|
|
|
1
அன்று தை வெள்ளிக்கிழமை. மஞ்சள் குங்குமத்துக்காகக் கமலத்தின் வீட்டிற்குப் போயிருந்தேன். கமலம் என் கணவருக்கு ஒன்றுவிட்ட அம்மங்காள் ஆகவேண்டும். ஒரு சமயத்துக்கு முன்புதான் வடக்கேயிருந்து அவள் கணவர் நாங்கள் இருக்கும் ஊருக்கு மாற்றலாகி வந்திருந்தார். அதற்குமுன் எனக்கும் அவளுக்கும் நெருங்கிய பழக்கம் கிடையாது. என் கல்யாணத்தின் போது வந்திருந்தாள். கலகல என்ற சிரிப்பும், வெகுளித்தனமான பேச்சும் அவள் சுவபாவத்தை அறிவித்தன. வேறொன்றும் அவளைப்பற்றி எனக்குத் தெரிய வேண்டிய அவசியம் அப்போது ஏற்படவில்லை. என் கணவரும் ஏறக்குறைய இதே அளவுதான் அவளுடன் பழகி இருந்தார். கமலத்தை ஆறு வயசுப் பெண்ணாக இருந்தபோது பார்த்தவர், தம்முடைய கல்யாணத்தின் போதுதான் மறுபடியும் பார்த்தாராம்! அடிக்கடி என்னிடம் மட்டும் கூறுவார். "உன்னை முதலில் பாராமல் கமலத்தைப் பார்த்திருந்தால் அவளையே கல்யாணம் பண்ணிக்கொண்டிருப்பேன்" என்று.
"அப்படி அவள் என்ன ஒசத்தி?" என்று கூட அவரிடம் சண்டை போட்டிருக்கிறேன். "அவள் ஒசத்தி என்று சொல்லவில்லை. உன்னைப்போல் கபடமாக இல்லாமல், கலகலவென்று பேசுகிறாள்" என்பார். இந்த மாதிரிக் கமலத்தினிடம் எங்கள் இருவருக்கும் ஒருவித அன்பு ஏற்பட்டிருந்தது.
அன்று காலை கமலத்தின் பெண் ஓடிவந்து, "அம்மா உங்களை மஞ்சள் குங்குமத்துக்கு வரச் சொன்னாள்" என்று அழைத்ததும், ஆவலுடன் போவதற்குத் தயாராகக் கிளம்பி விட்டேன். கமலத்தின் வீட்டை அடைந்ததும் கூடத்தில் அம்பாள் படம் வைத்து ரோஜா மலர்களால் பூஜை செய்திருந்தாள். பக்கத்தில் எரிந்துகொண்டிருந்த வெள்ளிக் குத்துவிளக்கு பளபளவென்று பிரகாசித்தது. தசாங்கத்தின் சுகந்தமும் கற்பூர மணமும் சேர்ந்து அந்த இடத்தில் ஒருவிதத் தெய்வீகத்தை உண்டாக்கின.
எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்த கூந்தலைத் தொளதொளவென்று பின்னித் தொங்கவிட்டு அதன்மேல் இரண்டு பெரிய ரோஜா மலர்களைச் சொருகியிருந்தாள் கமலம். என்னைக் கண்டதும் வழக்கமான புன்னகையுடன் என் பக்கம் திரும்பி, "வா, வா, வருவாயோ மாட்டாயோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். உட்கார்." என்று உபசரித்தாள். இந்த விதமான இனிமையான சுவபாவத்துக்குத்தான் நாங்கள் இருவரும் அடிமையாகி இருந்தோம்.
சுடர்விட்டு எரியும் குத்து விளக்கின் ஒளியில் கமலம் அம்பிகையைப் போலவே தோற்றமளித்தாள் எனக்கு. தெய்வீகம் நிரம்பிய அந்த இடத்தில் ஒருவிதக் குறை இருந்ததாகத் தோன்றியது. சிறிது நேரம் அது எதனால் என்பதை என்னால் அறிய முடியவில்லை. தற்செயலாகக் கூடத்துக்கு அடுத்து இருந்த முற்றத்தின் மேல் என் பார்வை திரும்பியது. அங்கே வெறிச்சென்று துளசி இல்லாத பாழ் மாடம் ஒன்று இருந்தது!
"இது என்ன கமலம், இவ்வளவு செய்கிறவளுக்கு ஒரு துளசிச் செடிதானா கிடைக்கவில்லை? பாழடைந்த மாடத்தைச் சுமங்கலிகள் பார்க்கக்கூடாது என்று சொல்லுவார்களே" என்றேன்.
"ஆமாம், ரங்கனிடம் நாலு நாளாய்ச் சொல்லுகிறேன். அவனுக்கும் ஒழியவில்லை. வாஸ்தவம்தான் நீ சொல்லுகிறதும்" என்றாள் கமலம்.
"சின்னஞ் சிறுசாய் அழகாக இருக்கிறது. எங்கே வாங்கினாய் இதை?" என்று கேட்டேன்.
"இதையா?" என்று கேட்டு விட்டுக் கமலம் லேசாகச் சிரித்தாள். "உன் கணவருக்கு இந்த விருத்தாந்தம் எல்லாம் தெரியுமே. ஒரு காலத்தில் துளசி மடத்தடியிலேயே பழியாய்க் கிடந்திருக்கிறேன் நான். பன்னிரண்டு வயசில் சின்னஞ்சிறு கிராமாந்திர வீட்டின் கொல்லையில், கிணற்றங்கரைக்குப் பக்கத்தில், பசுந்துளசிக்குக் களிமண்ணால் நாலு பக்கமும் சுவர் எழுப்பி, கோலமிட்டு, விளக்கேற்றி வந்தேன். எங்கள் குடும்பம் வறுமையில் உழன்று வந்தது. நான் ஐந்தாவது பெண். என்னைத் தவிர இன்னும் கல்யாணத்துக்கு மூன்று தங்கைகளும் படிக்க இரண்டு தம்பிகளும் இருந்தனர். அப்பாவுக்கு மணியம் வேலை. வரும்படி குறைவு. ஒரு தினம் கிணற்றிலிருந்து ஜலம் கொண்டு வரும்போது தற்செயலாகத் துளசிச் செடி கண்ணில் பட்டது. கொத்தி, களை பிடுங்கி ஜலம் விட்டேன். இரண்டு நாளில் பசுமையாகத் தழைத்து வளர ஆரம்பித்தது. அம்மாவும் அதற்கேற்றார்ப்போல் சொல்லி வைத்தாள், 'கொல்லையில் துளசிச் செடி வைத்தால் சரியாகவே வருவதில்லை. உன் கைராசிக்கு வந்திருக்கிறது. தினம் பூஜை பண்ணேன். நல்ல ஆத்துக்காரர் கிடைப்பார்' என்று."
"அதனாலே அம்மாவுக்கு, அப்பா நல்ல ஆத்துக்காரராகக் கிடைச்சுட்டார். அப்பா என்ன பயம் பயப்படறார்!" என்றாள், இதுவரையில் கதையைக் கேட்டு வந்த கமலத்தின் பெண்.
"பேசாமல் இருடி. பெரியவா பேசும்போது குறுக்கே பேசாதே" என்று கடிந்து கொண்டே கதையை மீண்டும் ஆரம்பித்தாள்.
"அம்மா சொன்ன தினத்திலிருந்து எனக்கு ஒரே உற்சாகம். நல்ல ஆத்துக்காரர் கிடைப்பார் என்றல்ல. விளையாடும் பருவம். கவலையற்ற வயசு. எதையும் செய்து தீரவேண்டும் என்று உற்சாகமூட்டும் காலம். இவையெல்லாம் சேர்ந்து எனக்கு உற்சாகமூட்டின. களிமண்ணைப் பிசைந்து நாலு பக்கமும் சுவர் மாதிரி ஒரு சாண் உயரத்துக்கு எழுப்பினேன். முத்து முத்தாகக் கோலமிட்டுச் செம்மண் பூசி, என் சிநேகிதிகளை அழைத்து வந்து காட்டுவேன். இதனிடையில் யாரோ சொன்னார்கள், 'லட்சுமி துளசியோடு கிருஷ்ண துளசியையும் சேர்த்து வைத்துப் பூஜை பண்ணேன்' என்று. எங்கள் ஊரில் கோயில் நந்தவனம் ஒன்று உண்டு. பண்டாரத்தைக் கேட்டுக் கருந்துளசிச் செடி ஒன்று வாங்கி வைத்தேன். இப்படியே மாசக் கணக்கில் என் பூஜை நடந்து கொண்டிருந்தது. அம்மாவின் வேலை மட்டும் ஓயவில்லை."
"பேசாமல் இருக்கிறீர்களே. பதிமூன்று வயசாகி விட்டதே! கவலையே இல்லையா உங்களுக்கு?" என்று அம்மா, அப்பாவிடம் சண்டைக்கு ஆரம்பிப்பாள்.
"ஆமாம், ஆயிரம் ஆயிரமாய்க் கொட்டிக் கிடக்கிறதோ இல்லையோ, வரன் தேட வேண்டியது தான். முப்பது ரூபாய் சம்பாதிக்க வழியில்லாதவன் மூவாயிரத்தைக் கொண்டா என்கிறான்" என்பார் அப்பா.
"அப்போ கன்யா மடம் கட்டி வைக்கப் போகிறீர்களா?" என்று உரத்த குரலில் கேட்பாள் அம்மா.
"ஆமாம், போயேன்" என்று அப்பா சலிப்போடு முகத்தைத் திருப்பிக் கொள்வார்.
இம்மாதிரி வாக்குவாதங்களைக் கேட்டு என் மனம் சலிப்படைய ஆரம்பித்தது. கல்யாணம் வாழ்க்கையில் முக்கியமான பிரச்னை என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்ததே இவர்கள் சம்பாஷணையைக் கேட்டுத்தான். குதூகலத்தோடு பிருந்தையின் பூஜையைச் செய்து வந்த மனம் உற்சாகம் இழந்து அவள் அருளை நாடி நின்றது.
'அம்மா, தாயே! இந்த மாதிரிக் கவலையை எழுப்பும் மகத்தான காரியத்தை நீதான் முடித்து வைக்க வேண்டும்' என்று என் மனம் அவளிடம் பக்தி கொண்டு உருகி வேண்ட ஆரம்பித்தது.
பிருந்தை என் மேல் கருணை கூர்ந்து அருள் செய்தாள்! பக்கத்துக் கிராமத்தில் தாரமிழந்த நாற்பது வயசுக்காரர் என்னை மணக்க ஒப்புக்கொண்டாராம்! சகலவிதமான செலவுகளையும் தானே செய்து என்னை மணக்கவும் ஒத்துக்கொண்டாராம்!
"பிள்ளைக்கு என்ன வயசாம்?" என்று அம்மா ஈனஸ்வரத்தில் நூறாவது தடவையாகக் கேட்டாள், அப்பாவிடம்.
"உனக்கு ஆயிரம் தரம் சொல்ல வேண்டும். 'நாற்பது' என்று சொல்கிறார்கள். மேலேயே இருக்கும்" என்று இரைந்து கத்தினார் அப்பா.
"ஏன் சத்தம் போடுகிறீர்கள்? குழந்தை காதில் விழப்போகிறது" என்றாள் அம்மா
"விழாவிட்டால் நாளைக்குக் கல்யாணத்தின் போது குழந்தைக்குக் கண் அவிந்தா போகப்போகிறது" என்று கேட்டார் அப்பா.
"ஆமாம், அவர்கள் எல்லாவற்றையும் செய்து கொண்டாலும், மாப்பிள்ளைக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?" என்று கேட்டாள் அம்மா.
"செய்யத்தான் வேண்டும். ஊரில் இனிமேல் கடன் வாங்க நிலம் நீச்சுக் கிடையாது. அக்காவுக்கு வேண்டுமானால் எழுதிப் பார்க்கிறேன். பிள்ளைகள் எல்லோரும் சம்பாதிக்கிறார்களே" என்றார் அப்பா.
அப்பொழுது தான் எங்களுக்கும் பணக்கார அத்தை ஒருத்தி இருக்கிறாள் என்பது நினைவிற்கு வந்தது.
"ஆமாம், ஐந்தாறு வருஷங்களாகக் கடுதாசிப் போக்குவரத்து இல்லை. அக்காவைக் கேட்டுக் காரியம் நடக்கிறதாவது!" என்றாள் அம்மா சலிப்புடன்.
அப்பா அதற்குப் பதில் சொல்லவில்லை. நான்கு தினங்களுக்குப் பிறகு, அத்தையிடமிருந்து வந்த கடிதத்தினால் அப்பாவின் கடிதம் அத்தையின் மனத்தை எவ்வளவு பாதித்து விட்டது என்பது புரிந்தது. "ஒன்றும் அவசரப்பட்டுச் செய்யாதே. விஷயத்தை அறிந்து வருவதற்கு ராகவன் லீவு வாங்கிக்கொண்டு வருகிறான். சௌ. கமலத்துக்கு வயசு ஒன்றும் ஆகிவிடவில்லை" என்று கண்டிப்பாக எழுதி இருந்தாள் அத்தை.
2
அத்தான் ராகவன் கான்பூரிலிருந்து வந்தது முதல் என் மனம் அவனையும், எனக்குக் கணவனாக நிச்சயிக்கப்பட்டிருக்கும் நாற்பது வயசுக்காரரையும் கற்பனை செய்து பார்ப்பதில் ஈடுபட்டிருந்தது. அழகிய உருண்டை முகம். கண்ணாடிக்குள் துருதுருவென்று பிரகாசிக்கும் கண்கள். அப்பாவுடன் அளவளாவிப் பேசும் தூய்மையான சுவபாவம். ஆனால், அவர் பணம் படைத்தவர்.
"இங்கே வா கமலம்! பழமும், தேங்காயும் எடுத்துக் கொண்டு கோயிலுக்கா போகிறாய்" என்று சமையலறையிலிருந்து வெளியே வரும் என்னைக் கேட்டான் அத்தான்.
"இல்லை, கொல்லையில் கிணற்றடிக்குப் பக்கத்தில் துளசி மடம் இருக்கிறதே, அதற்குப் பூஜை செய்யப் போகிறாள். இதெல்லாம் கிராமாந்திரத்து வழக்கம் அப்பா" என்றாள் அம்மா.
"சரிதான்" என்று விட்டு அத்தான் என்னைப் பின் தொடர்ந்தான்.
வழக்கம்போல் ஜகஜ்ஜோதியாய்க் காட்சி அளித்தாள் துளசி. கிராமியப் பழக்க வழக்கங்களை விட்டு விலகி, வருஷக் கணக்கில் நகர வாசத்தில் மூழ்கி இருந்த ராகவனின் மனசில் ஒருவிதப் புதுச் சக்தியை அந்தக் காட்சி ஏற்படுத்தியிருக்க வேண்டும். பவழ மல்லிகை மாலையை மாடத்தின் முகப்பில் சாத்தும்போது, "அடேயப்பா! கல்யாணம் படுகிற பாடுபடுகிறதே இதெல்லாம்" என்று சொல்லிக் கொண்டே என் அருகில் நகர்ந்து வந்து நின்று கொண்டான் அத்தான்.
என் மனத்தை என்னவோ செய்தது. கையில் பிடித்த மாலையுடன் அவன் பக்கம் திரும்பினேன். இதை இரண்டு கண்கள் உற்று நோக்குவதை உணர்ந்தேன்.
"ராகவா" என்று கூப்பிடும் அப்பாவின் குரல் இதுவரையில் எங்கள் காதில் விழாமல் இருந்தது ஆச்சரியம் தான்! "ராகவா! இந்தக் கல்யாணத்தில் எனக்குத் துளிக்கூடச் சம்மதமில்லையப்பா. பெற்ற பெண்ணை இதைவிடப் பாழ் கிணற்றில் தள்ளலாம்" என்று துக்கம் அடைக்கக் கூறினார் அப்பா.
"கல்யாணத்தை நிறுத்திவிடுங்கள், மாமா" என்றான் அத்தான்.
"நிறுத்திவிட்டு..?" என்று பரிதாபத்துடன் கேட்டார் அப்பா.
"கமலத்தை நான் கல்யாணம் செய்து கொள்கிறேன்" என்று சாந்தமாகப் பதில் அளித்தான் அத்தான்.
"பிருந்தை அருள் செய்தாள் என்று என் மனம் பூரித்தது" என்றாள் கமலம். |
|
சரோஜா ராமமூர்த்தி |
|
|
|
|
|
|
|