Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2024 Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
ஞானோதயம்
- ரஸவாதி|செப்டம்பர் 2024|
Share:
கல்கத்தா மெயில் பெஜவாடா ஸ்டேஷனில் வந்து நின்றது. பிளாட்பாரத்தில் ஒரே கலகலப்பும் பரபரப்புமாயிருந்தது. பீடி, சிகரெட், பழங்கள் இவைகளை விற்பவர்கள் ஏக காலத்தில் பல ஸ்வரத்தில் கத்திக் காதைச் செவிடுபடுத்திக் கொண்டிருந்தனர். ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்த ஜனகம் அந்த அபஸ்வரத்தைச் சகிக்கமாட்டாமல் தலையை உள்ளுக்கு இழுத்துக் கொண்டாள். அப்போது அதே பெட்டியில் ஒரு கனவான் ஏறினார். ஜனகத்தின் கணவருக்கு அவரைத் தெரியும் என்பதை அவர் புன்சிரிப்பே காட்டியது.

"நமஸ்காரம். பெண்ணோடு ஊருக்குப் போறாப்போலே இருக்கு!" என்றார் புதிதாக வந்தவர்.

ஜனகம் திடுக்கிட்டு வெடுக்கெனத் தலையைத் திருப்பி ஜன்னல் வழியே வானவெளியை வெறித்துப் பார்த்தாள். அவள் விழிகளின் கோணத்தில் இரு சொட்டு நீர்த் திவலைகள் பளிச்சென்று அந்தக் காலை வெய்யிலில் மின்னின.

"இல்லை... வந்து... இது என் மனைவி...." என்று ஜனகத்தின் கணவர் ஆத்மநாதய்யர் திணறித் திணறிச் சொல்லும்போது அவர் முகத்தில் அசட்டுக்களை ததும்பியது.

"ஓ! ஐ ஆம் ஸாரி...!" என்று மழுப்பினார் புதியவர்.

பிறகு சிறிது நேரம் வரையில் அந்தப் பெட்டியில் கோரமான அமைதி நிலவியது.

தவறானதொரு காரியத்தைச் செய்து விட்டதற்காக மூன்று உள்ளங்கள் வருந்தின. ஜன்னலருகில் இருந்த ஜனகம் நெட்டுயிர்த்தாள். மனதின் அடித்தளத்திலிருந்த துக்கம், ஏக்கம் எல்லாம் ஒன்றாகத் திரண்டு மார்பைப் பிளந்து கொண்டு வருவது போன்று ஒரு பெருமூச்சு அவளிடமிருந்து வெளிவந்தது.

சட்டென்று அவளுக்குத் தன் தோழி விமலாவின் நினைவு வந்தது. அவள்தான் எவ்வளவு பாக்கியசாலி!

ஜனகத்தின் மனம் கட்டவிழ்த்த காளைபோல் பழைய சம்பவங்களை நோக்கிப் பாய்ந்தது.

2
"ஜனகம்!" என்று கூப்பிட்டுக் கொண்டே துள்ளிக் குதித்தவாறு வரும் விமலாவைக் கண்டதும், தன் கைக் காரியத்தை அப்படியே போட்டுவிட்டு எழுந்தாள் ஜனகம்.

"என்ன விமலா, அண்ணா வந்துட்டாரா? என்ன சமாசாரம்?"

"ஆமாண்டி, அவாள்ளாம் நாளைக்குக் காலம்பற பத்து மணிக்கு வராளாம்" என்றாள் விமலா வெட்கம் கலந்த புன்னகையுடன்.

"அதிர்ஷ்டக்காரிடி, நீ! வரப்போகிறவருக்குக் கட்டாயம் உன்னைப் பிடித்துப் போய்விடும். அப்புறம் கல்யாண மோக்ளாவில் என்னை எங்கே ஞாபகம் வச்சுக்கப்போறே?" என்று ஜனகம் சொல்லும்போதே பிரிவின் எல்லை கடந்த சோகம் அவள் குரலில் பிரதிபலித்தது.

