Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | பொது | அஞ்சலி
Tamil Unicode / English Search
அலமாரி
இதயக்கோவிலில் ஹரிஜனப் பிரவேசம்
- ரா. கனகலிங்கம்|ஆகஸ்டு 2023|
Share:
என் குருநாதரை நினைத்ததும் கால வெள்ளம் பின்னோக்கி ஓடுகிறது. என் மனத் தோணியைத் துழைந்துகொண்டே ஓரிடத்தில் கரையை எட்டிக் குதித்து அவர் கண் முன்னே நின்று விடுகிறேன். 'ஆறில் ஒரு பங்கு' என்ற சிறிய கதையை எழுதி ஹரிஜன முன்னேற்றத்தில் தமக்கிருந்த பேரன்பை விளக்கிக் காட்டிய பாரதியார், என்னைக் கண்டதுமே, தம் இதயக் கோவிலில் பிரவேசம் அளித்துவிடுகிறார்.

ஹரிஜனங்களுக்கு ஆலயப் பிரவேசம் அளித்துவரும் இன்றைய தமிழகத்திலும் இதயப் பிரவேசம் அளிக்கும் 'உயர்குலத்தினர்' மிகச் சிலரேயாவர். இப்படியிருக்க, அந்த நாளிலேயே பாரதியார் தம் இதயக்கோவிலில் ஹரிஜனங்களைத் தாராளமாகப் பிரவேசிக்கச் செய்து, அத்தகைய பிரவேசத்தைத் தேச சேவையின் முக்கிய அம்சமாகவும் கருதினார். இதைக்குறித்து மணிக்கணக்கில் பேசலாம், பக்கம் பக்கமாக எழுதித்தள்ளலாம் என்று என் இதயம் சொல்லுகிறது.

ஒருநாள் நான் பாரதியார் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் பாரதியார், 'உனக்குத் தம்பலா வீடு தெரியுமா?' என்று கேட் டார். 'தெரியும்' என்றேன். 'அப்படியானால் அந்த வீட்டுக்குப் போய்வருவோம்' என்றார். நான் திடுக்கிட்டுப் போனேன். குருநாதர் இருந்தாற்போலிருந்து தோட்டி தம்பலா வீட்டுக்கு அழைக்கிறாரே என்றும், அவர் இதயம் வருந்தலாகாதே என்றும் எண்ணிக்கொண்டே, 'சுவாமி, வாருங்கள், போய் வருவோம்!' என்று பதில் சொன்னேன்.

புதுச்சேரியில் தோட்டி சமூகத்திற்குத் தம்பலா தலைவராக விளங்கினார். அவருடைய சொந்தப் பெயர் எனக்குத் தெரியாது. பொதுவாக ஜனங்கள் அழைக்கும் பெயர்தான் தம்பலா. அவர் சாராயக் கடை, கஞ்சாக் கடை இவைகளைக் குத்தகை எடுத்துப் பொருள் சம்பாதித்தவர். 1906-ம் ஆண்டில் நடைபெற்ற 'லெமேர்' தேர்தலில் அவர் வோட்டர்களைப் பயமுறுத்தியது பிரசித்தமான செய்தி. அக்காலத்தில் புதுவையில் தம்பலா என்றால், அழுத பிள்ளை வாய் மூடும் என்பார்கள்.

புதுச்சேரி 'புல்வார்க்' பக்கத்தில் சுண்ணாம்புக் காளவாய் என்ற இடத்தில் தமக்குச் சொந்தமான ஒரு பெரிய மாடி வீட்டில் தம்பலா வசித்து வந்தார். பாரதியாரும் நானும் அங்கே சென்றதும், அவ்வீட்டின் ஒட்டுத் திண்ணை ஒன்றில் பாரதியார் உட்கார்ந்துகொண்டார். கதவு தாழிட்டிருந்தது. கதவைத் தட்டச் சொன்னார். தட்டியதும் உள்ளே தம்பலாவின் மனைவி, 'என்ன செய்தி?' என்று கேட்டாள். 'தம்பலா எங்கே?' என நான் கேட்டதும், அவள், 'அவர் கழனி வேலையாகப் போயிருக்கிறார், வருகிற சமயம்தான்' என்றாள். அப்படி அவள் சொல்லி வாய் மூடுவதற்குள் தம்பலாவும் வந்து சேர்ந்தார்.

