Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | வாசகர்கடிதம் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
பூவை அமுதன்
- அரவிந்த்|நவம்பர் 2023|
Share:
சி.ர.கோவிந்தராசன் என்னும் சிக்கராயபுரம் ரங்கநாதன் கோவிந்தராசன், செப்டம்பர் 6, 1934ல், சென்னை குன்றத்தூர்- மாங்காடு இடையே உள்ள சிக்கராயபுரத்தில், ரங்கநாதன் - காமாட்சி இணையருக்கு மகவாகப் பிறந்தார். இளவயதிலேயே தந்தையை இழந்தார். தொடக்கக் கல்வியை சிக்கராயபுரம் பள்ளியில் படித்தார். உயர்நிலைக் கல்வியை பூவிருந்தவல்லியில் உள்ள பள்ளியில் கற்றார். தமிழில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்வியியல் பட்டமும் (B.T.) பெற்றார்.

பள்ளியில் படிக்கும்போதே கோவிந்தராசனுக்கு இலக்கிய ஆர்வம் துளிர்த்துவிட்டது. கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார். 'தமிழனே சற்றுத் தயவுடன் சிந்தி' என்னும் தலைப்பில், கோவிந்தராசன் எழுதிய முதல் கவிதை, பள்ளி ஆண்டு மலரில் வெளிவந்தது. தொடர்ந்து இதழ்களில் கவிதைகள் எழுதினார். 'தாய்மை' என்னும் தலைப்பிலான முதல் சிறுகதை, 'பிரசண்டவிகடன்' இதழில் வெளியானது. 'பூவை அமுதன்' என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார்.

கோவிந்தராசன், என்.வி. நடராசன் நடத்திய திராவிடன் இதழில் சில மாதங்கள் பணிபுரிந்தார். அக்காலக்கட்டத்தில் 'ஆரியத்தின் வைரிகள்' என்னும் தனது முதல் கட்டுரையை அவ்விதழில் எழுதினார். மாலை மணி இதழில் சில மாதங்கள் பணியாற்றினார். ஆனந்தபோதினி, சுதேசமித்திரன், தினத்தந்தி, தென்றல், முல்லை, ராணி, மங்கை, கோகுலம், பூந்தளிர், தாய், காதல், தென்னகம், கரும்பு போன்ற இதழ்களில் எழுதினார். சரஸ்வதி அமுதன், அரசுதாசன், அரசடியான், தொண்டைமான், எஸ்.ஆர்.ஜி. என்ற புனைபெயர்களிலும் எழுதினார்.



கோவிந்தராசன், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். 36 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்றார். மனைவி சரஸ்வதி, பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினார். மகன்: கலையமுதன். மகள்கள்: கீதா, நிர்மலா.

கோவிந்தராசன் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல், கவிதை, இசைப்பாடல்கள் எனச் சிறார்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார். இவரது 'நல்ல நல்ல கதைகள்' என்னும் தொகுப்பு, முரளிதரன் அனப்புழாவால் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 'கான்ஸ்டபிள் அங்கிள்' என்னும் சிறுகதை இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவரது படைப்புகளில் சில தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரது படைப்புகளில் சில கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டன. இவரது நூல்களை ஆய்வு செய்து பல மாணவர்கள் எம்.ஃபில். மற்றும் பிஹெச்.டி பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவர் மாப்பசான் கதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

கடற்கரைக் கவியரங்கம், 'கவிதை உறவு' போன்ற இலக்கியக் கூட்டங்கள், கவிதை அரங்குகளில் கவிதை வாசித்தார். பல கருத்தரங்குகளில் சொற்பொழிவாற்றினார். பாரதி கலைக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மரபுக் கவிதைகளைப் படைத்தார். தனது நூல்களை வெளியிடுவதற்காக பாவேந்தர் பதிப்பகம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நூல்களைப் பதிப்பித்தார்.



பின்னணிக் குரல் கலைஞரும், பாடகருமான எஸ்.என். சுரேந்தர், சி.ர. கோவிந்தராசனின் மருமகன். அவர் மூலம் திரைப்படங்களுக்கும், பக்திப் பாடல் ஆல்பங்களுக்கும் பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வந்தன. கோவிந்தராசன் அறுநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார். அவை பாலமுரளிகிருஷ்ணா, டி.எம்.சௌந்தர்ராஜன், கே.ஜே. யேசுதாஸ், ராஜ்குமார் பாரதி, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.என்.சுரேந்தர், மனோ, பி.சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம், சித்ரா எனத் தமிழின் முன்னணி இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு 70-க்கும் மேற்பட்ட ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகளாக வெளிவந்தன. வானொலி நிகழ்ச்சிகளில் இவரது பாடல்கள் பல ஒலிபரப்பாகின. இவர் 'சிங்காரச் சிட்டு' என்னும் திரைப்படத்திற்குப் பாடல்களை எழுதினார்.