"போடி, நீ ஒண்ணு! என்னவோ சொல்வார்களே, 'அடிங்கறத்துக்கு...'ன்னு! அதுமாதிரி என்னவோ இப்பவே கல்யாணமாயிட்ட மாதிரி பேசறயே! சரி, நான் வரட்டுமா? நாழியாச்சு!" என்று சொல்லிக் கொண்டே விமலா ஓடிவிட்டாள் நாணத்துடன்.

ஜனகம் பெருமூச்சு விட்டாள். அவள், வயதுப் பெண்தான் விமலாவும். அவளுக்குக் கல்யாணத்திற்காக ஏற்பாடுகள் நடக்கின்றன. இங்கே.......?

விமலா பணக்காரி. நன்றாகச் சிவப்பாக இருப்பாள். அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கசக்கிறதோ வருகிறவனுக்கு? ஆனால் ஜனகம் ஏழை. "அழகு மட்டும் இருந்து என்ன பயன்? அதிர்ஷ்டம் வேண்டாமா?" என்று அடிக்கடி ஏங்குவாள் ஜனகம். அவள் தாயார் செல்லம்மாள் விமலாவின் வீட்டில் சமையல் வேலை செய்துவந்தாள். தகப்பனாரை ஞாபகமே இல்லை ஜனகத்திற்கு. அவ்வளவு சிறு வயதில் போய்விட்டார் அவர். ஆதரவுக்கும் வேறு மனிதர் இல்லாமல் ஏதோ விமலாவின் தாயார் காட்டிய ஆதூரத்தினால் இவ்வளவு வருஷங்கள் ஓடின.

வயது வந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு நெருப்பின்மீது இருப்பவள்போல் துடித்தாள் செல்லம்மாள். தாயார் ஸ்தானத்தில் இருந்த அவள் யௌவனப் பெண்ணின் மனோகதியையும் ஆசாபாசங்களையும் நன்கு அறிவாள். ஆனால் அவளால் முடியுமா? விமலாவுக்கு இரண்டாயிர ரூபாய் கொடுத்துத்தான் கல்யாணம் செய்யப் போகிறார்கள். பிள்ளையாகத் தேடினாலும் கல்யாணம் செய்யவாவது பணம் வேண்டாமா என்று வருந்தினாள் செல்லம்மாள். விமலாவின் தாயார் சிபாரிசின் பேரில் அவளுடைய தகப்பனார் ஜனகத்திற்காக ஒரு வரனைக் கொண்டு வந்தார்.

மாப்பிள்ளைக்கு வயது ஐம்பத்திரண்டுதான். மூன்றாம் கல்யாணம். முதலிரண்டு மனைவிகளுக்கும் குழந்தை, குட்டிகள் இல்லை. வரன் ஆத்மநாதய்யர் கல்கத்தாவில் எங்கேயோ பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார். ஆஸ்தி நிறைய இருக்கிறது. சந்ததிக்காகத்தான் மறுமணம் செய்து கொள்கிறார். பெண்ணுக்கு உடம்பு பூராவும் வைரமாகவே இழைத்துவிடுவார். இவ்வளவுதான் விமலாவின் தகப்பனார் கொண்டு வந்த தகவல்.

"செல்லம், யோசனை பண்ணாமே முடிச்சுடு! வயசு மட்டும் அவ்வளவு இல்லேன்னா நானே விமலாவைக் கொடுத்துடுவேன்!" என்றாள் விமலாவின் தாயார்.

செல்லம்மாளின் முகம் கறுத்தது. "அம்பத்திரண்டா? எனக்கே நாற்பது தானே ஆகிறது!" என்று அவள் யோசித்தாள். பிறகு சொல்லுவதாகக் கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டாள்.

அவள் நுழைந்ததுமே, "என்னம்மா, விமலாவைப் பார்க்க வரப் போறாளாமே?" என்றாள் ஜனகம் ஆவலுடன்.

"ஆமாம்" என்று அசிரத்தையாகப் பதில் கூறிவிட்டு உள்ளே போன தாயாரை வியப்புடன் பார்த்தாள் ஜனகம்.

"என்னம்மா, ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?" என்று அவள் நச்சரித்ததைத் தாங்கமாட்டாமல் விஷயத்தை ஒரு வழியாக அவளிடம் கஷ்டப்பட்டுக் கூறிவிட்டாள் செல்லம்மாள். ஜனகம் பிரமித்துப் போய் நின்றுவிட்டாள்.