அவர் பாரதியாரைக் கண்டவுடன் வரவேற்றுத் தாழ்மையுடன் கும்பிடு போட்டு நின்றார். கவிஞர் தமக்கு எதிரேயிருந்த ஒட்டுத் திண்ணையில் தம்பலாவை உட்காரச் சொன்னார். பாரதியார் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் கேளாமல் தோளில் போட்டிருந்த துண்டை விரித்துப்போட்டுத் தரையிலே உட்கார்ந்து கொண்டார். 'நான் யார் தெரியுமா?' என்று குருநாதர் கேட்டார். தம்பலா, 'தெரியுங்கோ! நீங்கள் சுதேசிங்கோ!' என்றார். 'அப்படியானால் நீர் பரதேசியா?' என்று பாரதியார் பளிச்சென்று கேட்டார்.

தம்பலா ஒன்றும் பதில் சொல்லாமல் இவரைப் பக்தியுடன் நோக்கிய வண்ணம் இருந்தார்.

கடைசியாகப் பாரதியார், 'உம்முடைய வீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு உம்மிடம் இரண்டொரு வார்த்தையாவது பேசவேணும் என்ற அவா இருந்தது, இன்று பூர்த்தியாகிவிட்டது. நாங்கள் போய் வருகிறோம்.' என்று எழுந்தார். அப்படிப் பிரிந்துவிட மனமில்லாதவர்போல் தம்பலாவும் எங்களுடன் கொஞ்ச தூரம் ரஸ்தா வரையில் வந்து, பாரதியாருக்கு நமஸ்காரம் செய்துவிட்டுத் திரும்பினார்.

அப்போது பாரதியார் என்னை நோக்கி, 'கனகலிங்கம்! தம்பலா நம்மிடம் எவ்வளவு நல்லவனாக நடந்துகொண்டான், பார்த்தாயா? தேர்தல் காலங்களில் ஜனங்களை அடிப்பதும் ஹிம்ஸிப்பதுமாய் இருந்தான் என்று கேள்விப்பட்டுத்தான் நான் இவனிடம் சிநேகம் செய்ய மனமில்லாமல் இருந்தேன்!' என்று சொன்னார்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிலரை ஒதுக்கிவைப்பது தவறு என்று பாரதியார் கருதினார். கெட்ட பழக்க வழக்கங்கள் உள்ளவரானாலும் அவர்களோடு நல்லவர்கள் பழகுவார்களானால், அவர்களைத் திருத்த முடியும்; ஒதுக்கி வைப்பதோ, ஒடுக்கி வைப்பதோ, அவர்களுக்கும் கேடு, பிறருக்கும் கேடு என்பது பாரதியாரின் கொள்கை.

★★★★★


பாரதியார் தமது அருமைத் திருமகள் சகுந்தலாவைப் 'பாப்பா' என்று செல்லமாகக் கூப்பிடுவது வழக்கம். இந்தக் குழந்தைக்காகத்தான் 'பாப்பாப் பாட்டு' என்ற அழகான குழந்தைப் பாடலை அவர் பாடியிருக்கிறார்.

'ஓடி விளையாடு பாப்பா!' - என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை இந்நாளில் அறியாத தமிழனும் உண்டோ? இப்பாட்டில் சகுந்தலா அம்மையாருக்கு வாழும் முறைமையைப் போதிக்கும் பாரதியார், வீரத்தையும் தேச பக்தியையும் வற்புறுத்துவதுபோல் சமூக ஸமதர்மத்தையும், "சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று அழுத்தமாக வற்புறுத்தி உபதேசித்திருக்கிறார்.

