மனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமித்து கன்னிமாடத்தில் சிறந்த பகுதியை அவளுக்கும் அவள் தாதிமார்களுக்கும் தந்து எஸ்தரை தனது மனைவியாக்க மகாராணியாக்க வேண்டிய காரியங்களைத் துரிதமாக முன்னெடுத்தார்.
எஸ்தரைக் குறித்த செய்திகளையும், சுகத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான். அப்படி ஒருநாள் மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தபோது, அரசனின் அந்தப்புரத்து வாயில்காப்போர் இருவர் அகாஸ்வேருவை அழிக்க ரகசியத் திட்டம் செய்வதைக் கண்டார். அவன் அதை அன்றே எஸ்தருக்கு தெரிவித்தான்.
எஸ்தரும் அதை ராஜாவுக்குச் சொன்னாள். விசாரித்ததில் அது மெய்யென்று காணப்பட்டது. ஆகையால் வாயில்காப்போர் இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள. இந்த நிகழ்ச்சி அரசனின் நாளாகமப் புத்தகத்திலே விரிவாக சரித்திரத்துக்காகவும் அரசனின் குறிப்பிற்காகவும் எழுதப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் அரசர் அகாஸ்வேரு தனது அரசவையில் ஆமான் என்பவனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல மந்திரி பிரபுக்களுக்கும் மேலாக ஓர் உயர்வான பதவியைத் தந்திருந்தான். ஆகையால் அரண்மனை வாசலிலிருந்த அரசரின் ஊழியர்கள் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்.
இதனால், ஆமானோ மிகுந்த செருக்குடன் திமிர்வாதக்காரனாய்த் திரிந்தான். அவன் தன்னிலும் எளியவர்களை எள்ளுபவனாகவும், வஞ்சிப்பவனாகவும், அகம்பாவம் பிடித்தவனாகவும் இருந்தான்.
மொர்தெகாய் அரண்மனை வாசலில் ஆமானைக் காணும் போதெல்லாம் வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. அரச ஊழியர்கள் அவனிடம் சொல்லியும் மொர்தெகாய் எனையாளும் நல்லிறையையும், நாடாளும் அரசனையும் மட்டுமே வணங்குவேன் எனச் செவி கொடாதபோது, அவர்கள் அவனைப்பற்றி ஆமானுக்கு அறிவித்தார்கள்.
ஆமானும் தன்னை வணங்காத மொர்தெகாயை கவனிக்கத் தவறவில்லை. மொர்தெகாய்மேல் மிகுந்த ஆத்திரம் கொண்டான். அவனைப் பற்றி விசாரித்து அவன் யூத குலத்தைச் சேர்ந்தவன் என்றறிந்த போது அவனை மட்டுமல்ல அவன் மொத்த ஜனத்தையும் அழிக்க வகை தேடினான் ஆமான்.
அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அப்படி ஒரு சமயம் வாய்த்தபோது ஆமான், மன்னன் அகாஸ்வேருவை நோக்கி "மன்னா, உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒரு சாரார் ஊடுருவிச் சிதறுண்டு பரவியிருக்கிறார்கள். அவர்களுடைய வழக்கங்கள் பெர்சிய ஜனங்களுடைய வழக்கங்களுக்கு நேரே வித்தியாசப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல அவர்கள் அரசரின் சட்டங்களைக் கைக்கொள்வதில்லை, மதிப்பதுமில்லை. ஆகையால் அவர்களை இப்படியே விடுவது உங்கள் நல்லாட்சிக்கு நியாயமல்ல," என்று தூபம் போட்டான்.
மேலும் "அரசருக்குச் சம்மதமானால், அவர்களை அழிக்க வேண்டுமென்று ராஜகட்டளை இடுங்கள்" என்றான்.
ஆமானின் சூழ்ச்சியை அறியாத அரசனும் அவர்கள் யார் என்ன என்ற விவரம் எதுவும் அறியாமல் தன் கையிலிருக்கிற மோதிரத்தைக் கழற்றி, ஆமானிடத்தில் கொடுத்து "உன் இஷ்டப்படி செய்," என்றான்.