ஆனால் அவன் சில பெண்களைப் போல் 'கன்னா பின்னா'வென்று மனோராஜ்யம் செய்து மாய்ந்து போய்விடவில்லை. "ஜனகம், ஜனகம்" என்று இரண்டு தடவை செல்லம்மாள் கூப்பிட்ட பிறகு சுய உணர்வு வந்து விட்டது அவளுக்கு.

3
கொல்லைப்புறத்து வாசற்படியில் நின்றவாறே கனவு கண்டு கொண்டிருந்தாள் ஜனகம். சுந்தரேசன் - அவர்தான் நேற்று விமலாவைப் பார்க்க வந்தவர். ஏன் தன்னை அப்படி விழுங்கி விடுவது போல் பார்க்கவேண்டும்? தனக்குக்கூட அவரை அடிக்கடி திருட்டுத்தனமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏன் உண்டாயிற்று? ஆள் அழகாகத்தான் இருக்கிறார். விமலாவுக்குத் தகுந்த ஜோடிதான்!

ஜனகத்தின் கனவு கலைந்தது. "ஜனகம்!" என்று கூப்பிட்டுக் கொண்டே பரபரப்புடன் உள்ளே நுழைந்தாள் செல்லம்மாள்.

"என்னம்மா....?"

"நான்தான் உன்னைக் காலம்பற அங்கே வரவேண்டாம்னு சொன்னேனே, ஏன் வந்தே நீ?"

செல்லம்மாளின் குரவில் வருத்தம் தோய்ந்திருந்தது.

"ஏன், என்ன சமாசாரம்?" என்று பதறினாள் ஜனகம்.

"ஒண்ணுமில்லை. வந்த பிள்ளையாண்டான் உன்னைப் பார்த்துட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமா, யார் நீ அப்படீன்னு விசாரிச்சானாம். அவாகிட்டே!"

திடீரென்று ஒரு சந்தோஷ உணர்ச்சி, சுழற்காற்று ஒரு துரும்பை உயரே தூக்கி வான மண்டலத்திற்குக் கொண்டு போவது போல், அவள் மார்பிலிருந்து கிளம்பி வேகமாய் வந்து நெஞ்சை அடைத்துக் கொண்டது. அதன் வேகத்தில் திக்குமுக்காடிப் போனாள் ஜனகம்.

"நி... ஜ.ம்...மா...வா...!"

"நீ ஏன் அங்கே வந்தே? மாமி என்னைக் கோவிச்சுண்டா. அதனாலே கூடிய சீக்கிரத்தில் உனக்கு. முன்னே சொன்ன இடத்தை முடிச்சுடலாம்னு சொன்னாள்!"

எவ்வளவு வேகத்துடன் ஜனகத்தின் உணர்ச்சி எழும்பியதோ, அதே வேகத்தில் தலைகீழாகப் பாதாளத்தில் போய் விழுந்தது. "ஜனகம், நான் என்னடியம்மா பண்ணுவேன்? உன்னை விட்டா எனக்கு நாதி யாரு? வயசாச்சேன்னு பார்க்காதே; எப்படியாவது நீ சுகப்பட்டால் போதும்" என்று தேம்பினாள் செல்லம்மாள்.

ஜனகம் க்ஷணநேரம் மௌனமாக இருந்நாள். பிறகு அவளையுமறியாமல் அவள் உதட்டிலிருந்து, "ஆகட்டும், அம்மா...!" என்ற வார்த்தை வெளிவந்தது.

4
"ஏன் ஜனகம், நிஜமாவா?" என்றாள் விமலா.

"ஆமாம்."

ஒரு அசாதாரணமான அமைதி அவள் முகத்தில் நிலவியது.

"நான் கேட்கிறேனேன்னு தப்பா நினைச்சுக்காதே. ஐம்பத்திரண்டு வயசான கிழவராச்சேன்னு சொன்னேன்!"

நீர்மல்கும் கண்களுடன் சட்டென்று முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள் ஜனகம்.

கிழவர் - பெண் விதவை!

இந்த வார்த்தைகள் அவள் கண்முன் நர்த்தனம் ஆடின.

