|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஜூலை 2024| |
|
|
|
அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவருக்கும் இடையேயான முதல் பொது விவாதம் நடந்து முடிந்துள்ளது. பைடன் சில சமயம் பேசிய விதத்தைப் பார்த்து, அவருடைய வயது மற்றும் உடல்நலம் இருக்கும் நிலையில் அவர் அதிபராக நன்கு செயல்பட முடியுமா என்கிற கேள்வியைச் சிலர் எழுப்பியுள்ளனர். அத்தோடு நில்லாமல், அவருக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. "பைடன் அரசின் சாதனைகளைப் பார்க்க வேண்டும். அவசரப்பட்டு அவரது உடல்நலத் தகுதியைக் குறை சொல்பவர்கள் மருத்துவர்கள் அல்லர். அத்தோடு, தேர்தலில் பைடனுக்கு இணையாக வாக்குகளைப் பெறவல்ல இன்னொரு டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் இல்லை" என்று தேர்ந்த அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது ஒன்று உண்டு. குற்றவாளி என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட, உண்மையைத் தன் சவுகரியத்துக்குத் திரித்தும் மறைத்தும் பேசச் சற்றும் தயங்காத டொனால்ட் ட்ரம்ப் அதிபரானால் அமெரிக்காவின் கதி என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும். சோதனையான இந்தக் காலத்தில் மனச்சாட்சியோடு தேசத் தலைமையைத் தீர்மானிப்பது மிகவும் அவசியம்.
★★★★★
இந்தியா T20 உலகக் கோப்பையை வென்றிருப்பது, அதிலும் தராசு போல இரு அணிகளின் நிலையும் ஏறி இறங்கிக் கொண்டிருந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது, பெருமகிழ்ச்சி தருகிறது. சதுரங்கம், வில்வித்தை, மல்யுத்தம், குத்துச்சண்டை உட்படப் பல்வேறு போட்டிகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்து வருவது பாரதத்தின் புதிய தன்னம்பிக்கையைக் காண்பிக்கிறது. இந்த மகோன்னதமான வெற்றிக் களிப்பில் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா போன்ற சிறந்த வீரர்கள் T20 வகை ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இவர்களின் திறமை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு மற்றும் விழுந்தாலும் மீண்டெழும் மன உரம் ஆகியவை இளைய தலைமுறையினருக்கு உற்சாகப் பாடங்களாக அமையும். சுதந்திரத்தின் அமிர்த காலமாக இதனை வளரவிட நாட்டு மக்கள், குறிப்பாக அரசியல் கட்சிகள், ஒத்துழைக்க வேண்டும்.
★★★★★
தமிழ் பவுண்டு என்ன விலை என்று கேட்கும் இளைய தலைமுறையினர் நடுவே, சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது வென்றுள்ள, 34 வயதே ஆன லோகேஷ் ரகுராமன் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். தனக்கெனத் தனியான தமிழ்நடை ஒன்றை வகுத்துக்கொண்டு சிறுகதை, கவிதை, நாவல் என்று எழுதிக் குவிக்கும் இவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி செய்கிறார். இவர் குறித்த 'சிறப்புப் பார்வை' சுவை மிக்கது. மெய்வழிச்சாலை ஆண்டவர், அழகாபுரி அழகப்பன், தே.ப. பெருமாள் ஆகியோர் குறித்த கட்டுரைகள் அரிய தகவல்களைத் தருவன. இரண்டு அருமையான சிறுகதைகளும் உண்டு.
வாசகர்களுக்கு குரு பௌர்ணமி வாழ்த்துகள். |
|
தென்றல் ஜூலை 2024 |
|
|
|
|
|
|
|