அதன்படி பன்னிரண்டாம் மாதமான ஆதார் மாதம், பதின்மூன்றாந் தேதியில் ஒரே நாளிலே சிறியோர், பெரியோர், குழந்தைகள், ஆண்கள், பெண்கள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே 127 நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது. அந்த அரச கட்டளையால் சூசான் நகரம் கலங்கிற்று.
நடந்த யாவற்றையும் அறிந்த மொர்தெகாய் துயரத்தோடு மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு, தன் ஆடைகளை கிழித்துக் கொண்டு தங்கள் குல வழக்கத்தின் படி சணலினால் செய்த ஆடையை அணிந்து, சாம்பலை உடம்பில் பூசிக்கொண்டு, நகரத்தின் நடுவே உள்ள அரண்மனை வாசல்முன் வந்து அழுதான்.
அரசரின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த நாடுகளில் வாழும் யூதர்கள் அனைவரும், மகா துக்கத்தோடும் உபவாசத்தோடும், அழுகையும், புலம்பலும் கொண்டு, சணல் ஆடை உடுத்திச் சாம்பலைப் பூசிக்கொண்டு முதல் இறையை வணங்கி, இறைஞ்சிக் கிடந்தார்கள்.
இந்தக் கட்டளையையும் மற்ற செய்திகளையும் தாதிமார்கள் எஸ்தருக்கு அறிவித்தார்கள். அவளும் கலங்கித் துக்கப்பட்டு, மொர்தெகாய் பற்றி அறியத் தன் பணிவிடைக்காரனை அனுப்பினாள்.
அவனிடம் மொர்தெகாய் முழு விவரத்தையும், யூதரை அழிக்கும்படி ஆமான் செய்த தந்திரத்தையும் சொல்லி அழுதான். அது மட்டுமன்றி யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, இதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அரசனிடத்திற் போய், தன் ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று சொன்னான்.
மொர்தெகாயின் சேதியறிந்த எஸ்தர் கலங்கி யோசனை வயப்பட்டாள். ஏனெனில் அரசர் அழைக்காமல், அவையின் உள்முற்றத்தில் பிரவேசித்தால் அரசர் பொற்செங்கோலை நீட்டினாலொழிய பிரவேசித்தவர்க்கு மரண தண்டனை என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு. இது அரசரின் சகல ஊழியக்காரர்களுக்கும், நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்.
ஆகையால் எஸ்தர் "நான் எப்படி ராஜாவினிடத்தில் செல்வது?" என்று செய்தி அனுப்பினாள்.
மொர்தெகாய் எஸ்தருக்கு "நீ ராஜாவின் அரண்மனையில் இருப்பதால், நீ தப்புவாய் என்று மட்டும் மனதிலே நினைக்காதே. நீ இப்பொழுது மவுனமாயிருந்தால், எல்லா வல்ல இறைவன் யூதருக்குச் சகாயத்தையும், இரட்சிப்பையும் வேறொரு இடத்திலிருந்து சர்வ நிச்சயமாய் எழுப்புவார். ஆனாலும், நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாய் இருக்கும்படிதான் ஆண்டவர் உனக்கு இந்த ராஜமேன்மையைத் தந்திருக்கிறாரோ என்றெண்ணியே கேட்கிறேன்" என்று பதில் செய்தி அனுப்பினான்.
எஸ்தர் தீர்மானித்தவளாய் "சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூட்டிவரச் செய்து, மூன்று நாட்கள் அல்லும் பகலும் எதுவும் புசியாமலும் குடியாமலும் உபவாசம் பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் கூட அப்படியே உபவாசம் பண்ணுவோம். பின் ராஜாவினிடத்தில் நமக்காய் மன்றாடுவேன். அவர் செங்கோலை உயர்த்தாது போனாலும், நான் செத்தாலும் பரவாயில்லை" என்று மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினாள்.
அப்படியாக உபவாசித்து, மூன்றாம் நாளிலே எஸ்தர் அழகிய ஆடைகளைத் தரித்துக்கொண்டு, அரண்மனையின் உள்முற்றத்தில், மன்னன் கொலுவிருக்கும் மண்டபத்தில சிங்காசனத்திலே வீற்றிருந்த அரசன் எதிராக வந்து நின்றாள்.