"ஜனகம், கோவிச்சுக்காதே! நான் சொன்னது தப்பு. என்னை மன்னிச்சுடு!" என்று சொல்லிவிட்டுச் சென்றாள் விமலா.

அடுத்த மாதமே விமலாவிற்கும் சுந்தரேசனுக்கும் விமரிசையாகக் கல்யாணம் நடந்தேறியது. மணப்பந்தலில் மாப்பிள்ளை தன்னை அடிக்கடி பார்த்து உள்ளுக்குள் வேதனைப்படுவதை ஜனகம் அறியாமல் போகவில்லை. பாம்பின் கால் பாம்பல்லவா அறியும்?

ஒன்றிரண்டு வாரங்களில் ஒரு கிராமத்துக் கோயிலில் ஈஸ்வர சந்நிதானத்தில் ஆத்மநாதய்யருக்கும் ஜனகத்திற்கும் திருமணம் நடந்தது.

கணவனுடன் தன் மகள் ஊருக்குக் கிளம்பும்போது தாயார் கண்கலங்கினாள். ஜனகம், விமலாவின் தாயாரையும் தகப்பனாரையும் நமஸ்கரித்தாள். "நல்ல மாங்கலிய பலத்தோடு தீர்க்காயுசா இரு, அம்மா!" என்று விமலாவின் தாயார் ஆசீர்வதித்தபோது அவள் வாயே குழறியது. ஜனகம் சட்டென்று விமலாவைப் பார்த்தாள். அடுத்த கணம் குனிந்து தன் மார்பில் தவழ்ந்த மாங்கலியத்தைக் கவனித்தாள். கண்களில் நீர் சுரக்க வெளியே சென்று விட்டாள்.

5
கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகிறது ஜனகம் தன் தாயாரைப் பார்த்து. கடிதம் மூலம் க்ஷேம சமாசாரம் மட்டும் தெரிந்து வந்தது.

இந்த ஒரு வருஷ காலத்திற்குள்! - அம்மம்மா!- ஒருநாள் வெளியிலிருந்து வந்த ஆத்மநாதய்யர் தலைவலி என்று படுத்துக் கொண்டார். அவ்வளவுதான். மனுஷர் படுத்த படுக்கையாகிவிட்டார். விடாமல் இரண்டு வாரம் சாவித்திரி யமனுன் போராடியதுபோல் போராடினாள் ஜனகம். அவர் வியாதியுடன் படுத்திருந்தபோது எத்தனையோ இரவுகள் அவர்மீது சாய்ந்து தன் திருமாங்கலியத்தைக் கைகளில் பிடித்துக் கொண்டு அவள் அழுதிருக்கிறாள்.

"கிழவராச்சேன்னு சொன்னேன்...."

"மாங்கல்ய பலத்தோடு தீர்க்காயுசா இரு, அம்மா!"

இந்த வார்த்தைகள் அவள் இதயத்தைக் குடைந்து ரணமாக்கின.

நல்ல வேளை! ஈஸ்வரி அவள் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து மாங்கலியப் பிச்சை தந்தாள்.

ஆனால், அடிக்கடி சுந்தரேசனின் நினைவு வேறு வந்து அவள் மனதை வாட்டியது. ஒருநாள் காலை, "ஒன்று சொல்றேன் கேட்பேளா? ஊருக்குப்போய் நான் இரண்டு மாசம் இருந்துட்டு வரேன்!" என்றாள் மெல்லிய குரலில் ஜனகம்.

ஆத்மநாதய்யர் இவ்வளவு நாட்களாக அவளைக் கவனித்திருக்கிறார் - அவளுக்குத் தன்னிடம் மன நிம்மதியில்லை என்றும்தான். எப்படியாவது அவள் கொஞ்சகாலம் சந்தோஷமாய் மன நிம்மதியுடன் இருக்கட்டும் என்று தீர்மானித்தவராய், "அதற்கென்ன, போவோம். எப்படியாவது உன் உடம்பும் மனசும் தேறினால் சரி!" என்று ஆதுரத்துடன் கூறினார்.

ரயில் பிரயாணத்தில் அவளுடைய மன நிம்மதியைக் குட்டிச்சுவராக்கும் சம்பவங்கள் இரண்டொன்று நிகழ்ந்தன.

வால்டேர் ஜங்ஷனில் யாரோ ஒருவரைப் பார்க்க நேர்ந்தது.

ஜனகம் கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தாள்.

"யாரது? சுந்தரேசனா?"

"இருக்காது; வெறும் பிரமைதான்!" அசப்பில் சுந்தரேசன் மாதிரியே இருக்கும் அந்த ஆசாமியைக் கண்டதும் பழைய எண்ணங்கள் குமுறி எழுந்தன.

இந்த மாதிரி இரண்டாம் வகுப்பு வண்டியில் தானும் சுந்தரேசனும் ஜோடியாகப் போனால் எவ்வளவு அழகாக இருக்கும் என்றெல்லாம் விபரீதமாகக் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டது அவளது பேதை உள்ளம். அடுத்த நிமிஷம் அவள் தன் கணவர் இருந்த பக்கம் திரும்பினாள்; நரைத்த தலை, சுருங்கிய சதை; இடுங்கிய கண்கள்!

சுந்தரேசனின் ஆஜானுபாகுவான சரீரம் எங்கே, இவை எங்கே?

6
ஜனகம், ஊர் வந்துடுத்தே! எழுந்திரு, இறங்கலாம்" என்று ஆத்மநாதய்யர் சொன்ன பிறகுதான் ஜனகம் கனவு உலகிலிருந்து விழித்துக் கொண்டாள்.

வண்டியிலிருந்து இறங்கிய ஜனகத்தையும் அவன் கணவரையும் ஊரே. கூடிக் கொண்டு அதிசயமாகப் பார்த்தது.

பெண்ணைப் பார்த்ததும் வாத்ஸல்யத்துடன் தழுவிக்கொண்டாள் செல்லம்மாள். "வாருங்கள்" என்று மாப்பிள்ளையைச் சம்பிரதாயப்படி அழைத்துவிட்டு, மகளை அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். ஊர் சமாசாரத்தையெல்லாம் விசாரித்து விட்டு "விமலா சௌக்கியமாக இருக்கிறாளா, அம்மா?" என்றாள் ஜனகம்.

"உம்.... விமலாவா... வந்து... அவள் இங்கேதான் இருக்கா!" என்றாள், செல்லம்மாள்.

தாயாரின் தயக்கத்தைக் கவனித்த ஜனகம் "அப்படியானால் நான் போய் அவளைப் பார்த்துட்டு வரேன்!" என்று கிளம்பினாள்.

"வந்து... நீ போய் அவளைப் பார்க்கக் கூடாது."

"பார்க்கக் கூடாதா! ஏன்?"

"இன்னும் ஒரு வருஷம் ஆகவில்லை."

"என்னம்மா, நீ என்ன சொல்றே? எனக்கொண்ணும் புரியல்லையே?"

"வந்து... இரண்டு மாசத்துக்கு முன்னாலே ஒருநாள் சுந்தரேசன்... மூணு நாள் ஜுரத்திலே... போய்விட்டான்...!"

"என்ன....!"

அகில உலகமும் சுழல்வது போலிருந்தது ஜனகத்திற்கு. தடுமாறி விழாமல் பக்கத்திலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டாள்.

"விமலா - சுந்தரேசன்!..."

"கிழவாரச்சேன்னு சொன்னேன்..."

"கிழவர்... பெண்...விதவை!..."

"மாங்கலிய பலத்துடன் நீ தீர்க்காயுசா இருக்கணும்...!"

அவ்வளவுதான். அடுத்த நிமிஷம் "ஐயோ!" என்று அலறியவாறே வாசல்புறம் ஓடினாள் ஜனகம்.

வண்டிக்காரனுக்குச் சில்லறை கொடுத்து அனுப்பிவிட்டு ரேழியில் வந்து கொண்டிருந்த ஆத்மநாதய்யரின் முன் தடாலென்று விழுந்து அழுதாள்.

"ஜனகம், ஜனகம்! என்ன, என்ன?" என்று பதறினார் அவர்.

ஜனகம் தலை நிமிர்ந்தாள். கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு, "நானும் உங்களோடேயே வந்துடறேன், கல்கத்தாவுக்கு!" என்றாள்.
ரஸவாதி
Share: 




© Copyright 2020 Tamilonline