Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சாதனையாளர் | நேர்காணல் | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | வாசகர்கடிதம்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
தாயுமானவன்
- எஸ். ராமச்சந்திரன்|அக்டோபர் 2024|
Share:
அவள் வெளியே தெருவில் நிற்கிறாள். இனி அவள் அந்த வீட்டின் உள்ளே வருவாளா? யாருக்கு அது தெரியும். நேரமோ நள்ளிரவு. தெருவின் மின்கம்ப விளக்குகள் அனாதையாக எரிந்துகொண்டிருந்தன. வெளிச்சம் வேண்டுமென்று ஆசைப்பட்டு மின்விளக்கு அருகே போய்த் தம்மை முடித்துகொாள்ளும் பறக்கும் சிறு சிறு இறக்கைப் பூச்சிகள் வீதியெங்கும் மண்டிக்கிடந்தன. ஆகாயத்து அரை நிலா பளிச்சென்று தன் இருப்பைக்காட்டி பூ உலக நடப்பைப் பார்த்து நகைத்துக்கொண்டே நகர்ந்தது. பூமியோடு ஆகாயத்து நிலவுக்குத்தான் தொப்புள் கொடி பந்தமாயிற்றே. எங்கோ ஒரு கிழ நாயொன்று தான் துக்கித்து இருப்பதை ஊரறிய ஊளையிட்டு முடித்தது. நாய்க்கும் வருத்தங்கள் பலது இருக்கலாம்.

தலைமுடி முற்றாய்க் கலைந்துபோய் நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொள்ள, கண்கள் இரண்டும் குளமாகி, அவள் எங்கோ ஆகாயத்தை முறைத்துக்கொண்டு நிற்கிறாள். அவன் வீட்டினுள்ளே கோரைப்பாயில். அவனுக்கு இரு பக்கத்திலும் ஒவ்வொரு குழந்தை உறக்கத்திலிருந்தது. இரண்டில் பெண் குழந்தைதான் பெரியது. வயது ஆறு இருக்கலாம். ஆண் குழந்தையின் வயது இன்னும் இரண்டு குறைவாகத்தான் இருக்கும். இவ்விரு மக்களையும் பெற்றுப்போட்டுவிட்டு அல்பாயுசிலேயே போய்விட்ட அவன் மனைவி விட்டுச்சென்ற அந்த வெற்றிடத்தை நிரப்ப வந்தவள்தான் இப்போது வெளியே நடுத்தெருவுக்குப் போய் இதோ நிற்குமிவள். அத்தனை கோபம்.

வீடு முழுதும் மின்விளக்குகள் பளிச்சென்று எரிந்து நிகழ்ந்துபோன ஏதோ அசம்பாவிதம் ஒன்றிற்கு வலுச் சேர்த்துக்கொண்டு இருந்தன. வாயிற்கதவு வாழும் வீட்டில் கொள்ளை போனது போல 'ஆ' எனத் திறந்துகொண்டு நிற்கிறது. அவன் கண்கள் சிவந்துபோய் இருந்தன.

அவனுக்குக் குல தெய்வம் உடையார்பாளையம் அருகேயுள்ள ராயம்பரம் என்னும் அந்த குக்கிராமத்துச் செல்லி அம்மன். தன் இரு குழந்தைகளுக்கும் மொட்டை போடப் போனபோதுதான் அவன் தன் மனைவியைத் தொலைத்து விட்டு வந்தான். கோவிலில் நேர்த்திக்கடன் முடித்துவிட்டுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்து ஊர் திரும்பும் சமயம், உடையார் பாளையத்தைத் தாண்டி அந்தப் பேருந்து வந்தது. திடீரென்று அவன் மனைவி தானமர்ந்திருந்த இருக்கையினின்று சாய்ந்து வீழ்வது கண்டு பதறிப்போனான். குழந்தைகள் அவன் மடியில் நம்பிக்கையோடு உறக்கத்தில் இருந்தன. அந்தப் பேருந்திலேயே அவள் பிணமாகிப் போயிருந்தாள். ஏன், எப்படி இது என யாரைப்போய்க் கேட்பது. அவள் செத்துப் போய்விட்டதாய் அங்கு அவசரமாய் அழைத்து வரப்பட்ட மருத்துவர் சொல்லித்தான் தெரிந்துகொண்டான். பேருந்தில் தூங்கி விழித்த பின்னும் மனித உயிர்த் தொலைப்பின் வலி அறியாப் பிள்ளைகள் குழப்பத்தில் இருந்தார்கள்.