மன்னன் தன் மனதிற்கினிய மகாராணி எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டு, தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை நீட்டினான். எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
மன்னன் அவளை நோக்கி "எனதருமை எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதி கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும்" என்று கனிந்தான்.
அதற்கு எஸ்தர் "மன்னருக்கு சித்தமானால், நான் தரும் விருந்துக்கு ராஜாவும், ஆமானும் வரவேண்டும்" என்றாள்.
இதற்கிடையில் ஆமான் தன்னை அவமதித்த மொர்தெகாய்க்கு தகுந்த தண்டனை தர ஒரு கழுமரத்தைச் செய்வித்தான்.
அன்றிரவு அரசனுக்கு நித்திரை வராதபடியினால், அரண்மனையிலும், நாட்டிலும் நடக்கும் முக்கியச் செய்திகளையும், குறிப்புகளும் எழுதப்படுள்ள நடப்புப் புத்தகத்தைக் கொண்டுவரச் சொல்லி வாசிக்கக் கேட்டான்.
அதில் மொர்தெகாய் எப்படி அரசனைக் கொலை முயற்சியிலிருந்து தப்புவித்தான் என்று எழுதியிருந்தது.
வியப்பு மேலிட்ட அரசன் "இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா?" என்று வினவினான். அதற்கு ஊழியக்காரர்கள் "அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை" என்று சொன்னார்கள்.
ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிலிட வேண்டுமென்று, அரசனிடம் பேச வெளிமுற்றத்திற்கு வந்திருந்தான். சத்தம் கேட்ட அரசன் "முற்றத்திலிருக்கிறது யார்?" என்று வினவினான்.
ஆமான் உள்ளே வந்தபோது, அரசன் அவனை நோக்கி "நான் கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும், சொல்?" என்று கேட்டான். அதற்கு ஆமான் தன் மனதிலே "என்னையன்றி, யாரை அரசர் கனம்பண்ண விரும்புவார்" என்று நினைத்து,
அரசனை நோக்கி "அரசர் உடுத்திக்கொள்கிற ராஜவஸ்திரமும், அரசர் ஏறுகிற குதிரையையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியையும் தந்து அவனை ஊர்வலமாய் நகரவீதியில் கொண்டுவர வேண்டும்" என்றான்.
அப்பொழுது அரசன் ஆமானை நோக்கி "அப்படியா சரி. சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டு போய், அரண்மனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்குச் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார்த்துக் கொள்" என்றான்.
காரியம் மாறுதலாய்ப் போனதைக் கண்டு திக்கித்த ஆமானும் அரச கட்டளையை மீற முடியாமல் அப்படியே மொர்தெகாய்க்கு நிறைவேற்றினான்.
பின்னர் வீட்டுக்குச் சஞ்சலப்பட்டுப் போனான். அங்கே அரசரின் ஊழியர்கள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்கு வரச்சொல்லி ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.
ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது அரசர் எஸ்தரை நோக்கி "என் பிரிய எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? சொல், அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன?" என்றான்.
அதற்கு எஸ்தர் "மன்னா, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தது என் பாக்கியம். அரசருக்கு சித்தமாயிருந்தால் என் வேண்டுதலை, என் மன்றாட்டுதலைக் கேட்பீராக! என் ஜீவனும், என் ஜனங்களும் அழிக்கப்படாமல் காப்பீர்களாக. ஏனெனில், நானும் என் மக்களும் அழிக்கப்படவும், நிர்மூலமாக்கும்படி கொல்லப்படவும் இருக்கிறோம்" என்றாள்.
அப்பொழுது அரசனாகிய அகாஸ்வேரு அதிர்ந்தவனாக மறுமொழியாய், எஸ்தரை நோக்கி "இப்படிச் செய்யத் துணிகரங் கொண்டவன் யார்?" என்று வினவினான்.
அதற்கு எஸ்தர் "இதோ இந்தத் துஷ்ட ஆமான்தான்" என்றாள். அப்பொழுது ஆமான் எதிர்பாராத இந்தத் திருப்பத்தினால் திகிலடைந்து போனான்.
கோபத்தோடு அரசன் விருட்டென்று விருந்துப் பந்தியை விட்டெழுந்து, தன்னை ஆசுவாசிக்க அரண்மனைத் தோட்டத்திற்குப் போனான். அந்த சமயத்தில் ஆமான் அரசியிடம் விண்ணப்பம் பண்ண எழுந்தவன் எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின் மேல் தடுமாறி விழுந்தான். அந்நேரம் பந்தி வைத்த மண்டபத்திற்கு திரும்ப வந்த அரசன் ஆமான் மெத்தையில் கிடப்பதைக் கண்டு "என் கண்முன்னே இவன் என் அரசியைப் பலவந்தம் செய்வானோ! இவனை இப்பொழுதே தூக்கிலிடுங்கள்!" என்று கத்தினான்.
அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம் பண்ணின ஐம்பது முழ உயரமான கழுமரத்திலே ஆமானைத் தூக்கிலிட்டார்கள்.
எஸ்தரும் தன் உறவினனான மொர்தெகாயை இன்ன உறவு என்று மன்னனிடம் அறிமுகப்படுத்தினாள்.
அரசரும் ஆமானின் கையிலிருந்து தம்முடைய மோதிரத்தை எடுத்து மொர்தெகாய்க்குக் கொடுத்தது மட்டுமல்லாமல் ஆமானின் அரண்மனைக்கு அதிகாரியாக வைத்தார்.
மற்றும் ஆமானைக் கொண்டு பிறப்பித்த கட்டளையை மொர்தெகாய் கொண்டு மாற்றியமைத்தார் அரசர்.
அந்தக் கட்டளை அவருடைய ஆளுகைக்குட்பட்ட இந்து நதி பாயும் தேசம் முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் பல்வேறு மொழியில் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, அரசரின் மோதிரத்தினால் முத்திரை செய்யப்பட்டு , குதிரைகள் மேலும் வேகமான ஒட்டகங்கள் மேலும், கோவேறு கழுதைகள் மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.
மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், ஊதாநிறப் பட்டும், ஆபரணமும் அணிந்தவனாய் சூசான் நகர மக்களோடு ஆர்ப்பரித்து மகிழ்ந்தான். இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும் உண்டாயிற்று. எந்த ஆதார் மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலே அழிக்கப்பட இருந்தார்களோ அதே ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலே விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.
அரசன் அகாஸ்வேரு மொர்தெகாயின் திறமையையும், சமாதனம் நாடும் அறத்தினையும், கூர்த்த அறிவையும் மெச்சித் தனக்கு அடுத்த நிலையில் உள்ள பதவியைத் தந்து மேன்மைப் படுத்தினார். அவனும் தன் நாட்டின் திரளான சகோதரருக்குப் பிரியமானவனாய், மக்களுடைய நன்மையை நாடுபவனாய், தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனாய்த் திகழ்ந்தான்.
இப்படியாக எஸ்தரும் மொர்தெகாயும் தம் நெஞ்சுரத்தினாலும், அறத்தினாலும், அன்பினாலும் இறையின்பால் கொண்ட பக்தி மன்றாட்டுதலாலும் மக்களை அழிவில் இருந்து காத்தார்கள்.
இன்றளவும் இறைவன் தம் தூதர்களை மணம் பரப்பும் மருதோன்றிப் பூக்கள் போன்று அனுப்பியபடியேதான் இருக்கிறார்.
அப்படியாக தன் பிம்பமாய், தான் அனுப்பியவர்களில் மணிமுடியாய், பேரன்பின் ஒளியாய், கருணாமூர்த்தியாய், ஒரு குற்றம் இல்லாதவராய், குற்றம் பாராதவராய் இதமான போதனைகளால் ஆலோசனை நாயகனான இயேசுபிரானை 2000 ஆண்டுகளுக்கு முன் "அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு எனப்படும்" என ஏசாயா தீர்க்கதரிசி உரைத்தது போல மக்களின் நலமும், வளமும் பொங்க இறைவன் அனுப்பி வைத்தான்.
மகிழ்ச்சி பொங்கிட அன்பு பெருகிட கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துகள்! |
|
தேவி அருள் மொழி, சிகாகோ, இல்லினாய் |
|
|
More
அதுதான் தாய்! கே3
|
|
|
|
|
|
|
|