Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2024 Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | முன்னோடி | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கணங்களும் யுகங்களும்
- அழகாபுரி அழகப்பன்|ஜூலை 2024|
Share:
வழக்கம்போல் ஒன்பது மணிக்குச் சாப்பிட்டுவிட்டு ஆபிசுக்குப் போன கணவர் பத்தரை மணிக்கெல்லாம் அப்படி அலங்கோலமாக வீடு திரும்புவார் என்று தர்மு எதிர்பார்க்கவில்லை, வெய்யில் தாளாமல் வழுக்கைத் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு, நெஞ்சை வலிக்கிறதென்று தள்ளாடி வந்து நின்றார், தர்மு பதறிப்போனாள்.

ஐம்பதைத் தாண்டியவர் என்றாலும், கிழவர் ஒருநாள் கூடப் படுக்கையில் விழுந்தவரல்ல. "டாக்டரைக் கூட்டிவரட்டுமா?" என்று கேட்டாள்.

"வேண்டாம். வெறும் மார்வலிதான், பயப்படாதே!" என்று சாடை காட்டிய கிழவர் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.

ஸ்ப்ரிங் கட்டிலில் அவரை வசதியாகப் படுக்க வைத்துவிட்டு, மின் விசிறியையும் போட்டுவிட்டு, வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தாள் தர்மு.
கிழவர் விழிகளை மூடிக்கொண்டு மௌனமாக இருந்தார். அவர் தூங்கவில்லை: எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பது அவரது மாறும் முக பாவங்களிலிருந்து தெரிந்தது. ஊமைப்படம் போல் உணர்ச்சிகளை வாரிக் கொட்டிக் கொண்டிருந்தது அவரது சிவந்த முகம்.

அவர் பேசுவதற்காக தர்மு காத்திருந்தாள், பத்து நிமிஷங்கள் கழித்துக் கண் திறந்தார் கிழவர். பார்வையை மனைவியின் பக்கம் திருப்பாமல் வேறுபுறம் பார்த்துக் கொண்டு சொன்னார்: "காரைக்குடிப் பையன் ஒருத்தன் மிலிட்டரியிலே இருக்கான். டில்லியிலே இருக்கானாம். நம்ம ரமாவைப் பார்த்தானாம். ஒரு பெரிய டாக்டரோடு நெருங்கிப் பழகினாளாம். சீக்கிரம் கல்யாணம் நடந்துடும்னு சொன்னான்."

"அப்படியா! ரொம்ப சந்தோஷம்! எப்படியாவது அவளுக்கும் விடிவு காலம் வந்தால் சரிதான். அவளுந்தான் எத்தனை காலம் தன்னையே எரிச்சுண்டிருப்பா?" என்றாள் தர்மு.

கிழவர் அப்புறம் பேசவில்லை. கண்களை மூடிக் கொண்டு நல்ல தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.

மாலை ஐந்து மணிக்கு மறுபடியும் மார் வலிக்கிறது என்றார், மார்பின் இடது பக்கம் கையை அழுத்திக் கொண்டு துடித்தார். தர்மு பரபரத்தாள், பாலுவை அனுப்பிப் பக்கத்துத் தெரு டாக்டரை அழைத்து வரச் சொன்னாள்.

டாக்டர் வந்து சோதனை செய்துவிட்டு, "நத்திங் பட் வீக்னஸ். ஜஸ்ட் டேக் ரெஸ்ட். இட்ல் பி ஓ கே!" என்று மாத்திரைகளும் டானிக்கும் எழுதிக்கொடுத்து விட்டுப் போனார்.

ஆனால் கிழவருக்கென்னவோ பயம்! நலிந்த குரலில், "ராஜுவுக்கும் இந்திராவுக்கும் தந்தி கொடுத்து விடு" என்றார்.

"சரிங்க" என்ற தர்மு, "ரமாவுக்கு?" என்று கேட்டாள்.

அயர்வுடன் விழிகளை மூடிக் கொண்ட கிழவர், பிறகு, 'வேண்டாம்' என்று கையசைத்தார்.

"அப்பாவுக்கு உடல் சரியில்லை. உடனே புறப்பட்டு வாங்கோன்னு அண்ணாவுக்கும் அக்காவுக்கும் தந்தி கொடுத்துட்டு வா" என்று பாலுவை அனுப்பிய தர்மு, அவன் பின்னாலேயே வெளியே வந்து, மெதுவான குரலில், "அப்படியே ரமாவுக்கும் தந்தி கொடுத்துடு" என்றாள்.

பாலு வியப்போடு, "இதைச் சொல்லணுமா என்ன? அவங்க வராமலா?" என்று கேட்டான்.

தர்மு பெருமூச்சு விட்டாள். "ரமா வராமலா?. ஏன் அவளுக்குச் செய்தி அனுப்ப வேண்டாமென்றார் அவர்? நினைவு பிசகிவிட்டதோ?"

"ரமா...? யார் அவள்...?"

சரியாகப் பத்து வருஷங்களுக்கு முன்பு...

காரைக்குடி செக்காலையில் மூன்றாம் வீதி. இரண்டு பக்கமும் நிறைய வீடுகள். மாலை நேரத்தில் குழந்தைகளின் கும்மாளம்.

முத்தையா ஆபிசிலிருந்து வந்து வீட்டைத் திறந்தார். தரை முழுவதும் தூசி. மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப் போய் ஒரு வாரமாயிற்று. வர இன்னும் இரண்டு நாட்களாகும்.

சே. பெண்ணில்லாத வீடு பெரிய சுடுகாடு!

உடை மாற்றிக் கொண்டு உட்கார்ந்தவர், ஏதோ நாவல் படிக்கத் தொடங்கினார்.

"மாமா ரெஸ்டா இருக்கீங்களா?" என்று வெளியே குரல் கேட்டது.

பக்கத்து வீட்டுப் பெண் ரமா கையில் புத்தகங்களுடன் நின்று கொண்டிருந்தாள். எஸ்.எஸ்.எல்.ஸி. வகுப்பு.

"ஆமாம்மா, என்ன செய்யணும்?"

"நாளைக்குக் கணக்கு டெஸ்ட், மாமா! ட்ரபீசியம் புரியவேயில்லை!"

"அதற்கென்ன, சொல்லித் தந்தால் போச்சு" என்றார் முத்தையா.

பொழுது போகாத நேரங்களில் ரமாவுக்கும் தனது மகள் இந்திராவுக்கும் பாடம் சொல்லித் தருவது அவருக்கு வழக்கம்தான். இந்திரா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

ரமாவின் அப்பா ராம.சுப. பங்களாவில் கணக்கு எழுதிக் கொண்டிருந்தார். கஷ்ட ஜீவனம். மூன்று பெண்கள். மூத்தவள் ரமா மட்டும் எப்படியோ படித்துக் கொண்டிருந்தாள், மற்ற இரண்டும் பாதியிலேயே பள்ளிக்கு 'டாடா' சொல்லிவிட்டன.

முத்தையா ஆசிரியரல்ல: ஆனாலும் டீச்சிங் அவருக்குக் கைவந்த கலை. ட்ரபீசியத்தின் படம் வரைந்து, வெட்டுமுகப் பரப்பு கண்டு. கன அளவு கணக்கிடும் முறையைக் காரணங்களோடு விளக்கினார். பிறகு ஒரு கணக்கைக் கொடுத்துப் போடச் சொன்னார்.

ரமா சிவப்பு அல்ல, மாநிறந்தான். பளீரெனச் சுடர்விடும் அழகியல்ல, சராசரிதான். பட்டும் வைரமுமாகப் பூட்டிக் கொள்ளவில்லை, சீட்டிப் பாவாடையும் பித்தளைத் தோடும்தான். ஆனால், இயற்கை அவள் பருவத்துக்குரிய பரிசைக் குறைவில்லாமல் கொடுத்திருந்தது.

கீழுதட்டைக் கடித்துக் கொண்டு, புருவங்களை இடுக்கிக் கொண்டு அவள் புரியாமல் தவித்ததைக் காண அவருக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் எதிர்பாராமல் படாரென்று அவள் தொடையில் தட்டிப் பயமுறுத்தினார். திடுக்கிட்டு நிமிர்ந்தவள், மறு வினாடி சிரித்தாள். மக்னீஷிய நாடாவைக் கொளுத்தியது போல் பல் வரிசை ஒளியடித்தது.



அவளது ஸ்பரிசம் பட்டதும் அவருக்கு என்னவோ அசடு தட்டியது. தமது கைபட்ட இடத்தின் தசைத் திரட்சியும் இளமைத் துடிப்பும் அவரை என்னவோ செய்தன. உஸ்ஸென்று காற்று... படாரென்று சன்னல் கதவு அடித்துக் கொண்டது. படபடவென்று தூற்றல். பளிச்சென்று ஒரு மின்னல். விளக்கு அணைந்து விட்டது.

தனிமை, அது தந்த உத்வேகம். அவள் இளமை, அது தந்த வரவேற்பு: மனைவியைப் பிரிந்திருந்த தாபம், அது எழுப்பிய பசிக் குரல்...

முத்தையா என்ற இரும்பு, சூழ்நிலையின் ஒரு நிமிஷ வேக்காடு தாளாமல் இளகி விட்டது.

அன்றிரவு அவர் வெகுவாக வேதனைப்பட்டார். அவர் வயதென்ன, தகுதியென்ன, கேவலம் ஒரு பள்ளிச் சிறுமியிடம் அப்படி நடந்து கொண்டுவிட்டாரே! வாழ்க்கையில் அதுவரை அவர் தவறியதில்லை. மனைவியிடம் மாளாத பிரியம் கொண்டிருந்த அவர், மற்றப் பெண்களை நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஆனால், அவரையும் அறியாமல் அவருக்குள்ளே பதுங்கிக் கிடந்த மிருகம் பலவீனமான நேரம் பார்த்து வெளிப்பட்டுவிட்டது.

மறுநாள் காலையில் ஆபீஸ் போகும்போது ரமாவின் வீட்டுப் பக்கம் பார்த்தார், கூடத்து ஜன்னல் கம்பிகளைப் பற்றியவாறு அவள் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. வாசல் நிலை இடித்தது போல் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டு நடந்தார் அவர்.

மூன்றாம் நாள் தர்மு வந்து சேர்ந்தாள். வந்ததுமே கணவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கண்டுபிடித்துவிட்டாள். வீட்டிலே எப்போதும் கலகலவென்று அரட்டையடித்துக் கொண்டிருப்பவர் எதுவுமே பேசாமல். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பதென்றால் எந்த மனைவிக்குத்தான் தெரியாமல் போகும்?

அன்றிரவு அவள் வாய் திறந்து கேட்டதுமே அவர் மனம் திறந்து கதறி விட்டார். ஆனால், அவளால்தான் நம்ப முடியவில்லை. இத்தனை காலம் எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து பார்த்திராதவர், நாற்பதாவது வயதில், ஒரு பதினாறு வயதுப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளுவதாவது! ஆனால் சொல்லிச் சொல்லி அழுகிறாரே, பொய்யாகவா இருக்கும்? அவளுக்குக் கோபம் பொங்கியது. ஆனால், ஒவ்வொருத்தரைப் போல் இதையெல்லாம் ஒரு தமாஷாகவோ அல்லது அட்வென்ச்சராகவோ மதித்து அலட்சியமாக இருந்து விடாமல், நடந்ததை மறைத்துவிடாமல், செய்தது பாவம் என்னும் குற்ற உணர்வோடு, மனைவியிடம் சொல்லிப் பரிகாரம் தேட வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதே பெரிய காரியமாயிற்றே!

அவள், அவரிடம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

நாட்கள் ஓடின. ஆனால் ரமாவின் ஓட்டம் நின்றுவிட்டது. பள்ளிக்குப் போகும் போதெல்லாம் வாயாடிக் கொண்டு ஒரு பட்டாம்பூச்சி போல் செல்பவள் இப்போது குனிந்த தலை நிமிராமல் சென்றாள். அவளது துள்ளலும் துடிப்பும் அடியோடு மறைந்து விட்டன. ஒரே நாளில் திடீரென்று முதிர்ந்து விட்டவளாகத் தோன்றினாள். வெளியே தலை காட்டாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

அவளைப் பார்க்கும்போது தர்முவின் நெஞ்சைப் பிசைந்தது. தன் மகளின் வயதையொத்த அந்த மலர்க்கொடி தாளமாட்டாத இடியைத் தாங்கிக் கொண்டு உள்ளுக்குள்ளேயே மறுகி நிற்பதைக் கண்டு மனம் கசிந்தாள். இத்தனை காலமும் அவளை ஒரு சிறுமியாக நினைத்தவள், இப்போது அவளைத் தனது உடன்பிறவாத் தங்கையாக மதிக்கத் தொடங்கினாள். கணவர் இல்லாத நேரங்களில் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து அன்பாகப் பேசினாள். பட்சணம் செய்து கொடுத்தாள். எதையாவது சாக்கு வைத்துத் துணிமணிகள் வாங்கிக் கொடுத்தாள்.

ஆனால், ரமா அநேகமாக ஊமையாக மாறி இருந்தாள். உணவிலோ, உடையிலோ அக்கறை காட்டாமல், எதையோ நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தாள். அந்த வருஷம் நானூறு மார்க்குக்கு மேல் வாங்கியதைக் கேட்டும்கூட அவள் மகிழ்ச்சி அடையவில்லை. ரமாவின் குடும்பநிலை அவளைக் கல்லூரிக்கு அனுமதிக்கவில்லை. நாள் முழுதும் சமையல் அறையிலேயே அடைந்து கிடந்தாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் ரமாவின் தாய் முத்தையாவிடம் வந்தாள், "நம்ம ரமாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கோம். அழகாயிருக்கான். ஒரு சைக்கிள் கடையிலே இருநூறு ரூபாய் சம்பளம். சொந்தக்காரப் பையன்தான். நம்மாலே முடிஞ்சதைப் போட்டுக் கட்டிக் குடுத்திடலாம். ரமாதான் சம்மதிக்கமாட்டேங்கிறா. நீங்க கொஞ்சம் எடுத்துச்சொன்னீங்கன்னா நல்லது. நீங்க அவளுக்குத் தகப்பன் மாதிரி"

முத்தையாவுக்குச் சுருக்கென்றது. சமாளித்துக் கொண்டு, "ரமாவை வரச் சொல்லுங்க" என்றார்.

ரமா வர மறுத்துவிட்டாள்.

அவரே அவள் வீட்டுக்குப் புறப்பட்டார்.

ரமா கொல்லைக் கேணி அருகில் தனியாக நின்று கொண்டிருந்தாள்.

தொண்டையைக் கனைத்துக் கொண்டு முத்தையா தொடங்கினார். "ரமா, வந்து... என்னை மன்னிச்சுடு! ஏதோ நடந்தது நடந்துட்டுது. நான் பண்ணினது பாவம்தான். அதுக்காக நீ கல்யாணமே வேண்டாம்னு தனி மரமா நின்னு என்னைச் சித்திரவதை செய்துடாதே! நடந்ததைக் கனவா நினைச்சு மறந்துட்டு, நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, குழந்தை குட்டியோட சௌக்கியமா வாழணும்."

அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாள முடியாமல் அவர் தலை கவிழ்ந்தார்.

"நீங்க இதுவரை செய்ததுகூடப் பாவமில்லை மாமா. இப்போ சொல்றீங்களே புத்திமதி, நடந்ததைக் கனவா நினைச்சு மறந்துட்டு, நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி, இதுதான் மகா பாவம்! என் பெண்மைக்கு நீங்க தந்த மதிப்பு இதுதானா? காரிலே அடிபட்டுக் காலை இழந்தவன்கூட விபத்தைக் கனவா நினைச்சு மறந்துட்டு நேரே நடக்க முடியாதே! அதைவிடக் குறைந்த நஷ்டமா எனக்கு ஏற்பட்டது?"

சவுக்கடிபட்டவராக முத்தையா பின்வாங்கினார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது. "நான் பாவி! என் பாவத்துக்குப் பரிகாரமே இல்லை!" என்று புலம்பினார்.

"நான் உங்களை மட்டும் குற்றவாளியாக்க விரும்பல்லே. அத்துவானக் காட்டிலே, என் வாயிலே அடைச்சு, நீங்க பலாத்காரம் பண்ணல்லே, நாலு வீடுகளுக்கு நடுவிலேதான் தொட்டீங்க. விரும்பியிருந்தா நான் கூச்சல் போட்டிருக்கலாம்; திமிறி ஓடியிருக்கலாம். நான் செய்யல்லே. என்னையறியாம நானும் உங்களை விரும்பியிருக்கேன்னு தோணுது. எப்படியோ ரெண்டு பேரும் தவறு பண்ணிட்டோம். என் வாழ்க்கை சிக்கலாயிட்டுது. அதைச் செப்பனிட உங்களாலே முடியலைங்கிறதுக்காக நான் உங்களை நொந்துக்கலை. ஆனால், உங்களாலே மட்டும் தர முடிஞ்ச வாழ்க்கையை எவங்கிட்டேயோ வாங்கிக்கச் சொல்லி என்னை அவமானப் படுத்தாதீங்க!"

குருவிடம் உபதேசம் கேட்ட மாணவனைப் போல், பக்தியுடன் வீடு திரும்பினார் முத்தையா.

சற்று நேரத்தில் தர்மு சென்ற போதும் ரமா அங்கேதான் நின்றிருந்தாள். ஆதரவாக அவளுடைய தோள்களைத் தொட்டாள் தர்மு. "ஏன் ரமா, மாப்பிள்ளை பிடிக்கவில்யைா?"

ஒரு கணம் பேசாமல் இருந்த ரமா, "ஆமாம். அத்தை" என்றாள்.

"வேறு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லட்டுமா?"

"எனக்குக் கல்யாணமே பிடிக்கலை!"

"ஏன் அப்படி?"

"அது என் தலைவிதி!" என்று கேவினாள் ரமா.

தர்மு நிதானமாகப் பேசினாள். "உன் நிலைமை எனக்குப் புரிகிறது. ரமா. இனிமேல் நீ என்னை அத்தை என்று கூப்பிட வேண்டாம்; அக்கா என்றே கூப்பிடலாம்!"

திடுக்கிட்டு நிமிர்ந்தாள் ரமா. விழிகள் "உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று வினவின.

"அவர் ஒரு குழந்தை ரமா. வயதான குழந்தை. திருடத் தெரியாத குழந்தை. சூழ்நிலை காரணமாகச் செய்துவிட்ட திருட்டை மறைக்க மனமில்லாமல் மனைவியிடம் கூறி அழுத குழந்தை. உன் நலனுக்காக ஏங்கி அழும் குழந்தை."

ரமாவால் பேச முடியவில்லை. தர்முவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

"சில தவறுகளைச் சீர்செய்ய முடியாது. ரமா. மறக்கத்தான் வேண்டும். அவரால் செய்யக்கூடியது ஏதுமில்லை. அவருக்கு நானும் மூன்று குழந்தைகளும் இருக்கிறோம். அவர் எப்படி உன்னை மணந்து கொள்ள முடியும்? சட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும்; சமுதாயம் என்ன சொல்லும்? நாற்பது வயதுக்காரன், மனைவி இருக்கையில், மகள் வயதுக்காரியை மறுதாரமாகக் கட்டிக் கொண்டான் என்று கேலி பேசாதா? அப்படி என்ன அவசியம் வந்தது என்று கேள்வி கேட்காதா? அந்தக் கேள்வி நாளைக்கு இந்திராவின் கல்யாணத்தை எப்படிப் பாதிக்கும் தெரியுமா?"

"தெரியும்."

"அப்புறம் ஏன் தயங்குகிறாய்? இந்தக் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்."

"அது மட்டும் என்னால் முடியாது. என் மனச்சாட்சி ஒருநாளும் ஒப்பாது."

ரமாவின் குரலில் தொனித்த உறுதியைக் கேட்டு, தர்மு ஒரு நிமிஷம் மௌனமாய் நின்றாள். பிறகு அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டாள். "ரமா! நான் வயதில் உன் தாயைப் போல. இருந்தும் உன்னிடம் யாசிக்கிறேன். நான் பிடித்திருப்பது உன் கைகளையல்ல; கால்கள் என்று நினைத்துக் கொண்டு எனக்கு ஒரு வரம் கொடு. என் கணவர்தான் எனக்கு உலகம். அவரை என்னிடமிருந்து பிரிக்கமாட்டேன் என்று உறுதி கொடு!" என்று கேட்கும்போதே கண்ணீர் வடித்தாள்.

அவ்வளவு பெரியவள் தன் கணவனுக்காக, சிறுமியான தன்னிடம் யாசிப்பது ரமாவுக்குப் பொறுக்கவில்லை. "உங்கள் பெருந்தன்மைக்கு முன்னால் நான் ஒரு தூசு அக்கா! உங்கள் வாழ்வைப் பறித்து நான் வாழ்வதைவிடத் தற்கொலை செய்து கொள்வேன். என்னை வெறுக்காமல் உங்கள் தங்கையாக ஏற்றுக்கொண்ட பரிவே போதும்!" என்று உறுதி சொன்னாள்.

ரமாவின் திருமணப்பேச்சு நின்று விட்டது. அவளுக்கு ஒரு வேலை தேடிக் கொடுக்க முத்தையா எவ்வளவோ முயன்றார். 'தேவை' விளம்பரங்களுக்கெல்லாம் விண்ணப்பம் அனுப்பச் சொன்னார். எதுவும் கிடைக்கவில்லை.

மறு வருஷம் பேப்பரில் ஒரு விளம்பரம் வந்தது. ஆயுதப்படை நர்ஸிங் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கு மாணவிகள் கேட்டிருந்தார்கள். மூன்றாண்டுப் படிப்பு. உணவு, உடை, ஹாஸ்டல் வசதி எல்லாம் தந்து, 'ஸ்டைபண்டும்' கொடுப்பார்களாம். படிப்பு முடிந்ததும் ராணுவத்தில் வேலை தருவார்களாம். மத்திய அரசுச் சம்பளம். ஆரம்பமே ஆயிரம் ரூபாய்க்குப் பக்கமாகப் போட்டிருந்தார்கள். ஆனால், ஒரு கஷ்டம், வேலை பம்பாய், கல்கத்தா, டில்லி என்று தொலைவில்தான் கிடைக்கும்.

அவரைவிட்டுத் தள்ளிச் சென்று, புதிய மனிதர்களோடு புதிய சூழ்நிலையில் பழகினாலாவது அவள் மனம் மாறாதா? வாழ்க்கையில் அவளுக்கு ஒரு பிடிப்பு ஏற்படாதா? - முத்தையா தர்முவை அனுப்பி ரமாவின் விருப்பத்தைக் கேட்டார்.

அவர் பார்த்துச் செய்யும் எந்த முடிவும் தனக்குச் சம்மதம் என்றாள் ரமா. உடனே அப்ளிகேஷன் போடப்பட்டது. ரமா பம்பாயில் நர்ஸிங் பயிற்சியில் சேர்ந்தாள். போகும்போது, தர்முவிடம் கேட்டு முத்தையாவின் பெரிய புகைப்படம் ஒன்றை வாங்கிகொண்டு போனாள். வருஷத்துக்கொருமுறை விடுமுறையில் வந்தாள். அப்போதும் முத்தையாவோடு பேசியதில்லை. அவள் படிப்பை முடித்து வேலையில் சேர்ந்த போது, முத்தையாவின் குடும்பம் மானாமதுரைக்கு மாறியது.

ஓராண்டு கழித்து ரமா இரண்டு மாத விடுமுறையில் வந்தாள். வந்தவள் நேராகக் கைளை பிடித்துக் கொண்டு, "உங்கள் தங்கை உங்களிடம் ஒரு பிச்சை கேட்பேன். தட்டாமல் தருவீர்களா அக்கா?" என்று கேட்டாள்.

"கேளம்மா."

"இனிமேல் எனக்குப் பிறந்த வீடும் இது தான்; புகுந்த வீடும் இதுதான். வருஷத்தில் இரண்டு மாதங்கள் இங்கே வந்து அவர் முகத்தைப் பார்த்துவிட்டுப் போக அனுமதி வேண்டும்"

"உனக்குரிய நியாயமான இடத்தை மறுத்தவள் நான். இதையும் மறுக்கமாட்டேன்!" என்றாள் தர்மு.

ரமாவின் பெட்டி பெரிதாயிருந்தது. தர்முவுக்கு அசல் பனாரஸ் பட்டுகள், இந்திராவுக்கு ஜப்பான் நைலக்ஸ்கள், ராஜுவுக்குப் பேண்ட் துணிகள், பாலுவுக்கு ரெடிமேட் உடைகள் என்று அள்ளிக் குவித்துக் கொண்டு வத்திருந்தாள். "ஏம்மா, இவ்வளவு செலவு செய்திருக்கிறாய்?" என்று தர்மு கோபித்துக் கொள்ள "எல்லாம் நீங்கள் போட்ட பிச்சைதானே அக்கா?. அவ்வளவு பணத்தையும் நான் ஒருத்தி என்னதான் 'செய்வேன்? எனக்கு இரண்டு வேளை சாப்பாடுதான். மிஞ்சி மிஞ்சிப் போனால் இருநூறு ரூபாயாகும். அப்பாவுக்கு முந்நூறு அனுப்புவேன். மீதி சும்மாதானே கிடக்கிறது? வயசு காலத்திலே குழந்தைகள் டீக்காக டிரஸ் பண்ணிக் கொள்ளட்டும்!" என்ற ரமா, தான் மட்டும் தூய வெண்ணிற வாயில் புடவையும் வெள்ளைச் சோளியும்தான் அணிந்திருந்தாள்.

ஆசாரியை வரச் சொல்லி, நல்ல தங்கமாக வாங்கிக் கொடுத்து, தர்முவுக்கு ஆறு பவுனில் இரட்டை வடமும், இந்திராவுக்கு நாலு பவுனில் நெக்லெசும் செய்யச் சொன்னாள். அவள் கழுத்தில் ஒரே ஒரு சங்கிலி நூல் மாதிரி தொங்கிக் கொண்டிருந்தது.

"எல்லோருக்கும் ஏதாவது வாங்கி வந்திருக்கிறாள். எனக்கு மட்டும் ஒன்றும் தரவில்லை" என்று மனைவியிடம் முணுமுணுத்தார் முத்தையா.

ரமா கேட்டுக் கொண்டே நின்றாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

"அவருக்குத்தான் என்னையே கொடுத்தேனே! நினைவில்லையா என்று கேளுங்கள். அக்கா?"

காரைக்குடியிலிருந்த தாய் வீட்டுக்குப் போய், பெயருக்கு இரண்டு நாட்கள் தங்கி விட்டு உடனே திரும்பிவிட்டாள். முத்தையாவுக்கு ஒரு ஸ்பிரிங் கட்டில் வரவழைத்தாள். படுக்கை அறையிலும் கூடத்திலும் ஸீலிங் விசிறி பொருத்தினாள். இரண்டு மாதங்கள் எங்கும் போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தாள். ஆனால், முத்தையாவோடு பேசக்கூட இல்லை. கடைசியில் ரயிலில் போனால் முன்னதாகப் புறப்பட வேண்டுமே என்று, மதுரையிலிருந்து விமான டிக்கட் வாங்கி வந்தாள்.

"ஏன் ரமா, வீண் செலவு செய்கிறாய்? ரயிலில் போனால் எவ்வளவு பணம் மிச்சம்?" என்று கேட்டாள் தர்மு.

"என்னைப் பொறுத்தமட்டில் மிக உயர்ந்த பொருள் இங்கே இருக்க எனக்குக் கிடைக்கும் நேரம்தான்! அதைப் பணத்தால் வாங்க முடியுமானால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்வேன்!" என்றாள் ரமா.

புறப்படும்போது, "அவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா. எப்படி இருப்பார் முன்பு! நாலே வருஷங்களில் நரை தோன்றிவிட்டது! மெலிந்துவிட்டார்!" என்றாள்.

"எல்லாம் உன் கவலைதான் ரமா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டால் அவர் தெம்பாயிருப்பார்."

"அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் ஒரு நல்ல வாழ்க்கை எனக்குக் கிடைக்காது! ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்!" என்று வாழ்த்திவிட்டுப் போனாள் ரமா.

★★★★★


இந்திராவுக்கு வரன் குதிர்ந்தது. ரமா விடுமுறையில் வரும் சமயமாகப் பார்த்து முகூர்த்தம் குறித்தார்கள். ரமா ரொக்கமாகப் பத்தாயிரம் ரூபாயைத் தர்முவின் கையில் கொடுத்துத் தேவையானவற்றை வாங்கச் சொன்னாள்.

அடுத்து ராஜு இஞ்சினீயரிங்கில் சேர்ந்தான். அவனுக்கு ரமா மாதாமாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தாள்.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னர் ரமா வந்திருந்தபோது முத்தையா மிகவும் தளர்ந்து போயிருந்தார். தலையெல்லாம் வழுக்கை படர்ந்திருந்தது.

ரத்தக் கண்ணீர் வடித்தாள் ரமா "என்னக்கா. இது! அவரை இப்படி இளைக்க விட்டு விட்டீர்களே!" என்று பதறினாள்.

"நீ இப்படி உன்னையே விறகாய் எரித்துக் கொண்டு வாழ்வதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ரமா. ஒரு நொடியில் உயிரை மாய்த்துக் கொள்வதுகூடப் பெரிய விஷயம் இல்லை; இப்படி நின்று நிதானமாய் வெந்து மடிவது கொடுமை! வாழ்க்கையில் ஓர் இன்பமும் அறியாமல் ஏன் இப்படி வதைத்துக் கொள்கிறாய்?" என்று தர்மு புலம்பினாள்.

"நான் சொல்வதைக் கேள், ரமா! உன்னிடம் நான் வாங்கிக் கொண்ட சத்தியத்திலிருந்து உன்னை விடுவிக்கிறேன். இனியும் இந்தச் சமூகத்துக்குப் பயப்பட நான் தயாரில்லை. நாளைக்கே அவருக்கும் உனக்கும் குன்றக்குடியில் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்."

"வேண்டாம், அக்கா! நான் கற்பனையில் வாழ்ந்தே பழகிவிட்டேன். கற்பனை வாழ்க்கையில் கோபம், வெறுப்பு, அலுப்பு எதுவும் இல்லை. என்றென்றும் குறையாத ஆனந்தம்தான் உண்டு. அந்த ஆனந்தத்தைக் கலைத்து விடாதீர்கள்!"

"நான் உனக்காகக்கூடச் சொல்லவில்லை ரமா. அவருக்காகத்தான் சொல்கிறேன். உன்னைத் தொட்டது முதல் அவர் அவராக இல்லை. அவரது உல்லாசம் பழங்கதையாய் ஆகிவிட்டது. என்னைப் பிரிந்து ஒரு வாரம் கூட இருக்கமாட்டாதவர் நெடுங்காலமாகச் சந்தியாசியாக வாழ்கிறார்."

முத்தையா இருமிவிட்டுச் சொன்னார்; "சராசரிப் பெண் என்று நினைத்துத் தொட்டேன். அவள் தேவதையாக அமைந்துவிட்டாள். திருட்டுத்தனமாக அடைந்த இன்பத்தை மறைத்துவிட்டுப் புது வாழ்க்கை தொடங்குவாள் என்று நினைத்தேன். அவள் என் பாவத்துக்குப் பரிகாரம் இல்லாமல் செய்துவிட்டுத் தனிமரமாக நிற்கிறாள். ஒரு வருஷமா, இரண்டு வருஷமா, ஒன்பதாண்டு இளமை ஓடிவிட்டதே."

"காலம் மனத்தோடு இணைந்த ஓர் அளவு மாமா. கணங்களை யுகங்களாகக் காட்டவும், யுகங்களைக் கணங்களாகக் காட்டவும் அதனால் முடியும். யுகத்துக்கு வாழ்ந்துவிட்டு, அதைக் கணங்களாக நினைத்து இன்னும் பேராசைப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எனக்குக் கணங்களை யுகங்களாக்கும் மனம் இருக்கிறது. அந்த இனிய கணங்களை வாழ்நாள் முழுதும் நினைத்துச் சுவைத்துக் கொண்டிருப்பேன்!" என்றாள் ரமா.

"உன்னைவிட அதிகம் வாழ்ந்தவன் நான். வாழ்க்கையை உன்னைக் காட்டிலும் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையை வெறும் மனத்தால் மட்டும் வாழ்ந்துவிட முடியாது. உடலுக்கு, அதன் தேவைகளுக்கு வாழ்க்கையில் நிறையப் பங்கு உண்டு, என் மனைவியிடம் எனக்கு நிறையப் பிரியம் இருக்கிறது. இருந்தும் அவள் என்னைப் பிரிந்தருந்தபோது, என்னால் மனத்தால் மட்டும் வாழ்ந்துவிட முடியவில்லை; உடல் தேவைப்பட்டது; உடலுக்கு நீ தேவைப்பட்டாய். அதனால்தானே இத்தனை தொல்லையும்!"

"உங்களை வைத்தே உலகத்தை அளக்கிறீர்கள்! அசல் தங்கம் உறுதியில்லாதது: வெறும் செம்பு விலை மதிப்பில்லாதது, தனித் தனியாக இரண்டுமே நகை செய்ய உதவாது. ஆனால் தங்கத்தோடு கொஞ்சம் செம்பைக் கலந்து கொண்டால் அழகான, உறுதியான நகைகள் செய்யலாம். அனுபவமற்ற கற்பனை அர்த்தம் இல்லாதது; கற்பனையற்ற வெற்று அனுபவம் ருசிக்க இயலாதது. என் கற்பனையோடு கொஞ்சம் அனுபவமும் கலந்திருக்கிறது. நான் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் மானசீகமாக உங்களோடு நடத்தும் வாழ்க்கை நீங்களும் அக்காவும் நடத்தும் நிஜ வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல" என்று பேச்சை முடித்துக் கொண்டு எழுந்துவிட்டாள்.

இந்திராவுக்கும் ரமாவுக்கும் இரண்டு வயது தான் வித்தியாசம். ரமா, இந்திராவின் நெருங்கிய தோழி. திடீரென்று இந்திரா, ரமாவை வெறுக்கத் தொடங்கினாள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஐந்தாண்டு காலம் தர்முவை அத்தை என்று அழைத்துக் கொண்டிருந்த ரமா, திடீரென்று அக்கா முறையிட்டுக் கூப்பிடத் தொடங்கியதற்கும், அவள் திருமணமே வேண்டாம் என்று வாழ்வதற்கும், வருஷா வருஷம் விமானத்தில் பறந்து வருவதற்கும், அவளுடைய பெட்டியில் எதிர்பாராத விதமாகத் தான் காண நேர்ந்த தந்தையின் புகைப்படத்துக்கும் முடிச்சுப் போட்டுப் பார்த்தாள். 'இந்த வயதிலும் இவ்வளவு சபலத்தோடு அப்பா, அவருக்காகவே டெல்லியிலிருந்து பறந்து வரும் ஓர் இளம் பெண். இவர்கள் கொட்டத்தை வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டு குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றும் அம்மா' என்று கீழ்த்தரமான முடிவுக்கு வந்துவிட்டாள்.

இரண்டு மாதங்களுக்குமுன் கணவனோடு தாய் வீட்டுக்கு வந்திருந்த இந்திரா மௌனமாகப் பொருமிக் கொண்டிருக்கும் தாய்க்கு ரகசியமாக ஆறுதல் சொல்லும் நினைப்பில், "இன்னும் எத்தனை வருஷங்களுக்குத்தான் அந்த ரமா உன் பாவத்தைக் கொட்டிக் கொள்வாளாம்? குதிரைக்குட்டி மாதிரி கொழுத்துத் திரிகிறாள்!" என்று கேட்டுவிட்டாள்,

மறு நிமிஷம் பளீரென்று அவள் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது.

"யாரைப் பற்றி அப்படிப் பேசினாய், நாயே! அவள் ஒரு தெய்வப் பிறவி! உணர்ச்சிகளை வென்ற ஞானி! தீயிட்டவனுக்கும் ஒளி தரும் தீபம் அவள். அவளைப் புரிந்துகொள்ள உனக்கு அறிவு போதாது. அவளை 'சித்தி' என்று வாயாரக் கூப்பிட முடியாமல் போனது உன் துர்ப்பாக்கியம்!" என்று தர்மு பொங்கினாள்.

கோபமாக இந்திரா வெளியே வந்தபோது மாப்பிள்ளை நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்துக் கொண்டு அப்போதே ஊருக்குக் கிளம்பி விட்டாள்.

'அந்த ரமாவுக்கா தந்தி கொடுக்க வேண்டாம் என்று சொன்னார் கிழவர்? உண்மையில் அவருக்கு நினைவுதான் தவறிவிட்டதோ?'

அதிகாலையில் ராஜு, இந்திரா, மாப்பிள்ளை எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். கிழவர் மிகவும் சோர்ந்து போயிருந்தார். அடிக்கடி மார்பு வலிப்பதாகச் சொன்னார்.

"ரமாவுக்குமா தந்தி கொடுத்தாய்?" என்று கேட்டாள் இந்திரா.

'ஆம்'என்று தலையாட்டினாள் தர்மு.

"அப்புறம் என்ன, ஹெலிகாப்டரிலாவது வந்து இறங்கி விடுவாள்!" என்று இந்திரா வெட்டிவிட்டுப் போனாள்.

அதே சமயம் வாசலில் டாக்ஸி வந்து நின்றது. சோர்ந்த முகத்தோடு ரமா கீழே இறங்கினாள்.

"என்னவோ அக்கா, நேற்றுக் காலையிலிருந்து மனம் துடித்துக் கொண்டே இருந்தது. உடனே நம் வீட்டுக்குப் போகவேண்டும் என்று தோன்றியது. ராத்திரி விமானத்தில் புறப்பட்டு வந்தேன். அவர் சுகமாயிருக்கிறாரா?"

"அப்படியானால் நான் கொடுத்த தந்தியைப் பார்க்கவில்லையா?"

"இல்லையே ! என்ன தந்தி?"

"அவருக்குத் திடீரென்று நெஞ்சு வலி. தந்தி கொடுத்துத்தான் குழந்தைகள் வந்திருக்கிறார்கள்."

ரமா கிழவரின் அறைக்கு ஓடினாள். இந்திராவும் நகரவே, தர்மு அவளைத் தடுத்து நிறுத்திவிட்டுத் தான் மட்டும் பின் சென்றாள்.

கிழவர் கண்மூடிப் படுத்திருந்தார். நாடி பார்க்கக் கை நீட்டிய ரமா சட்டென்று நிறுத்திக் கொண்டு தர்முவைப் பார்த்தாள். அவள் கண்களால் அனுமதிக்கவே ரமா கிழவரின் கையைத் தொட்டாள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் முறையாக அந்த ஸ்பரிசம்!

"ஏதோ அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். டாக்டர் என்ன சொன்னார்?"

"வெறும் வீக்னஸ். ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்றார்."

ரமா கிழவரின் முன் குனிந்து, "மாமா, மாமா! ரமா வந்திருக்கிறேன், பாருங்கள்!" என்றாள்.

கிழவர் கண்களைத் திறந்தார்.

அவள் கழுத்திலிருந்து தொங்கிய மஞ்சள் கயிறு தென்பட்டது.

"தீர்க்கசுமங்கலியாய் இரு, ரமா!" என்று வாழ்த்திய கிழவர், "எங்களுக்குக்கூடச் சொல்லாமலா கல்யாணம் செய்து கொண்டாய்! உன் கணவர் டாக்டரையும் அழைத்து வந்திருக்கலாமே" என்று கேட்டார்.

தர்மு அப்போதுதான் ரமாவின் தாலியைக் கவனித்தாள்.

"அதைப்பற்றிப் பிறகு பேசிக் கொள்ளலாம், மாமா! உங்களுக்கு இப்போது எப்படி இருக்கிறது?"

"எனக்குத்தானே! ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கடைசியில் நீ மனம் மாறி வாழத் தொடங்கிவிட்டாய் என்று அறியும்போது நிம்மதியாய் இருக்கிறது!"

"எனக்குக் கல்யாணமானதாக உங்களுக்கு எப்படித் தெரியும்?"

தர்மு பதில் சொன்னாள், "காரைக்குடிப் பையன் யாரோ ராணுவத்தில் டெல்லியில் இருக்கிறானாம். நேற்றுக் காலையில் அவன்தான் சொன்னானாம். அந்த டாக்டரும் நீயும் நெருங்கிப் பழகுவதாக. சீக்கிரம் கல்யாணம் ஆகிவிடும் என்று சொன்னானாம்."

ரமா சோகமாகச் சிரித்தாள். "உலகத்தைப் புரிந்து கொண்டிருப்பதாக மாமா சொன்னார். ஆனால், என் அன்பைக்கூடப் புரிந்து கொள்ளவில்லையே! டாக்டர் மோகன் என்னை மணக்க விரும்பிச் சம்மதம் கேட்டு இரண்டு வருஷங்களாகி விட்டன. மறுத்து விட்டேன். ஆனால் அவர் விடவில்லை. நான் வேறு யாரையாவது மணந்து கொள்ளும்வரை காத்திருப்பதாகச் சொன்னார். எனக்காகத் தமது அமெரிக்க மேல்படிப்பைத் தள்ளிப் போட்டிருந்தார். வீணாக அவர் படிப்புக் கெடுவதை நான் விரும்பவில்லை. எட்டு மாதங்களுக்கு முன் இங்கே வந்துவிட்டுத் திரும்பியபோது, மாமாவின் சார்பில் நானே ஒரு மஞ்சள் கயிற்றை அணித்து கொண்டு, எனக்குத் திருமணமாகி விட்டதாகப் பொய் சொன்னேன். அதை நம்பிய அவர் போன மாதம்தான் அமெரிக்கா சென்றார். மாமாவின் நினைவாக நான் கட்டிக் கொண்ட தாலியைக் கழற்ற மனமில்லாமல் அணிந்து கொண்டிருக்கிறேன். வேறு மோகன்களுக்கு அதுவே பதில் சொல்லி விடுமே! இதுதான் நடந்தது. மாமாவின் முகத்தைப் பார்த்த கண்கள் இனி மற்றவர் முகத்தைப் பாராது. அக்கா! அவர்தான் என் உயிர்."

கிழவரின் முகத்தில் ஒரு நிம்மதி படர்வதை அவரால் மறைக்க முடியவில்லை.

தர்மு சொன்னாள். "அவருக்கு மட்டுமென்ன? ஆரம்பத்தில் அவருக்கு உன்மேல் காதல் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், நாளாக ஆக, உன் உறுதியைக் கண்டு அவர் உருகியதையும் அது காதலாக மாறியதையும் நான் அறிவேன் ரமா, அதைத் தடுத்து நிறுத்த நான் முயன்றிருந்தால் என்னையும் குழந்தைகளையும் புறக்கணித்துவிட்டுக்கூட உன்னோடு வாழ்க்கை நடத்த அவர் தயங்கியிருக்கமாட்டார். ஆனால், நான் வெறும் மனைவியாக நடந்து கொள்ளவில்லை; ஒரு பெண்ணாகவும் நடந்து கொண்டேன். உன்னைப் பற்றிய உணர்ச்சிகளை அவர் கொட்டித் தீர்க்க நானே வடிகாலானேன். அவர் அன்புக்குக் கட்டுப்பட்டவர். எனக்காக அவர் தமக்குத் தாமே வேலியிட்டுக் கொண்டார். ஆனால், அவர் உன் மேல் கொண்டிருக்கும் காதல் பெரிது, ரமா! பாரேன், உனக்குக் கல்யாணம் நடக்கலாம் என்று கேள்விப்பட்டவுடனேயே நெஞ்சு வலி வந்து விட்டது! உன்மேல் ஏற்பட்ட ஆத்திரத்தில், உனக்குத் தந்தி கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்! நான்தான் அவருக்குத் தெரியாமல் கொடுத்தேன்."

"அப்படியா! மாமாவுக்கு என் மேல் கோபம் வந்ததா? நான் கொடுத்து வைத்தவள், அக்கா" என்று பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் ரமா.

சுருதி சுத்தமான இரட்டை நாதசுவரக் கச்சேரி கேட்பவர் போலக் கண்மூடிக் கேட்டுக் கொண்டே சுகமாகத் தூங்கத் தொடங்கினார் கிழவர்.

ரமாவும் தர்முவும் வெளியே வந்தனர்.

"பெற்ற மகளைவிட, எங்கேயோ கிடந்து எப்படியோ வந்து ஒட்டிக் கொண்டவர்கள் உயர்ந்து விட்டார்கள்!" என்று பொருமி விட்டுப் போனாள் இந்திரா.

ரமா புண்பட்டு நின்றாள்.

அன்று பகலில் கிழவர் மறுபடியும் மார் வலிக்கிறதென்றார். எல்லோரும் சுற்றி நின்றார்கள். திடீரென்று கிழவரின் முகம் சுருங்கிக் கோணலாயிற்று.

ரமா நாடியைப் பார்த்தாள். அவள் முகம் பரபரப்படைந்தது. சூழ்நிலையை, ஏன், தன்னையே மறந்தவளாக, "அக்கா! என் கடைசி ஆசையை நிறைவேற்றுவீர்களா?" என்று கேட்டாள்.

"சொல்லு, ரமா."

"உங்கள் இல்லற வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர் தலை உங்கள் மடியில் இருந்திருக்கும். இப்போதும் அது அங்கேயே இருக்கட்டும். அவர் பாதங்களாவது என் மடியில் இருக்கட்டுமே?"

"ஆகட்டும். ரமா!"

ரமா கிழவரின் பாதங்களை மடியில் தாங்கிக் கொண்டாள்.

தர்மு தன் மடியில் அவர் தலையை ஏந்திக் கொண்டாள்.

கிழவர் இமைகளைத் திறந்தார். தலைப்புறம் இருந்த தர்முவைப் பார்த்தார். பிறகு, கால்மாட்டில் இருந்த ரமாவைப் பார்த்தார். அப்புறம் அவர் விழிகள் அசையவேயில்லை. அத்தனை காலமும் சம்பிரதாயம், சமுதாயம் என்ற காரணங்களுக்காகக் காண முடியாதிருந்த முகத்தை இப்போது ஆசைதீரக் காண்பதுபோல் அவர் விழிகள் நிலைக்குத்தி விட்டன.

கணங்களில் வாழ்ந்திருந்த ரமா, இனி யுகத்துக்கும் விதவை!
அழகாபுரி அழகப்பன்
Share: 




© Copyright 2020 Tamilonline