பேருந்துப்பயணி என்பதாலேயே உடலை அறுத்து வெள்ளைத்துணி கொண்டு சுற்றி பாலிதீன் பை ஒன்றில் ஒரு பொட்டலமாய்த் தந்தார்கள். இத்யாதிகள் எல்லாம் கறாராய் அனுசரிப்பது அரசு மருத்துவமனையின் தலையாய பணியாயிற்றே. திருமுதுகுன்றத்து மணிமுத்து ஆற்று மடுவிலே அவள் சாம்பலைக் கரைத்து விட்டான். ஆற்றுத் தண்ணீரை ஊற்றுக் கிணறு ஒன்றிலிருந்து வாளியில் மொண்டு மொண்டு தலைமேல் கொட்டிக்கொண்டான். முழுகி எழும் தண்ணீர் மணிமுத்தாற்றில் எப்போதேனும் மட்டுமே வருகிறது. தன் நெற்றியில், உடலெங்கும் திருநீறு குழைத்துப் பட்டை பட்டையாய்ப் பூசிக்கொன்டான். அவள் கதை முடிவுக்கு வந்தது.

நண்டும் சிண்டும் என அவன் எதிரே நிற்கும் அந்தக் குழந்தைகளை எப்படி வளர்ப்பது? வீட்டில் பெண் என்பவள் இல்லாவிட்டால் அது ஒரு வீடாகுமா. அப்படித்தான் அவனுக்கும் அப்படி வயதாகிவிட்டதா என்ன? மனைவி வேண்டுமென அவன் உடல் விழித்துக்கொண்டு அவனைப் பிறாண்டினால் எங்கே போய் முட்டுவது? ஆக, சுற்றி இருந்தோர் எல்லாருமாய்ச் சேர்ந்துதான் அவளைக் கொண்டுவந்து அவனுக்கு இரண்டாம் தாரமாய்க் கட்டிவைத்தார்கள்.

வந்தவள் சிறுசு. அவள் சரி என்றாளே. காலம் அவளின் பருவ தாகத்தைக் கூட்டிக்கொண்டும் இருக்கலாம். எது ஒன்று எப்படித் தொடங்கும், அது எங்கே போய் முடியும், யாருக்குத் தெரிகிறது? அது எல்லாம் தெரிந்தால் நாம்தான் சும்மா இருந்துவிடுவோமா. ஆட்டுக்கும் வால் அளந்துதானே வைக்கப்படுகிறது என்கிறார்கள்.

இன்னது செய்வது என்று தெரியாமல் விழித்தான். அவளை வீட்டின் உள்ளே வரச்சொல்வதா, வேண்டாமா? அவன் ஈகோ துருத்திக்கொண்டு நின்றது. அவள்தானே தெருவுக்குப் போனாள், அவளே வரட்டும். நாம் என்ன கூப்பிடுவது. இந்த வீட்டினுள்ளே வராது அவள் அப்படியே எங்கேனும் போய்தான் விடுவாளா? அப்படிஎல்லாம் கூட நடக்குமா? நடக்கட்டுமே! அப்படிப் போகிறவளை கூட்டி வைத்துக்கொண்டு நாம் என்ன குடும்பம் நடத்த வேண்டியிருக்கிறது. என்னவெல்லாமோ யோசித்தான். திறந்தே கிடக்கிறது வாயிற்கதவு. அவள் இன்னும் தெருவிலே தான் நிற்கிறாள்.

இதுதான் நடந்தது.

இரண்டு குழந்தைகளுக்கு இடையே படுத்திருந்த அவனை அவள் எழுப்பி இருக்கிறாள். எதற்கு என்றால் அந்த அதற்குத்தான். அவன் ஏதோ தயங்கினான், யோசித்தான். திரும்பவும் பாயிலே படுத்துக் கொண்டான்.

"இது சரியில்லை" என்றாள்.

"எது" அரைத் தூக்கத்தில் கேட்டான்.

"இப்படிப் படுத்திருப்பது."

"என் குழந்தைகளிடையே நான் படுத்திருக்கிறேன். தாயில்லாக் குழந்தைகள் உனக்குப் பரிதாபமாக இல்லை!"

"நான் யார்?"

"என் மனைவி."

"பிறகு"

"பிறகுதான்"

"இப்படியே படுத்திருப்பதற்கு நான் இங்கு எதற்கு"

"சரியில்லை."

"அது நானா அல்லது நீங்களா"

"வேண்டாம் விடு"

"இங்கென்ன வேலை எனக்கு?"

"வேலை இல்லை என்றே வைத்துக்கொள்"

அவன் கோபத்தின் உச்சத்தில் இருந்தான். படுத்திருந்த அவள் எழுந்தாள். பாயைச் சுருட்டினாள். வாயிற் கதவைத் திறந்தாள். இதோ அவள் போய் நிற்கிறாள்.

நட்ட நடுநிசி. வீதியின் நடுவே. போய்த் தொலையட்டுமே ஒருமுறை மனம் சொன்னது. குழப்பம் அதிகமானது. அருகே கிடந்த செல்போனைக் கையில் எடுத்தான். நண்பனை அழைத்தான். பேச்சு இப்படித்தான் போனது.

"மாத்ரு, அவ இந்த ராத்திரியில கோவிச்சிண்டு போயி நடுத்தெருவுல நிக்கறா"

"இன்னும் நிக்கறாளா பார்" பதறிக் கேட்டான் நண்பன்.

"ஆமாம் நிக்கறா..."

"மொதல்ல அவள வீட்டு உள்ளாற கூப்பிட்டுண்டு வா. பிறகு பேசு"

"ஏன்?"

"சொல்றத செய்"

"என் குழந்தைகள் எங்கிட்ட இருக்கிறது அவளுக்கு இடஞ்சலா இருக்காம்"

"ஒண்ணும் பேசாதே நீ அவள உள்ளாற கூட்டி வந்துட்டு அப்பறம் பேசு"

"எதுக்கு"

நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்த அவள் மெல்ல நகர ஆரம்பித்தாள்.

"அவ நகர்ரா"


"சீ போய் அவளக் கூட்டிண்டு வந்துட்டு அப்பறம் பேசு. நாந்தான் உனக்கு இந்தக் கல்யாணம் பண்ணிவக்கணும்னு ஒத்தக் கால்ல நின்னவன். இப்ப சொல்றேன் வாசல்ல போய் நிக்கறவ அவள்கூட கொழந்ததான். அவள யாரோ பெத்து இருக்கா. அதனலதான் அது உனக்கு உரைக்கல. போடா போ அவள கூப்பிடு போ."

நண்பன் போன் பேச்சை முடித்தான்.

அவன் வாசலுக்கு ஓடினான். அவளைத் தேடினான். அவள் அங்கு இல்லை. எங்கே அவள்? இந்த நேரத்தில் அவள் எங்கேதான் போகமுடியும்? என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தான். வீட்டினுள்ளே குழந்தைகள் உறக்கத்தில் இருக்கிறார்கள். வீடு திறந்தே கிடக்கிறது. அவனுக்கு நெஞ்சை அடைத்தது. மயக்கமாய் இருந்தது.

எதிரே நண்பன் மாத்ரு டூவீலரில். அவள் பில்லியனிலிருந்து குதித்தாள்.

"நீ என்ன செய்வாய் என யோசித்தேன். உன் வீடு நோக்கி வண்டியைக் கிளப்பினேன் வரும் வழியில் உன் மனைவி எங்கோ போய்க் கொண்டிருந்தாள். வண்டியில் ஏறு என்றேன். நடுங்கிப் போனாள். என் கால்களைப் பிடித்துக்கொண்டு கதறினாள். பதறிப்போனேன். என் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். இதோ வந்து உன் முன்னால் நிற்கிறாள். உன் மகள் இப்படிச் செய்திருந்தால் என்ன செய்திருப்பாயோ அதை மட்டும் செய்."

தன் வண்டியைக் கிளப்பினான்.

"ஒண்ணு நன்னா தெரிஞ்சிகோடா. தன் குடும்பத்தைத் தோத்துட்டு அப்பறம் ஒரு மனுஷன் சம்பாரிக்கறது எதுவுமில்லே."

மாத்ரு புறப்பட்டான்.

அவள், அவன் நின்றுபோன இடம் தொட்டுக் கண்களில் ஒத்திக்கொண்டாள். அவனுக்குக் கண்கள் பனித்தன. அவன், அவள் கை பிடித்துத் தன் வீடு நோக்கி நடந்தான்.

"மாத்ருன்னா அர்த்தம் 'அம்மா' அவன் அவளிடம் சொல்லிக்கொண்டே போனான்.
எஸ்ஸார்சி
Share: 




© Copyright 2020 Tamilonline