|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஆகஸ்டு 2024| |
|
|
|
|
அதிபர் பைடன் வரப்போகும் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட, கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகி இருக்கிறார். துணை அதிபர் வேட்பாளராக மின்னசோட்டா கவர்னர் டிம் வால்ஸ் (Tim Walz) போட்டியிடுவார். குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்டு ட்ரம்ப், J.D. வான்ஸ் என்பவரைத் துணையதிபர் பதவி வேட்பாளராகத் தேர்ந்துள்ளார். அவரது மனைவி உஷா சிலுகுரி இந்திய அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். மொத்தத்தில், இந்த முறை யார் வெற்றி பெற்றாலும், அமெரிக்க அரசு நிர்வாகத் தலைமையில் ஏதோவொரு வகையில் இந்திய வம்சாவழித் தொடர்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
★★★★★
பங்களா தேச அதிபர் ஷேக் ஹஸீனா பதவி துறந்து, நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவுக்கு வந்துள்ளார். இவருக்கு பிரிட்டன் 'அரசியல் புகலிடம்' அளிக்கவில்லை. அமெரிக்கா அவரது விசாவையே ரத்து செய்துள்ளது. 'வங்க பந்து' என்று அழைக்கப்பட்ட, அந்த நாட்டின் விடுதலைக்குக் காரணமாக அமைந்த, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் இவர் என்பது நினைவிருக்கலாம். பல மாதங்களாக நடந்துவரும் கடுமையான வன்முறைகள் கொண்ட எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில், இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில் இது நடந்துள்ளது. அவர் அகன்றவுடனேயே பாராளுமன்றக் கட்டடம் அதிபர், இல்லம் யாவற்றிலும் போராளிகள் புகுந்து தீ வைப்பு உட்படப் பெரிய சேதங்களை ஏற்படுத்தி உள்ளனர். இந்தக் கொந்தளிப்பில் பிற நாடுகளின் கை இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. எப்படியானாலும், இனியாவது பங்களா தேசத்தில் இயல்புநிலை திரும்பட்டும் என நாம் மனதார வேண்டிக் கொள்வோம்.
★★★★★
அரசியல், சமுதாயக் காரணங்களால் மூடப்பட்ட, கைவிடப்பட்ட கிணறுகளை மீட்டெடுத்து கிராமவாசிகள் மற்றும் மலைவாசிகளின் மனதில் நம்பிக்கை நீரை வார்த்து வரும் 'ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்' அமைப்பின் தீவிரச் செயல்பாட்டாளர் மதுமஞ்சரி. அவருடைய நேர்காணல் உங்களை ஒருபக்கம் அதிரவும் மறுபக்கம் நெகிழவும் வைக்கும். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. குறித்த சில அரிய நினைவுகளை அவரது மகன் பகிர்ந்துகொள்கிறார் 'அலமாரி' பகுதியில். 'ஆள் வளர்ந்த அளவுக்கு' சிறுகதை நெஞ்சை உருக்குவது. 'பவ்ஹாரி பாபா' குறித்த கட்டுரையில் அவர் திருடனுக்கு இரங்க, அவனே யோகியான சம்பவம் வித்தியாசமானது.
வாசகர்களுக்கு கீதாச்சார்யன் பிறந்த நாளான கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி மற்றும் இந்திய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள். |
|
தென்றல் ஆகஸ்ட் 2024 |
|
|
|
|
|
|
|