பாரதியாருக்கு, உபதேசம் வேறு, அனுஷ்டானம் வேறு என்றுதான் கிடையாதே; ஆகவே நானும் ஒரு நண்பரும் - பாரதியாருக்குப் பிரெஞ்சு கீதங்கள் கற்பித்த நண்பர்தான் - சகுந்தலாவை எங்கள் வீட்டுக்கு அடிக்கடி அழைத்துப்போவது வழக்கம். அப்போது இந்த அம்மையாருக்கு ஐந்து வயதுதானிருக்கும்.

நாங்கள் 'பாப்பா'வை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போவதற்குமுன் பாரதியாரிடம் தகவல் கொடுப்போம். அவர் உடனே, 'செல்லம்மா!' என்று தம் மனைவியாரைக் கூப்பிடுவார். அந்த அம்மையார் பின் கட்டில் இருந்தபடியே, 'அழைத்துக்கொண்டு போகட்டும்; தின்பதற்குக் கண்டதைக் கொடுக்க வேண்டாம்' என்று சொல்வார்.

நாங்கள் சகுந்தலாவை அழைத்துக்கொண்டு போகும்போது எங்களை ரஸ்தாவில் காணும் இதர வகுப்பினரில் சிலர், 'ஐயோ! பிராம்மணக் குழந்தையை இவர்கள் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போகிறார்களே!' என்று முணுமுணுத்துக் கொண்டே எங்களை ஏற இறங்கப் பார்ப்பார்கள். அவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.

அக்காலத்தில் புதுச்சேரி ஜாதி வித்தியாசம் பாராட்டுவதில் எந்த வைதிகப் பிரதேசத்திற்கும் சிறிதும் பின்வாங்கியதில்லை. ஆனால் கவியரசருக்குத்தான் இதைப்பற்றிக் கவலையே கிடையாதே. இவரது இதயக்கோவிலில்தான், ஜாதிபேதம், நிற பேதம், அந்தஸ்துபேதம் முதலான பேதம் ஒன்றும் இல்லாமல் யாரும் பிரவேசிக்கலாமே!

நாங்கள் அடிக்கடி சகுந்தலா அம்மையை வீட் டுக்கு அழைத்துப் போனதற்குக் காரணம், இவர் பிராயத்திலேயே பாரதியாரின் இரண்டு பாடல்களையும், ஒரு பிரெஞ்சு தேசீயப் பாடலையும் வெகு இனிமையாகப் பாடியதும், அதைக் கேட்டுக் கேட்டு ஆனந்திக்க நாங்கள் விரும்பியதும்தான். குறித்த பிரெஞ்சு தேசீயப் பாடல் 'லா-மர்ஸியேஸ்' என்று தொடங்குவது தான். மற்றப் பாடல்களில், 'காணி நிலம் வேண்டும்' என்று தொடங்குவதும், 'பாரத தேசம் என்று பெயர் சொல்லுவார்' என்று தொடங்குவதும் ஆகிய இரண்டு பாரதி-பாடல்களைத் தான் நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

★★★★★


பாரதியாருக்கு ஜாதி வித்தியாசங்களை அடியோடு தொலைத்துவிட வேண்டும் என்ற புரட்சிகரமான லட்சியம் அந்நாளிலேயே உண்டு.