பூவை அமுதன் எழுதிய 'நல்ல உள்ளம்' நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. தனது படைப்புகளுக்காக ஏ.வி.எம். அறக்கட்டளை விருது, ஆனந்தாச்சாரி அறக்கட்டளை விருது, கோவை எல்லப்பா ரெங்கம்மாள் அறக்கட்டளை பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு, பாரத ஸ்டேட் வங்கி விருது, வள்ளியப்பா இலக்கிய விருது, கண்ணதாசன் விருது, பாரதி புரஸ்கார் விருது உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். பாரதி கலைக்கழகம் இவருக்கு 'கவிமாமணி' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. குழந்தை எழுத்தாளர் சங்கம்இவருக்கு குழந்தை இலக்கிய மாமணி பட்டம் வழங்கியது. அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் இவருக்கு 'பாரதி பணிச்செல்வர்' பட்டம் வழங்கியது. திருக்குறள் உரைச் செம்மல் , திருக்குறள் மாமணி, கவிஞர் திலகம், சிறுவர் இலக்கியச் சீர்மணி உள்படப் பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார். குழந்தை எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலாளர், இலக்கியப் பண்ணை அமைப்பின் பொதுச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

பூவை அமுதன் மே 20, 2017 அன்று தமது 86ம் வயதில் காலமானார்.

அரவிந்த்
நூல்கள்
சிறார் பாடல் நூல்கள்: அறிவியக்கப் பாடல்கள், சிறுவர் பாடல்கள், நல்ல நல்ல பாடல்கள், ஆடிடுவோம் பாடிடுவோம், அறிவு விருந்து, நிலாப் படகு.
சிறார் கதைகள்: சிறுவர் அமுதக் கதைகள், குறள் அமுதக் கதைகள், சிறுவர்க்கான படிப்பினைக் கதைகள், சிறந்தோர் வாழ்க்கைக் கதைகள், மனிதநேயக் கதைகள், பண்பு காத்த பரம்பரை, தம்பியின் பெருமை, தங்கத் தங்கை, நளன் கதை, அரிச்சந்திரன், மந்திரக்கோல் மாயாவி, புதையல் தீவு, இளவரசிக்குச் சொன்ன இருபது கதைகள்.
கவிதைத் தொகுப்புகள்: அழகுமலர், உள்ளக் கடலின் உணர்வலைகள், பூவை அமுதன் கவிதைகள், கவிமுரசு, புலரும் பொழுது, உயிர் உறவு (கவிதைக் காப்பியம்), முழக்கம், விழுந்ததும் எழுந்ததும், கனல் மணக்கும் பூக்கள், உணர்வுகள், அமுதவூற்று, விதைகள், கணைகள்.
கட்டுரை நூல்கள்: மாநிலம் போற்றும் மங்கையர், பெண்களைப் பற்றி பெரியவர்கள், புலவர் வழி, அறிவியல் கருவிகள், இலக்கியப் பேழை, கல்வி விழுச்செல்வம், குறளின் கண்கள், உலகப் பொதுமறை உவமைகள், அதிவீரராம பாண்டியன் பொன்மொழிகள், உலகப் பழமொழிகள், பள்ளிப் பிள்ளைகளுக்குப் பயனுள்ள அறிவுரைகள், சாக்ரடீஸ், மாவீரன் நெப்போலியன், கவி காளமேகம், ஔவையார், புகழேந்தி, சொல்லித் தெரிவதில்லை.
உரை நூல்கள்: திருக்குறள் எளிய தமிழ் உரை, அறநெறிச்சாரம், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, நறுந்தொகை, உலகநீதி, நன்னெறி, நீதி வெண்பா, நீதிநெறி விளக்கம், ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, நாலடியார், திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு.
திறனாய்வு நூல்கள: முத்துப்பேழை, இலக்கியப் பேழை, புதிய நோக்கில் புறநானூறு, புலமை வளம், குறளின் கண்கள், செலவழியாச் செல்வம், கருத்துப் பொழில்.
சிறுகதைத் தொகுப்புகள்: வெளிச்சம், அருவிக்கரையோரம், பாத பூஜை.
நாடகம்: கிராமத்துப் பையன்.
புதினம்/குறும்புதினம்: மருத்துவமனை மர்மம், மனைவி மாண்ட மர்மம், ஓட்டலில் தங்கிய கூட்டம், இரத்தக்கறை, ஆணாக மாறிய பெண், ஒரு பெண்ணுக்கு ஆயிரம், காதலித்தவள், பணம், பதவி, பாவை, இறந்தவர் எழுதினார், கொலைகாரி, காதற்கடல், இரத்த விருந்து, தங்க நிலையம், குலக்கொடி, அவளும் நானும், ஓடி வந்தவள், படிக்கப் போனவள், காதல் பரிசு, ஒரு பிள்ளைக்காக, ஆளை மாற்றும் அழகு, உறவைத் தேடும் பறவை, காதல் மலர்.
ஆங்கில நூல்: Thousand Master Piece Stories
Share: 




© Copyright 2020 Tamilonline