அரசியல் துறையில் மட்டுமல்ல, சமூகத் துறையிலும் இவர் பெரும் புரட்சிக்காரர். வாய்ச்சொல் வீரரல்லர்; செயல்திறமை வாய்ந்த தீரர். ஆகவே இப்பெரியார் தம் வீட்டில் ஐந்து ஹரிஜன வாலிபர்களுக்கு விருந்து நடத்தினார் ஒரு சமயம். இன்றைக்குச் சுமார் முப்பத்து மூன்று வருஷங்களுக்கு முன் இந்த விருந்து நடைபெற்றது. 1914-ம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலக மகாயுத்தத்திற்குக் கட்டாயச் சேவகமாய்ப் புதுவையிலிருந்து ஐந்து பிரெஞ்சு இந்திய வாலிபர்கள் அனுப்பப்பட்டார்கள். இவர்களில் ஒருவர் பாரதியாருக்குப் பிரெஞ்சு தேசீய கீதங்களைக் கற்றுக் கொடுத்த அந்துவேன் அர்லோக். ஜேம்ஸ் ஸாமுவேல் என்ற வேறெரு வாலிபர் பாரதியார் பாடும் சமயங்களில் பிடில் வாசிப்பவர். இவர்களை உள்ளிட்ட ஐவருக்கும் பாரதியார் தாம் வசித்துவந்த ஈசுவரன் தருமராஜா வீதி இல்லத்தில் விருந்து நடத்தியது அந்நாளில் அவ்வூரில் எத்தகைய வீரதீரப் புரட்சிச் செயலாக இருந்திருக்க வேண்டும் என்பதை இந்நாளில் உணர்ந்து கொள்வது எளிதன்று.

நாள் தவறாமல் பாரதியார் வீட்டுக்குப் போய் வருவதை வழக்கமாய்க் கொண்டிருந்த நான் அன்றும் அங்கே போயிருந்தேன். எதிர்பார்த்தபடி ஐந்து ஹரிஜன விருந்தினர்களும் பாரதியாரை மகிழ்ச்சியுடன் நமஸ்கரிக்க, இவர் மிக்க மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார்.எல்லாரும் வீட்டுக் கூடத்தில் அமர்ந்தார்கள். பாரதியாரின் மனைவியார் ஸ்ரீமதி செல்லம்மாள் டம்ளர்களில் தண்ணீர் கொண்டுவந்து வைக்க, எல்லோரும் கை அலம்பிக் கொண்டு, பாரதியார் மத்தியிலும், மற்ற ஐவரும் இடதுபக்கமும் வலது பக்கமுமாக அமர்ந்தார்கள்.

அம்மையார் எல்லாருக்கும் இலை போட்டுப் பரிமாறி விட்டுப் பின்கட்டுக்குப் போய்விட்டார்.

எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஜேம்ஸ் ஸாமுவேல், டம்ளரைத் தூக்கிக் குடிக்கும் பழக்கம் இல்லாததால், மார்பிலும் கழுத்திலும் தண்ணீரை ஊற்றிக்கொண்டார். அது மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. பாரதியாரோ அனுதாபத்துடன், "ஸாமுவேல்! ஏன் தூக்கிச் சாப்பிட்டீர்? அச்சமின்றி வழக்கம்போல் பருகலாமே!" என்றார். அந்த அன்புச் சொல் எங்களை உருக்கிவிட்டது.

எல்லாரும் சாப்பிட்டு எழுந்திருக்கும்போது அந்துவேன் அர்லோக், சாப்பிட்ட இலையைக் கையில் எடுத்தார். உடனே குருநாதர், 'யாரும் இலையைத் தொடவேண்டாம்!' என்று சொல்லி "செல்லம்மா!' என்று கூப்பிட்டு, 'இலைகளை எடும்!' என்றார். அம்மையார் ஒருவித வெறுப்பும் இல்லாமல் அப்படியே செய்தார்.

ஜாதி கர்வமும் தீண்டாமையும் தலைவிரித்துப் பேயாட்டம் ஆடிய அந்நாளில் பாரதியார் இப்படியெல்லாம் ஹரிஜனங்களுக்குத் தமது இல்லத்தில் மட்டுமல்ல, இதயக் கோவிலிலும் பிரவேசம் அளித்து அன்பு விருந்து செய்தார்.
ரா. கனகலிங்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline